Saturday, August 15, 2020

18 - கண்ணன் பிறந்தான்




மதுரா நகரம் அழகாக அலங்கரிக்கப்பட்டு,தோரணங்கள், கொடிகள்,வாழை மரங்கள், கமுகு மரங்கள் என்று எங்கும் கட்டப்பட்டு கோலாகலமாகக் காட்சியளித்தது.

சூரசேனனின் மகனான வசுதேவரும்,உக்ரசேனனின் சகோதரர்களான தேவகனின் மகள் தேவகிக்கும் கல்யாணம்.

எங்கு பார்த்தாலும் மங்கல இசை,கலை நிகழ்ச்சிகள் என  நடைபெற்று கொண்டிருந்தன.மக்கள் புத்தாடைகள் அணிந்து தங்களை அலங்கரித்துக் கொண்டு சந்தோஷமாகக் காணப்பட்டனர்.

உக்ரசேனனின் மகனும், தேவகியின் அண்ணனுமான கம்சன்,புது மணப்பெண் தேவகியையும்,மாப்பிள்ளையையும்  தேரில் ஏற்றிக் கொண்டு தானே ரதத்தைச் செலுத்திக் கொண்டு..மதுரா வீதிகளில் வலம் வந்தான்.

தெருக்களில் இரு ஒரங்களிலும் மக்கள் நின்று பூக்களைத் தூவி மணமக்களை வாழ்த்தினர்.

அப்பொழுது திடீரென கருமேகங்கள் சூழ்ந்து வானம் இருண்டது.இடி ..மின்னல்..கூடவே ஒரு அசரீரி குரல் ஒலித்தது.

"கம்சா..நீ முட்டாள்.எந்தத் தங்கையை அன்புடன் ஊர்வலமாக அழைத்துச் செல்கிறாயோ..அந்தத் தங்கையின் எட்டாவது கர்ப்பம்தான்..உன் உயிருக்கு எமனாகப் போகிறது.அந்தப் பிள்ளையால்தான் உனக்கு மரணம் சம்பவிக்கப் போகிறது"என்றது.

அந்தவினாடியே..அதுவரை பாசமான அண்ணனாக இருந்தவன்..அரக்கன் ஆனான்.உடனே வாளை உருவி தேவகியின் கூந்தலைப் பற்றி இழுத்து அவளை வெட்டப் போனான்.

தேவகியின் கணவரான வசுதேவர்..அவனைத் தடுத்துவிட்டுப் பேசினார்.

"கம்சா! போஜ வம்சத்தின் பெரிய வீரன் நீ. அப்படிப்பட்டவன் ஒரு பெண்ணை அதுவும் உன் தங்கையைக் கொன்ற உன் வீரத்தைக் காட்ட வேண்டும்?இந்த இழிவானச் செயலைச் செய்யாதே! உன் மரண பயத்தைப் போக்க நான் சொல்வதைச் செய்.தேவகிக்குப் பிறக்கும் குழந்தையால்தானே ஆபத்து என அசரீரி சொன்னது.எனவே தேவகிக்குப் பிறக்கப் போகும் அத்தனை குழந்தைகளையுமே உன்னிடம் ஒப்படைத்து விடுகிறேன் போதுமா?"ஏன்றார்.

வசுதேவர் சொன்னதைக் கேட்ட கம்சன் சமாதானமானதால்,தேவகியைக் கொல்லாமல் விட்டு விட்டான்.

ஆனாலும் தேவகியின் எட்டாவது மகன் தனக்கு எமன் என்பது அவன் மனதில் ஆழமாகப் பதிந்தது.எட்டாவது குழந்தைக்காக காத்திருந்தான்.முதல் குழந்தை பிறந்ததும் வசுதேவர் அதை எடுத்துக் கொண்டு கம்சனிடம் சென்றார்.

"கம்சா..இதோ தேவகியின் முதல் குழந்தை.பெற்றுக் கொள்"என்றார்.

வசுதேவரின் வாக்கு தவறாதது கம்சனை மகிழ்வித்தது.

"வசுதேவரே..எட்டாவது குழந்தைதானே என் எதிரி.இந்தக் குழந்தையை நீங்களே எடுத்துச் செல்லுங்கள்"என்றான்.

