Tuesday, August 18, 2020

21- பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்




பிருந்தாவனம் மிகவும் அழகாக இருந்தது.

கோவர்த்தன மலையும்,அதைச் சுற்றி ஓடும் யமுனை நதியும்,வெண்மணற்பாங்கான பிரதேசமும்,பசுக்களை மேய்ச்சலுக்கு அனுப்ப புல்வெளியும்..என ஒரு அற்புத இடமாகத் திகழ்ந்தது.

பலராமனும், கிருஷ்ணனும் புது இடத்தைப் பார்த்து மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைந்தனர்.நதிக்கரையில் ஒருவரை ஒருவர் துரத்திப் பிடித்து விளையாடுவதும்,கன்றுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வதும்,புல்லாங்குழல் இசைப்பதும்,மாடு-கன்றுகள் போல குரல் கொடுப்பதுமாய்ப் பொழுதைக் கழித்தனர்.

கோப, கோபியர்களு க்கும் பிருந்தாவனம் பிடித்துப் போனது.ஆனால் அபாயங்கள் இங்கும் தொடர்ந்தது.

கோபர்கள் கோகுலத்தைவிட்டு பிருந்தாவனம் சென்று விட்டார்கள் என்பதை அறிந்த கம்சன் பதற்றமானான்.கண்ணனைக் கொல்லத் துடித்தான்.மேலும் சில அசுரரகளை அங்கு அனுப்பினான்.

வத்சாசுரன்,பகாசுரன்,அகாசுரன் என அரக்கர்கள் பலரை பிருந்தாவனத்திற்கு கண்ணனைக் கொல்ல அனுப்பினான் கம்சன்.

வத்சாசுரன் பிருந்தாவன் வந்த போது சிறுவர்கள் கன்றுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுக் கொண்டிருந்தார்கள்.வத்சாசுரன் யோசித்தான்."இந்த கன்று குட்டிகளுடன் நானும் கன்றாக உருமாறி கலந்துவிட்டால்,யாரும் பார்க்காத போது கண்ணனைக் கொன்றுவிடலாம்" என திட்டமிட்டு கன்றாக மாறினான்.

பகவானுக்கு..இது தெரியாதா  என்ன..?கிருஷ்ணன் வத்சாகரன் கன்றை கண்காணித்தபடியே வந்தான்.அப்போது அனைவரும் ஒரு விளா மரத்தடியில் வந்து சேர்ந்தனர்.ஒரு சிறுவன், "கண்ணா..இந்த விளாமர பழங்கள் பெரிதாக இருக்கின்றன.பறிக்கலாம் என்றால்..அவை உயரத்தில் உள்ளன" என்றான்.

"உனக்கு விளாம் பழங்கள்தானே வேண்டும்.ஒரு நொடியில் அவற்றைக் கீழே விழச்செய்கிறேன் பார்"என்ற கிருஷ்ணன்..கன்றாக மாறியிருந்த வத்சாசுரன் கன்றிடத்தில் வந்தான்.பின் அதன் கால்களைப் பிடித்துத் தூக்கி..ஒரு சுழற்று..சுழற்றி பழுத்த விளா மரங்கள் மீது வேகமாக வீசினான்.மோதிய வேகத்தில்..சுயரூபம் ..பெற்ற வத்சாசுரன்..பெரும் அலறலுடன் கீழே விழுந்து ரத்தம் கக்கி இறந்தான்.

விளா மரமும் முறிந்து..பழ்ங்கள் கீழே விழுந்தன.சிறுவர்கள் கண்ணனைத் தூக்கிக் கொண்டாடினர்.

அடுத்து பகாசுரன்..

