அவனது தம்பி இரண்யாட்சனை வராக அவதாரம் எடுத்துக் கொன்ற விஷ்ணுவை பழி தீர்க்கத் துடித்தான்.ஆனால்,விஷ்ணுவை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இரண்யகசிபு ஆத்திரத்துடன் அரக்கப்படையினருக்கு ஆணையிட்டான்..
"மூவுலகிலும் பூஜைகள்,யாகங்கள்,வேள்விகள்,வேதம் ஓதுவது ஆகிய எதுவும் நடைபெறக் கூடாது., கடவுளை பூஜிப்பவர்களையும்,யாகம் நடத்துபவர்களையும்,வேதம் ஓதும் அந்தணர்களையும்,பசுக்களையும் அடித்துக் கொள்ளுங்கள்.அந்த இடங்களைத் தீயிடுங்கள்.நம் எதிரிகளான தேவர்கள் அவிர் பாகங்கள் கிடைக்காமல் செத்து மடியட்டும்.தேவர்களுக்கு ஆதரவாகவும், அசுரர்களுக்கு எதிரியாகவும் உள்ள அந்த மகாவிஷ்ணு மனம் வேதனையடைந்து வெளியே வரட்டும்.அப்போதுதான் நான் அவனைக் கொன்று அந்த ரத்தத்தால் என் தம்பிக்கு அர்ப்பணம் செய்யமுடியும்" என கொந்தளித்தான்.
இரண்யகசிபுவின் ஆணைப்படி அசுரரகள் வேள்விகளை அழித்து,அந்தணர்களை வதித்து..தீயிட்டுக் கொடுமைப் படுத்தினர்.
பின் இரண்யகசிபு..நீண்ட ஆயுட்காகவும், யாராலும் வெல்ல முடியா வலிமைக்காகவும் மந்திர மலைக்கு தவம் செய்யச் சென்றான்.அங்கே கட்டைவிரலால் மட்டுமே பூமியில் நின்று..கைகளை உயர்த் தூக்கிக் கொண்டு..பிரம்ம்னை வேண்டி கடுமையாய் தவமிருந்தான்.
அவனுடைய தவம் வருடக் கணக்கில் நடந்தது.அவன் மீது புதர் மூடி,புற்று வளர்ந்து மறைத்தது.எறும்புகளும்..கரையான்களும் உடம்பை அரிக்கத் தொடங்கின.உணவு, தண்ணீர் இல்லாமல் உடல் இளைத்து மெலிந்தது.
அவனது தவத்தால் பூமி நடுங்கியது.கடல்கள் கொந்தளித்தன.நட்சத்திரங்கள் விழுந்தன.தவ அக்னி நான்கு திசைகளையும் சுட்டெரித்தது.சொர்க்கத்திலிருந்த தேவர்கள் வெப்பத்தைத் தாங்க முடியாது துடித்தனர்.அனைவரும் பிரம்மனிடம் சென்று முறையிட்டார்கள்.
இரண்யகசிபுவின் தவத்தை நிறுத்த அவன் முன் தோன்றினார் பிரம்மன்.பிரம்மதேவனின் தரிசனம் கண்டு மனம் மகிழ்ந்து அவரை வணங்கினான் இரண்யகசிபு.
"உனது கடுமையான தவம் என்னை மகிழ்வித்தது.உனக்கு என்ன வரம் வேண்டும்..கேள்" என்றார் பிரம்மன்.
"பிரம்ம தேவரே! எனக்கு மரணமே வரக்கூடாது.யமன் என் வாசலை எப்பவும் பார்க்கக் கூடாது"என்றான் கசிபு.
"இரண்யா..மரணமே இல்லாத வாழ்வு யாருக்குமே கிடைக்காது.ஒரு ஜீவன் பிறவியெடுத்தால் ஏதாவது ஒரு காலத்தில் அழியத்தான் வேண்டும்..வேறு வரத்தைக் கேள்" என்றார்.
இரண்யகசிபு வேறு வகையில் தன் ஆயுளை நீடித்துக் கொள்ள முடிவெடுத்தான்.அதன்படி வரங்களைக் கேட்கலானான்.
