Tuesday, August 11, 2020

16 -மச்ச அவதாரம்




பிரம்மன் எப்போது உறங்கச் செல்வான் எனக் காத்திருந்தான் ஹயக்ரீவன்.

ஹயக்ரீவன் என்பவன் குதிரை முகம் கொண்ட அசுரன்.பிரம்மனிடமிருந்து வேதங்களைத் திருடிச் செல்ல பதுங்கி மறைந்திருந்தான்.

தட்சிணாயண காலம் வந்தால் பிரம்மன் தூங்க ஆரம்பித்து விடுவான்.அச்சமயம் பிரளயம் ஏற்பட்டு மூவுலகமும் நீரில் மூழ்கும்.வேதங்களை எடுத்துக் கொண்டு நீருக்கடியில் சென்று பதுங்கிக் கொள்ளலாம் என நினைத்தான்.இது யாருக்கும் தெரியாது என்பது அவன் எண்ணம்.

ஆனால்...இவனை அழிக்கவே நாராயணன்  அவதாரம் எடுத்துள்ளார் என்பதை அவன் அறியவில்லை.

ஹயக்ரீவனை அழிக்க மட்டுமின்றி தனது பரமபக்தன் ஒருவனை பிரளயத்திலிருந்து காக்கவும் அந்த அவதாரத்தை பகவான் எடுத்துள்ளார்.

அந்த பக்தன் சத்யவிரதன்.

பெயருக்குத் தகுந்தாற்போல சத்தியத்தில் பற்றுள்ளவன்.மன்னனாக இருந்தும் பந்த பாசங்களில் நாட்டமின்றி ..ஆசாபாசங்களுக்கு அடிமையாகாதவன்.திருமாலின் பக்தனாகவே ஆசிரம் அமைத்து ஒரு மகரிஷி போலவே வாழ்ந்து வருபவன்.

ஒருநாள் அவன் கிருதமாலா ஆற்றின் கரையில் தன் முன்னோர்களுக்காக ஜலதர்ப்பணம் செய்து கொண்டிருந்தான்.அப்போது அவன் அழகிய உள்ளங்கை நீரில் ஒரு சிறிய மீன் இருந்தது..அதனால் அந்த நீரை ஆற்றினிலேயே விடப் போனான்.

அப்போது அந்த மீன் பதறியபடியே பேச ஆரம்பித்தது."மன்னனே! என்னை இந்த நீரிலேயே திரும்ப விட்டால் அதில் உள்ள பெரிய மீன்கள் என்னைத் தின்றுவிடும்.தயவு செய்து என் மீது இரக்கம் காட்டுங்கள்" என்றது.

சத்யவிரதன், மீனின் மீது பரிதாப்பட்டு, அதை தனது கமண்டலத்தில் போட்டுக் கொண்டு ஆசிரமம் வந்து சேர்ந்தான்.

அன்று இரவிற்குள் மீன் கமண்டலத்தை அடைக்கும் அளவிற்கு வளர்ந்து          விட்டது

மறுநாள் சத்யவிரதனிடம், "இத்தனை சிறிய இடத்தில் என்னால் நீந்த முடியவில்லை.என்னை வேறிடத்திற்கு மாற்று" என்றது

மன்னன், அதை நீர் நிறைந்த மண் பானைக்குள் விட்டான்.சிறிது நேரத்தில் பானையையும் அடைத்துக் கொண்டு வளர்ந்திருந்தது.பின் அதை குட்டைக்குள் விட்டான்.அவன் கண்ணெதிரிலேயே மீன் வளர்ந்து குட்டையும் போதாத அளவிற்கு அடைத்து நின்றது.

மேலும்..குளம், ஏரி என அடுத்தடுத்து மாற்றிக்கொண்டே போனான் மன்னன்.கடைசியில் கடலில் விடச் சென்றபோது,"மன்னா..இந்த கடலிலும் திமிங்கலம்,முதலைகள் போன்ற பெரிய ஜந்துகள் என்னைக் கொன்று விடும்.என்னைத் தனியே விட்டு விட்டுப் போகாதே" என்றது மீன்.

