Friday, July 31, 2020

11 -இந்திரனும்..பிரம்மஹத்தித் தோஷங்களும்...

பிரதேதஸர்களுக்கும், மரங்களின் தேவதைகள் வளர்த்த தத்துப்பெண் மாரீஷைக்கும் மகனாகப் பிறந்த தட்சன் மீண்டும் பிரஜாபதியானான்.

அவன் மூன்று உலகங்களிலும் தேவர்கள், அசுரர்கள், மனிதர்களை சிருஷ்டி செய்ய தன் மனத்தாலேயே உருவம் கொடுத்துப் பார்த்தான்.ஆனால் அவை முழுமை அடையாமையால், மன்ம வருந்தி விந்திய பர்வதத்தை அடைந்து அங்கிருந்த "ஆகமர்ஷணம்" எனும் நதிக்கரையில்,தவம் புரிய ஆரம்பித்தான்.

அவனுடைய தவத்தால் மனம்  மகிழ்ந்த திருமால், நேரில் தரிசனம் தந்தார்."தட்சனே! நீ த்வஷ்டா  என்பவளின் மகனான அஸிக்னியை மணந்து கொள்.அவள் மூலம் உன் சந்ததி பெருகும்" என சொல்லிச் சென்றார்.

அஸிக்னியை  மணந்த தட்சன், அவள் மூலம் "ஹர்யச்வர்கள்" எனும் பதினாயிரம் பிள்ளைகளைப் பெற்றான்.அவர்களிடமும் வம்சத்தை விருத்தி செய்யச் சொன்னான்.

தந்தையின் கட்டளைப்படி ஹர்யச்வர்கள் மேற்கு திசை நோக்கிச் சென்றனர்.இல்லறத்தில் ஈடுபடும் முன்பாக தங்களுடைய தபோபலத்தைப் பெருக்கிக் கொள்ள நினைத்தனர்.சிந்துநதி கடலில் சங்கமிக்கும் "நாராயணசரஸ்" எனும் இடத்தில் தவம் செய்யத் தொடங்கினார்கள்.

அங்கு வந்த நாரதர் ஹர்யச்வர்களின் மனதை மாற்றி..அவர்களை சிருஷ்டி செய்வதிலிருந்து பக்தி மார்க்கத்துக்குத் திருப்பி விட்டார். நாரதரின் உபதேசத்தால் பகவத் பக்தியில் ஈடுபாடு கொண்ட ஹர்யச்வர்கள் பகவானை நினைத்து ஆழ்ந்த தியானத்தில் மூழ்கி இறுதியாக முக்தி பெற்றனர்.

இதை அறிந்த தட்சன், நாரதர் மீது வருத்தமடைந்தான்.ஆனாலும், மனம் தளராது மீண்டும் மனைவி அஸிக்னியோடு சேர்ந்து "ஸயலாச்வர்கள் எனும் ஆயிரம் பிள்ளைகளை சிரிஷ்டித்தான்.அவர்களையும் வம்சத்தைப் பெருக்கச் சொல்லி அனுப்பினான்.

அந்த சபலாச்வர்களையும் நாரதர் சிருஷ்டியில் ஈடுபடவிடாது தடுத்து பக்தியில் மூழ்கச் செய்து முக்தியடைய செய்து விட்டார்.இம்முறை தட்சன் மிகுந்த அதிருப்தியுடன் நாரதரிடம் வந்து.
 
"நாரதரே!உம் கலக புத்தி மாறவே மாறாதா? என் மகன்களின் மனதைக் கெடுத்து அவர்களை பகவத் பக்தியில் ஆழ்த்தி என் நோக்கத்தை நிறைவேறவிடாது செய்து விட்டீர்கள்.அங்கும் இங்கும் சாகசம் செய்யும் நீர் நிரந்தரமாகவே எங்கும் தங்க முடியாமல் நாடோடியாக திரிவீர்களாக" என மன வருத்தத்துடன் சாபமிட்டான்.

நாரதராலும், பதிலுக்கு தட்சனை சபித்திருக்க முடியும்..ஆனாலும், "நடப்பது நல்லதற்கே" என சாபத்தை ஏற்றுக் கொண்டார்.

பின் தட்சனும்,அவன் மனைவியும் அறுபது பெண்களைப் பெற்றனர்.பத்துபேரை "தர்மர்" எனும் பிரஜாதிபதிக்கும், பதின்மூன்று பெண்களை கச்ய பிரஜாதிபதிக்கும்,இருபத்தேழு பேரை சந்திரனுக்கும்,இருவரை ருத்ரனுக்கும்,இன்னும் இருவரை அங்கிரஸிற்கும், மேலும் இருவரை கிருசாச்வர்களுக்கும், மற்றும் நால்வரை தார்க்ஷன்யனுக்கும் மணம் முடித்தான்.

இந்த 60 பெண்கள் மூலம் சந்ததி பெருகியது.தேவர்கள்,அசுரர்கள்,கந்தர்வர்கள்.அப்சரஸ்கள், வசுக்கள்,பூதங்கள்,ருத்ர கணங்கள் மட்டுமின்றி பசுக்கள், நாகங்கள்,பறவைகள் போன்ற உயிரினங்களும் உற்பத்தி செய்து..மூவுலகங்களையும் நிரப்பினர்.

எல்லாமே மிகச் சரியாக நடந்து கொண்டிருந்த கால கட்டத்தில்தான், சுகவாசிகளான  தேவர்களுக்கு ஆணவம் தலைக்கேறி அவர்கள் வீழ்ச்சி தொடங்கியது. 

=====================================

தேவலோகம் அன்று கோலாகலமாயிருந்தது.தேவலோகத்தின் அதிபதியான இந்திரன் தன் மனைவி இந்திராணியுடன் ராஜ்யசபையின் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தான்.சபையில் அவனைச் சுற்றி அஷடவசுக்களும்,அச்வினி தேவர்களும்,கந்தர்வர்களும்,கின்னரர்களும்,சித்தர்கள்,சாரணர்கள்,வித்யாதரர்கள் என எல்லோரும் கூடியிருந்தார்கள்.

கந்தர்வர்கள் கானம் பாட,அப்சரஸ்கள் நாட்டியம் ஆட, கின்னரர்கள் இசைக்கருவிகளை வாசிக்க அனைவரும் சோமபானம் அருந்தியபடியே உற்சாகமாக இருந்தனர்.

அப்போது, சபைக்குள் பிரவேசித்தார் தேவர்களின் குலகுருவான பிருகஸ்பதி.மூவுலகமும் போற்றும் பெருமை பெற்றவர் அவர்.