'பிரம்ம தேவரே! நீங்கள் படைத்த எவராலும், எதனாலும் எனக்கு மரணம் வரக்கூடாது.நான் வசிக்கும் இடத்துக்கு உள்ளேயோ..வெளியேயோ,இரவிலோ..பகலிலோ,ஆகாயத்திலோ..பூமியிலோ என் உயிர் போகக் கூடாது.எந்த ஆயுதங்களாலும் நான் கொல்லப்படக் கூடாது.அசையும்..அசையா பொருள் எதனாலும் மற்றும் தேவர்களாலோ..அசுரர்களாலோ,அப்ஸரஸ்களாலோ.நாகங்களாலோ ,எந்த இனத்தின் மூலமாகவும் எனக்கு சாவு வரக்கூடாது.அஷ்டமாஸித்திகள் எல்லாம் எனக்குக் கைகூட வேண்டும்.மூவுலககங்களையும் நான் ஆள வேண்டும்" இப்படி அடிக்கிக்கொண்டேப் போனான் கசிபு.
பிரம்மாவும் வேறு வழியின்றி அவன் கேட்ட வரங்களை அளித்துவிட்டுச் சென்றார்.
எளிதில் மரணம் தன்னை நெருங்க முடியாது எனும் சந்தோஷத்துடன் நாடு திரும்பினான் இரண்யகசிபு.
அப்போதே..தன் அசுரப்படைகளுடன் சென்று மூவுலகினையும் வென்றான்.
இந்திரனை அடித்துத் துரத்தி விட்டு தேவலோகத்தைக் கைப்பற்றினான்.அஷ்டதிக்பாலகர்களும்,தேவர்களும் அடிமை ஆயினர்.சூரியன்,சந்திரன் உட்பட எல்லா நவக்கிரஹங்களும் அரண்மனையில் அவனது அடிமைகளாகப் பணியாற்றினர்.
"மரணமே இல்லாதவன் நான்.இனி எனக்கு அழிவில்லை..எனவே நானே கடவுள்"என அறிவித்துக் கொண்டான்.
மூவுலகங்களிலும் இருந்து கோயில்கள் இடிக்கப்பட்டன.எல்லா இடங்களிலும் இரண்யகசிபுவிற்குக் கோயில்கள் கட்டப்பட்டன.அனைவரும் அவனையே கடவுளாகத் தொழ கட்டாயப்படுத்தப்பட்டார்கள்,கட்டளைகளுக்கு அடிபணிய மறுத்துவர்களை சிறையில் அடைத்தனர்.கொடுமைப்படுத்தினர்.
முனிவர்கள்,ரிஷிகள்,அந்தணர்கள்,தேவர்கள் எல்லோரும் அசுரர்களால் துன்புறுத்தப்பட்டார்கள்.
பின், வேதனைகளை தாங்கிக் கொள்ளமுடியாமல் எல்லோரும் ஒன்று சேர்ந்து நாராயணனைத் துதித்தனர்.
பகவான் அவர்களுக்கு அசரீரியாக அவர்களுக்கு அபயம் அளித்தார்..
"பக்தர்களே! மரணம் இல்லாதவன் என இரண்யகசிபு மேலும்..மேலும்..தவறு செய்கிறான்.ஆனால் எவன் ஒருவன் அடக்கம் இல்லாமல் தன் சக்தியை தவறான வழியில் செலுத்தி அப்பாவிகளை துன்புறுத்துகிறானோ..அப்போதே அவனை அழிவு நெருங்கிக் கொண்டிருக்கின்றது என அர்த்தம்.மூவுலகையும் துன்புறுத்தி வரும் இரண்யகசிபு..எப்போது அவர் மகனான பிரகலாதனைத் துன்புறுத்தி விரோதம் செய்கிறானோ அப்போது அவனை நான் கொல்வேன்"என ஆறுதல் சொன்னார்.
நாராயணன், இப்ப்டி சொன்னதற்குக் காரணம் இருந்தது.இரண்யகசிபுவின் மகனான பிரகலாதன் பகவான் நாராயணனின் பக்தன்.தூக்கத்திலும், விழிப்பிலும் ஸ்ரீஹரியின் நினைவாகவே இருப்பான்.மனதில் நாராயணனை பூஜிப்பவன்.
மகாவிஷ்ணுவை வெறுக்கும் இரண்யகசிபுவின் மகன் எப்படி ஹரி பக்தனானான் எனப் பார்ப்போம்.