அவன் வந்த போது பலராமன்,
கிருஷ்ணன் மற்றும் சிறுவர்கள் அனைவரும் ஒரு நீரோடைக்கு அருகில் இருந்தனர்.கன்றுகள் நீர் அருந்தின.சிறுவர்கள் ஓடைநீரைக் குடித்து தாகம் தணித்தனர்.அப்போது, பகாசுரன் ஒரு கொக்காக மாறி ,தன் பெரிய சிறகுகள் படபடக்க அங்கு வந்து தன் அலகுகளில் கிருஷ்ணனைப் பற்றிக் கொண்டு பறந்தான்.கிருஷ்ணனை அப்படியே விழுங்க முயன்று முடியாமல் திணறினான்.கிருஷ்ணன் நெருப்புப் பந்து போல அவனைத் தாக்கினான்.பகாசுரனால் சூட்டைத் தாங்க முடியவில்லை.கிருஷ்ணனை கீழே உமிழ்ந்தான்.அவனைக் குத்திக் குதறத் தீர்மானித்தான்.

கிருஷ்ணன், அதன் அலகுகளைப் பற்றி மூங்கிலைப் பிளப்பது போல  அலட்சியமாகக் கிழித்துப் போட்டான்.

மரணக்கூச்சலுடன்..மலைபோல மண்ணில் விழுந்து உயிர் விட்டான் பகாசுரன்.

இதைக் கண்ட சிறுவர்கள் வியப்படைந்து கண்ணனைக் கொண்டாடினர்.பெரியோர்கள், பகாசுரன் அழிந்ததற்காக சந்தோஷப்பட்டாலும், கவலையும் அடைந்தனர்.

குழந்தைகளைக் குறிவைத்தே  வரும்  அசுரர்கள் எப்படியோ மாண்டு போகிறார்கள்.இது எதற்காக..ஏன் நடக்கிறது..? என்று புரியாமல் குழம்பினார்கள் பெரியவர்கள்.

அகாசுரன் இப்போது அங்கு வரத்தயாரானான்..

இவன் கிருஷ்ணனால் வதம் செய்யப்பட்ட பூதனக்கும் ,பகாசுரனுக்கும் தம்பி ஆவான்.அதனால் பலமடங்குக் கோபத்துடன் கிருஷ்ணனைக் கொல்லத் துடித்தான்.பழிக்குப் பழி வாங்கக் காத்திருந்தான்.

கிருஷ்ணன் அதற்கான சமயத்தை அமைத்துத் தந்தார்.

ஒருநாள்,எல்லா சிறுவர்களையும் வனபோஜனைக்குச் செல்லலாம் என அழைத்தான் கண்ணன்.உற்சாகமடைந்த சிறுவர்கள் விதவிதமான கட்டுச்சோறு,பலகாரங்கள் எல்லாம் எடுத்துக் கொண்டு வனத்துக்குப் புறப்பட்டனர்.

அவர்கள் வரும் வழியில் அகாசுரன்,பெரிய மலைப்பாம்பு உருவத்தில் படுத்திருந்தான்.தனது வாயை மிகப்பெரியதாக ஒரு மலைக்குகையைப் போல திறந்து வைத்திருந்தான்.அங்கு வந்த சிறுவர்களுக்கு மலைப்பாம்பின் உடல் தெரியவில்லை.அகலத் திறந்த வாயை மலைக்குகை என்று நினைத்து..ஒருவர் பின் ஒருவராக அனைவரும் பாம்பின் வாய்க்குள் சென்றனர்.கண்ணனும் தெரிந்தே உள்ளே நுழைந்தான்.இது அசுரனின் மாயை என அவன் அறிவான்.

வானுலகத்திலிருந்து தேவர்களோ கதறினார்கள்.

"பகவான்..பாம்பின் வாயுனுள் போய் விட்டார்.அகாசுரன் அனைவரையும் விழுங்கிவிடுவான்"என கதறினர்.

அப்போது ஒரு அதிசயம் நடந்தது..

"கிருஷ்ணன், மலைப்பாம்பின் வாய்க்குள் புகுந்ததும்,அகாசுரன் வாயை மூடமுடியாதபடி தன் உருவத்தை பிரம்மாண்டமாக வளர்த்தார்.அகாசுரனைத் திணறடித்தார்.அதனால் அவனால் மூச்சுகூடவிட முடியாமல் திண்டாடினான்.உருண்டு..புரண்டு துடித்தான்.விழிகள் பிதுங்க உயிரைவிட்டான்.

அவன் வயிற்றுக்குள் மயங்கிக் கிடந்த கன்றுகள்,சிறுவர்கள் என அனைத்தையும் மீட்டு வந்தான் கிருஷ்ணன்.