மீனின் வளர்ச்சிக் கண்டு அதிர்ச்சியும், ஆச்சரியமும் கொண்ட சத்யவிரதனின் மனதில் திடீரென ஒரு தெளிவு பிறந்தது. வடிவத்தில் மீன் போன்று தோன்றி லும்..இது பகவானின் லீலை என முடிவுக்கு வந்த சத்யவிரதன்,"கடவுளே!திருமாலே! நீங்கள்தான் இப்படி மீன் வடிவில் வந்து இருக்கிறீர்கள் எனத் தோன்றுகிறது.எதற்காக இந்தத் திருவிளையாடல்?எதற்காக இந்த சோதனை?"என்றான்.

மச்ச அவதாரம் எடுத்திருந்த மகாவிஷ்ணு அவனிடம் சொன்னார்..
"சத்யவிரதா! நீ நினைத்தது சரி.இன்றிலிருந்து ஏழாம் நாள் சகலலோகங்களும் பிரளயத்தில் மூழ்கப் போகின்றன.அப்போது உன்னை நோக்கி ஒரு படகு வரும்.உன்னைக் காப்பாற்ற நான் அனுப்பும் படகு  அது.அதில் மூலிகைகள்,விதைகள்,செடி கொடிகளோடு சப்தரிஷிகளையும் ஏற்றிக் கொள்.அப்போது நான் திமிங்கல வடிவில் வருவேன்.படகை செதில்களில் கட்டிவிடு.நான் இழுத்துச் செல்வேன்" என்றார்.

"பகவானே! படகை எதனால் முதலில் உம்முடன் கட்டுவது?அதைத்தவிர பிரளய காலத்தில் இருள் சூழ்ந்திருக்குமே..எதுவும் கண்ணுக்குத் தென்படாதே!"என்று கேட்டான் சத்யவிரதன்.

"வாசுகி பாம்பை கயிறாக்கி, படகை என் செதில்களில் கட்டி விடு.இருட்டை நினைத்துக் கவலைப்படாதே! சப்த ரிஷிகள் வெளிச்சமாகவும், வழிகாட்டியாகவும் இருப்பார்கள்"என்று மீன் சொல்லிவிட்டுச் சென்றது.

அதற்குப் பின் சத்யவிரதன்,பிரளயம் வரப்போகும் நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.ஏழாம்நாள் கறுத்த மேகங்கள் திரண்டு ஆகாயம் இருண்டது.வானத்தைக் கிழித்து விட்டது போல இடி,மின்னலுடன் மழை இடைவிடாதுக் கொட்டியது.புயல்  காற்றும் சீறியடிக்க கடல் கொந்தளித்தது.சகல லோகங்களும் நீரில் மூழ்கியது.

அப்போது தர்ப்பாசனத்தில் மிதந்துக் கொன்டிருந்த சத்யவிரதனை நோக்கி படகு ஒன்று வந்தது.மன்னன்,இறைவன் சொன்னபடி சகல மூலிகைகளையும், மூலிகைகளையும்,வித்துக்களையும்,சப்தரிஷிகளையும்  படகில்  ஏற்றிக் கொண்டான்.படகு இங்கும் அங்கும் அலைந்தது.

அது முழுகும் தருணத்தில் திமிங்கலம் அங்கு வந்து சேர்ந்தது.சத்யவிரதன், வாசுகி பாம்பினால் படகை திமிங்கலத்துடன் கட்டியதுடன், நாராயணனைத் தொழுது ஆத்மஞானத்தை போதிக்குமாறு கேட்டான். அவன் பிரார்த்தித்தபடி நாராயணன் தத்துவார்த்தங்களை அவனுக்கு உபதேசித்தார்.அந்த உபதேசமே மச்சபுராணம்.பின், உயரத் தூக்கியடித்த அலைகளின் மத்திய சூறைக் காற்றுக்கும், சூழலுக்கும் பலியாகாமல்..மச்ச அவதாரப் பெருமாள் படகை பத்திரமாக இழுச்சுச் சென்றார்.