இதற்குக் காரணமான நிகழ்ச்சி..கசிபு தவத்தில் இருந்த போது நடந்தது.
இரண்யகசிபு மந்திரமலைக்கு தவம் செய்யச் சென்றதும், இதுதான் சரியான சமயம் என இந்திரன் தனது படையினருடன் அசுரர்கள் மீது படையெடுத்துச் சென்றான்.அவர்களைத் தாக்கி வீழ்த்திவிட்டு இரண்யகசிபுவின் மனைவியான லீலாவதியைத் தூக்கிக் கொண்டுப் புறப்பட்டான்.
அப்போது நாரதர் அவனை வழி மறித்தார்."இந்திரா..இரண்யகசிபுவின் மனைவியைத் தூக்கிச் செல்கிறாய்?" என்றார்.
"நாரதரே! இவள் வயிற்றில் இரண்யனின் அரக்க வாரிசு வளர்ந்து வருகிறது.அது பிறந்தால் தகப்பனைப் போல தேவர்களுக்கு தொல்லைக் கொடுக்கும்.எனவேதான் கருவையும் சேர்த்து கொலை செய்யப் போகிறேன்"
"இந்திரா..எவ்வளவு பெரிய தவறு செய்ய இருந்தாய்...தெரியுமா?இவனுக்குப் பிறக்கப் போகும் குழந்தை, பகவான் நாராயணனின் பரம பக்தனாக உலகம் போற்றும் அளவிற்குப் புகழுடன் விளங்கினான்.இந்த மகனைக் காரணமாக வைத்துதான் இரண்யகசிபு வதம் செய்யப்படப் போகிறான்"
நாரதர் இப்படி சொன்னதும், மனம் மாறிய இந்திரன் , இரண்யகசிபுவின் மனைவியை நாரதரிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றான்.நாரதர், அவளை தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று பத்திரமாக பராமரித்தார்.லீலாவதியின் வயிற்றில் கருவாக இருக்கும் போதே பிரகலாதனுக்கு நாராயணனின் பெருமைகளையும்,பக்தி யோகத்தையும் ,ஞான யோகத்தையும் நாரதர் உபதேசித்தார்.
தவம் பூர்த்தியாகி, வரங்களைப் பெற்று திரும்பிய இரண்யகசிபு தன் மனைவியை இந்திரன் கடத்திக் கொண்டு போனான் என் ஆறிந்து ஆத்திரம் அடைந்தான்.பின் அவளை, நாரதர் காப்பாற்றிப் பாதுகாப்பாக வைத்துள்ளதை அறிந்து, நாரதரை சந்தித்து நன்றி கூறிவிட்டு மனைவியை தன் அரண்மனைக்கு அழைத்து வந்தான்.பின்னர்தான் அவன் தேவலோகத்தின் மீது படையெடுத்து இந்திரனை துரத்தியடித்தான்.
நாரதரிடம் கருவிலேயே உபதேசம் பெற்ற பிரகலாதன்..பிறந்தது முதல் பகவான் விஷ்ணுவின் பகதனாகவே இருந்தான்.இது நீன்ட நாட்கள் இரண்யகசிபுவிற்குத் தெரியாது.
பிரகலாதன் மீது அளவில்லா அன்பு கொண்டிருந்த இரண்யன், அவன் கல்வி பயிலும் காலம் வந்ததும் சுக்ராச்சாரியாரின் மகன்களிடம் கல்வி கற்கக் குருகுலத்திற்கு அனுப்பினான்.
பிரகலாதனுக்கு பேராபத்து அங்குதான் தொடங்கியது.
ஒருநாள் பிரகலாதனின் ஆசிரியர்கள் இரண்யகசிபுவிடம் ஓடோடி வந்தனர்."மன்னா..பிரகலாதன் தன்னுடன் படிக்கும் குருகுலத்து மாணவர்களையெல்லாம் தவறான பாதைக்குத் திசைத் திருப்புகிறார்.அவர் ஸ்ரீஹரியின் நாமத்தைச் கொல்வதோடு அல்லாமல்..மற்ற அசுர பாலகர்களுக்கும் சொல்லிக் கொடுத்து ஜெபிக்க வைக்கிறார்.ஆசிரமம் முழுதும் இப்போது ஹரியின் நாமமே ஒலிக்கிறது" என்றனர்.