மயக்கத்திலிருந்து மீண்ட  சிறுவர்கள்..வீட்டுக்குத் திரும்பியதும்..தங்கள் பேற்றோர்களிடம் சொல்லி ஆச்சரியப்பட்டனர்.

ஆனால்..இதில் மற்றொரு மிகப்பெரிய ஆச்சரியமும் அடங்கியிருந்த்து.அது சிறுவர்களுக்குத் தெரியாது.

ஆம்..மிகவும் அற்புதமான கிருஷ்ணலீலை நடந்து முடிந்திருந்தது.

மலைப்பாம்பான அகாசுரன் வதம் முடிந்த போது இவர்கள் வயது ஐந்து.வீட்டுக்கு வந்து குழந்தைகள் சம்பவத்தைச் சொல்கையில் அவர்கள் வயது ஆறு.

இடைப்பட்ட காலத்தில் இவர்கள் எங்கு போயிருந்தார்கள்.அது பெற்றோர்களுக்கு ஏன் தெரியவில்லை..இதற்கு பதில் தெரிவதற்கு நாம் மீண்டும் அகாசுரன் சம்பவத்திற்குப் போவோம்..

அகாசுரன், மலைப்பாம்பாய் செத்து மடிந்ததும்,அவன் வயிற்றுக்குள்ளிருந்து மீண்ட சிறுவர்கள் கிருஷ்ணனுடன் யமுனை நதிக்கரைக்குப் போனார்கள்.

உச்சிப் பொழுது..அவர்கள் கொண்டு வந்த கட்டுச்சோற்றை இங்கேயே சாப்பிட்டு ஓய்வெடுப்போம்..கன்றுகளும் இங்கேயே மேயட்டும் என்றான் கண்ணன்.

அனவரும் அமர்ந்து உணவு உண்டனர்.

இடுப்பில் புல்லாங்குழலைச் செருகிவிட்டு,இடது கையில் தயிர் சாதமும், வலது கையில் ஊறுகாயும்....இடையச் சிறுவர்கள் மத்தியில் அமர்ந்து, ஒரு பாமரனாக கிருஷ்ணன் சாப்பிடுவதைக் கண்டு தேவர்கள் ஆகாயத்தில் கூட்டம் கூட்டமாய் வந்து வேடிக்கைப் பார்த்தனர்.

இப்படி இவர்கள் இருந்த போது,கன்றுகள் புல் மேய்ந்தபடியே காட்டுக்குள் சென்று விட்டன.இதை யாரும் கவனிக்கவில்லை.

பின் கன்றுகளைக் காணாது சிறுவர்கள் கதறினர்."கவலைப்படாதீர்கள்..நீங்கள் சாப்பிடுங்கள்.நான் போய் பார்த்து வருகிறேன்' என சென்றான் கண்ணன்.

காட்டுக்குள் வெகுதூரம் சென்றும் கன்றுகளைக் காணவில்லை.கன்றுகளை மறைத்து வைத்து பிரம்மன் விளையாடிக் கொண்டிருந்தான்.மானிட அவதாரம் எடுத்திருந்த கிருஷ்ணனின் தெய்வ சக்தி..இப்போது எவ்வளவு இருக்கிறது என சோதிக்க.கன்றுகளைக் கவர்ந்து ஒரு மறைவான குகைக்குள் ஒளித்து வைத்திருந்தான்.கன்றுகளைத் தேடி கிருஷ்ணன் புறப்பட்ட சமயத்தில் சிறுவர்களையும் கவர்ந்து, அவர்களையும் ஒளித்து வைத்தான்.

கன்றுகளைக் காணாது நதிக்கரைக்கு வந்த கண்ணன்..அங்கு சிறுவர்களையும் காணாது திகைத்தான்.

பிரம்மா தன்னை சோதிக்கிறான் என மாயக் கண்ணன் அறிந்தான்.

பிரபஞ்சத்தைப் படைத்து..உடன் பிரம்மதேவனையும் சிருஷ்டித்த தன்னுடன் பிரம்மன் விளையாடுகிறானா? அவன் விருப்பபடியே..அவன் விளையாட்டை நாமும் அவனுடன் விளையாடலாம்' என எண்ணினான் கண்ணன்.

