Sunday, August 23, 2020

27 - கம்சன் இறந்தான்




மதுராபுரியில் பலமான பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.உயர்ந்த மதில்கள்,உச்சியில் ஆயுதம் தாங்கிய வீரர்கள்,நகரைச் சுற்றி அகலமான அகழி..ஆயிரக் கணக்கில் முதலைகள் என எளிதில் எதிரிகள் நெருங்க முடியாதபடி இருந்தன.

அக்ரூரருடன் வந்த பலராமனும், கிருஷ்ணனும் நகரை நெருங்கியதும் தேரிலிருந்து இறங்கிக் கொண்டார்கள்.

"ஆக்ரூரரே! நம்முடன் புறப்பட்ட தந்தையும், மற்ற கோபர்களூம் நகருக்கு வெளியே உபவனத்தில் தங்கியிருக்கும் இடத்திற்கேச் சென்று அவர்களுடன் நாங்களும் தங்கிக் கொள்கிறோம்.நீங்கள் நகருக்குள் செல்லுங்கள்.எங்கள் அன்பு மாமனிடம் நாங்கள் வந்து விட்டதாகத் தகவல் சொல்லி விடுங்கள்.நாளை அவரை சந்திக்கிறோம்" என்றனர்.

"கண்ணா..ஒரு சிறு வேண்டுகோள்.நீ எங்கள் இல்லத்திற்கு வந்து என்னை புனிதப்படுத்த வேண்டும் "என்றார் அக்ரூரர்.

"கண்டிப்பாக வந்த காரியம் முடிந்ததும் வருகிறேன்"என்றான் கண்ணன்.

கண்ணன் வாக்குறுதி அளிக்க,சந்தோஷமான அக்ரூரர், கம்சனிடம் அவர்கள் வந்து விட்ட செய்தியினைச் சொல்லி விட்டு தன் இல்லம் சென்றார்.

கம்சன் அடுத்தநாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

உபவனத்தில், தந்தையரும் மற்ற கோபியர்களும் தங்கியிருந்த இடம் வந்தார்கள் பலராமனும், கண்ணனும்.பின், மதுராபுரியைச் சுற்றிப் பார்க்கப் புறப்படனர்.

நகரத்தின் அழகையும்,அலங்காரத்தையும் ,செல்வச் செழிப்பையும் கண்டு ரசித்தனர்.அப்போது ஒரு சலவைத் தொழிலாளி எதிர்ப்பட்டான்.அவனுடைய மூட்டையில் ராஜ உடைகள் இருந்தன.

அதைப் பார்த்த கண்ணன், "உன் மூட்டையிலிருந்து நாங்கள் அணிந்து கொள்ள ஒரு நல்ல ஆடையைத் தருவாயா?"என்றான்.

"நீங்கள் இப்படி கேட்டதற்கே உங்கள் தலையை சீவி விடுவார் மன்னன்.இது அரசருக்கான் உடைகள்.இதை அணிய உங்களுக்குத் தகுதியில்லை.உடனே இந்த இடத்தை விட்டுச் செல்லுங்கள்" என்றான் சலவைத் தொழிலாளி.

பலராமன் கோபத்துடன் அவனை அறைந்து கீழே தள்ளினான்.பின் , அவனும், கிருஷ்ணனும் மூட்டையிலிருந்த ஆடைகளை எடுத்துத் தோழர்களுக்குக் கொடுத்துவிட்டு ,தாங்களும் அணிந்து கொண்டனர்.

சிறிது தூரம் சென்றதும்,பூமாலைகள் கட்டுபவனான சுதாமா என்பவனைக் கண்டனர்.கிருஷ்ண பலராமனின் தெய்வாம்ச சொரூபத்தில் கவரப்பட்ட சுதாமா..இருவருக்கும் சந்தனமும்,புஷ்ப மாலைகளையும் அளித்தான்.சுதாமாவை அன்புடன் தழுவி ஆசிர்வதித்தான் கண்ணன்.

அங்கிருந்து நகர்ந்ததும் திரிவிக்ரா என்ற அரண்மனை தாதி.உடலில் மூன்று கோணல்கள் கொண்ட கூனி.அவள் கம்சனுக்காக சந்தனம் போண்ற வாசனைத் திரவியங்களை தயாரித்து எடுத்துச் சென்று கொண்டிருந்தாள்..