இந்திரன் பிருகஸ்பதி வந்ததைக் கவனித்தான்.ஆனாலும் அவரை வரவேற்று உபசரிக்காமல் கேளிக்கைகளில் மனம் லயித்துப் போய் அவரை அலட்சியப்படுத்தினான்.

இதனால் மனம் வருத்தமுற்றார் பிருகஸ்பதி.எப்போதும் சிம்மாசனத்தை விட்டு இறங்கி வந்து பணிவுடன் வரவேற்கும் இந்திரன்,வேண்டுமென்றே தன்னை அவமானப்படுத்தியதாக எண்ணினார்,இந்திரன் எனும் இறுமாப்பும்,சொர்க்கலோக சுகபோகங்களும் இப்படி ஒருஅவமானத்தை தனக்கு உண்டாக்கிவிட்டது என எண்ணியபடியே சபையை விட்டு வெளியேறினார்

கேளிக்கைகளும்,கொண்டாட்டமும் ஒரு முடிவிற்கு வந்த பின்னர் சுயநினைவிற்கு வந்த இந்திரன், குலகுருவான பிருகஸ்பதியை வரவேற்காமல் போனதற்காக மனம் வருந்தி, அவரை சந்தித்து மன்னிப்புக் கேட்கப் புறப்பட்டான்.

இதைத் தன் தவ வலிமையால் உணர்ந்த பிருகஸ்பதி,எவருடைய கண்களிலும் படக்கூடாதென மறைந்துவிட்டார். 

பிருகஸ்பதி தேவர்களைவிட்டு போய்விட்டார்  எனத் தெரிந்ததும் அசுரர்கள் மகிழ்ந்தனர்.தேவர்களைத் தாக்க இதுதான் சரியான சமயம் என தீர்மானித்தார்கள்.தங்கள் குல குருவான சுக்ராச்சாரியாரின் உதவியோடு பலமடங்கு வலிமைமைப் பெருக்கிக் கொண்டு தேவலோகத்தின் மீது படையெடுத்தான்.

அசுரர்களுக்கும்,தேவர்களுக்கும் பெரும் சண்டை மூண்டது.குரு சுக்ராச்சாரியார் அசுரர்களை வழி நடத்த..தேவர்கள், பிருகஸ்பதி இல்லாததால் ஆலோசனை சொல்ல ஆளின்றி தோற்றனர்.அசுரர்களின் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாது தேவர்கள் ஓடி ஒளிந்தனர்.

இந்திரன் தேவர்களை அழைத்துக் கொண்டு பிரம்மலோகம் ..சென்றான்."பிரம்ம தேவரே! தாங்கள்தான் அசுரர்களிடமிருந்து எங்களைக் காக்க வேண்டும்"ஏன பிரம்மனை வேண்டினான்.

பிரம்மன் , சுக்ராச்சாரியாரை மதிக்காததற்காக இந்திரனைக் கண்டித்தான்.

பின், "இந்திரா1 ஒருவன் எவ்வளவு உயர்ந்த நிலைக்குப் போனாலும் கர்வம் கொள்ளக்கூடாது.நீ ஆணவத்துடன் குலகுருவை அவமதித்ததால்தான் தேவர்களுக்கு இந்த துன்பம் ஏற்பட்டது.அவர்கள் குரு சுக்ராச்சாரியாரை பூஜித்து மேலும் வலிமை பெற்று வருகிறார்கள்.அவர்கள் இனியும் தொடர்ந்து தேவலோகத்தைக் கைப்பற்றவே முயற்சிப்பார்கள்.குருவை இழந்து நிற்கும் நீங்கள் ஒரு குருவைத் தேடிக்கோள்ளுங்கள்" என்றார்.

"நாங்கள் யாரை குருவாகக் கொல்வது என நீங்கள்தான் வழி காட்ட வேண்டும்" என இந்திரன் வேண்டினான்.

"த்வஷ்டாவின்" மகனான விச்வரூபன் என்பவன் தலை சிறந்த பிரம்மஞானி.வயதில் சிறியவன்.ஆனாலும் வேதங்களை அறிந்தவன்.பிருகஸ்பதிக்குப் பதிலாக உங்கள் குருவாக இருப்பதற்குத் தகுதியானவன்.நீங்கள் அவனிடம் சென்று குருவாக இருக்க வேண்டுங்கள்.அவன் சம்மதித்தால் நீங்கள் நன்மையடையலாம்" என்றார் பிரம்மன்.

த்வஷ்டா எனுன் அந்தணனுக்கும் ரசனா என்ற அசுரர் குலப் பெண்ணிற்கும் பிறந்தவன் விச்வரூபன்.மூன்று தலைகளைக் கொண்ட அவன் அரக்கர்  குலம் மீதும் பாசம் கொண்டவன் ஆயிற்றே என இந்திரன் யோசித்தான்.ஆனாலும் வேறு வழியின்றி விச்வரூபனிடம் சென்று தங்ககளுக்குக் குருவாக இருக்குமாறு வேண்டினான்.

விச்வரூபனுக்கு ஆசாரியார் பதவியின் மீது ஆசை இல்லை.ஆனாலும் தேவர்கள் கேட்டுக் கொண்டதால்..துன்பத்தில் இருக்கும் அவர்களுக்கு உதவி செய்ய விரும்பியதாலும், இந்திரன் கேட்டுக் கொண்டதாலும் ஏற்றுக்கொண்டான்.

தேவர்களின் குருவானபின் அவன் இந்திரனுக்கு "நாராயண கவசம்" எனும் மகாமந்திரத்தை உபதேசித்தான்.அசுரர்களை வெற்றி கொள்ளும் விதமாக அந்த மாகாமந்திரத்தை எப்படி ஜெபிக்க வேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்தான்.

நாராயண கவசத்தின் மகிமையால் அடுத்தடுத்து நடந்த போர்களில் அசுரர்களை வெற்றி கொண்டான் இந்திரன்.விச்வரூபனுக்கு நன்றி தெரிவித்து கௌரவித்தான்.

விச்வரூபன் தொடர்ந்து தேவர்களுக்கு குருவாக அவர்களை வழி நடத்து வந்தான்.ஆனாலும் தாய்வழி உறவினர்களான அசுரரகள் மீது அன்பு கொண்டவனாகவே இருந்தான்.அதனால் யாகங்கள் செய்து தேவர்களுக்கு அவிர்பாகங்கள் அளிக்கப்படும் போது..யாருக்கும் தெரியாமல் அவிர்பாகத்தின் ஒரு பகுதியை அசுரர்களுக்கும் அளித்து வந்தான்.

இதைத் தெரிந்து கொண்ட இந்திரன், தேவர்களின் குருவானவன் தங்களுக்குத் துரோகம் செய்து விட்டானே என ஆத்திரத்துடன் விச்வரூபனின் மூன்று தலைகளையும் வெட்டி வீழ்ந்தினான்.