காணாமல் போன அத்தனை கன்றுகளையும்,சிறுவர்களையுமாய் தன்னை படைத்துக் கொண்டான்.அவர்களின் பிரம்புகள்,கொம்பூதிகள்..அவரவர் நடை..உடை..பாவனை அன அனைத்தையும் அச்சு அசலாக அவர்களாகவே பிரதிபலித்தன.

யாதவச் சிறுவர்கள் அவரவர் வீடு திரும்பினார்கள்.கன்றுகள் தொழுவத்தை அடந்தன.பெற்றோர்களுக்கும், தாய் பசுக்களுக்கும் எந்த மாற்றமும் தெரியவில்லை.யாரும் சந்தேகிக்கவில்லை.ஒருநாள்...இரண்டு நாள் இல்லை..இது ஓராண்டு காலம் நீடித்தது.

ஒரு வருடம் என்பது..பிரம்மனுக்கு ஒரு கணம் அல்லவா?பிரம்மன் மீண்டும் வந்து பார்த்தபோது, சிறுவர்களும், கன்றுகளும் அவரவர்கள் வீட்டில் இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டான்.

சிறுவர்களையும், கன்றுகளையும் தான் மறைத்து வைத்துள்ள இடத்துக்குச் சென்று பார்த்தபோது அவர்கள் எல்லோரும் அங்கேயே இருந்தார்கள்.யாரும் தப்பிச் செல்லவில்லை.

"அப்படியானால் இங்கு இருப்பவர்கள் யார்"?

குழப்பத்துடன் அவர் பிரம்மலோகம் சென்றார்.அங்கே அவரிடத்தில் வேறு பிரம்மா அமர்ந்திருந்தார்.

"சிருஷ்டி செய்யும் என் இடத்திலேயே என்னைப் போல இன்னொருவரா" பதறினார்.எல்லாம் கிருஷ்ணலீலை என்பதை அவர் உணர்ந்தார்.

"பகவானே உங்கள் மகத்துவத்தை உணராமல் தவறு செய்துவிட்டேன்.என்னை மன்னியுங்கள்"என பணிந்தார்.பின் பிரம்மனிடமிருந்து மீண்ட சிறுவர்கள்..நடந்தது எதுவும் தெரியாமல் வீடு திரும்பினர்.

அசுரர்கள் வதம் தொடர்ந்தது.ஒருமுறை யமுனை நதிக்கரையில், கன்றுகளை மேயவிட்டு  ,கண்ணன் குழலூதிக் கொண்டிருந்தான்.நண்பர்கள் அவனைச் சுற்றி அமர்ந்திருந்தார்கள்.அப்போது ஒரு சிறுவன்..கிருஷ்ணன், பலராமனிடம் கூறினான்..

"கிருஷ்ணா..ராமா..இங்கே பக்கத்தில் ஒரு பனந்தோப்பு இருக்கிறது.அங்கு ஏராளமாய் பனம்பழங்கள் கிடைக்கும்.அவை மிகவும் இனிப்பாகவும், ருசியாகவும் இருக்கும் என்று சொல்கிறார்கள்" என்றான்.

"அப்படியா..இப்போதே சென்று ருசி பார்த்துடுவோம்" என்று சிறுவர்கள் புறப்பட்டனர்.

மற்றொரு சிறுவன் இடைமறித்துச் சொன்னான்."வேண்டாம் கிருஷ்ணா..அந்தத் தோப்பு ஆபத்தான இடமாம்.அங்கு தேவகாசுரன் என்னும் அரக்கன், கழுதை உருவில் ..தன் கழுதைக் கூட்டங்களுடன் வசித்து வருகிறான்.தோப்புக்குள் செல்லும் மனிதர்களை அந்த அரக்கன் உயிரோடு விடுவதில்லையாம்.நாம் அங்கேச் சென்று அபாயத்தைத் தேடிக் கொள்ள வேண்டாம்" என்றான்.