அந்த சமயத்தில் பிரம்மன் தூக்கத்திலிருந்து கண் விழித்தான்.எழுந்தவன் அதிர்ச்சியடைந்தான்.

"ஐயோ வேதங்களைக் காணவில்லையே..யார் எடுத்துச் சென்றது? இப்போது நான் என்ன செய்வேன்" என்று பதறினான்.

மழை நின்று விட்டது..வெளிச்சம் வந்து விட்டது.

பிரளயத்துக்குப் பின் மூவுலகங்களிலும் சிருஷ்டி நடந்தாக வேண்டும்.ஆனால் வேதங்கள் இல்லாமல் எப்படி சிருஷ்டிப்பது? என கலங்கினான்.

பிரம்மனின் தவறு நாராயணனுக்குத் தெரியாதா..என்ன..

படகை பத்திரமாகக் கரை சேர்த்த மச்சமூர்த்தி,பிரளய நீருக்குள் மூழ்கி..பதுங்கியிருந்த ஹயக்ரீவனைக் கண்டு பிடித்து..போரிட்டுக் கொன்று..வேதங்களை மீட்டு, பிரம்மாவிடம் ஒப்படைத்தார்.

பிரம்மன் மீண்டும் சிருஷ்டியைத் துவங்கினார்.

மன்னன் சத்யவிரதனே "வைவஸ்தவ மனு" எண்ர பெயரில் ஆட்சிப் புரியத் தொடங்கினான்.

மச்ச அவதாரப் பெருமையை பரீட்சித்துக்கு விளக்கிய சுகர் மகரிஷி மேலும் சொன்னார்..

"வைஸ்தவ மனு"வின் மூலமாகத் தொடங்கிய சூர்ய வம்சம், அவனுக்குப் பின் புகழ் பெற்ற மன்னர்களாக திரிசங்கு,அரிச்சந்திரன்,பகீரதன் என்று வழி வழியாகத் தொடர்ந்தது.மகாவிஷ்ணுவின் பிரசித்திப் பெற்ற ராம அவதாரமும் சூர்ய வம்சத்தில் வந்ததுதான் "என்றார்.

"தந்தையின் வாக்கினைக் காப்பாற்றபதினான்கு  வருடங்கள் கானகம் போனதும், அங்கு சீதாதேவியை ராவணனிடம் பறி கொடுத்ததும்,வானரங்கள் உதவியால் லங்கைக்குச் சென்று சீதையை மீட்டதும் பின் அயோத்திக்குத் திரும்பி பட்டாபிஷேகம் செய்து கொண்டு..பின் யாரோ ஒரு வண்ணான் அவதூறு பேசினான் என்பதற்காக சீதையை கானகத்தில் கொண்டு போய் விடச் சொன்னதும் ஆகிய நிகழ்வுகள் நான் அறிவேன்.அதற்குப் பிறகு சீதாதேவி என்ன ஆனார்கள்? சீதையும் ராமனும் ஒன்று சேர்ந்தார்களா? அதைப் பற்றிக் கூறுங்கள்"
என்றான் பரீட்சித்.

சுகர் சொல்லத்தொடங்கினார்..

"சீதை, லட்சுமணனால் காட்டில் கொண்டு போய் விடப்பட்டாள்.அப்போது அவள் நிறைமாத கர்ப்பிணி.கானகத்தில் அனாதையாக விடப்பட்ட அவளை வால்மீகி மகரிஷி மனம் தேற்றி தன் ஆசிரமத்திற்கு அழைத்துப் போய் பராமரித்தார்.

சீதைக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.அவர்களுக்கு லவன்,குசன் எனப் பெயரிட்டார்.குழந்தைகளுக்கு வால்மீகி கல்வியுடன் சகல கலைகளையும் போதித்தார்.

இந்நிலையில் ராமன் அசுவமேதயாகம் செய்ய நினைத்து யாகக்குதிரையை எல்லா தேசங்களுக்கும் செல்ல வைத்தார்.அனைத்துத் தேச மன்னர்களும் ராமனை சக்ரவர்த்தியாக ஒப்புக் கொண்டு அந்தக் குதிரைக்கு மரியாதை செய்து அனுப்பி வைத்தனர்.