தேவகிக்குப் பிறந்த அடுத்தடுத்த குழந்தைகளையும் கூட,கம்சன் ஒன்றும் செய்யவில்லை.வசுதேவரிடமே திருப்பிக் கொடுத்து விட்டான்.

கம்சனின் இந்த நேர்மையான நடத்தையைப் பார்த்து நாரதர் கவலையடைந்தார்.

கம்சன்,இத்தனை உத்தமனாக நடந்து கொள்ளக் கூடாதே! என யோசனையில் ஆழ்ந்தார்.தன் கலகத்தைத் தொடங்கினார்.

"கம்சனே! நீ எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சமயம் இது.நீ சென்ற பிறவியில் காலநேமி என்ற அசுரனாக இருந்தாய்.தேவர்களை எதிர்த்தாய்.அந்தப் பிறவியிலும் தொடர்கிறது.வசுதேவர்,நந்தகோபன் முதலிய எல்லா யாதவர்களுமே தேவர்களின் சொரூபம்தான்.அசுர வம்சத்தவர்களான உன்னையும், உனது உறவினர்களையும் வதம் செய்யவே அவர்கள் இப்போது பூலோகத்தில் பிறந்திருக்கிறார்கள்" என கலகத்தைத் துவக்கினார்.

கம்சன் எனும் வேதாளம் மீண்டும் முருங்கைமரம் ஏறியது.

வசுதேவரையும், தேவகியையும் உடனடியாகச் சிறையிலிட்டான்.அவர்களுக்குப் பிறந்திருந்த குழந்தைகளைக் கொன்றான்.தன்னைத் தடுத்த தந்தை உத்ரசேனனையும் சிறையில் அடைத்துத் தானே மன்னன் ஆனான்.

யாதவர்கள் அனைவரும் தேவர்கள் எனமுடிவு கட்டியவன் பலவகைகளிலும், அவர்களுக்குத் தொல்லைக் கொடுக்கத் தொடங்கினான்.ஏராளமான வரிகளை விதித்தான்.தனக்குக் கப்பம் கட்டுமாறு செய்தான்.சிறு குற்றம் செய்தவனையும் சிறையில் அடைத்துச் சித்திரவதை செய்தான்.

அதனால் யாதவர்கள் கம்சனுக்கு பயந்து அடிமைகளாக வாழத் தொடங்கினார்கள்.ஒவ்வொரு நாளையும் நரகத்தில் இருப்பது போல கழித்தார்கள்.இருண்டு போன தங்கள் வாழ்க்கையில் என்றாவது ஒருநாள் வெளிச்சம் வரும் என்று காத்திருந்தார்கள்.

தேவகி சிறைச்சாலையில் ஏழாவது முறையாக கர்ப்பமடைந்தாள்.கம்சன் எச்சரிக்கை ஆனான்.அவருக்குக் குழந்த பிறந்ததுமே தனக்குத் தகவல் தெரிவிக்குமாறு கட்டளையிட்டு சிறையில் அவர்களைச் சுற்றி வீரர்களை நியமித்தான்.வெகு ஜாக்கிரதையாகக் காவல் காக்க கட்டளையிட்டான்.

கம்சனின் நடவடிக்கைகளைக் கண்டு, பகவான் புன்னகைத்தார்.யோகமாயையைக் கூப்பிட்டார்.

"மாயா..தேவகியின் வயிற்றில் ஏழாவதாக வளர்ந்து வரும் கரு,,ஆதிஷேசன் அம்சம்.நீ அந்தக் கருவை எடுத்து கோகுலத்தில் வளர்ந்து வரும் வசுதேவனின் மற்றொரு மனைவியான ரோஹிணியின் வயிற்றில் சேர்த்துவிடு.அடுத்ததாக, நான் தேவகியின் வயிற்றில் எட்டாவது கருவாக வரப்போகிறேன்.அதே சமயத்தில் நீ..கோகுலத்தில் நந்தகோபன் என்பவரின் மனைவியான யசோதையின் கர்ப்பத்தில் வளர்ந்து வா"என அனுப்பி வைத்தார்.யோகமாயையும் அதன்படியே செய்தார்.

