Monday, July 11, 2022

ஆதிசங்கரர்- 18

 சங்கரர் பாரதத்தில் நான்கு திசைகளிலும் நான்கு மடங்களை நிறுவினார்.


பத்மபாதரை பீடாதிபதியாகக் கொண்டு கிழக்கே பூரி ஜெகன்னாத்தில் ரிக் வேத ப்ரதானமாக கோவர்த்தன மடத்தை நிறுவினார்.


சுரேஷ்வராச்சாரியை பீடாதிபதியாகக் கொண்டு தெற்கே யஜூர் வேத ப்ரதானமாக சிருங்கேரியில் மடத்தை நிறுவினார்.


ஹஸ்தமாலாகாவை பீடாதிபதியாகக் கொண்டு மேற்கே சாமவேத ப்ரதானமாக துவாரகாவில் மடத்தை நிறுவினார்.


தோடகாச்சாரியாரை பீடாதிபதியாகக் கொண்டு வடக்கே அதர்வண வேத ப்ரதானமாகபத்ரியில் ஜோதிர் மடத்தை நிறூவினார்.


சந்திரமௌலீஸ்வர ஸ்படிக லிங்கம் மற்றும் ரத்னசர்வ கணபதி விக்ரகத்தையும் சுரேஸ்வரிடம் கொடுத்து பூஜித்து வருமாறு கூறினார்.

இந்த பூஜையை இன்றும் சிருங்கேறி மடாதிபதிகள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

சங்கரர் ஏற்றி வைத்த ஜோதி இன்றும் சிருங்கேரியில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.  

Friday, July 8, 2022

ஆதிசங்கரர் - 17 (தொடர்)

 சர்வக்ஞபீடத்தில் அமர்தல்

------------------------------------

சங்கரர் இமயமலையில் கங்கைக் கரையில் தன் சீடர்களூடன் தங்கி வந்தார்.

அப்போது காஷ்மீரத்தில் அன்னை சாரதா ட்ஹேவியின் ஆலயம் உள்ளது.அம்கு ஒரு சர்வக்ஞபீடம் இருக்கிறது.இதில் எல்லாம் அறிந்த சர்வக்ஞர் மட்டுமே அமர முடியும்.

அதன் நான்கு பக்கங்களிலும் நான்கு வாசல்கள் உண்டு.வடக்கு,மேற்கு,கிழக்கு ஆகிய மூன்று திசைகளிலிருந்து அறிஞர்கள் வந்த அந்தந்த கதவுகள் திறந்தபடி உள்ளன.

ஆனால்,தெற்கு பக்கத்திலிருந்து ஒருவரும் வராததால் தெற்கு வாசல் மட்டும் மூடப்பட்டிருக்கிறது என்று கேள்விப்பட்டார் சங்கரர்.

உடன், தென் திசைக்குச் சென்று ..தென்திசை கதவு வழியே அக்கோயிலுக்குள் நுழைய வேண்டும் என்று சென்றார்.அவர் தெற்கு வாயிலை அடைந்தார்.அங்கு பல மதங்களைச் சேர்ந்த அறிஞர்களை தமது வாதத் திறமையால் வென்றார்.தென் திசை கதவு திறக்கப்பட்டது.

சங்கரர்,பத்மபாதருடன் உள்ளே நுழைந்தார்.

அங்கிருந்த சிம்மாசனத்தில் அமரப் போனார்.

அப்பொழுது..சரஸ்வதி தேவியின் குரல் கேட்டது.இந்த சிம்மாசனத்தில் அமர சர்வக்ஞராய் இருந்தால் மட்டும் போதாது..சர்வசுத்தி உடையவராகவும் இருக்க வேண்டும் என்றாள் சரஸ்வதி.

அதற்கு சங்கரர்,பிறந்ததிலிருந்து தான் ஒரு பாவத்தையும் அறியேன்.நான் சர்வசுத்தன் என்றார்.

இதைக் கேட்டு மகிழ்ந்த சரஸ்வதி..சங்கரரை சர்வக்ஞபீடத்தில் அமரச் சொன்னாள்.

அதுமுதல் சங்கரர் ஜகத்குரு என அழைக்கப்பட்டார்.

Tuesday, June 28, 2022

ஆதிசங்கரர்- 16 (தொடர்)


 


தன் சீடர்களுடன் பல தலங்களுக்கு யாத்திரை செல்ல முடிவெடுத்தார் சங்கரர்.

ராமேஷ்வரம் சென்று வணங்கிய பின்னர் காஞ்சிபுரத்தை வந்து அடைந்தார்.அங்கு சாக்தர்கள் தந்திர வழிமுறைகளைப் பின் பற்றி வந்தனர்.அதை மாற்ற எண்ணிய சங்கரர்..சாக்கர்களை வாதத்தில் வென்று காமாட்சி அம்மனுக்கு ஸ்ரீசக்ரத்தை பிரதிஷ்டை செய்து வைத்தார்.ஸ்ரீசக்ரம் வைத்த பின் அம்பாளின் உக்ரம் குறைந்து சாந்த ஸ்வரூபியாய் அருள் பாலித்தார்.தாந்திரிக பூஜை முறையை வைதிக பூஜை முறைக்கு மாற்றினார்.

பின் காஞ்சியில் இருந்து புறப்பட்டு திருப்பதி சென்றார்.அங்கு வெங்கடாசலபதியை தரிசனம் செய்தார்.அங்கிருந்து கர்நாடகம் சென்று சங்கரர் அங்கு கபாலிகர்களையும்,பாஷாண்டகர்களையும் வாதம் செய்து வெற்றி கொண்டார்.அங்கிருந்து கோகர்ணம் சென்று சைவ குருவான திருநீலகண்டரை வென்றார்.அவரை அத்வைத சித்தாந்ததை ஏற்க வைத்தார்.பிறகு துவாரகா வந்த சங்கரர் வைஷ்ணவர்களை வென்று உஜ்ஜெயினி சென்றார். 

உஜ்ஜெயினில் பட்டபாஸ்கர் என்பவரை வென்றார்.இதனால் ஜைனர்கள் எதிர்த்தும்..அவர்களால் சங்கரரை வாதத்தில் வெல்ல இயலவில்லை.

பிறகு சங்கரர்,நவகுப்தர் எனும் சாக்கரை வென்றார்.இதனால் கோபமடைந்த நவகுப்தர், சங்கரருக்கு பகந்தரம் எனும் நோய் வரும்படி செய்தார்.ஆனால்..பத்மபாதரின் மந்திர சக்தி மூலம் அந்நோய் சங்கரரை நீங்கி நவகுப்தரையே சென்று தாக்கிய து.

பின், உஜ்ஜெயினிலிருந்து புறப்பட்டு இமயமலையை அடைந்தார் சங்கரர்.அங்கு தனது குருவான கோவிந்த பகவத்பாதரின் குருவான கௌடபாதரை சந்தித்து ஆசி பெற்றார்.

பின், தன் சீடர்களுடன்  சில காலம் கங்கை நதிக்கரையில் தங்கினார்.

Thursday, June 23, 2022

ஆதிசங்கரர்-15(தொடர்)

 ஆதிசங்கரரின் சீடர் பத்மபாதர் "சாரீரக பாஷ்யத்திற்கு" விளக்க உரை எழுதினார்.அதில் கொஞ்சம் பாகம் ஆதிசங்கரருக்கு படித்துக் காட்டினார்.பிறகு அவருக்கு தீர்த்தாடனத்தில் ஆர்வம் ஏற்பட ராமேஸ்வரத்திற்கு புறப்பட்டார்.தனது சாரீரக பாஷ்யத்தையும் உடன் எடுத்துச் சென்றார்.

போகும் வழியில் ஜம்புகேஷ்வரத்தில்..அவரது மாமாவின் இல்லம் இருந்த்து.அங்கேபுத்தகத்தை வைத்து விட்டு ,திரும்பி வருகையில் எடுத்துக் கொள்ளலாம் என்று ராமேஸ்வரம் போனார்.

இவர் இல்லாதபோது..அவரது மாமா இந்நூலை படித்துப் பார்த்தார்."இந்நூல் நம் சித்தாந்தத்தை அழித்துவிடும் போல இருக்கிறதே" என நினைத்தார்."புத்தகத்தை அழித்துவிட்டால் போச்சு.மறுபடி இதேபோல எழுதுவது கடினம் "என்று எண்ணினார்.

அவருக்கு இரண்டு வீடுகள் இருந்தன.ஒரு வீடு சிதைந்திருந்தது.அதில் தேவையற்ற சாமான்களைப் போட்டு வைத்திருந்தார்.அந்தப் புத்தகத்தை அங்கு வைத்துவிட்டு..அந்த வீட்டிற்கு தீ வைத்து விட்டார்.

பத்மபாதர்,ராமேஸ்வரத்திலிருந்து வந்ததும்..விபரீதம் நடந்து விட்டதாக வேஷம் போட்டார்.

ஆதிசங்கரரிடம் வந்த பத்மபாதர்..நடந்த விஷயங்களைக் கூறினார்.