நறுமணப்பிரியன் கிருஷ்ணன் அவளிடம், "அம்மா..இந்த வாசனைத் திரவியங்களை எனக்குத் தருவாயா?" என்றான்.

உடனே அவள் மகிழ்ச்சியுடன், "உங்களுக்கு இல்லாத வாசனைப் பூச்சா?இதைப் பூசிக் கொள்ள தகுதியான்வர்கள் நீங்கள் தான்"என்று சொல்லி,ஆசையுடன் அவைகளை அள்ளிக் கொடுத்தாள்.

திருவிக்ராவின் அன்பால் மனம் மகிழ்ந்த கிருஷ்ணன், அவளது கூனைப் போக்க எண்ணி,அவளின் கால்களை தன் விரல்களால் அழுத்திக் கொண்டு,தன் மிருதுவான கையால் அவளது முகவாயைப் பற்றி லேசாகத் தூக்கினான்.திரிவிக்ராவின் மூன்று கோணல்களும் மறைந்து போயின.கூன் அகன்று, அழகிய இளம் பெண்ணாக மாறினாள் அவள்.

ஆனந்தக் கண்ணீருடன் . கிருஷ்ணன் முன் மண்டியிட்டு,அவன் பாதங்களைத் தொட்டு வணங்கினாள்.கண்ணன் அவளை ஆசிர்வதித்து விட்டுப் புறப்பட்டான்.

கம்சன் ஏற்பாடு செய்திருந்த "தனுர் யாகம்"நடைபெறும் இடத்திற்கு வந்தனர் இருவரும்.

யாகசாலையில் பலவிதமான ரத்தினங்கள் பதிக்கப்பட்ட வில் ஒன்று அலங்கரிக்கப்பட்டு ஜொலித்துக் கொண்டிருந்தது.வில்லைச் சுற்றி நிறைய காவலாளிகள் பாதுகாப்பாக நின்று கொண்டிருந்தனர்.

கிருஷ்ணன், அந்த வில்லை எடுக்க முயல..காவலர்கள் கோபத்துடன் தடுத்தனர்.பலராமன் அவர்களை எதிர்த்துத் தள்ளிவிட, கிருஷ்ணன் வில்லை எடுத்தான்.நாணேற்றினான்.அது படீரென சத்தத்துடன் முறிந்தது.

அதைக் கண்ட காவலர்கள், கோபத்துடன் பலராமன்,கிருஷ்ணனைத் தாக்கத் தொடங்கினார்கள்.முறிந்த வில் துண்டுகளை வைத்தே பலராமனும், கிருஷ்ணனும் அவர்களைத் தாக்கி வீழ்த்தினார்கள்.பின் உபவனத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.இரவாகி விட்டதால், சாப்பிட்டு முடித்து நிம்மதியாக உறங்கினர்.

ஆனால் கம்சனோ உறக்கம் வராமல் தவித்தான்.சிறுவர்கள் வில்லை முறித்த செய்தி அவனுக்குத் தெரிய வந்தது.மேலும் சலவைத் தொழிலாளியிடமிருந்து அரசு உடைகளை அவர்கள் அபகரித்ததையும் கேள்விப் பட்டான்.ஆத்திரத்தில் நரம்புகள் தெறித்துவிடும் போல இருந்தது...உடனே ஆத்திரமாகவும் இருந்தது.

பூதனை முதல் கேசி வரை வென்ற இச்சிறுவர்கள் மிகவும் பலசாலிகள்.அப்படியானால் இந்த எட்டாவது பிள்ளை என் உயிருக்கு எமன் என்பது உண்மையாகி விடுமோ? என எண்ணினான்.

அதற்கேற்றாற் போல ..அவனைச் சுற்றி தீய சகுனங்கள் ஏராளமாகத் தென்பட்டன.கண்ணாடியில் தலையில்லாமல் உடல் மட்டும் தென்பட்டது.அவன் நிழலில் ஓட்டைகள் தெரிந்தது.ஆவிகள் தவழ்வது போலவும்..கழுதையின் மீது ஊர்வலம் செல்வது போலவும்..கனவுகள் வந்தன.