தேவகியின் ஏழாவது கரு வயிற்றிலேயே கலைந்துவிட்டது என கேள்விப்பட்ட கம்சன்,"கொல்லும் வேலை எனக்கு மிச்சமானது"ஏன எண்ணினான்.சந்தோஷப்பட்டான்.

தேவகியின் வயிற்றில் எட்டாவதாக பகவான் குடியேறினார்.அதனால் கர்ப்பிணியான அவள் அழகு மேலும் ஒளிர்ந்தது.இது கண்டு கம்சன் கலக்கமும், குழப்பமும் அடைந்தான்.

உயிரோடு பிறக்கப் போகும் குழந்தை என்று பார்த்தால் இது ஏழாவதாகும்.ஆனால், கர்ப்பத்தைக் கணக்கிட்டால் இது எட்டாவதாகும்.இந்த குழந்தையால் ஆபத்து உண்டாகுமா...இல்லையா எனத் தெரியவில்லையே! என நினைத்தவன்...பின்..ஏன் இந்தக் கவலை பிறக்கப் போகும் இந்த குழந்தையையும் கொன்று விட்டால் துயரம் தீரும்..என முடிவெடுத்தான்.

மேலும்,எச்சரிக்கையாக தேவகிக்கும்,வசுதேவருக்கும் கை,கால்களில் விலங்கிட்டுப் பூட்டினான்.குழந்தை பிறக்கக் காத்திருந்தான்.

அந்த நாளும் வந்தது..

ஆவணி மாதம், அஷ்டமி திதி..ரோகிணி நட்சத்திரம் கூடிய இரவு வேளையில் தீயவர்களை பொசுக்க சுட்டெரிக்கும் பிரகாசத்துடன் தேவகி மைந்தனாக திருமால் பூவுலகில் அவதரித்தார்.

 ஆகாயத்தில் மங்கல பேரிகைகள் முழங்க, கந்தர்வர்கள் கானம் பாட,அப்சரக் கன்னிகள் நடனமாட திவ்விய திருக்கோலத்தில் மகாவிஷ்ணு சிறு குழந்தையாக அவதரித்தார்.

சங்கு..சக்கரம் கொண்டவனாக,வனமாலையும்,பீதாம்பரமும் அணிந்து சதுர்புஜனாக,எழிலான வடிவத்துடன் பிறந்த குழந்தையைப் பார்த்து தேவகியும், வசுதேவரும் சிலிர்த்துப் போயினர்.பரவசத்துடன் தொழுதனர்.

பகவான் அவர்களிடம் கூறினார்...

"முற்பிறவியில் நீங்கள் இருவரும் என்னை நோக்கி கடும் தவம் செய்து,என்னைப் போல ஒரு மகன் வேண்டும் என வேண்டினீர்கள்.அதன்படி இப்போது உங்களுக்கு மகனாய்ப் பிறந்திருக்கிறேன்.அந்த எனது முந்தைய பிறப்பை நினைவுபடுத்தவே..என் தெய்வீக வடிவை உங்களுக்குக் காட்டினேன்" என்றான்.பின் சாதாரண மானிடக் குழந்தையாக மாறினார்.

இதே சமயம் நந்த கோகுலத்தில்,யசோதையின் குழந்தையாக யோகமாயைப் பிறந்திருந்தது.

தேவகிக்கு மகனாகப் பிறந்த பகவான் வசுதேவரிடம் கூறினார்..

"கோகுலத்தில் யசோதைக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது.என்னைக் கொண்டு போய் அங்கே விட்டுவிட்டு, அந்தக் குழந்தையை இங்கே கொண்டு வாருங்கள்"

அவர் சொன்னதெமே..வசுதேவரின் விலங்குகள் தெறித்தன.வசுதேவரும் குழந்தையை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.

சிறைக்கதவுகள் தானே திறந்தன.காவலர்கள் விஷ்ணுவின் மாயத்தால் மயங்கிக் கிடந்தனர்.வெளியே இடி..மின்னல்..மழை.ஆதிஷேசனே தனது படங்களை விரித்து குடை பிடித்து பகவான் மீது மழைநீர் படாதபடி பின் தொடர்ந்து சென்றார்.வழியில் தென்பட்ட யமுனை நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது.ஆனாலும், வசுதேவர் செல்வதற்காக இடம் கொடுத்து விலகிக் கொண்டது.