"நீ முதல் அத்தியாயம் நான்கு பாதமும், இரண்டாம் அத்தியாயம் முதல் பாதமும் என்னிடம் வாசித்துக் காட்டினாய் அல்லவா?..அதைத் திரும்பச் சொல்கிறேன்.எழுதிக் கொள்.அதவது உலகிற்கு கிடைக்கட்டும்"என்று ..தான் ஒரே ஒருமுறை கேட்ட்தை கடகடவென சொன்னார் சங்கரர்.

முதல் ஐந்து பாதங்களுக்கு விரிவுரை ஆனதால் இந்நூலிற்கு "பஞ்ச பாதிகா"என்று பெயர்.

 

 

Tuesday, June 21, 2022

ஆதிசங்கரர்- 14 (தொடர்)


 

சங்கரர் தன் சீடர்களுடன் சிருங்கேரியில் 12 ஆண்டுகள் தங்கியிருந்தார்.அப்போது சீடர்கள் பல நூல்களையும், சங்கரர் எழுதிய நூல்களுக்கு விளக்கவுரையும் எழுதினார்கள்.

இவ்வாறு இருக்கையில் தன் தாயின் இறுதி நாட்கள் நெருங்குவதை தன் ஞானதிருஷ்டியால் சங்கரர் உணர்ந்தார்.

தன் சீடர்களிடம் தாயாரின் நிலையைப் பற்றிக் கூறி..காலடி வந்தார்.

மகனைக் கண்டு தாய் மகிழ்ந்தாள்.

சங்கரர்,மிகவும் அன்புடன்.."அம்மா..கவலைப்படாதே...உனக்கு என்ன ஆசை..என்று கூறு.." என்றார்.

தன்னை சிவலோகத்துக்கு அனுப்ப வேண்டும்..என தாயார் கூற..சங்கரரும் "சிவபுஜங்கம்" எனும் ஸ்டோத்திரத்தால் பரமசிவனைத் துதித்தார்.சிவகணங்கள் உடன் அங்கு சூலத்தை ஏன்றியபடி தோன்றினர்.

இவைகளினால் பயந்த தன் தாயாரின் வேண்டுகோளுக்கு இணங்க.மகாவிஷ்ணுவை வேண்டி ஒரு பாடல் பாடினார் சங்கரர்.

உடன் விஷ்ணுவின் தூதர்கள் வந்து..தாயாரை விமானத்தில் ஏற்றிக் கொண்டு வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்றனர்.

சங்கரர் தாயாருக்கு இறுதிச் சடங்குகளை செய்யத் தொடங்கினார்.

சங்கரரின் உறவினர்களும்,ஊராரும் சன்னியாசியான அவர் நெருப்பு சம்பந்தப்பட்ட சடங்குகளில் ஈடுபடக் கூடாது என்றனர்.சங்கரர் மனம் தளராமல் தன் தாய்க்குக் கொடுத்திருந்த சத்தியத்தைப் பற்றிக் கூறினார்.அதை அவர்கள் கேட்பதாக இல்லை.

உடன் சங்கரர்  உலக சம்பிரதாயத்தை மீறாமல்..அதேநேரம் ..தாய்க்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றும் வகையில்..தன் வீட்டுக்கு அருகில் கட்டைகளை அடுக்கி..தனது யோக சக்தியால் வலது கையிலிருந்து அக்கினியை உண்டாக்கி அதில் தாயாரின் தகனக் கிரியைகளை செய்து முடித்தார்.


(தொடரும்) 

Sunday, June 19, 2022

ஆதிசங்கரர்-13(தொடர்)

 



தோடகாஷ்டகம் !
------------------
ஆதிசங்கரர் சிருங்கேரியில் இருந்த போது காலநாத கிரி என்ற சிறுவன் அவரை வணங்கினான். பெரிய ஞானத் தேடலோ ஆன்மீக விழைவுகளோ இல்லாது இட்டபணி செய்து கொண்டு இன்பமாக இருந்து வந்தான் கிரி. ஆனால் சங்கரர் பெரிய ஞானி என்பதும் அவருக்குத் தொண்டு செய்வது நல்லது என்பதும் அவனது மனதில் ஆழப்பதிந்து இருந்தது. ஒரு நாள் தன் மூன்று சீடர்களுடன் வேதாந்த வகுப்பிற்கு அமர்ந்தார். கிரி துணிகளைத் துவைத்து உலர்த்திக் கொண்டிருந்தான். பாடத்தைத் தொடங்காது இருந்த குருவிடம் சீடர்கள் ஏனென்று கேட்க கிரி வரட்டும் என்றார் சங்கரர்.
அருகில் அமர்ந்திருந்த பத்மபாதர் ஒரு கல்லைச் சுட்டிகாட்டி அதற்குப் பாடம் சொல்வதும் கிரிக்குப் பாடம் சொல்வதும் ஒன்றே என்றார். சற்றே நகைத்த பகவத்பாதர் கிரியை அழைத்து ஆசீர்வதித்து இதுவரை நீ கற்றதைச் சொல் என்றார். அப்போது கிரி பாடிய எட்டுச் செய்யுட்கள் (அஷ்டகம்) குருவின் மகிமையை வியந்தோதுவதாக இருந்தது. சங்கர தேசிகாஷ்டகம் என்று அதற்குத் தலைப்பிட்டார் கிரி. அப்போதே கிரியை தோடகாச்சாரியார் என்ற சந்நியாசப் பெயருடன் தன் சீடர்களில் ஒருவராக ஏற்றார் பகவத் பாதர். அவர் பாடிய சங்கர தேசிகாஷ்டகம் அவரது பெயரிலேயே தோடகாஷ்டகம் என்று விளங்கட்டும் என்றும் ஆதிசங்கரர் ஆசீர்வதித்தார்.

ஸ்ரீ ஸ்ரீ தோடகாச்சாரியார் பாடிய தோடகாஷ்டகமும் அதன் அர்த்தமும்.
விதிதாகில சாஸ்த்ர ஸூதா ஜலதே
மஹிதோபநிஷத் கதிதார்த்தநிதே!
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!

புகழ்பெற்ற கடல் போன்ற அனைத்து சாஸ்திரங்களையும் அறிந்தவரும், உபநிஷத்துக்களில் கூறி இருக்கும் தத்துவங்களை உணர்ந்து அதில் உறைந்தவரும் ஆன அந்த பரமேஸ்வரனுக்கு நிகரான சங்கர குருவே, உங்கள் பாதங்களில் என்னுடைய ஹ்ருதயத்தைச் சமர்ப்பிக்கிறேன். தாங்களே எனக்கு குரு, வழிகாட்டி (தேசிக என்பதற்கு இங்கே வழிகாட்டி என்ற பொருள்)

கருணா வருணாலய பாலய மாம்
பவஸாகர துக்க விதூன ஹ்ருதம்
ரசயாகிலதர்சன தத்வவிதம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!

குருவே, எனக்கு எதுவுமே தெரியாதே! நான் நிர்மூடன்! எந்தக் கலையும் என்னால் அறியப் படவில்லை. ஆகையால் என்னால் பிறருக்குப்பயன் தரும் எந்த வித்தையையும் கற்பித்துப் பொருள் ஈட்டித் தங்களுக்கு வேண்டியவற்றைச் செய்து குரு தக்ஷிணையும் தர இயலவில்லை. இப்படி எதுவுமே இல்லாத ஏழையான எனக்குத் தாங்கள் தங்கள் சுபாவமான கருணையாலும், அன்பாலுமே அனைத்தையும் கற்பித்துக் காட்ட வேண்டும். ஹே சங்கரகுருவே, தங்கள் திருவடியே எனக்குச் சரணம்! கருணை நிறைந்தவரே, தங்கள் கருணையாகிய கடலால் இந்தப் பிறப்பு இறப்பு என்னும் சாகரத்தில் மூழ்கித் தவிக்கும் என்னைக் காத்துக் கரை சேருங்கள்.
என்னை ஞானவானாக ஆக்குங்கள். சங்கர குருவே தாங்களே எனக்குக் கதி! தங்களைச் சரணடைகின்றேன்.

பவதா ஜனதா ஸுகிதா பவிதா
நிஜபோதவிசாரண சாருமதே
கலயேச்வர ஜீவ விவேகவிதம்
பவ சங்கர தேசிகமே சரணம்!!
தாங்களே பரப்பிரும்மம். அதனால் தாங்கள் தெளிந்த ஞானத்தை உடையவராய் இருக்கிறீர்கள். தங்கள் ஞான போதனை எனக்கு மட்டுமின்றி உலகத்து மக்களுக்கும் பயன்பட்டு அதனால் க்ஷேமம் உண்டாகும். என்னை விவேகம் உள்ளவனாக என்னை ஜீவனை அறிந்தவனாக ஈஸ்வரனை அறிந்தவனாக மாற்றுங்கள். ஹே, சங்கர குருவே, தாங்கள் தான் எனக்குச் சரணம்!

