Friday, August 7, 2020

13 - பாற்கடலும்..கூர்ம அவதாரமும்




ஒருநாள் தன் ஐராவதம் யானைமீது அமர்ந்து பயணித்துக் கொண்டிருந்தான் இந்திரன்.அப்போது எதிரே துர்வாச மகரிஷி வந்தார்.

இந்திரனைக் கண்ட துர்வாசர் மிகவும் சந்தோஷத்துடன் தன் கையில் வைத்திருந்த தமாரைப்பூ மாலையை,இந்திரனுக்குக் கொடுத்தார்.அவன் வாங்கிக் கொண்டவன்..அலட்சியமாக..யானையின் முதுகில் தூக்கிப் போட்டான்.

யானையோ..அதைத் தூக்கி எடுத்து காலில் போட்டு மிதித்தது.

இதைக் கண்ட துர்வாசர் கோபமுற்றார்.

"இந்திரா..இந்த ஆணவத்துக்கு, நீ சொர்க்கலோகத்துக்கு அதிபதி என்ற திமிரும்,செல்வ சுக போகங்களும்தானே...நீயும்,உன்னைச் சார்ந்த தேவர்களும், செல்வம், பதவி,அதிகாரம் அனைத்தையும் இழந்து உடல் வலிமையும் குன்றி போவீர்களாக" என சபித்தார்.

இந்திரன் பதறிப் போய் மன்னிப்புக் கேட்க...கொடுத்த சாபத்தைத் திரும்பப் பெற முடியாது என சென்று விட்டார் துர்வாசர்.

அவர் சாபம் பலித்து,வலிமை குன்றிப் போனார்கள் தேவர்கள்.அசுரர்கள் அவர்கள் மீது படையெடுத்து வென்றனர்.தேவலோகத்து அனைத்துச் செல்வங்களும் அசுரர்களின் கைகளுக்குப் போனது.இந்திரனும், தேவர்களும் பயந்து ஓடி ஒளிந்தனர்.

வழக்கம்போல பிரம்மனிடம் அவர்கள் முறையிட்டனர்.அவர்கள் அனைவரும் விஷ்ணுவிடம் சென்றனர்..அவரது திருவடிகள் பணிந்து முறையிட்டனர்.

இந்திரன், "பகவானே! நான் செய்தது தவறுதான்.இனி எப்போதும் தவசீலர்களை அவமதிக்க மாட்டேன்.எந்நிலையிலும் ஆணவ்ம் கொள்ளமாட்டேன்.என்னை ரட்சிக்க வேண்டும்" என்றான்.
இந்திரன் தவறை உணர்ந்து கெஞ்சியதால் மனம் இரங்கிய மகாவிஷ்ணு, "தேவர்களே! நீங்கள் மனம் வருந்தி பயனில்லை.அசுரர்களை இப்போது வெல்ல முடியாது.அதற்கானக் காலம் இன்னமும் வரவில்லை.முதலில் துர்வாசர் சாபத்தால் இழந்த வலிமையை தேவர்கள் அனைவரும் திரும்பப் பெற வேண்டும்.அதற்கு நீங்கள் பாற்கடலைக் கடைய வேண்டும்.அப்போது வெளிப்படும் அமிர்தத்தை நீங்கள் அருந்தினால்..பழைய நிலையை அடையலாம்.ஆனால், நீங்கள் இப்போது உள்ள நிலையில் உங்களால் பாற்கடலைத் தனியாகக் கடைய முடியாது.எனவே அசுரர்களையும் உங்களுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்"என்றார்.

"அசுரர்கள் இதற்கு சம்மதிப்பார்களா?அப்படியே சம்மதித்தாலும் அவர்களும் அமிர்தத்தில் பங்கு கேட்பார்களே"

"ஆமாம்.தரத்தான் வேண்டும்.அதை நான் பார்த்துக் கொள்கிறேன்.நீங்கள் சென்று தற்காலிகமாக அசுரர்களுடன் சமாதானம் செய்து கொள்ளுங்கள்.அவர்களை பாற்கடலை கடைய அழையுங்கள்.மந்திரமலையை மத்தாகவும், வாசுகி பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலை கடையத் தொடங்குங்கள்.வேண்டும் உதவியை நான்செய்கிறேன்" என தேவர்களை அ.னுப்பி வைத்தார்..