கோகுலத்தை அடைந்த வசுதேவர், தனது குழந்தையை யசோதையின் பக்கத்தில் வைத்து விட்டு அவளிடம் இருந்த பெண் குழந்தையை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.மீண்டும் சிறைச்சாலைக்கு வந்து சேர்ந்தார்.
சிறைக்கதவுகள் மீண்டும் தாமாகவே மூடிக் கொண்டன.விலங்குகள் பூட்டிக் கொண்டன.இதுவரை நடந்தது எதுவும் தெரியாமல், காவலர்கள் கண் விழித்து, முன் போலவே காவல் காக்கத் தொடங்கினர்.

குழந்தை அழும் சப்தம் கேட்டு காவலர்கள் கம்சனிடம் சென்று தெரிவித்தார்கள்.

கம்சன் பதற்றமும்..பயமுமாக ஓடி வந்தான்."எட்டாவதாகப் பிறந்த குழந்தை எங்கே?"என்றான்.வசுதேவர் பெண் குழந்தையை எடுத்து நீட்டினார்.

கம்சன் அதை வாங்கிக் கொண்டு..தன் வாளால் வெட்டப் பார்த்தான். அப்போது அந்தக் குழந்தை அவன் கையிலிருந்து விடுபட்டு ஆகாயத்தில் சென்று நின்றது.விஷ்ணுவின் தங்கையான அந்த யோகமாயை, எட்டு கைகளும்..அவற்றில் பல விதமான ஆயுதங்களுடன் காட்சித் தந்தாள்.

கம்சனைப் பார்த்து சிரித்தபடியே,"மடையனே!என்னைக் கொல்வதால் உனக்கு எந்தப் பயனும் இல்லை.உன்னைக் கொல்லப் போகிறவன், வேறு இடத்தில் பிறந்திருக்கிறான்.வீணாக அப்பாவிகளைத் துன்புறுத்தாதே!" என்று கூறி மறைந்தாள்.

கம்சன் ஏமாற்றம் அடைந்தான்.

எட்டாவது கர்ப்பம்தானே எமன் என அசரீரி சொன்னது.ஆனால் எட்டாவது பெண் குழந்தை ஆயிற்றே.கடைசியில் அசரீரி சொன்னது பொய்யாகி விட்டதே...அதை நம்பித்தானே தங்கை தேவகியையும்,வசுதேவரையும் சிறையிலிட்டேன்.அவர்களது குழந்தைகளைக் கொன்றேன்..ச்சே..தவறிழைத்து விட்டேனே...என வருந்தி, அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு ,அவர்களை விடுவித்தான்.

ஆனாலும், தன்னைக் கொல்லப் போகும் குழந்தை வேறிடத்தில் பிறந்துள்ளது என யோகமாயைச் சொன்னதை அவன் மறக்கவில்லை.

அசுர மந்திரிகள், சேனாதிபதிகள் ஆகியோருடன் ஆலோசனை செய்தான்.  "கம்சனைக் கொல்லப் பிறந்த குழந்தை எங்கே பிறந்திருக்கிறது..அந்தக் குழந்தையை எப்படிக் கண்டுபிடிப்பது" என யோசித்தார்கள், இறுதியாய் ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

"நாலாபுறமும் அதிகாரிகளை அனுப்பி..இந்த ஒரு மாத காலத்தில் பிறந்த எல்லாக் குழ்ந்தைகளியயும் கொன்றுவிடச் சொல்லலாம்"என கொடிய திட்டம் தீட்டினர்.

காலதாமதம் செய்யாது,உடனே அசுரர்களை நாலாதிசைகளிலும் அனுப்பி வைத்து விட்டு,கலக்கத்துடன் திரிந்தான் அவன்.யாரைப்பார்த்தாலும் யமன் தன்னைக் கொல்ல பாசக் கயிற்றுடன் இருப்பதைப் போலத் தெரிந்தது.

மொத்தமாக நிம்மதி இழந்தான் கம்சன்.

அதே நேரம், கோகுலத்தில்..கொண்டாட்டமும் குதூகலமும் கொடி கட்டிப் பறந்தது.

No comments:

Post a Comment