பவ ஏவ பவானிதி மே நிதராம்
ஸமஜாயத சேதஸி கெளதுகிதா
மம வாரய மோஹமஹாஜலதிம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!
தாங்களே அந்த சாட்சாத் பரமேஸ்வரன். என்னுடைய சித்தம் பகுத்து அறிந்து காமத்தை விலக்கும் அறிவை நீங்களே எனக்குத் தரவேண்டும். என்னுடைய விருப்பமே தங்களால் எனக்கு ஞானம் ஏற்படவேண்டும் என்பதே! ஹே சங்கர குருவே சரணம்!

ஸுக்ருதே (அ)திக்ருதே பஹுதா பவதோ
பவிதா ஸமதர்சன லாலஸதா
அதிதீனமிமம் பரிபாலய மாம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!
தங்களின் எங்கும் பிரும்மமே என்ற கொள்கையே எத்தனைவிதமான புண்ணியங்களைச் செய்ததால் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும்?? எங்கும்
நிறைந்திருப்பது அந்தப் பிரம்மமே தான் என்ற இத்தகைய எண்ணம் ஏற்பட எத்தகைய புண்ணியங்களைச் செய்யவேண்டும்?? அப்படி ஒன்றுமே செய்யாமல் மிகவும் ஏழையாக இருக்கும் என்னை உங்கள் கருணை ஒன்றே காப்பாற்ற வேண்டும். ஹே சங்கர குருவே, தங்கள் திருவடி சரணம்!

ஜகதீ மவிதும் கலிதாக்ருதயோ
விசரந்தி மஹா மஹஸஸ்சலத:
அஹிமாம் சுரிவாத்ர விபாஸி குரோ
பவசங்கர தேசிக மே சரணம்!!
குருவே! தங்கள் உண்மையான ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டும் அத்தகைய ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டு உலாவும் தேவாதி தேவர்களுக்கு நடுவே தாங்கள் ஒளி விட்டுப்பிரகாசிப்பது சூரியனைப் போல விளங்குகிறது. ஹே சங்கர குருவே, தங்கள் திருவடி சரணம்!

குருபுங்க புங்கவ கேதந தே
ஸமதாம் அயதாம் நஹி கோபி ஸுதீ:
சரணாகத வத்ஸல தத்வநிதே
பவ சங்கர தேசிக மே சரணம்!!
ரிஷபக் கொடியைக் கொண்ட பரமேஸ்வர ஸ்வரூபமே தாங்கள் தானே, குருக்களுக்கெல்லாம் மேலான குரு சிரேஷ்டரே! தங்களுக்கு ஈடு இணை எவரும் இல்லை. எப்படிப் பட்ட புத்திமானும் உங்களுக்கு இணையாக மாட்டானே! உம்மைச் சரணடைந்தால் கருணையுடன் ஆத்ம தத்துவத்தைப் போதித்து இவ்வுலக மாயையான சம்சாரக் கடலில் இருந்து தாண்டச் செய்பவரே! ஹே சங்கர குருவே தங்கள் திருவடி சரணம்!

விகிதா ந மயா விசதைககலா
நசகிஞ்சன காஞ்சந மஸ்தி குரோ
த்ருதமேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!
ஆழமாய் விரிந்த ஞானத்தில் சிறு கிளை அளவிற்கு கூட அறிவில்லாத அடியேனுக்கு அருள் கூர்ந்து வாழும் வழியை போதித்து வீழ்ச்சியில் இருந்து அடியேனை காப்பாற்றுவதற்கு நின் திருவடியை சரணடைந்தேன். ஹே சங்கர குருவே தங்கள் திருவடி சரணம்!

ஸ்ரீ குருப்யோ நமஹ !

Thursday, June 16, 2022

ஆதிசங்கரர்- 12 (குறுந்தொடர்)


 


சங்கரர்..கர்நாடகாவில்..துங்கபத்ரா நதிக்கரையில் இருந்த சிருங்கேரிக்கு வந்து சேர்ந்தார்.

தசரதர் புத்ரபாக்யம் வேண்டி செய்த புத்ரகாமேஷ்டி யாகத்தை நடத்தி வைத்த ரிஷ்யசிருங்க மாமுனிவரின் ஆசிரமம் அங்கு இருந்தது.

அங்கு நிறைமாத கர்ப்பிணியான ஒரு தவளை வெயில் தவிக்கும் போது..ஒரு நாகப்பாம்பு படமெடுத்து தன் தலையால் குடைபிடித்து அத்தவளையைக் காப்பாற்றிய காட்சியை சங்கரர் கண்டார்.

இயல்பாகவே விரோதிகளான இவை இரண்டும் ஒன்றாக இருப்பதைக் கண்ட சங்கரருக்கு அந்த இடம் மிகுந்த சக்தி வாய்ந்த இடமாகத் தோன்றியது.

முன் உபயபாரதியிடம் ,தான் விரும்பும் இடத்தில் அமர்ந்து அருள்பாலிக்க வேண்டும் என சொல்லியிருந்தது நினைவிற்கு வர..அதன்படியே அவளுக்கென ஒரு ஆலயத்தை அமைத்து பிரம்மஸ்வரூபிணியாக சாரதாபரமேஸ்வரியை பிரதிஷ்டை செய்தார்.

Sunday, June 12, 2022

ஆதிசங்கரர்- 11(குறுந்தொடர்)

 

தவளை, நாகப்பாம்பு நட்பு

இதன் பின் சங்கரர் துங்கபத்திரை நதிக்கரையில் உள்ள சிருங்கேரி என்னும் இடத்திற்கு வந்தார்அங்கு மாமுனிவர் ரிஷ்யசிருங்கர் ஆஸ்ரமம் இருந்ததுஅங்கு ஒரு தவளை கர்பமாக இருந்ததுவெயிலின் வெப்பம் தாங்காமல் தவித்த தவளைக்கு ஒரு நாகப் பாம்பு தன் தலையால் குடை பிடித்தது

இதை பார்த்த சங்கரர் வியந்தார்இயற்கையில் எதிரிகளான பாம்பும் தவளையும் சேர்ந்து இருப்பதை கண்ட சங்கரர் இந்த இடம் நிச்சயமாக ஒரு சக்திமிகுந்த இடமாகத்தான் இருக்க வேண்டும் என எண்ணினார்.

எனவே இந்த இடத்தில் சாரதாபரமேஸ்வரிக்கு ஒரு ஆலயம் நிறுவ முடிவு செய்தார்முன்பு உபயபாரதியிடம் வைத்த வேண்டுகோள்படி அங்கு ஒரு ஆலயத்தை கட்டி  பிரம்மஸ்வரூபிணியாக சாரதாபரமேஸ்வரியை பிரதிஷ்டை செய்தார்.

ஆதிசங்கரர்- 10 (குறுந்தொடர்)

 


சங்கரரின் மற்றொரு சீடர் ஹஸ்தாமலகர்


 சங்கரர் கர்நாடகாவில் பல புண்ணிய தலங்களுக்கு சென்றார். அப்போது ஸ்ரீவாடியில் கடவுள் பக்தியுள்ள ஒரு அந்தணர் தனது ஊமை மகனை அழைத்துக் கொண்டு சங்கரரிடம் வந்தார். 


அவரை நமஸ்கரித்து, ஐயா! என் மகன் ஊமையாக மட்டுமல்லாமல் மூளை வளர்ச்சியின்றி காணப்படுகிறான். தாங்கள் தான் அவனை குணப்படுத்த வேண்டும் என்று சொன்னார். 


சங்கரர் சிறுவனைப் பார்த்து, நீ யார்! ஏன் இப்படி ஜடம் போல் இருக்கிறாய் என்று கேட்டார். அதுவரை ஊமையாக இருந்த சிறுவன் பேச ஆரம்பித்தான். நான் ஜடமில்லை, சித்ஸ்வரூபி என்று பதிலளித்து 12 ஸ்லோகங்களால் ஆத்ம தத்துவத்தை விளக்கினார். இதுவே ஹஸ்தாமலகீயம் என்று சொல்லப்படுவது. சங்கரர் இதற்கு உரை இயற்றியுள்ளார். சங்கரர் அச்சிறுவனை ஆசிர்வதித்து, அவனுக்கு ஹஸ்தமாலகா (உள்ளங்கை நெல்லிக்கனி) என பெயரிட்டு தன் சீடராக ஏற்றுக் கொண்டார்.


ஹஸ்தாமலகருக்கு எப்படி பிறவியிலேயே, பாடம் கற்காமலே ஞானம் வந்தது என்று சீடர்கள் வினவ, சங்கரர் கூறினார். 

"யமுனா நதிக்கரையில் ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். ஒரு நாள் ஒரு மாது தனது இரண்டு வயது பாலனை அவரிடம் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு நதியில் ஸ்நானம் செய்யச் சென்றாள். தற்செயலாக குழந்தை நதியில் விழுந்து இறக்க மக்கள், அந்தக் குழந்தையின் சடலத்தை அந்த முனிவர் முன் இட்டு புலம்பினார்கள். கருணை மிகுந்த முனிவர் நடந்ததை அறிந்து, தன் யோகசக்தியால் குழந்தையின் உடலில் புகுந்தார். அவரே ஹஸ்தாமலகர் ".