கோபத்தில் அந்தணன் ஒருவனைக் கொன்ற காரணத்தால் இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது.அந்தப் பாவத்தைப் போக்க..அதை நான்காகப் பிரித்து பூமி, நீர்,மரங்கள் மற்றும் பெண்களிடம் அதைப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டினான்.இதற்கு அவர்கள் ஒப்புக் கொண்டால் வரங்கள் தருவதாகக் கூறினான்.நால்வரும் சம்மதித்து பாவங்களைப் பெற்றுக் கொண்டனர்.

அவர்கள் ஏற்றுக் கொண்ட பாவத்தினாலேயே பூமி பாலைவனமாகியது.மரங்களில் பால் கசிந்தது.நீரில் நுரை ஏற்பட்டது.பெண்களுக்கு மாத விலக்கு உணடானது.பதிலுக்கு இந்திரன் தந்த வரங்களாக, பூமியில் ஏற்படும் பள்ளங்கள் தானாகவே சரியாயின.மரங்கள் வெட்ட வெட்ட துளிர்த்தன.நீர் அள்ள அள்ளக் குறையாமல் சுரந்தது,பெண்களுக்கு பிரசவத்தின் பின்னும் கணவனுக்கு இன்பம் தரும் தன்மை ஏற்பட்டது.

இந்திரன் இந்த விதமாக பிரம்மஹத்தித் தோஷத்திலிருந்து தப்பித்தான்.அடுத்து அவனுக்கு ஒரு ஆபத்தும் காத்திருந்தது. 

இந்திரனால் தன் மகன் கொல்லப்பட்டதை அறிந்த த்வஷ்டா அவன் மீது கோபம் கொண்டான்.இந்திரனை அழிக்க ஒரு யாகம் செய்தான்.அந்த யாகத்தின் போது யாக குண்டத்தின் அக்னியில் இருந்து ஒரு அசுரன் வெளிப்பட்டான்.அவன் விருத்ராசுரன்."ஓம் நமோ நாராயணய" என்று ஜெபித்தபடியே அக்னி குண்டத்திலிருந்து வந்தான் அசுரன்.

ஒரு அசுரன், நாரயணனை ஒலிப்பதா..விருத்ராசுரன் முன் பிறவிப் பற்றி அறிந்தால் ஆச்சரியம் ஏற்படாது. அதைப்பார்ப்போம்..

**********************************

சித்ரகேது சூரசேன நாட்டின் மன்னன்.அவனது மனைவி பட்டத்து ராணி கிருதத்யுசி.இவளைத் தவிரவும் அரசனுக்கு பல மனைவிகள் இருந்தனர்.ஆனாலும் குழந்தைகள் இல்லை.

தனக்குக் கடைசிவரை புத்திரப் பாக்கியம் கிட்டாதோ என மன்னன் கவலை கொண்டான்.அதனால் எதிலும் நாட்டமில்லாமல் இருந்தான்
இச்சமயத்தில்தான் ஆங்கிரஸ முனிவர், அவனது அரண்மனைக்கு வந்தார்.

மன்னன்..சித்ரகேது,அவரை சகல மரியாதைகளுடன்  வரவேற்று..அரண்மனையில் எல்லா வசதிகளும் செய்துத் தந்து உபசரித்தான்.தானே முன்னின்று அனைத்து பணிவிடைகளையும் செய்தான்.

அவனது உபசரிப்பால் மன்ம மகிழ்ந்த முனிவர் அவனிடம், "மன்னா..உன் முகத்தில் துயரம் தெரிகிறது.மனதில் ஏதோ கூறயிருப்பதை உணர்கிறேன்.
அது என்ன என்று சொல்.முடிந்தால் தீர்த்து வைக்கின்றேன்" என்றார்.

சித்ரகேது சொன்னான்,"சுவாமி, ஒருவன் என்னதான் சீரும், சிறப்புமாய் புகழ் பெற்றிருந்தாலும்.புத்திர பாக்கியம் இல்லையென்றால் அவனுக்கு மோட்சம்  கிடையாது என்கிறது சாஸ்திரம்.எனக்கு குழந்தை பாக்கியம் இல்லை.,.நீங்கள் தான் நான் நரகத்தை அடையாமல் காக்க வேண்டும்" என்றான்.

மன்னன் சித்ரகேதுவின் வேண்டுகோளை ஏற்று,ஆங்கிரஸ் முனிவர் புத்திரபாக்கியத்துக்காக விசேஷ யாகம் ஒன்றை நடத்தினார்.யாகத்தின் பிரசாதத்தை பட்டத்துராணியான கிருதத்யகிக்கு அளித்தார்.பின் மன்னரிடம் "உன் மனைவி ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுப்பாள்"எனக் கூறிச் சென்றார்.

ஆங்கிரஸ் முனிவர் சொன்னது போல, கிருதத்யகி ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தாள்.மன்னர் மிகவும் மகிழ்ச்சியுடன் குழந்தை பிறந்ததை கோலாகலமாகக் கொண்டாடினார்.வாரிசைத் தந்த கிருதத்யகிமேல் மன்னன் பெரு ம் அன்பு கொண்டு...அவள் பக்கத்திலேயே இருந்தார்.மற்ற மனைவிகளைப் பார்க்கக் கூட செல்லவில்லை.

அதனால் மற்ற மனைவிகள் கிருதத்யகி  மீது பொறாமை கொண்டனர்.அந்தக் குழந்தையினால்தானே மன்னன் தங்களைப் புறக்கணிக்கின்றான் என யாருக்கும் தெரியாமல் பாலில் விஷம் கலந்து கொடுத்து அக்குழந்தையைக் கொன்றனர்.

குழந்தை இறந்த செய்தி கேட்டு கிருத்த்யகி அழுதுக் கதறி மயக்கமானாள்.
மன்னனும் பித்து பிடித்தவன் போல் ஆனான்.ராஜ்ய பரிபாலத்தின் மீது கவனமின்றி குழ்ந்தையின் நினைவாகவே அரண்மனையில் முடங்கிக் கிடந்தான்.

இந்நிலையில், ஆங்கிரஸ முனிவரும்,நாரத மகரிஷியும் அங்கு வந்து மன்னனுக்கு ஆறுதல் கூறினார்கள். 