ஆனால், அந்த யாகக் குதிரையை லவனும், குசனும் பிடித்துக் கட்டிப் போட்டனர்.

காரணம்..அப்போது அந்தக் குழந்தைகள் ராமனிடம் கோபமாயிருந்தார்கள்.ராமன் தன் மனைவியின் மேல் ஒரு சலவைத் தொழிலாளி அவதூறு சொன்னான் என்பதற்காக அவளை காட்டுக்கு அனுப்பி வைத்தார் என்ற கோபம்.ஆனால் அவர்களுக்கு தங்கள் தாய் சீதை என்றோ..ராமன் தங்கள் தந்தையென்றோ அறியாத நிலை.

அயோத்தியிலோ ராமனுக்கு ஆச்சரியம்.இரண்டு சிறுவர்கள் யாகக் குதிரையை கட்டி வைத்துக் கொண்டு தர மறுக்கிறார்கள் என்று கேள்விப் பட்டு அவர்கள் இருக்குமிடம் சென்றார்.

லவ குசர்களைப் பார்த்ததுமே, அவரது மனதில் இனம் புரியாத பரவசம்.அவர் சிறுவர்களிடம் மிக அன்பு கொண்டவராக, "உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள்..எதைக் கேட்டாலும் தருகிறேன்.யாகக்குதிரையை மட்டும் விட்டு விடுங்கள்"என்றார்.

சிறுவர்கள் விட மறுத்தனர்."கட்டிய மனைவியை கை விட்டவரின் பேச்சைக் கேட்க மாட்டோம்" என்றனர்.

ராமன், மென்மையாகச் சொன்னார், கெஞ்சிப் பார்த்தார்.எதையும் காதில் வாங்க அவர்கள் தயாராய் இல்லை.ராமனை, தங்களுடன் போரிட்டு வென்று குதிரையை மீட்டுக் கொண்டு செல்லுங்கள்"என்றார்கள்.

அதற்குள் தகவல் அறிந்து வந்த சீதை, பிள்ளைகளின் தவறை மன்னிக்கும்படி வேண்டினாள்.அவர்களை ராமனுக்கு அறிமுகம் செய்தாள்.இது போன்ற நிலை ஏற்பட்டதற்கு சீதை வருந்தினாள்.ராமன் தன் மகன்களை அணைத்துக் கொண்டார்.சீதையை மீண்டும் அயோத்திக்கு அழைத்துச் செல்ல விரும்பினார்.

ஆனால் சீதை அந்த அழைப்பினை ஏற்கவில்லை.மனம் விரக்தியடைந்து, பூவுலக வாழ்க்கையே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தாள்.இரு பிள்ளைகளையும் உச்சி முகர்ந்து ராமனிடம் ஒப்படைத்தார்.

"அம்மா..என்னை ஏற்றுக்கொள்" என பூமித்தாயை வேண்டினாள்.ராமனும், லவ குசனும் கண்களில் நீர் மல்க பார்த்துக் கொண்டிருந்த போதே பூமி பிளந்து சீதையை ஏற்றுக் கொண்டது.

லவ குசர்களை அழைத்துக் கொண்டு அயோத்தி திரும்பிய ராமன், தனக்குப்பின் லவ-குசர்களுக்கு ராஜ்ஜியத்தைப் பிரித்துக் கொடுத்து அவர்களுக்கு பட்டாபிஷேகம் செய்வித்தார்.இப்படியாக ராமனுக்குப் பின் சூரிய வம்சம் தொடர்ந்தது..."என சுகர் மகரிஷி சொல்லி முடித்தார்.

பரீட்சித் கேட்டான், "ராம அவதாரத்திலேயே பரசுராம அவதாரமும் வருகிறதே..அதன் தாத்பரியம் என்ன?பரசுராம அவதாரம் பற்றியும் சொல்லுங்களேன்" என்றான்.

நாரயணனின் அவதார மகிமைகளை சொல்லக் கசக்குமா என்ன? என்றபடியே சொல்ல ஆரம்பித்தார் சுகர். 

No comments:

Post a Comment