இரவு முடிந்து விடிந்தது கூடத் தெரியாமல் அமர்ந்திருந்தவன், பின் சுதாரித்துக் கொண்டு...தான் நியமித்திருந்த மல்லர்களை அழைத்தான்.குவாலயாபீட யானையை தயாராக நிறுத்தி வைக்கச் சொல்லி விட்டு,மல்லர்களையும் எச்சரித்து அனுப்பினான்.பின், தானும் குளித்து முடித்துப் புறப்பட்டான்.

மன்றம் நிரம்பியிருந்தது.சானூரன்,முஷ்டிகன்,கூடன்,சாலன்,தோசலன் போன்ற புகழ் பெற்ற மல்யுத்த வீரர்கள் வரிசையாக அணி வகுத்து நின்றனர்.பேரிகைகள் ஒலிக்க..கம்சன் வந்து சிம்மாசனத்தில் அமர்ந்தான்.நந்தகோபரும் மற்ற கோபர்களும் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் சென்று அமர்ந்தனர்.

அப்போது, பலராமனும், கிருஷ்ணனும் மல்யுத்த அரங்கிற்கு வருவதற்காக நுழைவாயிலுக்கு வந்தனர்.அங்கே தோரணவாயிலில் குவாலய பீடம் என்ற பட்டத்து யானை வழி மறித்து நின்று கொண்டிருந்தது.

'பாகனே! யானையை விலக்கி நிறுத்து.நாங்கள் உள்ளே செல்ல வேண்டும்" என்றான் கண்ணன்.

"நீங்கள் உள்ளே செல்ல வேண்டிய அவசியமே இல்லை.மேலே யமனுலகம் செல்லுங்கள்.."என்றவாறே,யானையை பலராம கிருஷ்ணர்கள் மீது ஏவினான் பாகன்.

யானை தன் துதிக்கையால் கிருஷ்ணனை வளைத்துப் பிடிக்க முனைந்தது.அதன் பிடியிலிருந்து தப்பிய கிருஷ்ணன்..யானையின் கால்களுக்குள் புகுந்து கொண்டு போக்குக் காட்டினான்.அதன் வாலை இழுத்து வேதனை தந்தான்.இந்த விதமாக யானையைக் களைப்புறச் செய்தான்.பின் திடீரென அதன் முன் நின்று, கைகளால் முகத்தில் பலமாக அறைந்தான்.

யானை கோபத்துடன் கிருஷ்ணனை தன் தந்தத்தால் குத்த பாய்ந்து வந்தது.கண்ணன் அதன் தந்தங்களைப் பிடித்து, வேகமாக இழுத்துத் தள்ளினான்.பின், இரண்டு தந்தங்களையும் அடியோடு பிடுங்கி,அதனாலேயே யானையையும், பானைப் பாகனையும் குத்திக் கொன்றான்.

யானையின் வேதனை அலறலைக் கேட்டு, கிருஷ்ணன் அதைக் கொன்று விடடன் என்பதை கம்சன் உணர்ந்து கொண்டான்.திகிலடைந்தான்.ஆனாலும் பலசாலியான மல்லர்களைப் பார்த்து நிம்மதியடைந்தான்.

அப்போது பட்டத்து யானையின் இரண்டு தந்தங்களையும் ரத்தம் சொட்ட தோளில் போட்டுக் கொண்டு மல்யுத்த அரங்கினுள் நுழைந்தனர் பலராமனும்..கிருஷ்ணனும்.

எல்லோரது பார்வையும் அவர்கள் மீது பதிந்தது.ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொருவித உணர்வு..

"இடி போன்றவர்கள் இவர்கள்" என மல்லர்கள் நினைத்தனர்
"போற்றத்தக்க புருஷோத்தமன்"என்றனர் மக்கள்
"மன்மத அவதாரம்" என எண்ணினர் இளம் பெண்கள்
"தீயவர்களின் எதிரி"என்றனர் கோபர்கள்
குழந்தைகள்" என்றனர் பெற்றோர்கள்
கம்சன் மட்டுமே.."எனது யமன்" என எண்ணினான்.

இப்படி ஒவ்வொருவரும்..ஒவ்வொரு விதமாக நினைக்க வைத்த பிருந்தாவன நாயகன் கிருஷ்ணனும், பலராமனும் மன்றத்தின் மையப் பகுதிக்கு வந்து நின்றனர்.

கண்ணனை அழகை ரசித்த மக்கள், அவனது வசீகரத்தால் கவரப்பட்டார்கள்.அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தனர்.அவர்கள் கவனத்தைக் கலைப்பது போல தாரை,தப்பட்டை,பேரிகைகள் முழங்கின.