Wednesday, June 8, 2022

ஆதிசங்கரர்- 9 (குறுந்தொடர்)

 ஆதிசங்கரர் சரித்திரத்தில் வரும் ஒரு கதைக்குள் வரும் இன்னொரு கதையைப் பார்ப்போம்.

அது ஒரு வேடனைப் பற்றியது.அந்த வேடனுக்கு பகவான் ஸ்ரீஹரி காட்சி அளித்தது பற்றியது.ஒரு வேடன் எப்படி குருவானான் என்பதைப் பற்றியது.

ஒரு கபாலிகன்,க்ரகசன் என்று பெயர்.

கபாலிகர்கள்.."ஈஸ்வரன் எப்படி எலும்பினால் மாலை போட்டுக் கொண்டிருக்கிறாரோ..அப்படி நாமும் எலும்பினால் மாலை போட்டுக் கொள்ள வேண்டும்.அவன் எப்படி மயான சாம்பலை உடம்பெல்லாம் பூசிக்கொண்டுள்ளானோ அப்படியே நாமும் பூசிக் கொள்ள வேண்டும்.மண்டை ஓட்டில்தான் பிச்சை எடுக்க வேண்டும்.அந்தப் பிச்சைக் கூட மாமிசப் பிச்சையாக இருக்க வேண்டும்.அது கிடைக்காவிடில் மயானத்திற்குப் போய் அங்கு வெந்து கொண்டிருக்கும் பிணத்தின் நர மாமிசத்தை அங்கிருப்பவனிடம் யாசிக்க வேண்டும்" எனும் ஆச்சாரங்களைக் கொண்டவர்கள்.

க்ரகசன், சங்கரரை தம் குலத்தின் எதிரியாகப் பார்த்தான்.அப்படியாவது அவரைத் தீர்த்துக் கட்டினால்தான் நம் மதம் பிழைக்கும் என்று எண்ணினான்

சங்கரரோ.. எப்போதும் தன் சீடர்களுடன் சூழப்பட்டவராகவே காணப்பட்டார்.அவரை எப்படிக் கொள்வது? என்று கபாலிகன் யோசித்தான்.

ஒருநாள் சமயம் பார்த்து அவரிடம் வந்தான்."சுவாமி..நான் வெகு நாட்களாக தாந்திரிகமான மார்க்கத்தில் உபாசனை பண்ணீக் கொண்டு வருகிறேன்.பெரிய ஹோமம் ஒன்று செய்ய வேண்டும்.அதற்கு நரபலி கொடுக்க வேண்டும்..அந்த சிரம் ஒரு அரசனுடையதாகவோ..அல்லது ஒரு துறவியினுடையதாகவோ இருக்க வேண்டும்.அரசனிடம் கேட்க முடியாது.ஆகவே நீங்கள் தான் உதவ வேண்டும்.."என வேண்டினான்.

சங்கரருக்கு மிகவும் சந்தோஷம் உண்டானது."என் உடம்பும்..எலும்பும்..ஒன்றுக்கும் உதவாது போகும் என்று எண்ணினேன் .ஆனால் அதற்கும் கூட உபயோகம் இருக்குமென்றால் அதைவிட எனக்கு மகிழ்ச்சி என்னவய இருக்கும்.நாளைக்கு சாயும்காலம் ஆற்றங்கரைக்கு வா..நான் தனியாக இருப்பேன்.சமாதியில் இருக்கையில் என் தலையை எடுத்துக் கொண்டு போ" என்று சொன்னார். 

அவ்வாறே...கபாலிகன் மறூநாள்..சங்கரர் சமாதி நிலையில் இருக்கையில்  ஆற்றங்கரைக்குச் சென்றான்.கத்தியை எடுத்து அவரை வெட்டப் போனான்.திடீரென..சங்கரரின் சீடர் பத்மபாதர் வந்து விட்டார்.

பத்மபாதருக்கு,சங்கரர் கபாலிகனுக்கு அளித்த உறுதி தெரியாது.அதனால் அவர் ஆவேசத்துடன்.."ஹோ''ஹோ.." என்று கத்தியபடியே..கபாலிகன் மீது பாய்ந்து அவன் மார்பைக் கிழித்துப் போட்டு விட்டு சிம்மம் மாதிரி அட்டகாசம் செய்தார்.சமாதி நிலையில் இருந்த சங்கரர் நரசிம்மரின் அட்டகாசத்தைக் கேட்டதும்..கண்ணை விழித்துப் பார்த்தார்.

கபாலிகன் இறந்து கிடந்தான்.பத்மபாதர் கைகளில் ரத்தக்கறை.சங்கரர கண் விழித்ததும் உக்கிரம் தணிந்து..அவர் பாதங்களில் விழுந்தார் சீடர்.

"என்ன இது?" என சங்கரர் கேட்க...தனக்கு எதுவும் தெரியாது என்றார் பத்மபாதர்.

உடன் சங்கரர்.."உனக்கு ஏதாவது நரசிம்ம உபாசனை உண்டா?"ஏன்றார்.

"சின்ன வயதில் ஒருவர் நரசிம்ம மந்திரத்தை உபதேசம் செய்தார்.. அது சித்தியாக வேண்டும் என்றால்..புரச்சரணம் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.எனவே.."அஹோபிலம்" சென்று..அங்கு மலையில் அமர்ந்து ஜெபம் செய்தேன்.அப்போது,ஒருநாள், ஒரு வேடன் வந்து"ஏன் இங்கு அமர்ந்திருக்கிறாய்.இங்கு உனக்கு உணவுகூட கிடைக்காதே..என்றான்..

அதற்கு நான்,"நரசிம்மத்தை..பிரத்யக்ஷமாய்க் காண வேண்டும்..அதற்காக தவம் செய்கிறேன்..என்றேன்.மேலும் அவனிடம் தியான சிலோகத்தில் கூறியப்படி நரசிம்மத்தின் அங்க..அவய ரூபத்தைப் பற்றிக் கூறினேன். 

அதற்கு அவன்.."நீ பொய் சொல்ல மாட்டாய்.நீ சொல்கிற மாதிரியான சிங்கம் இந்த மலையில் உள்ளது என்று நீ சொல்வதால்..நாளை சூரியன் மறைவதற்குள் உன் முன்னால் அதைச் சத்தியமாகக் கொண்டு வந்து காட்டி விடுகிறேன்"என்று சொல்லி விட்டு போய் விட்டான்.

அந்தச் சிங்கத்தைத் தேடி நாள் முழுக்க..அலைய ஆரம்பித்தான்.இரவு முழுவதும் தேடினான்.பசி,தாகம் தெரியாமல்..நரசிம்மம்..நரசிம்மம் என்று ஒரே நினைவாக..சுலோகத்தில் சொன்னபடியான ஒரு உருவததை மனதில் நிறுத்திக் கொண்டு அலைந்தான்.

மறுநாள்..சூரியன் மறையும் நேரமும் வந்தது.கொடுத்த வாக்கைக் காக்க முடியவில்லையே என துக்கம் கொண்டான்.ஒரு கொடியை மரத்தில் கட்டி.."ஏ..சிங்கமே..நீ எப்படியோ என் கண்களில் அகப்படாமல் சுற்றுகிறாய்.அவர் நீ இருக்கின்றாய் என்று சொல்கிறார்.அவர் பொய் சொல்ல மாட்டார்.என் கண்களில் அது அகப்படாது என அவர் சொன்னது சரியாகப் போய் விட்டது.நான் கொடுத்த வாக்கு பொய்யாகப் போக நன ஏன் உயிருடன் இருக்க வேண்டும்..நீதானே என் சத்தியத்தைப் பொய்யாகச் செய்தாய்..உனக்காக என் உயிரை விடுகிறேன்"என்று கூறி..உயிரை விட சுருக்குப் போட்டுக் கொண்டான்.

உடனே..நாசிம்ம மூர்த்தி கர்ஜனையுடன் சிம்ம ரூபமாக..அவன் முன் வரவே..சுருக்குக் கயிறு அறுந்து போயிற்று."சிங்கமே..இப்போதாவது வந்தாயே! வா..உன்னைக் கொண்டு போய் அவரிடம் நிறுத்துகிறேன்" என்று அந்தக் கொடியால் அதைக் கட்டி இழுத்துக் கொண்டு வந்தான்.

சிம்ம் அகர்ஜனைக் கேட்டது.அவன் இழுத்து வருவது தெரிந்தது.கொடியும் தெரிந்தது.ஆனால் சிங்கம் தெரியவில்லை."எனக்கௌ இறைவன் தெரியவில்லையே...உனக்குத் தெரிகிறாரே! நீதான் என் குரு..என காலில் விழுந்து பிரார்தித்தேன்.

"ஒலி வடிவில் இறைவன் எனக்கு அருள் வாக்களித்தார்."உலகத்திற்கே பெரிய உதவி செய்யும் படியான சந்தர்ப்பம் உனக்கு வரும்.அப்போது உன் ரூபமாக நான் வெளிப்படுவேன்"என்று சொன்னார்.அதுதான் எனக்குத் தெரியும் வேறு ஒன்றும் எனக்குத் தெரியவில்லை"என்று பத்மபாதர் சங்கரரிடம் கூறினார்.