தேவர்கள் விஷ்ணு கூறியபடியே..அசுரர்களுடன் சமாதானம் செய்து கொண்டார்கள்.அமிர்தத்தில் பங்கு தருவதாகச் சொல்லி பாற்கடலைக் கடைய அவர்கள் சம்மதத்தைப் பெற்றனர்.

அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடையும் முயற்சியில் இறங்கினர்.அவர்கள் மந்திரமலையை பாற்கடலுக்குக்குத் தூக்கிச் செல்கையில் கனம் தாங்காமல் கீழே போட்டு விட்டனர்.நாராயணன் கருட வாகனத்தில் வந்து மந்திரமலையை சர்வ சாதாரணமாக தூக்கிப் போய்க் கடலில் போட்டார்.

பாற்கடலில் மந்திரமலை மத்தாகியது.வாசுகி நாகம் கயிறாகியது.தலைப்பகுதியை அசுரர்கள் பிடித்துக் கொள்ள..வால் பகுதியை தேவர்கள் பிடித்துக் கொண்டனர்.பாற்கடலைக் கடையத் தொடங்கினர்.ஆனால் மந்திரமலை கனம் தாங்காமல் கடலுக்குள் முழுகத் தொடங்கியது.தேவர்களும், அசுரர்களும் இதைக் கண்டு மனம் பதைத்தார்கள்.மனம் சோர்ந்து போனார்கள்.உடனே விஷ்ணு மந்திரமலையைத் தாங்குவதற்காக ஆமையாக (கூர்ம அவதாரம்) உருவெடுத்தார்.கடலுக்குள் சென்று மந்திரமலையைத் தன் முதுகின் மீது..ஆடாமல், அசையாமல் தாங்கிக் கொண்டார்.மலை மறுபடியும் மேலே வந்தது.

தேவர்களும், அசுரர்களும் உற்சாகமாகக் கடைய ஆரம்பித்தனர்.இப்போது மற்றொரு அபாயம் ஏற்பட்டது.

கயிறாக இருந்த வாசுகி பாம்பு,தேவர்களும், அசுரர்களும் வலிமையுடன் தன்னை இழுப்பதால் வேதனை அடைந்து, வலி தாங்காமல் ஆலகாலம் எனும் விஷத்தைக் கக்கியது.அந்த விஷத்தின் வீரியத்தால் அனைவரும் பயந்து ஓடி, சிவபெருமானிடம் உதவி கேட்டனர்.

பரமேஸ்வரன், தேவர்களைக் காப்பதற்காக, அந்த ஆலகால விஷத்தை அள்ளிப் பருகினார்.பார்வதி பதறிப்போய் தன் கணவனின் கழுத்தில்  கை வைத்து விஷம் உள்ளே போகாது தடுத்து நிறுத்தினாள்.அதனால் சிவனின் கழுத்து நீலமாகியது.எல்லோரும் அவரை நீலகண்டன் எனப் போற்றினர்.

.

மறுபடியும் பாற்கடல் கடையும் பணி தொடரப்பட்டது.விடாமுயற்சி பலனைத் தந்தது.பாற்கடலிலிருந்து ஒவ்வொன்றாக வெளிப்படத் தொடங்கியது.

முதலில் காமதேனு  வெளிப்பட்டாள்.யாகங்களுக்குத் தேவையான பால், நெய்,தயிர் ஆகியவற்றைத் தரும் அந்தத் தேவப்பசுவை ரிஷிகள் தங்கள் சொந்தமாகக் கொண்டனர்.

அடுத்து உயர்ந்த ஜாதிக் குதிரையான"உச்சைசிரவஸ்" தோன்றியது.அதை அசுரரகளின் தலைவன் மகாபலி பெற்றுக் கொண்டான்.பின் வெளிப்பட்ட பாரிஜாத மரத்தையும், அப்சரக்கன்னிகளையும் தேவர்கள் சொந்தமாக்கிக் கொண்டனர்.

இதன்பின் ஒளி வெள்ளத்துடன் மகாலட்சுமி வெளிப்பட்டாள்.தேவர்கள் அனைவரும் அவளைத் துதித்து ஆராதித்தனர்.

லட்சுமி தனக்கு ஏற்ற நாயகனாக விஷ்ணுவைத் தேடிச் சென்று மாலையிட்டாள்.விஷ்ணுவும் ஏற்றுக் கொண்டு தன் மார்பிலே எப்போதும் வாசம் செய்பவளாக வைத்துக் கொண்டார்.மகாலட்சுமிக்குப் பிறகு மதுபானங்களுக்கு அதி தேவதையான வருணி கடலிலிருந்து தோன்றினாள்.அதை அசுரரகள் தங்களுக்குப் பெற்றுக் கொண்டனர்.