"மன்னா!பிறக்கும் உயிர்கள் எல்லாமே ஒரு காலத்தில் மடியத்தான் வேண்டும்.இது காலத்தின் கட்டாயம்.உடல் என்பது வெறும் மாயை.உடல் அழிந்தாலும் ஆன்மா அழிவதில்லை.இறந்து போனது உன் குழந்தை என்னும் பாசத்தையும், பற்றையும் விட்டுவிட்டு அது போன ஜென்மத்தில் என்னவாகி இருந்திருக்குமோ?என யாருக்குத் தெரியும்?அதற்கு அப்போது உன்னுடன் என்ன உறவு இருந்தது? இந்த ஜென்மத்தில் உனக்கு மகனாகப் பிறந்து மரித்து விட்டது.அடுத்த பிறவியின் போது வேறொருவருக்குப் பிள்ளையாய் பிறக்கும்.
மனிதர்கள் எல்லோரும் தனியாகத்தான் பிறக்கிறோம்.இறுதியில் தனியாகத்தான் செல்லப் போகிறோம்.இடையில், பந்தம், பாசம் என நாமாகத்தான் சிக்கிக் கொள்கிறோம்.இனியேனும் ஆசாபாசங்களை உதறி பகவானின் காலடியில் உன் மனதை செலுத்து" என்றனர்

மன்னனின் மனமும் தேறி தெளிவு பெற்றது.

பின் நாரதர் மன்னனிடம் "சித்ரகேது..இப்போது நாராயணனை அடையும் மந்திரத்தை உபதேசிக்கிறேன்.அதை ஜெபித்து தியானத்தில் ஈடுபட்டு பெரும் ஸித்திகளைப் பெறுவாயாக" என்று சொல்லி மந்திரததைப் போதித்தார்.

சித்ரகேதுவும் தியானத்தில் ஆழ்ந்தார்.ஏழு நாட்கள் நீரை மட்டும் அருந்தி மந்திரத்தை இடைவிடாது ஜெபித்தார்.எட்டாவது நாள் அவரது தியானம் பலித்தது.அவன் வித்தியாதர்களின் மன்னனாகும் தகுதியினைப் பெற்றான்.இதன் காரணமாக அவன், ஆகாயத்திலே உலாவவும்,பாதாளத்தில் புகுந்து செல்லவும் கூடிய ஆற்றல்களைப் பெற்றான்.நினைத்த நாழிகையில் எங்கும் செல்லக்கூடிய வல்லமையினை அடைந்தான்.

ஒருமுறை அவன் தனது விமானத்தில் ஏறி ஆகாயமார்க்கமாக சென்று கொண்டிருந்த போது கயிலாயமலையைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது.

கயிலாயமலையில் சிவபெருமான் தனது பூத கணங்கள்,முனிவர்கள்,சித்தர்கள்,சாரணர்கள் சூழ பார்வதி தேவியை தன் மடியின் மீது வைத்து அணைத்தபடியிருந்தார்.

இதைப்பார்த்த சித்ரகேது கேலியாக,"சாதாரண மனிதர்கள்கூட தன் மனைவியை யாரும் அறியாமல்தான் கொஞ்சுவார்கள்.ஆனால் உலகத்தையே ரட்சிக்கும் சிவன் துளியும் வெட்கமில்லாமல் மற்றவர்கள் கண்ணெதிரில் மனைவியைக் கட்டியணைத்து குலாவுகிறாரே!..கேவலம்" என முகம் சுளித்தான்.

அவன் சொற்கள் காதில் விழ, சிவன் மௌனமாக இருந்தார்.ஆனால் பார்வதி கோபம் கொண்டாள்.

வித்யாதரர்களின் மன்னன் ஆகிவிட்டதால் மமதைக் கொண்டு விட்டான் இந்த மடையன்.மகரிஷிகளும் மற்ற  தேவர்களும் போற்றி வழிபடும் மகாதேவனை நிந்தித்த இந்த  சித்ரகேது அசுரனாகப் பிறக்கட்டும்"என சாபமிட்டாள்.

பார்வதி தேவியின் சாபத்தைக் கேட்ட சித்ரகேது விமானத்திலிருந்து இறங்கி வந்து பார்வதியை வணங்கினான்.

"தாயே! உங்கள் சாபத்தை ஏற்கிறேன்.சுகம்,துக்கம்,இன்பம்,துன்பம்,மரணம்,பிறப்பு எல்லாமே ஒன்றுதான்.இவை யாவும் உடலைத்தான் பாதிக்கும்.ஆன்மாவிற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.நடப்பவை விதியின் செயல்.என் கர்மாவை நான்தான் அனுபவித்துத் தீர வேண்டும்.நான் கூறியதில் ஏதேனும் தவறிருந்தால் மன்னிக்கவும்"   என்றான்.

பார்வதி தேவி ஆச்சரியம் அடைந்தாள்.

பரமசிவன் அவளிடம், "தேவி..இவன் மகாவிஷ்ணுவின் பரம பக்தன்.நாரதரிடம் மந்திர உபதேசம் பெற்றவன்.அதனால் பணிவான, பக்குவமான வார்த்தைகளைக் கூறினான்.உன் சாபத்தையும் மனமகிழ்ச்சியுடன் பெற்று க் கொண்டான் .ஸ்ரீஹரியின் பக்தர்கள் எத்தனைத் துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனவலிமை பெற்றவர்கள்.இவன் இப்போதும், எப்போதும் திருமால்  இருப்பான்" என சித்ரகேதுவைப் பாராட்டினார்.

அந்தச் சித்ரகேதுதான் பார்வதியிடம் பெற்ற சாபத்தின்படி த்வஷ்டாவின் யாக குண்டத்திலிருந்து விருத்ராசுரனாக வெளிப்பட்டான்.ஹரி பக்தனாகவே இருந்தான்.

த்வ்ஷ்டாவின் விருப்பப்படி இந்திரனை அழிக்க விண்ணுக்கும், மண்ணுக்கும் விஷ்வரூபம் எடுத்து, பயமுறுத்தும் கோர உருவத்துடன் தேவர்களைத் தாக்கினான்.விருத்ராசுரனின் பயங்கரத் தாக்குதலை சமாளிக்க முடியாது தேவர்கள் சிதறி ஓடினர்.

இந்திரனை கடுமையாகத் தாக்கி காயப்படுத்தினான்.இந்திரன் தன் பல அஸ்திரங்களை உபயோகித்தும் பலனளிக்காததால், பின் வாங்கினான்.

விருத்ராசுரனிடமிருந்து தப்பியோடிய இந்திரன் வைகுண்டம் சென்று நாராயணனை சரணடைந்து, "நீங்கள்தான் விருத்ராசுரனிடமிருந்து எங்களைக் காக்க வேண்டும் "என வேண்டினான்.


விஷ்ணு அவன் மீது இரக்கம் கொண்டு...