இதைக் கேட்ட இரண்யன் கோபமுற்றான்.பிரகலாதனை உடனடியாக அழைத்துவரக் கட்டளையிட்டான்.
பிரகலாதன் அவர் முன்னே வந்து நின்று, "தந்தையே..என்னை அழைத்தீர்களா?" என்றான்.இரண்யன் அவனைப் பார்த்ததுமே பாசத்துடன் தூக்கி மடியில் இருத்திக் கொண்டான்.பின், "மகனே! உன் மகனை யாரோ கெடுத்திருக்கிறார்கள்.நீ நமது குல எதிரியான அந்த நாராயணன்பெயரைச் சொல்கிறாய்.அந்த நாராயணன்தான் என் தம்பியைக் கொன்றவன்.நான் தவம் செய்தபோது உன் தாயைக் கடத்திச் சென்ற இந்திரன் அந்த நாராயணனை ஆதரிப்பவன்.ஆகவே இனியேனும் அந்த நாராயணன் பெயரைச் சொல்லாதே"ஏன்றான்.
"தந்தையே! நாராயணன் விருப்பு..வெறுப்பற்றவர்.என் சிறிய தந்தை இரண்யாட்சன் பூமாதேவியை கடலுக்கடியில் சிறைவைக்க முயன்றதால் நாராயணன் அவரைக் கொன்றார்.தவறு செய்பவர்களை நீங்கள் தண்டிப்பதில்லையா..அதுபோலத்தான்.."
குழந்தைத் தெரியாமல் பேசுவதாக என்னிய இரண்யகசிபு..அவனிடம் நாராயணனை வெறுக்கும்படி பல அறிவுரைகளைக் கூறினான்.
ஆனால் பிரகலாதனோ..தந்தை செய்வது தவறு எனச் சொல்லி"நாமெல்லாம் அழியும் உடலைப் பெற்றவர்கள்.பகவான் நாராயணன் நித்யமானவன்.அவனே உலகைப் படைத்தும்,காத்தும்,அழித்தும் என எங்குமிருப்பவன்.நாம் அவனது திருவடிகளைப் பற்றினால் மோட்சம் பெறுவோம்.அவரது திருவடிகளைப் பற்ற ஒரே வழி அவரது திருநாமமே! நாராயணா...என நாம் சொல்லும் சப்தத்தைக் கேட்டு உருகிப் போய் விடுவார் பரமாத்மா" என்று சொன்னான்.
நாராயண மந்திரமான "ஓம் நமோ நாராயணாய" என்று தந்தையை மறந்து ஜெபிக்கத் தொடங்கினான்.
பரம எதிரியின் பெயரை தன் எதிரிலேயே மகன் சொல்வதை கேட்ட இரண்யகசிபு பொறுமை இழந்தான்.கட்டுக்கடங்காத கோபம் கொண்டான்.எதிரியைத் துதிப்பவன் தன் மகனாயினும் உயிரோடு இருக்கக் கூடாது எனும் முடிவிற்கு வந்தான்.
காவலர்களை அழைத்து "இந்தக் குலத் துரோகியை மலை உச்சியிலிருந்து உருட்டி விடுங்கள்" என்று கட்டளையிட்டான்.தாய் லீலாவதி, மகனை மன்னிக்கும்படி வேண்டினாள்..கெஞ்சினாள்..கதறினாள்..இரண்யன் கேட்கவில்லை.
அரசனின் கட்டளைப்படி காவலர்கள் பிரகலாதனை மலையிலிருந்து உருட்டி விட்டனர்.பிரஹலாதனோ நாராயணன் நாமத்தை உச்சரித்தபடியே உடலில் சிறு காயம் கூட இல்லாமல் திரும்பினான்.
கோபம் தீராத இரண்யன், பாலில் விஷத்தைக் கலந்து அவனுக்குக் குடிக்கக் கொடுத்தான்.கொடிய நாகத்தைக் கொண்டு கடிக்க வைத்தான்.யானையை மிதிக்க வைத்தான் எதுவுமே பிரகலாதனைப் பாதிக்கவில்லை.யானை மிதிப்பதற்குப் பதிலாக அவனை மண்டியிட்டு வணங்கியது.