பின் வாழ்நாள் அம்சமான ஆயுர்வேத புருஷன் தன்வந்திரி தோன்றினார்.அவர் தன் கையில் அமிர்த கலசத்துடன் தோன்றினார்

அமிர்தம் வெளிப்பட்டது தெரிந்ததும் அசுரரகள், தன்வந்திரி கையில் இருந்த அமிர்த கலசத்தைப் பிடுங்கிக் கொண்டு ஓடினார்கள்.தேவர்கள் ஏமாற்றம் அடைந்து திருமாலிடம் முறையிட்டனர்.

திருமால் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்."அமிர்தம் உங்களுக்குக் கிடைக்க வழி செய்கிறேன்" என்றார்...

அசுரர்களோ..கையில் அமிர்தத்தை வைத்துக் கொண்டு,அதை யார் முதலில் அருந்துவது என சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.

அச்சமயத்தில் மகாவிஷ்ணு, உலகின் ஒட்டு மொத்த அழகும் திரண்ட ஒரு பேரழகு மோகினியாக உருவெடுத்து அசுரர்கள் முன் வந்தார்.

மோகினியைக் கண்ட அசுரர்கள் கையிலிருந்த அமிர்தத்தையும் மறந்து அவளது அழகில் மெய்மறந்து நின்றனர்.

மோகினி அவர்களிடம், "ஏன் சண்டையிட்டுக் கொள்கிறீர்கள்" எண்றாள்.

அசுரர்கள் எல்லோரும் அவளை அடையும் விருப்பத்துடன் மோகினியிடம் குழைந்தனர்.

"அழகுத் தேவதையே! இந்த அமிர்தத்தைப் பங்குப் போட்டுக் கொள்ளவே நாங்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தோம்.எங்கள் மோதலைத் தீர்க்கவே பிரம்மன் உன்னை இங்கே அனுப்பியிருப்பதாகவே எண்ணுகிறோம்.இந்த அமிர்தத்தை  எங்கள் அனைவருக்கும் நீயே இதைப் பங்கிட்டுக் கொடு" என்று சொல்லி மோகினியிடம் அமிர்த கலசத்தை ஒப்படைத்தனர்.

மோகினி மயக்கும் புன்னைகையுடன் அதை வாங்கிக் கொண்டு'முன்பின் தெரியாத பெண்ணிடம் நம்பிக்கை கொள்கிறீர்களே!நான் இதைப் பங்கிடும் போது சந்தேகப்படமாட்டீர்களே!" எண்றாள்.

"உன் மீது முழு நம்பிக்கைக் கொண்டு விட்டோம்.நீ எதைச் சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும்"என்றனர் அசுரர்கள்.

"அப்படியானால்..பங்கிட்டுத் தருகிறேன்.அசுரர்களும்,தேவர்களும் இதற்காக உழைத்திருக்கிறீர்கள்.எனவே இரு தரப்பும் எதிர்..எதிரே வரிசையாக அமருங்கள்" என்றாள்.

தேவர்கள் ஒரு புறமும், அசுரரகள் ஒரு  புறமும் அமர்ந்து கொள்ள, தேவர்களுக்கு அமிர்தத்தை வழங்கிக் கொண்டே, அசுரரகளைப் பார்த்து  மயக்கும் புன்னகையுடன் தன் வசீகர விழிகளால் அவர்களை மயங்க வைத்தாள். அவர்கள் அவள் அழகில் சொக்கிப் போயினர்.

அசுரர்களில் ஒருவன் மட்டும் , மோகினி தேவர்களுக்கு அமிர்தத்தை அள்ளி அள்ளிக் கொடுப்பதையும்..அசுரர்களுக்கு வெறும் கரண்டியை மட்டும் கவிழ்த்து ஏமாற்றுவதையும் உணர்ந்து கொண்டான்.அவன் பெயர் ராகு.

ராகு, மோகினியின் சூழ்ச்சியை புரிந்து கொண்டு, சட்டென்று யாருக்கும் தெரியாமல் தேவர்கள் வரிசையில் சென்று அமர்ந்து கொண்டான்.அமிர்தத்தை வாங்கி அருந்தினான்.இதைப் பார்த்துவிட்ட சூரிய..சந்திரர்கள் விஷ்ணுவிடம் அந்த அசுரனை விஷ்ணுவிடம் காட்டிக் கொடுத்தனர்.விஷ்ணு தன் சுதர்சன சக்கரத்தால் அவனது தலையைத் துண்டித்தார்.