சங்கரருக்கு எல்லாம் புரிந்தது.இறைவன் ஸ்ரீஹரி ஒரு வேடனுக்கும்..பின் தம் சீடனுக்கும் அருள் புரிந்ததும்..அதன் வழியாகத் தமக்கு அருள் புரிந்ததையும் உணர்ந்து கொண்டார்.

சங்கரரை..பத்மபாதர் வழியாக இறைவன் காத்தது ஒரு கதை.பத்மபாதருக்கு ஒரு வேடன் மூலம் இறைவன் அருள் புரிந்தது இன்னொரு கதை. 

Monday, May 30, 2022

ஆதிசங்கரர்- 7 (குறுந்தொடர்)

 குமாரிலபட்டர்

-------------------------

குமாரிலபட்டர் ,வேதாந்தத்தின் முற்பகுதியான கர்ம காண்டம் எனப்படும் பூர்வ மீமாம்சா குறித்து "மீமாம்சா சுலோக வார்த்திகம்"எனும் விரிவான நூலை எழுதிப் புகழ் பெற்றவர்.இவரது சீடர்களில் புகழ் பெற்றவர் பிரபாகரர்.இவரும் பல வேத தத்துவ நூல்களை எழுதியவர்.

சுருதிகளில் குறிப்பிடும் மந்திரங்கள் மற்றும் யாகம்,யக்ஞம் போன்ற வைதீக கர்மங்களை மட்டுமே செய்வதன் மூலம் சொர்க்கத்தை எளிதாக அடைய முடியும் எனும் கொள்கை உடையவர்.ஈஸ்வரன் எனும் இறை தத்துவத்தை ஏற்றுக் கொள்ளாதவர்.வேதங்களில் கூறப்பட்ட சடங்குகளைச் செய்வதால் மட்டுமே ஒருவன் எளிதாக சொர்க்கத்திற்குச் செல்ல முயலும் போது..உத்தர மீமாம்சையான வேதாந்தம் எனும் உபநிடதங்கள் மூலம் பிரம்மத்தை அறிவதன் மூலம் சொர்க்கத்தை அடைய இயலாது என்ற கொள்கை உடையவர்.


புத்த மதத்தவர்களுக்கு வேதகர்மங்கள் கிடையாது.ஆதியில் அவர்களது கருத்துகளை வெல்ல எண்ணிய குமாரில பட்டர்..பௌத்தனாக மாறுவேஷம் பூண்டு பௌத்தர்களுடனேயே வசித்தால்தான் அவர்களது கருத்துகளை ஏற்கலாம்.பிறகு அவற்றை எதிர் வாதத்தால் முறிக்கலாம் என்றெண்ணினார்.அவ்விதமே பௌத்தரகாக வேஷம் போட்டு அம் மதக்கொள்கைகள் முழுவதையும் கற்றுக் கொண்டார்.நாளந்தா  பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்தார்.பிற்பாடு வேத கர்மங்கள் அவசியம் என்பதை நிலைநாட்டும் போது..இக்கர்மங்களை விலக்கும் புத்த மதத்தை ஆணித்தரமாக கண்டித்தார்.

ஒருமுறை வேதநெறிகளையும்,சடங்குகளையும் தாக்கிப் பேசிய பௌத்தகுரு தர்மகீர்த்தியை எதிர்த்து வாதிட்டதால் குமரிலப்ட்டர் பௌத்த மதத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

பின்..ஒருநாள்..அவருக்கு வருத்தம் ஏற்பட்டது."என்னைத் தங்களில் ஒருவராக எண்ணி..அந்த பௌத்தர்கள் பேணிக் காத்தனரே!அவர்களிடம் வேஷம் போட்டு வஞ்சனை செய்து விட்டேனே!"என்று மனம் கலங்கினார்.இதற்கான தண்டனை "துஷாக்னிப்  பிரவேசம்"தான்.

துஷம் என்றால் தவிடு.இந்தத் தவிடால் உடல் முழுமைக்கும் மூடி..தீயிட்டுக் கொண்டு..சிறுகசிறுக உயிர் போகும்படி செய்வதற்கே துஷாக்கினி பிரவேசம் என்று பெயர்.

குமாரிலபட்டர் செய்த தண்டனைக்குரிய பாவம் என்னவென்றால்..வஞ்சனையாக தன்னை பௌத்தன் என்று சொல்லிக் கொண்டு..அவர்களுடைய சாத்திரக் கொள்கைகளை மறுத்து ஒதுக்கியது.


இந்நிலையில்..


நாடு முழுவதிலும் அத்வைத உண்மையை சங்கரர் பரப்ப வேண்டும் என்று வியாசர் விரும்பியபடி..சங்கரர் காசியிலிருந்து புறப்பட்டார்.அலகாபாத் என்று சொல்லப்படும் பிரயாகைக்கு வந்தார்.காரணம்..குமாரிலபட்டரைக் கண்டு..அவர் அத்வைதத்தை ஏற்குமாறு செய்து விட்டால்..அவரைச் சார்ந்த ஏராளமான சிஷ்ய கோடிகளும் அத்வைதத்தைத் தழுவி விடுவர் என்பதால்தான்.

குமாரிலபட்டர் உடல் முழுதும் வெந்துக் கொண்டிருந்த நிலையில்..ஆதிசங்கரரைக் கண்டதும் மகிழ்ச்சி அடைந்தார்.ஆதிசங்கரர் அவர் நிலைக்கு வருந்தி..நீங்கள் செய்த செயலில் எந்தத் தவறும் இல்லை..பின் ஏன் இப்படி ஒரு முடிவெடுத்தீற்கள்? என வினவினார்.பின்..தன் அத்வைத தத்துவத்தை அவருக்குப் படித்துக் காட்டினார்.இதனைக் கேட்ட குமாரிலபட்டர் பாராட்டினார்.

இந்த அத்வைத சித்தாந்தத்தை நாடு முழுதும் பரப்பிட வேண்டும்..உயிரைவிடும் தம்மால் ஏதும் செய்ய முடியாது.தன் சீடனான மண்டனமிச்சரை சந்தித்து அவரிடம் வாதம் புரிந்து அவரை அத்வைத தத்துவத்தைஏற்கும்படி செய்ய வேண்டும்.அவரைக் கொண்டு அத்வைதத்தைப் பரப்புங்கள் என்றார்.









Thursday, January 13, 2022

 உத்தவ கீதை - 4

------------------------------

24 குருமார்கள் கதை (அவதூதன் யதுர்குலப் பெரியவருக்கு கூறியது)

----------------------------

எனது அறிவால் உணரப்பட்டு ஞானம் பெற்றேன்.

எனது குருமார்கள்..பூமி,காற்று,ஆகாயம், நீர்,நெருப்பு, சந்திரன்,சூரியன்,
புறா,மலைப்பாம்பு,கடல், கூட்டுப்புழு,தேனீ,யானை,தேனெடுப்பவன்,மான், மீன்,
பிங்கலை என்ற வேசி, பருந்து, குழந்தை,இளைய கன்னி,அம்புகள் தயாரிக்கும்
கருமான்,பாம்பு, சிலந்திப் பூச்சி,குளவி ஆகிய 24 பேர்களும் எனக்கு
அறிவுரை புகட்டிய குருமார்கள் ஆகும்.அவர்களின் செயல்களிலிருந்து நான்
ஞானம் பெற்றேன்.அவர்களிடம் இருந்து..என்ன, எப்படி கற்றுக் கொண்டேன்
என்பதை யயாதி வம்சத்தில் வந்தவரே கேளுங்கள்..


1) பூமி-

பூமியிலிருந்து பொறுமையைக் கற்றேன்.ஞானம் பெற்றவன் விதி வசத்தால் தனக்கு
எந்தக் கொடுமைகள் நடைபெற்றாலும்..தனது நடத்தையில் இருந்து விடுபடக்
கூடாது. இதைப் பூமியிடம் கற்றேன்.

நல்ல மனிதன்,மலையிடமிருந்து எப்படி நல்லது செய்வது என்றும்,தனது உயிர்
பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் கற்றுக்கொள்ள வேண்டும்.

எப்படி மலையிலுள்ள மரங்கள் பிறருக்கு உதவியாக உள்ளன என்பதை உணர
வேண்டும்.பலன் கருதாமல் மற்றவர்களுக்கு பழங்களை மரங்கள்
கொடுக்கின்றன.ஆனால் மனிதர்கள் அந்த மரங்களை கல்லெறிந்து அடிக்கிறார்கள்.