அதன் பின்னரும் இரண்யன் மனம் மாறவில்லை.ஒரு பெரும் பாறையுடன்..பிரகலாதனை இரும்புச் சங்கிலியால் கட்டி நடுக்கடலில் போடச் சொன்னான்.அப்போதும் பிரகலாதன் சாகவில்லை.
"ௐ நமோ நாராயணாய" என்று ஹரியின் நாமத்தைச் சொல்லியபடியே இருந்த பிரகலாதனை, பாறை தெப்பமாக மாறி கரையில் வந்து சேர்த்தது.
இரண்யன், இறுதியாக ஒருமுறை மகனிடம் பேசிப் பார்ப்போம் என அவனை சபா மண்டபத்திற்கு அழைத்து வரச்சொன்னான்.
மிகுந்த பணிவுடனும்..கூப்பிய கரங்களுடன் தந்தை முன் வந்தான் மகன்.
இரண்யன், கோபமும்..பாசமுமாகக் கேட்டான்,"பிரகலாதா..ஏன் இப்படி தவறுக்கு மேல் தவறு செய்கிறாய்.என் வல்லமைக்கு பயந்து மூவுலகும் நடுங்கும் போது..உனக்கு மட்டும் என்னை எதிர்க்கும் தைரியம் எப்படி வந்தது?
பிரகலாதான் அமைதியுடன் கூறினான்...
"தந்தையே! எனக்கும், உங்களுக்கும்..ஏன் அனைவருக்குமே துணிவினைக் கொடுப்பது நாராயணனே!அவர் தான் நம் பலம்.அவர் அனவருக்கும் பராக்கிரமம் வழங்குபவ்ர்.மனதுக்கு சக்தியினைக் கொடுப்பவர்.இனியேனும் உங்கள் அகங்காரத்தை விட்டுத் தள்ளுங்கள்.நாராயணன் திருவடி பற்றுங்கள்.அவர் உங்களது அனைத்து பாவங்களையும் மன்னித்து அருள்புரிவார்."
இரண்யன் அடங்காத ஆத்திரம் அடைந்தான்..
"உன் நாராயணன் எனக்குப் பயந்து ஓடி ஒளிந்துள்ள கோழை.அவன் என்னைக் காட்டிலும் மேலான கடவுளா?இப்போது அவன் எங்கிருக்கிறான் சொல்.."
"தந்தையே! அவன் இல்லாத இடம் இல்லை.அண்ட சராசரங்கள் அனைத்திலும் இருக்கிறான்.தூணிலும்..இருக்கின்றான்..துரும்பிலும் இருக்கின்றான்..சர்வ வியாபி அவன்"
"அப்படியா..இதோ இந்தத் தூணில் இருக்கிறானா?"என பக்கத்திலிருந்த தூணைக் காட்டிக் கேட்டான் இரண்யன்.
"ஆம்..அவர் இதில் இருக்கிறார்"
"இப்போதே பார்க்கிறேன்.இந்தத் தூணில் அந்தத் துரோகி வெளிப்பட்டால் ஒழித்துவிடுகிறேன்" என்றபடியே..இரண்யன் ஆத்திரத்துடன் அருகிலிருந்த தூணைதன் கதாயுதத்தால் ஓங்கி அடித்தான்.
என்ன ஆச்சரியம்..
தூணை பிளந்து கொண்டு வெளியேறியது ஒரு விசித்திர உருவம்.மனிதனாகவும் இல்லாமல் மிருகமாகவும் இல்லாமல் சிங்க முகமும், மனித உடலும் கொண்டு வெளிப்பட்டார் நரசிம்ம பகவான்.
மேலும்..கீழுமாக., விண்ணுக்கும்..மண்ணுக்குமாக., பூமிக்கும்..ஆகாயத்துக்குமாக நின்ற நரசிங்க மூர்த்தியைப் பார்த்து வியந்து அதிர்ச்சி அடைந்தான் இரண்யன்.
மகா கோபத்துடன்,செக்கச் சிந்த கண்களும்..சுழல்கின்ற நாக்கும்,கோரப் பற்களும், கூர்மையான கத்தி போன்ற நீள நகங்களுமாக நரசிம்மமூர்த்தி இரண்யனை நோக்கினார்.