மல்யுத்தவீரன் சாணூரன் உரத்தக் குரலில் கிருஷ்ணனை அழைத்தான்

"கிருஷ்ணா....நீயும் உன் சகோதரன் பலராமனும் யுத்தத்தில் வல்லவர்கள் என எங்கள் மன்னர் கேள்விப்பட்டார்.உங்கள் வீரத்தைக் கண்டு மகிழவே உங்களை இங்கு வரவழைத்திருக்கிறார்.எங்களுடன் மல்யுத்தம் செய்து மன்னரின் விருப்பத்தை நிறைவேற்று"

கிருஷ்ணன் சொன்னான்...

"மன்னனின் விருப்பத்தை நிறைவேற்றவே விரும்புகிறோம்.சிறுவர்களாகிய நாங்கள் எங்களுக்கு சமமானவர்களுடன் போட்டியிடத் தயாராயுள்ளோம்."

சாணூரன் கோபமாக"பட்டத்துயானையான குவாலயா பீடத்தையே கொன்ற நீங்களா சிறுவர்கள்?தோற்றத்தில் சிறுவர்களாக இருந்தாலும் ஆயிரம் யானை பலமுள்ளவர்கள் நீங்கள் என எனக்குத் தெரியும்.எனவே எங்களுடன் போட்டியிட தகுதியானவர்கள்தான் நீங்கள் என நான் அறிவேன்.நீ என்னுடன் சண்டையிடு.பலராமன் முஷ்டிகனோடு மோதட்டும்" என்றான்.

அடுத்து அங்கே மல்யுத்தம் தொடங்கியது.

மெல்லிய பூவினை பிய்த்தெறிய புயல் காற்று வீசுவது போல இருந்தது போல உணர்ந்தனர் மக்கள்.

சாணுரனும் அப்படியே நினைத்தான்.கிருஷ்ணனின் உயிரை சுலபாக பறித்து,உதிர்த்து விடலாம் என எண்ணினான்.ஆனால் அது முடியவில்லை.வலிமையாகப் பற்றிய கிருஷ்ணனின் கைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியவில்லை.இருவரும் கட்டிப் புரண்டு உருண்டார்கள்.ஒருவருக்கொருவர் சளைக்கவில்லை.

பலராமனுடன் மோதிய முஷ்டிகனும் அவதிப்பட்டான்.பலராமனின் பிடியில் சிக்கி மூச்சுத் திணறினான்.விடுவித்துக் கொள்ள போராடி கண்கள் பிதுங்கினான்.

ராட்சஷ பலம் கொண்டவர்களுடன் பால் மாறா சிறுவர்களை சண்டையிடச் சொல்கிறார்களே..இது அநியாய யுத்தம்"என எண்ணிய மக்கள்,யுத்தம் போகும் போக்கினைக் கண்டு மகிழ்ந்து..உற்சாகத்துடன் கூக்குரலிட்டனர்.

கிருஷ்ணன், சாணூரன் எதிர்பாராத சமயத்தில் சட்டென அவனை தலைக்கு மேல் தூக்கி வேகமாக சுழற்றி தரையில் மடாலென  அறைந்தான்.அந்த நொடியே சாணூரன் ரத்தம் கக்கி உயிரை விட்டான்.

பலராமன் தன் முஷ்டியினாலேயே, முஷ்டிகனை இடைவிடாமல் குத்திக் கொன்றான்.

 அடுத்தடுத்து சவால் விட்டு வந்த சாலன்,கூடன்,தோசலன் ஆகிய அனைத்து மல்யுத்த வீரர்களையும், பலராமனும், கிருஷ்ணனும் போராடி வீழ்த்தினர்.இதைப்பார்த்துக் கொண்டிருந்த மற்ற மல்யுத்த வீரர்கள் பயந்து ஓடி ஒளிந்தனர்.

அரங்கம் முழுதும் மக்கள் ஆரவாரம்.

கம்சனின் முகம் கோபத்தில் சிவக்க..அதிர்ச்சியும்..ஏமாற்றமும் அவனை கொலைவெறி கொள்ள வைத்தது.தன் காவலாளிகளை அழைத்து கட்டளையிட்டான்.