பூமி, மலை, மரங்கள் எனது முதலாவது குரு


2) காற்று

ஞானியானவன், அறிவைக் கொண்டு உயிர் வாழ்வதை மேற்கொள்ள வேண்டுமே தவிர
இந்திரிய சுகங்களுக்கு அடிமையாகக் கூடாது.மனத்திலும் சஞ்சலம் ஏற்படக்
கூடாது.பொருள்கள் மீது பற்று வைக்கக் கூடாது.எப்படி காற்று எதிலும்
ஒட்டிக் கொள்ளாமல் ஓடிக் கொண்டிருக்கிறதோ..அப்படி மனிதனும்..எந்த
புறப்பொருளிலும் பற்று வைக்காமல்,தன் ஆன்மாவில் பற்றுள்ளவனாக வாழ
வேண்டும்.  வாசனை பூமியின் குணம்.காற்று வாசனைகளால்
மாசுபடுவதில்லை.அதுபோல, மனிதனும் உலகில் பொருட்பற்று நீங்கி வாழ வேண்டும்

காற்று எனது இரண்டாவது குரு.


3) ஆகாயம்

யோகியானவன் எங்கும் நிறைந்திருந்து எல்லாவற்றிலும் கலந்து நிற்கும்
ஆகாயத்தைப் போல வாழ வேண்டும்.தனக்கென்று ஓர் உடம்பிருந்தும் தன்னை ஒரு
பிரம்மமாய் உணர வேண்டும்.(பிரம்மம்- எல்லாவற்றிற்கும் காரணமான முதற்
பொருள்.உயிருள்ளவை,உயிரில்லாதவை, அசைவன,அசையாதவை யாவற்றிற்கும்
மூலக்காரணம் பிரம்மம்)

பந்தம் , பாசம் என்கின்ற தடைகளைத் தாண்டி..யாவற்றிலும் கலந்து நின்று ,
காலத்தால் கட்டுப்படாத பிரம்மமாய் உணர வேண்டும்.காற்று,நெருப்பு,பூமி,
காற்றால் அடித்து செல்லப்படும் மேகம் ஆகியவற்றால் ஆகாயம் கட்டுப்படாது.

அதுபோல, யோகியானவன் காலத்தால் அழியக் கூடிய
எப்பொருள்களாலும்,உயிர்களாலும் கட்டுப்படக் கூடாது.

ஆகாயம் எனது மூன்றாவது குரு


4) நீர்-..

புண்ணியம் செய்தவர்கள், பாவம் செய்தவர்கள் மற்றும் சாதாரண மனிதர்களையும்,
நீராடல் செய்வதால்..எப்படிப் புனித நீர் புனிதம் அடையச் செய்கிறதோ அப்படி
யோகியானவன் தன்னுடன் சேர்பவர்களையும் புனிதப் படுத்த வேண்டும்.

நீர் எனது நான்காவது குரு.


5)  நெருப்பு - தீ

எப்படி "தீ"யானது அதனுடன் தொடர்புடைய நல்லது, கெட்டது எல்லாவற்றினையும்
எரித்துச் சாம்பலாக்கிப் புனிதப் படுத்துகிறதோ அப்படி யோகியானவன் இருக்க
வேண்டும்.

தீயானது எரிகின்ற பொருளின் உருவத்தை எடுத்துக் கொள்ளும்.அதுபோல..நெருப்பு
வெளிக்குத் தெரியாமல் எல்லாப் பொருள்களிலும் ஒளிந்திருக்கிறது.

யாகத்தில் ஆகுதியாகக் கொடுக்கப்பட்ட பொருள்களை ஏற்றுக் கொண்டு,கடந்த
காலத்தில் செய்யப்பட்ட தீமைகளை நீக்கி..புண்ணியத்தை அளிக்கிறது.

அதுபோல, யோகியும் உலகில் வாழ வேண்டும்.

தீ...ஐந்தாவது குரு.


6) சந்திரன்-

எங்கும் நிறைந்திருக்கும் இறைவனின் மாயையால் உயிர்கள் தோன்றி உடம்பு என்ற
உருவத்தை எடுத்து, பின்பு, உடல் அழிந்து மரணமடைகின்றன.

அழிவு பல மாறுதல்களுக்கு உண்டான உடலுக்கேயன்றி அதனுள் உறையும் ஆன்மாவுக்கில்லை.

எப்படி சந்திரன் தோன்றி,வளர்ந்து பௌர்ணமியன்று முழு நிலவாகி..மறுபடியும்
தேய்ந்து, பின்பு அமாவாசையன்று முற்றிலும் மறைந்து மறுபடியும்
வளர்பிறையாக வளர்கிறது.அதுபோல, நமது உடலும்..தோன்றி வளர்ந்து, பின்பு
தேய்ந்து மறைந்து விடும்.

ஆகையால் சந்திரன் ஆறாவது குரு.


7)சூரியன்-

சூரியன், தனது கிரணங்களால் உலகத்திலுள்ள நீரை உறிஞ்சி எடுத்து ஆவியாக்கி
மாற்றிப் பின்பு மேகமாக மழை பெய்விக்கிறான்.சூரியன் அந்த ஆவியால் எந்த
பாதிப்பும் அடைவதில்லை.அதுபோல யோகியும் இந்திரிய சுகங்களால் கட்டுப்படக்
கூடாது.

சூரியன், நீருள்ள எல்லா பாத்திரங்களிலும் பிரகாசம் செய்கிறான்.சூரியனின்
பிம்பம் தெரிகிறது.அதுபோல பிரம்மமும் எல்லா உயிர்களிலும் கலந்து நின்று
பிரகாசிக்கிறது.

சூரியன் ஏழாவது குரு.


8) புறா -

எவனொருவனும் யாரிடமும், எந்தப் பொருளீலும் அதிக ஆசைப் பற்று வைக்கக் கூடாது.

ஒரு ஆண் புறா..ஒரு மரத்தில் கூடுகட்டி, பலகாலம் தன் பெண் புறா உடன்
வாழ்ந்து வந்தது.

பெண் புறாவும் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்தது..இரண்டு புறாக்களும் தன்
குஞ்சுகளுடன் மனமகிழ்ந்து வாழ்ந்து வந்தன.இறைவனின் மாயையால் கட்டுப்பட்டு
வேறு ஒன்றும் அறியாமல் இன்பமாய் வாழ்ந்து வந்தன.

ஒருநாள், குஞ்சுகள் இரையைத் தேடி வெளியே  சென்று தன் கூட்டுக்குத்
திரும்பி வந்தன.ஒரு வேடன் அவைகளைப் பார்த்து தன் வலையை விரித்து அவைகளைப்
பிடித்து விட்டான்.

வெளியே சென்று வந்த  பெண் புறா அதைக் கண்டு மனம் வருந்தி ..கண்ணீர்
விட்டு , வேடனின் வலையில் விழுந்தது.

அதனைக் கண்டு தான் தனிமைப்படுத்தப்பட்டதை உணர்ந்து, மனம் வருந்தி
அழுது..ஆண் புறாவும் வலையில் வேண்டுமென்றே மாட்டிக் கொண்டது.

வேடனும் அனைத்துப் புறாக்களையும் பிடித்துக் கொண்டு மனமகிழ்ச்சியுடன் தன்
வீடு சென்றான்.

குடும்பஸ்தனும் இன்பம்,துன்பம் என்பதை அனுபவித்து உலக மாயையில்
மயங்கி,அந்தப் புறாப்போல துன்பப்படுகிறான்.

அறிவாளியானவன், இந்த உலக வாழ்க்கையின் தன்மையை உணர்ந்து முக்தி அடைய வேண்டும்.

அந்த ஆண் புறா போல்  வாழ்ந்தால்..மீண்டும்..மீண்டும் துன்பத்தில் அகப்படுவான்.

புறா எனக்கு எட்டாவது குரு

 9 - மலைப் பாம்பு-


மனிதனுக்கு இந்திரிய சுகங்கள் இந்திரியங்களால்
ஏற்படுகின்றன.சுவர்க்கத்திலும் சரி, நரகத்திலும் சரி, இந்திரியங்களே சுக
துக்கங்களுக்குக் காரணமாகின்றன.

மலைப்பாம்பு, தன் இரையைத் தேடிச் செல்லாமல் தன்னிடம் வரும் பிராணிகளைப்
பிடித்துத் தின்னும்.அதுபோல யோகியானவன் தனக்கு விதி வசத்தால் கிடைக்கும்
உணவினை உண்டு வாழ வேண்டும்.தன் சக்திகளை வீணாக்காமல்
பொறுமையுடனும்,தைரியத்துடனும் விழித்திருந்து, இறைவனிடம் மனத்தைச்
செலுத்தி கிடைத்த உணவை உண்டு வாழ வேண்டும்.

மலைப்பாம்பு ஒன்பதாவது குரு


10) கடல்-

யோகியானவன் கடல்போல் ஆழ்ந்த அறிவுடையான் ஆகவும்,பரந்த ஞானமும் ஆழம்
காணமுடியாதவனாகவும்,மற்றவர்களால் அசட்டை செய்யப்படாதவனாகவும், எப்போதும்
பற்றற்றவனாகவும்,வெறுப்பற்றவனாகவும் இருக்க வேண்டும்.ஆற்று நீர் கடலில்
கலப்பதால், கடல் பெரிது படாமலும்,சுருங்காமலும் காணப்படுகிறது.அதுபோல
யோகியானவன் இன்ப துன்பங்களால் மாற்றங்களில்லாதவனாக இருக்க வேண்டும்.