"இந்திரா...விருத்ராசுரனை வெல்ல ஒரு வழி சொல்கிறேன்.ததீசி எனுன் மகரிஷி காட்டில் தவம் செய்து கொண்டு இருக்கிறார்.தீவிர விரதத்தாலும், யோக சக்தியாலும் தன் உடலை வஜ்ரம்போல வைத்துள்ளார்.அவரிடம் சென்று அவர் எலும்பைக் கேள்.மறுக்காமல் தருவார்.அதைப் பெற்று விச்வகர்மாவிடம் கொடுத்து ஒரு ஆயுதம் செய்யச்சொல்,பின் அந்த ஆயுதத்தால் விருத்ராசுரனை நீ வெல்லலாம்" என்றார்.

இந்திரனுக்கு எலும்பைத் தர வேண்டுமானால் ததீசி உயிரைக் கொடுக்க வேண்டியிருக்கும்.அப்போதுதான் அந்த உடலிலிருந்து எலும்பை எடுக்க முடியும்.ததீசி உயிர் துறக்கத் துணிவாரா என்பது தெரியவில்லை.யாருக்கோ தன் உயிரைக் கொடுக்க யார்தான் விரும்புவர்?

ஆனாலும் மகாவிஷ்ணு கூறியபடி ததீசி மகரிஷியினை சந்தித்து மிகவும் கூச்சத்துடன் அவரது முதுகெலும்பைக் கேட்டு யாசித்தான் இந்திரன்.

சிறிதும் யோசிக்காமல் கருணை மனதுடன் சம்மதித்தார் ததீசி மகரிஷி. 

"என்றைக்கு இருந்தாலும் இந்த உடல் அழியத்தான் போகிறது.அழியப்போகும் இந்த உடல் மற்றவர்களுக்கு  நன்மையினைத் தருமானால்,அதைவிட சந்தோஷம் வேறு என்ன இருக்கமுடியும்" என்ற மகரிஷி உடனே தியானத்தில் ஆழ்ந்தார்.உடலை உதறிவிட்டு தனது ஆத்மாவை பரமாத்மாவோடு ஐக்கியப் படுத்திக் கொண்டார்.

ததீசியில் எலும்பில் இருந்து வஜ்ராயுதத்தை உருவாக்கித் தந்தான் விஸ்வகர்மா.இந்திரன் அதை யேந்தி விருத்ராசுரனுடன் போரிட்டான்.

தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் கடும் போர் மீண்டது.

இம்முறை அசுரர்கள், தேவர்களிடம் அடிபட்டு தோற்று ஓடினார்கள்.ஆனாலும் கூட விருத்ரனை வெல்வது எளிதாக இல்லை.

"இந்திரா..தேவர்களுக்குக் குருவாய் இருந்த விச்வரூபனைக் கொன்ற பாவி நீ.இதற்கு உன்னை நான் பழி வாங்குவேன்" ..என்றபடியே சூலத்தை ஏந்தி..'இந்த சூலத்தால் உன் உடலைப் பிளப்பேன்..அப்படியில்லாது..உன் வஜ்ராயுதத்தால் நான் இறந்தாலும் கவலைப்பட மாட்டேன்.பகவானின் திருவடிகளைப் பற்றிக் கொள்வேன்.அரக்கனாக இருந்தாலும் நான் நரகத்துக்குப் போக மாட்டேன்.மோட்சத்தையே அடைவேன்.ஆனால்..போரில் வென்றாலும் உனக்கு மன நிம்மதி கிடைக்காது" என இந்திரன் மீது பாய்ந்தான் விருத்ராசுரன்.

இந்திரன்...தன் வஜ்ராயுதத்தால் சூலம் ஏந்திய அவன் கையை வெட்டி வீழ்ந்தினான்.மற்ற கையில் ஆயுதம் ஏந்தி விருத்ரன் போரிட்டான்.அந்தக் கையையும் வெட்டி வீழ்த்தினான் இந்திரன்.தன் வாயை அகலத் திறந்து இந்திரனை விழுங்கினான் விருத்ராசுரன்.அவன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்த இந்திரன், வஜ்ராயுதத்தால் விருத்ராசுரனின் மண்டையில் ஓங்கி அடித்துக் கொன்றான்.

விருத்ராசுரன் உயிர் பிரிந்தது.

ஆனால்..இந்திரனை தோஷம் பற்றிக் கோண்டது.ஏற்கனவே விச்வரூபனைக் கொன்றதன் மூலம் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொள்ளவே படாதபாடு பட வேண்டியிருந்தது.இப்போதோ விருத்ரனைக் கொன்றதன் மூலம் மறுபடியும் அதே பிரம்மஹத்தி தோஷம் பற்றியது.

அதிலிருந்து தப்பிக்க மானசரோவரத்தில் ஒரு தாமரைத் தண்டின் வழியாக நுழைந்து உள்ளே தங்கிக் கொண்டான்.

இந்திரன் இவ்வாறு தண்ணீருக்குள் தங்கி யிருந்ததால் யாகங்களில் அவனுக்கு அளிக்கப்பட்ட அவிர்பாகங்களை அக்னியால் அவரிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை.அதனால், உள்ளே உணவின்றித் தவித்தான் இந்திரன்.

இந்த சமயத்தில் சந்திர குலத்தில் பிறந்த நகுஷன் என்பவன் நூறு அசுவமேதயாகங்களைச் செய்து முடித்திருந்தான்.எவன் ஒருவன் நூறு அசுவமேதயாகங்களைச் சிறப்பாகச் செய்து முடிக்கின்றானோ..அவன் இந்திரப்பதவியை அடைவான் என்பதால் நகுஷன் தேவலோகத்தின் இந்திரபதவியை அடைந்து தேவர்களின் அரசன் ஆவான்.

சொர்க்கலோகத்தின் சுகபோகங்கள் நகுஷனை இன்பத்தில் ஆழ்த்தின.எல்லா தேவர்களும் அவனை வணங்கி நின்றனர்.அரசு,பதவி, செல்வம் என அனைத்தும் பெற்ற நகுஷனின் நற்குணங்கள் நாள்பட நாள்பட மறைந்து..ஆணவம் அதிகமானது.

இந்திர பதவியை அடைந்ததால் இந்திரன் மனைவி இந்திராணியும் தன்னுடையவள் என அவளை தன் விருப்பத்துக்கு இணைய வற்புறுத்தினான்.நகுஷனின் தொல்லை தாங்காமல் இந்திராணி,தேவர்கள் குருவான பிருகஸ்பதியிடம் சென்று முறையிட்டாள்.நகுஷனிடமிருந்து தன்னைக் காப்பாற்றுமாறு வேண்டினாள்.

அவளின் நிலை கண்ட பிருகஸ்பதி...ஒரு யோசனையைச் சொன்னார்.

"முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்.வஞ்சக எண்ணம் கொண்ட நகுஷனை அவன் ஆணவத்தாலேயே அழிக்க வேண்டும்.எனவே நீயும் நகுஷன் மீது அன்பு கொண்டவளைப் போலவே நடி.அதனல அவனை நீ ஏற்றுக்கொண்டதாகிவிடாது. ,அவன் அடுத்து உன்னிடம் வரும் போது, அவன்  பல்லக்கை சப்தரிஷிகள் சுமந்து வர வேண்டும் என்று சொல்.பிறகு பார்..நகுஷன் என்னவாகிறான் என்று" என்றார்.

இந்திராணி பிருகஸ்பதி சொன்னபடியே நிபந்தனை விதிக்க நகுஷனும் ஒப்புக் கொண்டான்.

சப்தரிஷிகளை அழைத்து இந்திராணி இருக்குமிடத்திற்கு தன்னை பல்லக்கில் சுமந்து செல்லுமாறு ஆணையிட்டான்.

தேவர்களின் தலைவன் என்பதால் சப்தரிஷிகளும் அவன் ஆணைக்கு அடிபணிந்து அவனைத் தூக்கிச் சென்றனர்.

இந்திராணியை அடைய வேண்டும் என்ற மோகத்தில் இருந்ததால் சப்தரிஷிகள் பல்லக்கினைத் தூக்கும்வேகம் போதாது என எண்ணினான்.அவர்கள் ஆமை வேகத்தில் செல்வது போலத் தோன்றியது.அதனால் எரிச்சலுடன்"ஸர்ப்ப ஸர்ப்ப" என்று தன் கால் கட்டைவிரலால் ரிஷிகளைக் குத்தித் தீட்டினான்.(ஸர்ப்ப என்றால் வேகம், பாம்பு என வடமொழியில் அர்த்தங்கள் உண்டு)

சப்தரிஷிகள்நகுஷனின் அவமதிப்பைக் கண்டு கோபம் அடைந்தனர்.

"பெரியவர்களிடம் பணிவு இல்லாமல் மோகத்தால் அறிவிழந்த நகுஷனே  உன் வார்த்தைப்படி நீ சர்ப்பமாக மாறிக் கிட"என சாபமிட்டுவிட்டார்கள்.

மீண்டும் அரசன் இல்லா நிலையில் தேவலோகம்.

பின் ரிஷிகள் எல்லோரும் கூடி இந்திரனுக்காக அசுவமேதயாகம் செய்துஅவனது பிரம்மஹத்தி தோஷத்தைப் போகச் செய்துஅவனை மீட்டனர்.

பின், இந்திரன் பதவியில் அமர்ந்து மூவுலகினையும் ஆளத்தொடங்கினான்.

கதையைக் கேட்டுக் கொண்டிருந்த பரீட்சித், சுகர் மகரிஷியிடம்,தன் சந்தேகத்தைக் கேட்டான்.

"இறைவனுக்கு படைப்பில் அனைவரும் சமம்தானே! அப்படியிருக்கையில், அவர் இந்திரர்களுக்கும், தேவர்களுக்கும் உதவி செய்து அசுரர்களை தானே அழித்ததும், அழிக்க உதவியதும் ஏன்?" என்றான்.

"பரீட்சித்...பகவான் அனைவருக்கும் அருள்பாலிக்கின்றான்.அது வெளிப்படத் தெரிவதில்லை.அவ்வளவுதான்.துஷ்டர்களுக்கு அவன் தண்டனைத் தருவது போல நமக்குத் தோன்றினாலும் அதுவும் அவர்களுக்கு நன்மை செய்யவே!பக்தி,சிநேகம்,காதல்(காமம்),பயம்,விரோதம் என ஐந்து வகைகளுமே பகவானை அடையும் வழிகள்தான்.என்னைப் போன்ற மகரிஷிகள் பக்தியாலும்,பாண்டவர் போன்றோர் ஸ்நேகத்தாலும்,கோபிகைகள் காதலாலும்,பயத்தால் கம்சன் போன்றோர்களாலும்,விரோதத்தால் இரண்யாட்சன்,இரண்யகசிபு போன்றோர்களாலும் பகவானை சென்று அடையமுடிகிறது"

துவாரபால்கர்களான ஜெய..விஜயர்கள் மூன்று பிறவிகள் அசுரர்களாகப் பிறந்து பகவானை அடைவார்கள் என்ற சாபம் ஏற்பட்டதல்லவா?

அதன்படி  அவர்கள் இரண்யாட்சன்..இரண்யகசிபு ஆகவும்
அடுத்தப் பிறவியில் ராவணன்,கும்பகர்ணன் ஆகவும்
கடைசிப் பிறவியில் சிசுபாலன்,தந்தவக்த்ரர்களாகவும் பிறந்து பகவானால் வதம் செய்யப்பட்டு சாப விமோசனம் அடைந்து..இறைவனின் திருவடிகளை அடைந்தனர்"

மகரிஷி சுகர் சொல்லி முடித்தார்.

"இரண்யட்சன் வராக அவதாரத்தின் மூலம் கொல்லப்பட்டதாகக் கூறினீர்கள்.இரண்யகசிபு என்னவானான்? அவன் என்ன செய்தாண்" என்றான் பரீட்சித்.

இரண்யகசிபுவின் கதையைக் கூற ஆரம்பித்தார் சுகர் மகரிஷி.

10 -பரதனும், மானும், ஆசாபாசமும்

பரதன் ஆண்ட பாரத தேசம் எல்லா வளங்களும் பெற்று நீர் நிலைகள் பெருகி மக்களுக்கு சிறு குறையும் ஏற்படாமல் சொர்க்கலோகம் போலத் திகழ்ந்தது.

நீதி நெறி தவறாது ஆட்சி செய்த பரதன் விஸ்வரூபன் என்பவனின் மகளான பஞ்சஜனியை மணந்து ஐந்து பிள்ளைகளைப் பெற்றான்.பல ஆண்டுகள் ராஜ்ஜியத்தை ஆண்டபின்னர், தனது இறுதி நாட்களில் கடவுள் சிந்தனையுடன் காலம் கழித்து மோட்சம் பெற ஆசைப்பட்டான்.

நாடு,அரசாட்சி,அரண்மனை,செல்வ சுகங்கள்,ஆசை மனைவி,பாசத்துக்குரிய மகன்கள் என அனைத்துப் பற்றுகளையும் அறுத்துவிட்டு, ஆட்சியை தன் மகன் களிடம் ஒப்படைத்துவிட்டு கானகம் சென்றான்.

கண்டகி நதிக்கரைக்குச் சென்றவன்,அங்கிருந்து புலஹர் என்பவனின் ஆசிரமத்தில் தங்கினான்.அங்கிருந்த படியே தியானத்தில் ஈடுபட்டான்.