ஆனல் ராகு அமிர்தம் அருந்தி இருந்ததால் மரணம் ஏற்படவில்லை.தலையும், உடலும் தனித்தனியே இயங்கித் துடித்தன.பிரம்மன் ராகுவின் துண்டித்த தலையோடு பாம்பின் உடலையும், அவன் உடலோடு பாம்பின் தலையையும் இணைத்து இயக்க வைத்தார்.அவர்களே ராகு, கேது என நவக்கிரஹங்களில் ஒன்றாயினர்.

இப்போதும் ராகுவும், கேதுவும் தன்னைக் காட்டிக் கொடுத்த சூரிய-சந்திரர்களை விரட்டி விழுங்குவது கிரகணமாகிறது.

மோஹினி உருவெடுத்த திருமால், தேவர்களுக்கு அமிர்தம் முழுதும் கொடுத்து விட்டு கருடன் மீதேறி பறந்து போனார்.

அசுரர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து குமறினார்கள்.சீற்றத்துடன் தேவர்களைத் தாக்கினார்கள்.அசுர..தேவர்கள் போர் மூண்டது.

அசுர மன்னன் மகாபலி  யுத்தம் செய்தான்.இந்திரன் அதை எதிர் கொள்ளமுடியாமல் துவண்டான்.அப்போது மகாவிஷ்ணு அங்கே தோன்றி பலியின் மாயயை அறுத்தெறிந்தார்.

நமுசி என்பவன் இந்திரனை கோபாவேசத்துடன் தாக்கினான்.அவனை இந்திரனால் கொல்ல முடியவில்லை.அவன் மீது செலுத்திய பாணங்கள் அனைத்தும் பயனின்றிப் போயின.வஜ்ராயுதத்தால் தாக்கியும் நமுசியை கொல்ல முடியவில்லை.

இந்திரன் செய்வது அறியாது நின்றான்.அப்போது அசரீரி ஒலித்தது..

"இந்திரா...இவன் உலர்ந்த மற்றும் ஈரமான ஆயுதங்களால் தனக்கு மரணம் வரக்கூடாது என்ற வரம் பெற்றிருக்கிறான்.எனவே உலர்ந்ததும் இல்லாத ஈரமானதாகவும் இல்லாமல் இருக்கும் ஒன்றால்தான் அவனைக் கொல்ல முடியும் என்று கூறியது"

இந்திரன் யோசித்தான்.முழுதும் உலர்ந்ததும் இல்லாமல் முழுதும் ஈரப்பதம் இல்லாத கடல்நுரையை ஆயுதமாகக் கொண்டு நமுசியைக் கொன்றான்.அந்த யுத்தத்தில் அசுரர்களின் மன்னன் மகாபலியும் மாண்டான்.அசுரர்கள் அடுக்கடுக்காக மாண்டனர்.

அசுர குலமே அழிந்து போய்விடுமோ என பயந்த பிரம்மா,அங்கே வந்து போரை அத்துடன் நிறுத்தச் சொன்னான்.அசுரரகளை மேலும்..மேலும் கொல்ல வேண்டாம் என தடுத்தான்.

அதன்படி இந்திரன் போரை நிறுத்தியதோடு தேவர்களை அழைத்துக் கொண்டு விண்ணுலகம் சென்றார்.

அசுரரகள், இறந்துபோன தங்களின் தலைவன் மகாபலியின் உடலைத் தூக்கிக் கொண்டு குலகுருவான சுக்ராச்சாரியாரிடம் வந்தனர்.அவர் தன் "மிருதசஞ்சீவினி" மந்திரத்தால் மகாபலியை மீண்டும் உயிர்பெறச் செய்தார்.அங்கங்கள் துண்டுபட்டுக் கிடந்த மற்ற அசுரர்களையும் பிழைக்க வைத்தார்.

பிரம்மன் விரும்பியபடியே போர் அத்துடன் முற்று பெறவில்லை.மீண்டும் தொடரத்தான் செய்தது.அதன் காரணமாக மகாவிஷ்ணு மற்றொரு அவதாரம் எடுக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது. 

No comments:

Post a Comment