"அந்த் ராம கிருஷ்ணர்களை அடித்து விரட்டுங்கள்.நந்தகோபனைப் பிடித்து சிறையில் அடையுங்கள்.சிறையிலிருக்கும் வசுதேவனைக் கொன்று விடுங்கள்.யாதவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யுங்கள்"என அடுக்கடுக்காகக் கட்டளையிட்டான்.

இதைக் கேட்ட  கண்ணன் கோபத்துடன் பாய்ந்து கம்சனின் சிம்மாசனத்தின் மீது குதித்தான்.

இதை எதிர்பாராத கம்சன், திகைத்துப் போய் கண்ணனை வெட்ட வாளினை எடுத்தான்.கண்ணன் அந்தக் கையினைப் பற்றி முறித்தான்.கம்சனின் தலைமுடியை இழுத்து..சிம்மாசன மேடையிலிருந்து கீழே தள்ளினான்.

கிரீடம் கழன்று தனியே தரையில் விழ, மல்லாந்து விழுந்து கிடந்தான் கம்சன்.கண்ணன் மேடைமேலிருந்து அவன் மார்பின் மீது மிகுந்த வேகத்துடன் இடிபோல இறங்கினான்.அந்த வேகத்திலேயே கம்சனின் உயிர் அவன் உடலை விட்டுப் பிரிந்தது.யாரால் தனக்கு மரணம் என நடுங்கிக் கொண்டிருந்தானோ..அந்த கண்ணனிடமே அவன் ஜீவன் சென்று அடைக்கலமானது.

அண்ணன் கம்சனின் மரணத்தால் கோபம் அடைந்த அவனது எட்டுச் சகோதரர்களூம் கண்ணனைத் தாக்க வந்தனர்.அவர்கள் அத்தனைப் பேரையும் பலராமன் அடுத்தடுத்துக் கொன்றான்.

தேவர்கள் மலர் தூவ..கந்தர்வர்கள் கானம் பாட..அப்சரஸ்கள் நடனமாட..ரிஷிகள் மனம் குளிர்ந்தனர்.

பகவானின் அவதாரக் காரியம் ஒன்று நடந்து முடிந்தது.

கம்சன் இறந்ததும் மதுராபுரியில் சிறையில் இருந்த தேவகியும், வசுதேவரும் விடுவிக்கப்பட்டனர்.பலராமனும், கிருஷ்ணனும் அவர்களின் பாதம் பணிந்து வணங்கினார்கள்.ஆனால் தேவகியும், வசுதேவரும்..பிள்ளைகளை நெருங்காமல் தயங்கி நின்றனர்.பலராம கிருஷ்ணர்கள் பகவானின் அவதாரங்கள் என அவர்கள் உணர்ந்திருந்தனர்.உரிமையுட ன் அவர்களை தழுவிட முடியாமல் தயங்கினர்.

பெற்றோர்களின் தயக்கத்தை உணர்ந்த கிருஷ்ணன், தனது மாயையால் அந்த நிலையை மறக்கடித்தான்.அதன் பிறகு வசுதேவரும், தேவகியும் குழந்தைகளை தழுவி உச்சி முகர்ந்தனர்.

மதுராபுரியின் மன்னனாக , கிருஷ்ணனுக்கு பட்டாபிஷேகம் செய்ய அனைவரும் விரும்பினர்.கிருஷ்ணன் அன்புடன் மறுத்து, கம்சனின் தந்தையான உக்ரசேனனை மீண்டும் மதுராபுரியின் மன்னன் ஆக்கினான்.

நந்தகோபர் பிருந்தாவனம் புறப்படத் தயரானார்.கண்ணன் அவரிடம்"தந்தையே நீங்களும்,அன்னையரும் பேரன்புடனும், பாசத்துடனும் எங்களை வளர்த்தீர்கள்.இப்போது இத்தனை காலம் பிரிந்திருந்த தேவகி,வசுதேவருடன் சில காலம் தங்கி இருக்க விரும்புகிறோம்.நீங்கள் பிருந்தாவனம் சென்று அன்னையரிடம் தெரிவியுங்கள்" என்றான்

வண்டி புறப்பட்டது.பார்வையிலிருந்து மறையும் வரை பலராம கிருஷ்ணங்களை கண்ணிமைக்காது பார்த்துக் கொண்டே சென்றார் நந்தகோபர்.பிரிவின் வலி அவர் மனத்தை வருத்தியது.


No comments:

Post a Comment