அது தனது எதிரி ஸ்ரீஹரியே என அறிந்த இரண்யன், கோபத்தில் கதையை சுற்றிக் கொண்டு பாய்ந்தான்.நரசிம்ம மூர்த்தி அவன் கதையை ஒடித்து எறிந்தார்.இரண்யனை ஒரு பொம்மைபோல தூக்கிக் கொண்டு நடந்தவர், வாசல்படியில் போட்டுக் கொண்டார்.
இரண்யனை தம் மடிமீது இருத்திக் கொண்டுகூரிய நகங்களால் அவன் வயிற்றைக் கிழித்து..குடலை உருவி மாலையாகப் போட்டுக் கொண்டு ரத்தத்தைக் குடித்தார்.
இக்காட்சியினைக் கண்ட தேவர்கள் ஜெயகோஷம் போட்டனர்.
இறைவன் பெற்ற வரத்தின்படி அது பகலும் இல்லாத..இரவும் இலாத அந்திப் பொழுது.நரசிம்ம அவதாரமோ..மனிதனும் இல்லாத பிராணியும் இல்லாதது.பிரம்மாவின் படைப்பும் இல்லை.தரையிலோ..ஆகாயத்திலோ சாவு நேரக்கூடாது என்பதால் நரசிம்மர் இரண்யகசிபுவை தன் மடி மீது போட்டுக் கொண்டார்.எந்த ஆயுதத்தாலும் அழியக்கூடாது என்பதால்..தன் கூரிய நகங்களையே ஆயுதமாகக் கொண்டு அவனைக் குத்திக் கிழித்தார் நரசிம்மர்.
இரண்யனை அழித்த பின்னும் அவரது கோபம் அடங்கவில்லை.கர்ஜித்தபடியே..ரத்த அபிஷேகத்துடன் பயங்கரமாகக் காட்சி அளித்தார்.பூமி நடுங்கியது.கடல் கொந்தளித்தது.தேவர்கள் அந்த பேருருவத்தைக் கண்டு அஞ்சினர்.மகாலட்சுமியும் நரசிம்மரை நெருங்க பயந்தாள்.
பிரம்மா, பிரகலாதனை அழைத்து, "இப்போது..நரசிம்மரை அமைதிபடுத்த உன்னால்தான் முடியும்.நீ அவர் அருகில் சென்று அவரை சாந்தப்படுத்து"என்றார்.
பிரகலாதனும் அவரை அணுகி ..அவரது ஸ்தோத்திரங்களை போற்றி துதித்தான்.பகவான் மனம் மாறியது.அவர் சாந்தமாகி, :பிரகலாதா..உனக்கு என்ன வரம் வேண்டும்..கேள்" என்றார்.
"பகவானே! ஆசை இல்லாத மனதைக் கொடு.எப்போதும் உன்னை மறவாத வரத்தைக் கொடு..அது போதும்"என்றான்.
"பிரகலாதா..உன் புகழ் இந்த பூமியில் நிலைத்து நிற்கும்.இந்த யுகம் முடியும் வரை அசுரர் குல மன்னனாய் இருந்து சிறப்பாக ஆட்சி செய்.கடைசியில் என்னிடம் வந்து சேர்வாயாக" என்று ஆசிர்வதித்தார்.
பின் சுக்ராச்சாரியாரைக் கொண்டு பிரகலாதனுக்கு பட்டாபிஷேகம் செய்து அவனை மூன்று உலகிற்கும் அதிபதி ஆக்கினார்.
..என்று இரண்யகசிபுவின் வதத்தை பரீட்சித்திற்குக் கூறிய சுக மகரிஷி மேலும் சொன்னார்..