கடல் பத்தாவது குரு.


11) விட்டில் பூச்சி -

விட்டில் பூச்சியானது, விளக்கின் வெளிச்சத்தில் ஆசைகொண்டு நெருப்பில்
விழுந்து மடிகிறது.

அதுபோல,மனிதனும் பெண் ஆசை,பொன் ஆசை,மண் ஆசையால் மயக்கம் கொண்டு
துன்பமடைந்து அழிகிறான்.

யோகியானவன் அவைகளைத் தவிர்க்க வேண்டும்.

விட்டில் பூச்சி பதினொன்றாவது குரு


12 - தேனீ-

யோகியானவன் வீடுகளில் உணவை  யாசித்துக் கிடைத்த உண்வை உண்டு வாழ
வேண்டும்.ஒரே வீட்டில் யாசித்து யாருக்கும் தொல்லை கொடுக்கக் கூடாது.

தன் உடலைக் காப்பாற்றிக் கொள்ளுமளவிற்கு உணவு உண்ண வேண்டும்.

தேனீ, எல்லாவித மலர்களிலிருந்தும் தேன் சேகரிப்பது போல, எல்லாப் புனித
நூல்களிலிருந்தும் யோகியானவன் நல்ல விஷயங்களை சேர்க்க வேண்டும்.

தேனீ, தேனைச் சேகரித்து வைப்பது போல யோகிகளும், சந்நியாசிகளும்
மறுநாளைக்கு என்று ஒரு பொருளையும் சேகரித்து வைக்கக் கூடாது.உணவை
வைத்துக் கொள்ள,தன் வயிற்றைத் தவிர வேறு பாத்திரம் யோகியானவன் வைத்துக்
கொள்ளக் கூடாது.

தேனீ பன்னிரெண்டாவது குரு.


13- ஆண் யானை-

சந்நியாசியானவன் மரத்தால் செய்யப்பட்ட பெண் உருவத்தைக் கூட
தொடக்கூடாது.எப்படி ஆண் யானை, பெண் யானையின் வாசனையால்,பழக்கத்தால்
பிடிபடுமோ,அப்படி சந்நியாசியும் பெண்ணுடன் பழகினால் பெண்
அடிமையாவான்.அறிவாளி யானவன் பெண்களின் சகவாசத்தைத் தவிர்க்க வேண்டும்.

ஆண் யானை எனது பதிமூன்றாவது குரு


14- தேன் எடுப்பவன் - வேடன்

பேராசை பிடித்தவர்கள் மிகக் கஷ்டப்பட்டு,பிறருக்கு கொடுக்காமலும், தானும்
அனுபவிக்காமலும் பொருள்களைத் தேடி வைப்பார்கள்.முடிவில் தேன் எடுப்பவன்
தேனீ கஷ்டப்பட்டு சேகரித்து வைத்த தேனை எடுத்துச் செல்வது போல வேறு
ஒருவர் அந்தச் செல்வத்தை  எடுத்துக் கொள்வார்கள்.

தேன் எடுப்பவன் என் பதினான்காவது குரு.


15- மான் -


சந்தியாசியானவன் ,காட்டில் இருந்தாலும், உணர்ச்சியைத் தூண்டும்,மனதை
மயக்கும் இன்பமான பாட்டுக்களைக் கேட்கக் கூடாது.

மானானது வேடனின் பாட்டைக் கேட்டு மயங்கி அவனிடம் பிடிபடும்.

மான் பதினைந்தாவது குரு.


16-  மீன் -

தூண்டிலில் பொருத்தப்பட்டுள்ள உணவின் மீது ஆசைப்பட்டு மீன் அதனை உண்டு
..மீன் பிடிப்பவனிடம் பிடிபடும்.

அதுபோல..அதிக ருசிகரமான சாப்பாட்டில் ஈடுபாடு கொள்ளக் கூடாது.இந்திரிய
சுகங்களில் இருந்து விடுபட விரும்புகிறவர்கள்..முதலில் நாவின்
மீதும்,ருசியின் மீதுமுள்ள ஆசையைக் கட்டுப்படுத்த வேண்டும்.

மீன் பதினாறாவது குரு.


17 - பிங்களை என்ற வேசி -



முன்காலத்தில் விதேக நகரத்தில் பிங்களை என்ற வேசி வசித்து வந்தாள்.

அவளிடமிருந்து நான் சிலவற்றை தெரிந்து கொண்டேன்.அதைச் சொல்கிறேன்
கேள்..என அவதூதன் தொற்றந்தான்..

ஒருநாள் மாலை, அந்த வேசி தன்னை அலங்கரித்துக் கொண்டு,தனது காதலனுக்காகக்
கதவருகில் காத்திருந்தாள்.

பணம் படைத்த மனிதர்கள் தனக்குப் பணமளித்து இன்பம் பெற வருவார்கள் என்று
காத்திருந்தாள்.உள்ளே செல்வதும்..வெளியே வருவதுமாக நள்ளிரவு வரை
காத்திருந்தாள். ஒருவரும் வராததால் பிறகு மிகவும் மனம் வருந்தி,தன்
மனத்தைத் தேற்றிக் கொண்டாள்.

அவளுக்கு ஞானமும் பிறந்தது.

காசுக்காகவும்,செலவ்த்துக்காகவும் காதலர்களைத் தேடினேன்.என்னுள் உறையும்
இறைவனை உணர முடியவில்லை.குறைவில்லாத இன்பத்தைத் தரும் இறைவனை
விட்டுவிட்டு மனவருத்தம்,பயம்,கோபம்,காம புத்தி ஆகியவற்றிற்கு
அடிமையானேன்.தோலும், எலும்பும்,சதையும் கொண்ட நாற்றமுடைய காமத்துக்குக்
கட்டுப்பட்ட மனிதர்களால் என்ன இன்பம் கொடுக்க முடியும்? இனி எனது
வாழ்நாளை இறைவனை நாடுவதில் செலவழிப்பேன்.கடவுளையே என்னைக்
காப்பாற்றுபவனாக அடைக்கலம் புகுவேன் என்று வாழ்ந்தாள்.

எப்படிப் பாம்பு தன் இரையை விரும்புகிறதோ..அப்படி நம்
ஆயுட்காலத்தையும்,உடலையும் காலம் விழுங்குகிறது.ஆகையால், என்றும்
நிலைத்து நிற்கும் ஆன்மாவே நம்மைக் காப்பாற்றும் என்று வாழ்ந்தாள்.

பிங்களை என் பதினேழாவது குரு.



18- பருந்து (கழுகு)

மனிதனின் துன்பங்களுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று பொருள் மீதான அவன்
பற்று.இதனை உணர வேண்டும்.எந்த பொருளும் நிரந்தர இன்பத்தைத் தர முடியாது.

தனது அலகில் இரையை வைத்திருந்த பருந்தை மற்ற பருந்துகள் துரத்தின.அந்த
இரையை பருந்து கீழே போட்டதும் மற்ற பருந்துகளின் தொல்லை நீங்கியது.இன்பம்
அடைந்தது.

பருந்து பதினெட்டாவது குரு.



19- குழந்தை

மானம்,அவமானம் அறியாத குழந்தை உடலில் துணியில்லாமலும் மனதில் எந்த
எதிர்பார்ப்பும் இல்லாமலும் எங்கும் செல்லும்.அதுபோல ஆன்மாவின் மீது
நினைவை நிறுத்தி உலகை வலம் வர வேண்டும்.

குழந்தை பத்தொன்பதாம் குரு



20 -இளம் பெண்-

ஒரு வீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணுக்கு மணம் முடிப்பதற்காக மணமகனைப்
பார்ப்பதற்காக அவளது பெற்றோர் வெளியே சென்றிருந்தனர்.அப்போது சிலர்
வந்திருந்தனர்.அவள் அவர்களை வரவேற்று உபசரிக்க வேண்டிய நிலை வந்தது.அவள்
அவர்களுக்கு உணவு தயாரிக்க நெல்லை உரலில் குத்த வேண்டிய நிலை
ஏற்பட்டது.அவள் தன்னுடைய வளையல்களைச் சப்தம் ஏற்படும் என்று எண்ணி கழற்றி
வைத்துவிட்டு , ஒவ்வொரு கையில் ஒரு வளையலுடன் நெல் குத்தினாள்.

உலகில் அந்தப் பெண் போல,யாரிடமும் விரோதம் கொள்ளாமல் தனித்துச் சப்தம்
இல்லாமல் வாழ வேண்டும் என்று கற்றுக் கொண்டேன்.

இளம்பெண் எனது இருபதாவது குரு



21- ஆயுதங்கள் செய்யும் கருமான்



ஒருவன் தான் விடும் மூச்சின் மீது கவனம் செலுத்தினால்
மனமடங்கும்.விருப்பு,வெறுப்பு அடங்கி, ,மனமொருமித்து நிற்கும்
ரஜோகுணமும்,தமோ குணமும் நீங்கி சத்துவ குணம் மேலோங்கி யோகம்
சிந்திக்கும்.