சொந்த பந்தங்கள்,ஆசாபாசங்கள் என அனைத்தையும் உதறி எறிந்துவிட்டு வந்தவனின் வாழ்க்கையில் விதி விளையாடியது.

ஒருநாள் பரதன் நதியில் குளித்துக் கொண்டிருந்த போது, கர்ப்பிணியான பெண்மான் அங்கே வந்து நதியில் தாகத்தைத் தீர்த்துக் கொண்டிருந்தது.அப்போது திடீரென ஒரு சிங்கத்தின் கர்ஜனைக் கேட்க,அதைக் கேட்டு மிரண்ட மான் தப்பியோட தாவிக் குதித்தது. தவறிப் போய் ஆற்றில் விழுந்தது.அது பயந்து தாவும் போது அதன் வயிற்றுக்குள்ளிருந்த குட்டி பிரசவமாகி வெளியே கரையில் வந்து வீழ்ந்தது.தண்ணீரில் விழுந்த தாய்மான் தத்தளித்தது.நீந்த முடியாது, மூழ்கி செத்துப் போனது.

இதனைப் பார்த்துக் கொண்டிருந்த பரதன் மனம் வேதனையடைந்தான்.தாயை இழந்த மான் குட்டியின் மீது துயரம் கொண்டான்.அதைத்தானே வளர்க்க முடிவெடுத்து தூக்கிக் கொண்டான்.ஆசிரமத்திற்கு எடுத்துப் போய் அதை பராமரிக்கத் தொடங்கினான். 

மான்குட்டியின் அழகும், துள்ளலும் துடிப்பும் பரதனின் மனதை மிகவும் கவர்ந்தது.அதை பாசத்துடன் வளர்த்தான்.அதன் மீது அளவிற்கு அதிகமாகப் பிரியம் கொண்டான்.நாள் முழுதும் அதனுடனேயே  செலவிட்டான்.எங்கும்..எப்போதும்..மான்குட்டியைத் தூக்குக் கொண்டு அலைந்தான்.இதனால், அவன் கடவுளை தியானிப்பதும்,பூஜை வழிபாடுகளும் குறைந்தன.

அவனின் இறுதி நாள் நெருங்கியது.கடைசி நேரத்தில் மானின் ஞாபகமாகவே 
உயிர் துறந்தான்.அடுத்த பிறவியில் ஒரு மானாகவேப் பிறந்தான்.

மானாகப் பிறந்தாலும், அவனுக்கு போன ஜென்மத்தின் ஞாபகம் இருந்தது.தான் மான் குட்டியின் மீது வைத்த பாசத்தின் காரணமாகவே இந்தப் பிறவியில் மானாகப் பிறந்திருப்பது குறித்து வருந்தினான்.இனி இப்படி ஒரு தவறு நேரக்கூடாது என தனது தாய் மானைப் பிரிந்து புறப்பட்டான்.முந்தைய பிறவியில் தான் வசித்த புலஹருடைய ஆசிரமத்திற்குச் சென்று கடவுளைத் தியானித்தபடியே தன் இறுதி நாளுக்குக் காத்திருந்தான்.காலம் வந்ததும் கண்டகி நதியில் மூழ்கி உயிர் நீத்தான்.

அதற்கு அடுத்த பிறவியில் ஒரு அந்தணர்க்கு மகனாகப் பிறந்தான்.அந்த அந்தணர்க்கு இரண்டு மனைவிகள்.முதல் மனைவிற்கு ஒன்பது பிள்ளைகள்.இரண்டாவது மனைவிற்கு ஆண்..பெண்ணுமாகஇரட்டைக் குழந்தைகள்.அதில் ஆண்மகன் தான் மான் பிறவிக்குப் பிறகு இப்பிறவியில் வந்துள்ள பரதன்.

இந்தப் பிறவியிலும் முன் ஜென்ம ஞாபகங்களுடன் பிறந்த பரதன், எந்த பந்த பாசங்களுக்கும் அடிமையாகாது, எதன் மீதும் பற்று வைக்காது..நிர்மலமான மனதுடன் இருக்க வைராக்கியம் கொண்டான்.அதன்படியே வாழ்ந்தான்.

உலக இன்பங்களில் நாட்டம் கொள்ளாமல்,எப்போதும் பகவான் நாராயணின் நினைவாகவே ஓடம் போலத் திரிந்த பரதனை ,எல்லோரும் பித்தன் என எண்ணினர்.அவனுக்குள் ஒரு ஞானி இருப்பதை யாரும் அறியவில்லை.

அறிவற்ற மூடன் போலவே நடந்து கொள்ளும் பரதனைப் பற்றிய துயரத்திலேயே அவனது தாயும், தந்தையும் உயிர் நீத்தனர்.சகோதரர்களோஅவன் மீது சிறிதும் பாசமில்லாமல் அவனை ஒரு வேலைக்காரனைப் போல நடத்தினார்கள்.அவனோ, எதைப்பற்றியும் கவலையில்லாமல் உணர்ச்சியற்றவனாக உலாவினான்.

குளிக்காமல், தினப்படி நியமங்களை அனுசரிக்காமல்,அழுக்கு உடையுடன், கிடைத்த வேலையை செய்து, கொடுத்த உணவை உண்டு, கண்ட இடத்தில் படுத்து காலத்தை ஓட்டினான்.

இப்படி இருக்கையில் பரதனுக்கும் ஒரு ஆபத்து வந்தது...திருடர்கள் தலைவன் ரூபத்தில்.

அந்தத் திருடர் தலைவனுக்கு நீண்ட நாட்களாகக் குழந்தையில்லை.இதனால் மனம் வருந்தியவன்,அவனது பூசாரியின் சொல்படி குலதெய்வம் காளிக்கு நரபலி கொடுக்கத் தீர்மானித்தான்.

ரத்தபலி கொடுத்தால், காளி மனம்  மகிழ்ந்து பிள்ளை வரம் தருவாள் என நம்பினான்.அதனால் அவன் ஆட்களை அனுப்பி நரபலிக்கு ஒரு திடகாத்திர இளைஞனை அழைத்து வரச் சொன்னான்., 

பலிதேடி சென்ற ஆட்களின்
கண்களில் பரதன் பட , அவர்கள் அவனைக் கட்டி இழுத்துச் சென்றனர்.

அவனுக்குக் குளிப்பாட்டி,புத்தாடைகள் அணிவித்து, சந்தனம் பூசி, மாலை அணிவித்து பத்ரகாளியின் முன் பலிபீடத்தில் நிறுத்தினார்கள்.