"பகவான் நரசிம்ம அவதாரத்தை நாழிகை அவதாரம் என்பார்கள்.பகதர்கள் துயரத்தைக் காணச் சகிக்காதவர். அவர்.தன்னை சரணடைந்தவர்களின் துன்பத்தை நாழிகை நேரத்தில் தீர்த்து அருள் பாலிப்பார்.இப்படி பரந்தாமனின் அவதார மகிமைகள் ஒவ்வொன்றும் சொல்லச் சொல்ல இனிப்பவை.பகவான் நாராயணன் கருணாசாகரன். அசுரர்கள், மனிதர்கள்,விலங்குகள் என்றெல்லாம் பாகுபாடு பாராது, "தெய்வமே!" என்று ஒரு யானைக் கூப்பிட்டாலும் அதன் துன்பத்தைத் துடைக்க ஓடோடி வருவார்"
"முதலையின் வாயில் சிக்கிய கஜேந்திர யானையைத்தானே சொல்கிறீர்கள்" - பரீட்சித்
"ஆமாம்..அந்த முதலையும் சரி..யானையும் சரி இரண்டுக்குமே அதன் முற்பிறவி தொடர்பில்தான் இப்பிறவி ஏற்பட்டது"என்றவர் கஜேந்திர மோட்சத்தைப் பற்றிக் கூற ஆரம்பித்தார்.
'திரிகுடம் என்பது,பொன், வெள்ளி,இரும்பு ஆகிய மூன்று உச்சிகளைக் கொண்ட மலை.வரமும், மரகதமும், ரத்னங்களும் கொட்டிக் கிடக்கும் மலை.
ஏராளமான அருவிகள் கொட்டி, எப்போதும் நீர் ஓடிக்கொண்டிருக்கும்.அடர்ந்த மரங்களும், செடி கொடிகளும்,வண்ணப்பூக்களும் மலைச்சரிவை அழகு செய்தன.
கந்தர்வர்களும்,வித்யாதரர்களும், அப்ஸரஸ்களும்,சித்தர்களும் வந்து போகும் அந்தப் பிரதேசத்தில்..வருணனுக்குச் சொந்தமான பெரிய பூங்காவனம் ஒன்றிருந்தது.அதில் அழகான தடாகம் ஒன்றும் இருந்தது.மலையிலிருந்து கொட்டும் அருவி நீர் அந்தத் தடாகத்தில் சேகரமாகிக் கொண்டிருந்தது.
ஒருநாள் யானைகளின் தலைவனான கஜேந்திரன் எனும் யானை தன் தோழர்களுடனும், மற்ற பெண் யானைகள், குட்டி யானைகளுடன் அந்தத தடாகத்திற்கு வந்து கோடை வெப்பத்தைத் தீர்த்துக் கொள்ள நீரில் இறங்கியது.
துதிக்கையில் நீரை அள்ளியெடுத்து தன் உடல் முழுதும் ஊற்றிக் கொண்டு,மற்ற யானைகள் மீது வீசி ஏறிந்தும் விளையாடியது.திடீரென அது பயங்கர சப்தத்துடன் பிளிறியது.எல்லா யானைகளையும் "கரையேறுங்கள்" என கத்தியது.
கஜேந்திரன் ஏன் அப்படி பிளிறிகிறது..ஏன் தங்களை கரையேறச் சொல்கிறது என புரியாது யானைகள் திகைத்தன.பின்னர்தான் கஜேந்திரனின் காலை ஒரு பயங்கரமான முதலையொன்று கவ்வி இழுப்பதைக் கண்டன.
முதலை..கஜேந்திரனின் காலைப் பற்றி தடாகத்தில் இழுக்க முயன்றது.யானையோ முதலையிடமிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள போராடியது.யானையின் காலிலிருந்து பெருகிய ரத்தம் தடாகத்தை சிவப்பாக்கியது.
கரையேற கஜேந்திரனுக்குத் துணையாக எல்லா யானைகளும் ஒன்று சேர்ந்து வந்தும் அதனை கரைக்கு இழுக்கமுடியாமல் இருந்தது முதலைப் பிடிப்பு.
போராட்டத்தில்..ஒரு கட்டத்தில் யானை சோர்ந்து போனது.முதலையிடம் பலியாகி தோற்றுப் போய்விடுவோமோ? எனத் தோன்ற, இனி கடவுளே கதி என்று மனதில் நினைத்தது.
அது அப்படி நினைத்தபோது, முன் பிறவியில் தான் ஜெபித்த பகவானின் ஸ்தோத்திரம் ஞாபகம் வர, கஜேந்திரன், "ஆதிமூலமே என்னைக் காப்பாற்று" என அலறியது.