"அதெல்லாம் சிறுவர்களை பயமுறுத்த பெரியவ்ரகள் சொல்லும் கதை.பயப்படாதீர்கள்..என்னுடன் வாருங்கள்.நான் உங்களுக்கு பழம் பறித்துத் தருகிறேன்" என கிருஷ்ணன் தைரியம் சொல்ல சிறுவர்கள் கிளம்பினர்.

தோப்பில் ஏராளமான பனைமரங்கள்.அவற்றில் கொத்து கொத்தாக பனம் பழங்கள்.

பலராமன் தன் பலத்தைத் திரட்டி பனைமரங்களை உலுக்க..பனம் பழங்கள் உதிர்ந்தன.சிறுவர்கள் சந்தோஷமாக பழங்களை சேகரித்தனர்.

சிறுவர்களின் ஆரவாரத்தைக் கேட்டு அங்கு பாய்ந்து வந்தான் தேனுகாசுரன்.

மிகப் பெரிய கழுதை உருவில் வந்த அசுரனை பலராமன் பார்த்தான்.அதன் பின்னங்கால்களைப் பற்றி, மிகச் சுலபமாக சுழற்றி, ஒரு பனை மரத்தின் மீது வீசியெறிந்தான்.அந்த நொடியே எலும்புகள் முறிந்து மாண்டு விழுந்தான் அசுரன்.

அவன் தூக்கியெறியப்பட்ட வேகத்தில்,அநேக பனை மரங்கள் சடசட என முறிந்தன.காடு முழுதும் பனம் பழங்கள் சிதறின.

பனந்தோப்பு பின்னர் அபாயமில்லா பகுதியானது.

இப்படி அடுக்கடுக்காக அசுரர்கள் அழிந்து கொண்டிருந்தார்கள்.ஆனாலும் கம்சன் தன் முயற்சியை விடவில்லை.அவனால் அனுப்பப்பட்ட மற்றொரு அசுரன் பிரலம்பன்.

ஒருநாள் பலராமனும், கிருஷ்ணனும் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து அவரவர் பக்கம் சிறுவர்களைச் சேர்த்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

ஆட்டத்தில் தோற்றுப் போகிறவ்ரகள், ஜெயித்த கட்சியைச் சேர்ந்தவ்ரகளை தோள்களில் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்பது நிபந்தனை.

அசுரன் பிரலம்பன், தன்னை ஒரு இடைச்சிறுவனாக மாற்றிக் கொண்டு, சிறுவர்கள் மத்தியில் புகுந்து கொண்டான்.

விளையாட்டில் கிருஷ்ணனின் பிரிவினைச் சேர்ந்தவர்கள் பலராமன் கோஷ்டியை தோளில் தூக்கிச் செல்ல வேண்டி வந்தது.

கிருஷ்ணன் ஸ்ரீதாமன் எனும் நண்பனைத் தூக்கிக் கொண்டு ஓட, சிறுவன் பிரலம்பன்..பலராமனை தோளில் தூக்கிக் கொண்டான்.

மற்றவர்கள் குறிப்பிட்ட எல்லையுடன் நிறுத்துக் கொள்ள..பிரலம்பனோ, பலராமனை தூக்கிக் கொண்டு எல்லை தாண்டி ஓடினான்.ஒரு தனியான இடத்துக்குச் சென்றதும்..பலராமனைக் கொன்று விடலாம் என்பது அவன் திட்டம்.

எல்லைத் தாண்டியதும் அவன் அரக்க உருவத்துக்கு மாறினான்.ஆனால், அடுத்த நொடியே பலராமனின் முஷ்டி இடிபோல அரக்கனின் தலையில் இறங்கியது.அந்த ஒரு அடியிலேயே..தலை நொறுங்கி,ரத்தம் கக்கி மாண்டான் பிரலம்பன்.

இப்படி பலராம, கிருஷ்ணர்களின் அசுரவதங்கள் விளையாட்டுப் போல நடந்து வந்தன.இதைக்கண்டு கோபர்கள் அதிர்ச்சியும்..ஆனந்தனும்..திகைப்பும் அடைந்தனர்.

அவர்கள் மேலும் மலைத்துப் போகும்படியாக இருந்தது கண்ணனின் ஆனந்த நர்த்தனம்

No comments:

Post a Comment