போருக்கு அம்பு தயாரிக்கும் கருமான்..அரசன் அருகில் வருவதைக் கூட
கவனிக்காமல் மனம் ஒருமித்து அம்பு தயாரிப்பதில் கவனம்
செலுத்தியிருந்தான்.

அதுபோல செய்யும் கருமத்தில் கவனம் செலுத்திச் செயல்பட வேண்டும்.

ஆயுதம் செய்யும் கருமான் எனது இருபத்தோராவது குரு



( ரஜோ குணம் என்பது இராட்சத குண இயல்புகளான ஊக்கம், வீரம், ஞானம்,
தருமம், தானம், கல்வி, ஆசை, முயற்சி, இறுமாப்பு, வேட்கை, திமிர்,
தெய்வங்களிடம் செல்வங்கள் வேண்டுவது, வேற்றுமை எண்ணம், புலனின்பப் பற்று,
சண்டைகளில் உற்சாகம், தன் புகழில் ஆசை, மற்றவர்களை எள்ளி நகையாடுவது,
பராக்கிரமம், பிடிவாதத்துடன் ஒரு முயற்சியை மேற்கொள்ளுதல், பயனில்
விருப்பம் கருதி செய்யும் செயல்கள் ஆகியவற்றைக் கொண்டிருப்பதைக்
குறிக்கும்



தமோ குணம் என்பது ஒரு மனிதனிடம் அமைந்துள்ள குணங்களான காமம், வெகுளி,
மயக்கம், கலக்கம், கோபம், பேராசை, பொய் பேசுதல், இம்சை செய்தல், இரத்தல்,
சிரமம், கலகம், வருத்தம், மோகம், கவலை, தாழ்மை உணர்வு, உறக்கம், அச்சம்,
சோம்பல், காரணமில்லாமல் பிறரிடம் பொருட்களை எதிர்பார்த்தல் மற்றும்
பிறர்க்குக் கேடு விளைவிக்கும் செயல்கள் செய்தல், பகட்டுக்காகச்
செய்யப்படும் செயல்கள் ஆகியவற்றைக் குறிக்கும்.

சத்வ குணத்திலிருந்து தோன்றும் இயல்புகள்- நற்காரியங்களில் மனதைச்
செலுத்தும் குணம், மன அடக்கம் (சமம்), புலன் அடக்கம் (தமம்),
துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளும் இயல்பு (சகிப்புத் தன்மை), விவேகம்,
வைராக்கியம், தவம், வாய்மை, கருணை, மகிழ்ச்சி, நம்பிக்கை, பாவம்
செய்வதில் கூச்சப்படுதல் , தன்னிலேயே மகிழ்ந்திருத்தல் , தானம், பணிவு
மற்றும் எளிமை. )



22 -பாம்பு

பாம்பானது தனக்கு என்று ஒரு வீடு கட்டாமல் கரையான் அமைத்த புற்றில்
வாழும்.அதுபோல யோகியானவன் உலகமே வீடாக நினைத்து, கிடைத்த இடத்தில்
பற்றற்று வாழ்ந்து வரவேண்டும்

பாம்பு இருபத்திரெண்டாவது குரு



23- சிலந்தி

சிலந்தியானது தனது வாயால் வலையை உற்பத்தி செய்து, அதில் பூச்சிகளை
சிக்கச் செய்து,அவற்றைச் சாப்பிட்டுவிட்டு..பின்பு வலையில் தான்
சிக்காமல் வாழ்கிறது.

அதுபோல யோகியானவன் இறைவனின் மகிமையையும்,உலகின் தன்மையையும் உணர்ந்து உலக
மாயையில் சிக்காது வாழ வேண்டும்.

சிலந்தி இருபத்து மூன்றாவது குரு.



24- கூட்டுப் புழு

ஒருவன் எதைப்பற்றி நினைத்துச் சிந்தித்துச் சதாகாலமும் செயல்படுகிறானோ
அவன் அதனுருவை அடைகிறான்.

கூட்டுப்புழு தன்னைச் சுற்றிக் கூடுகட்டி,கூட்டுக்குள் வாழ்ந்து, பின்பு
பட்டாம்பூச்சியாய் மாறும்.அதுபோல..யோகியும் உலகில் வாழ்ந்தாலும் தனது
உடம்பை தன் முக்திக்காக உபயோகப்படுத்த வேண்டும்.

மனிதன் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்து, மாடு,மனைவி,மக்கள் செல்வம்
என்று சேர்க்கிறான்.பின்பு, மரம் எப்படி விதைகளை விட்டுவிட்டு பட்டுப்
போகிறதோ, அதுபோல உடலை விட்டு உயிர் பிரிகிறது .

மரத்தின் விதைகள் புதிய செடி உருவாகக் காரணமாகின்றன.அதுபோல அவனுடைய
நல்வினைகள், தீவினைகள் அவனுடைய அடுத்த பிறவியை நிர்மாணிக்கின்றன.


உத்தவகீதை - 5 (உலக வாழ்க்கை நிலையற்றது)
----------------------------------------------------------------------
அவதூதன் யதுகுல பெரியவரிடம் மேலும் கூறினான்...

மனித உயிர் வாழும்போது, அவனுடைய மூக்கு,நாக்கு, வாய்,காது, கண்,உடம்பு
போன்றவை தன் ஆசைகளை உண்டு பண்ணி பல வழிகளில் இழுக்கின்றன.

கடவுள் எல்லா உயிர்களையும் விட மேலாக தன்னுருவில் மனிதனைப் படைத்தான்.பல
பிறவிகளுக்குப் பிறகு அவன் மனிதப் பிறவியை அடைகின்றான்.அவன் தன்
முக்தியைத் தேடிக் கொள்ள முடியும்.ஆகையால் நானும், பாசம், பற்று,பந்தம்
நீக்கி மேற்கூறிய குருமார்களிடம் ஞானம் பெற்று,உலகில் பற்றின்றி வலம்
வருகிறேன் என்று கூறி அந்த அவதூதன் தன் வழியில் சென்றான்.

யதுகுல மன்னனும், உலக ஆசைகளை நீக்கி மன அமைதியும். மனப்பக்குவமும் அடைந்தான்.

 இனி உலக வாழ்க்கைப் பற்றி உத்தவர் கேட்க கிருஷ்ணன் சொன்னது..

மனிதன் தன் ஆசைகளைத் துறந்து,பலனில் பற்று வைக்காமல்,தன் கடமைகளைச் செய்ய வேண்டும்.சக மனிதர்கள்,இந்திரிய சுகங்களில் ஈடுபட்டு இவ்வுலக வாழ்க்கையை நித்தியமானது என்று எண்ணி,எப்படி துன்பத்தில் உழலுகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும்.

முக்குணங்களின் உந்துதலால்,கர்மம் செய்கின்ற மனிதன், உலக வாழ்க்கைக்கு உயிர் வாழ்வதற்கு தேவையான கர்மங்களை, ஆசையின் காரணமாகயில்லாமல் இயற்கையின் கடமை என்று செயலாற்ற வேண்டும்.

தன் ஆன்மாவை அறிய முயற்சி செய்யும் மனிதன் சாஸ்திரங்களால் விதிக்கப்பட்ட கர்மாக்களை வேண்டுமானால் தவிர்க்கலாம்.என்னை வழிபடுகிறவன், பெருமை,பொறாமை,சாஸ்திரங்களில் கண்டிக்கப்பட்ட செயல்களைத் தவிர்த்தல்,பற்று,பாசம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.பிறரிடம் குறை காணுதல்,தேவையற்ற வார்த்தைகளைப் பேசுதல் ஆகியவற்றை நீக்க வேண்டும்.

தீயில் எரிகின்ற மரக்கட்டைக்கும்,தீயில் எரிந்து அவிந்து சாம்பலான மரக்கட்டைகளுக்குமுள்ள வித்தியாசம் போல..தன்னை உணர்ந்த சாதகன், உலகு,மனைவி,மக்கள்,உறவினர்,தன் உடம்பு ஆகியவற்றின் நிலையற்ற தன்மையை உணர வேண்டும்.

குரு என்பவர், நெருப்பை உண்டாக்கும் அரணிக்கட்டையில் அடிப்பாகம் போன்றும், சீடன் என்பவன் அதில் உண்டாக்கக் கடைதலுக்கான கட்டையென்றும், நெருப்பை உண்டாக்குதல் என்ற கடைதல் தன்னையறிய முயற்சி செய்யும் முயற்சி என்றும் உணர வேண்டும்.

அதில் உண்டாகும் நெருப்பு என்ற ஞானம் எல்லா உலகப் பற்றுகளையும் பாகங்களையும் அழித்து,மாயையிலிருந்து விடுபட உதவும்.அந்த மாயை, முக்குணங்களின் சேர்க்கையால் ஏற்பட்டது.அதில் மாயையை நீக்கினால், அந்த ஆன்மா விடுதலை பெறும்.

(தொடரும்)