யானையின் குரல் கேட்ட்டதும், மகாவிஷ்ணு கருட வாகனத்தில் பறந்து வந்தார்.தனது சக்ராயுதத்தை முதலையின் மீது செலுத்தி அதைக் கொன்று கஜேந்திரனைக் காத்தார்.
விஷ்ணுவால் கொல்லப்பட்ட முதலையின் உடலிலிருந்து ஒரு கந்தர்வன் தோன்றினான்.அவன் பெயர் ஹூஹூ.
ஒருமுறை அவன் தன் மனைவிகளுடன் குளத்தில் விளையாடி ஜலக்ரீடை செய்த போது,சற்றுத் தள்ளி தேவலர் எனும் முனிவர் நீரில் நின்று கொண்டு அனுஷ்டானம் செய்து கொண்டிருந்தார்.கந்தர்வன் விளையாட்டாக நீருக்குள்ளேயே சென்று அவரது காலைப் பற்றினான்.கவனம் கலைந்ததால் முனிவர் கோபமுற்று "நீருக்குள் என் காலைப் பற்றி இருந்த நீ..ஒரு முதலையாகப் பிறப்பாயாக" என்று சபித்துவிட்டார்.
இப்பொழுது விஷ்ணுவின் சக்ராயுதத்தால் கொல்லப்பட்டு சாபம் நீங்கியவந்தான் இந்த கந்தர்வன்.பகவானை வணங்கிவிட்டு தேவலோகம் சென்றான்.
மகாவிஷ்ணு அன்புடன் கஜேந்திரனை தடவிக் கொடுக்க..அவனும் மனிதனாக மாறினான்.
கஜேந்திரன் முன்ஜென்மத்தில் இந்த்ரத்யும்னன் என்ற பெயரில் பாண்டிய மன்னனாக இருந்தான்.ஒருமுறை மலையபர்வதம் எனும் மலையில் தவம் செய்து கொண்டிருந்த போது..அகத்திய முனிவர் அங்கு வந்தார்.
பூஜையில் முழ்கியிருந்தபடியால் அவன், அகத்தியரைக் கவனிக்கவில்லை.விருந்தினராக வந்த தன்னை அரசன் அவமதித்துவிட்டான் என்று கருதிய அகத்தியர் "மதங்கொண்டு என்னைக் கவனிக்காமல் இருந்த இவன் ஒரு யானையாகப் பிறக்கட்டும்"என சபித்தார்.
கஜேந்திரன், பூர்வ ஜென்மத்தின் நினைவாய் ஸ்ரீஹரியை அழைத்தான்.ஆடவன் ஸ்பரிசத்தால் சாபம் நீங்கி மோட்சம் அடைந்தான்"என்றார் சுகர் மகரிஷி.
"பகவானின் கருணையைக் கேட்கும் போது மனம் குளிர்கிறது.நானும் அவரது திருவடி பற்றி மோட்சம் அடைய வேண்டும்.இன்னொரு பிறவி எனக்கு வேண்டாம்.பகவான் எனக்குக் கருணைக் காட்ட வேண்டும்" என்றான் பரீட்சித்.
பின், "இரண்யகசிபுவின் வதத்திற்குப் பிறகு பிரகலாதன் பட்டாபிஷேகம் ஆகிவிட்டது..அதற்குப் பிறகு தேவர்கள்,ரிஷிகள் துயரம் நீங்க வில்லையா?"என்றான் பரீட்சித்.
"ஆம்..இரண்யன் வதம் செய்யப்பட்டதால் தேவர்களின் துயரம் நீங்கியது.அவர்கள் மீண்டும் உறசாகமாயினர்.மறுபடியும் இந்திரப் பதவியினை அடைந்த இந்திரன்..அதுநாள் வரைக்கும் அடைந்த துன்பங்களிலிருந்தும் பாடம் கற்கவில்லை.பணிவு பெறவில்லை"
பகவான் விஷ்ணு தனக்கு பக்கப் பலமாய் இருக்கிறார் என்ற தைரியத்தில்,தன்னை எதிர்க்க ஆளில்லை என ஆணவம் கொண்டான்.அதன் வினையோ ஒரு சாபத்தில் முடிந்தது.
அந்த கர்வம் வெளிப்படக்கூடாத இடத்தில் வெளிப்பட்டது.
No comments:
Post a Comment