காளியை அலங்கரித்து பூஜைகள் நடத்தினார்கள்.பின் ரத்தபலி கொடுக்க பரதனின் தலையை நோக்கிக் கத்தியை இறக்கினான் திருடர்த் தலைவன்.

அப்போதும், பதட்டமில்லாமல், பயமின்றி எந்த உணர்ச்சியும் இல்லாமல் நின்று கொண்டிருந்தான் பரதன்.யோகி பரதனின் தவ அக்னி காளியையே சுட்டெரித்து விடுவது போல இருக்க, காளி கடும் கோபம் கொண்டு வெளிப்பட்டு திருடர் தலைவனையும்..அவன் ஆட்களையும் கொன்று அவர்கள் ரத்தத்தைக் குடித்து கூத்தாடினாள்.தன் பூத கணங்களுடன் அவர்களின் தலைகளைக் கொய்து கொண்டாடினாள்

எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வெளியேறினான் பரதன்.

அடுத்து அவன் சிக்கிக் கொண்டது  ஒரு அரசனிடம்.சிந்து தேசத்தின் மன்னர் ரஹூகுணன் என்பவன் கபில முனிவரிடம் உபதேசம் பெற சென்று கொண்டிருந்தான்.

அவனது பல்லக்கைத் தூக்கி சென்ற ஆட்களில் ஒருவனுக்கு உடல்நலம் சரியில்லாததால்..வேறு ஒரு நபரை அவர்கள் தேடிக்கொண்டிருந்த போது பரதன் அங்கு வந்து சேர்ந்தான்.

அவனைக் கண்டதும், அரசனின் ஆட்கள் அவனை பல்லக்குத் தூக்கி வேலைக்குச் சேர்த்துக் கொண்டனர். 

பரதன் வழக்கம்போல பகவானைத் தியானித்தபடியே உலகநினைவின்றி ஏனோ தானோவென
பல்லக்கைத் தூக்கி நடந்துவர உடன் தூக்கிகள் வேகம் இதனால் தடைப்பட்டு தள்ளாடினார்கள்.பல்லக்கு இங்கும் அங்குமாக அசைந்தது.

அரசன் ரஹூகு௳ன் வெளியே எட்டிப்பார்த்து,பல்லக்கைத் தூக்கி வருபவர்களைக் கோபித்துக் கொண்டார்.அவர்கள் பரதனைக் காட்டி, "இந்தப் பித்தனால்தான் இப்படி ஆகிறது.இவன் ஏதோ யோசனையுடன் வருகிறான்"என குற்றம் சாட்டினர்.

அரசனும் ,பரதனைப் பார்த்து,"ஏய்..நீ ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றால் கடும் தண்டனை அளிப்பேன்" என்றான்.

பரதன் சிரித்துவிட்டு, "மன்னா..நீ என்னை எப்படி தண்டித்தாலும். அது உடலுக்குத்தானே தவிர ஆத்மாவாகிய எனக்கு இல்லை.அரசன் எனும் ஆணவத்தால் ..என்னைத் தண்டிப்பேன் என்கிறாய்.இது மாறும்.நாளை நான் அரசனாகலாம்.நீ வேலைக்காரன் ஆகலாம்.எதுவும் நிரந்தரமில்லை..எதுவும் நம் கையில் இல்லை" என்றபடியே பல்லக்கினைத் தூக்கினான்.

பரதனின் வார்த்தைகளைக் கேட்ட மன்னன் திகைத்தான்.பல்லக்கிலிருந்து இறங்கி, பரதனை பணிவுடன் வணங்கினான்.

"பித்தனைப் போலக் காணப்படும் நீங்கள் நிச்சயம் யோகியாகத்தான் இருக்க வேண்டும்.தயவு செய்து என் குற்றத்தை பொறுத்தருளவும்.என்னை மன்னித்து..ஞான உபதேசம் அருளுங்கள்"என்றான்.

பரதன் ,அரசனை உற்று நோக்கினான்.ஞானப்பிச்சை பெறத் தகுதியானது அரசர் மனம் என்பது புரிய அவருக்கு உபதேசங்கள் செய்தான்.
ஆதமாவிற்கும்..பரமாத்மாவிற்கும் உள்ள தொடர்பை விளக்கிக் கூறி,"ரஹூகுணா ..நிலையற்ற மனித வாழ்க்கையின் மீது ஆசை வைக்காதே!ஆசாபாசங்களை அறுத்தெறிந்து விடு.முதலும்..முடிவுமாகிய பகவானின் திருவடிகளை பற்றிக்கொள்.முக்தி அடைவாய்"ஏன்று சொல்லி விட்டுப் போகத் தொடங்கினான்.

பரதனுக்கு சுமதி என்றொரு மகன் இருந்தான். பரதனின் வம்சம் அவன் மூலம் தழைத்தது.சுமதியின் மகன் தேவாசித்து..அவனது மகன் தேவத்திமுகன் என்று தலைமுறை தலைமுறையாக செழுத்து பரவியது"என்று சொல்லி நிறுந்தினார் சுக மகரிஷி.

பரீட்சித் கேட்டான் , "பிரசேதஸர்களின் புதல்வனாக தட்சன் மீண்டும் பிறந்தான் என்றீர்களே..அவன் என்ன ஆனான்? என்ன செய்தான்?"

சுகர் பிரம்ம ரிஷி "மறுபடி பிறந்த தட்சன்..மீண்டும் ஏதாவது பிரச்னை செய்திருப்பானோ...எனும் ஆர்வத்தில் கேட்கிறாயா?இல்லை..அப்படி நடைபெறவில்லை.ஆனால், நாரதர்தான் தட்சனின்  காரியத்துக்கு இடையூறு செய்து சாபத்தை வாங்கிக் கட்டிக் கொண்டார்.அதைச் சொல்கிறேன்..கேள்" எனக் கதையைத் தொடர்ந்தார். 

Thursday, July 30, 2020

9 -ருத்ரகீதம்

பிருதுவிற்குப் பிறகு அவன் மகன் விஜிதாஸ்வன் பட்டத்திற்கு வந்தான்.அவன் தன் சகோதரர்களான தன்வகேசன்,திரவிணன்,ஹர்யக்ஷன்,விருகன் என்னும் நால்வருக்கும் நான்கு திசைகளை பங்கிட்டுக் கொடுத்து பூவுலகை ஆண்டு வந்தான்.

பின் விஜிதாஸ்வன் மகன் தானன் பட்டத்துக்கு வந்தான்.இவனுக்குப் பிறகு அவிர்த்தானனின் ஆறு மகன்களில் ஒருவரான பர்ஹிஷத் அரசன் ஆனான்.

பர்ஹிஷத் சமுத்திர ராஜனின் மகளாகிய சதக்ருசி என்பவளை மணம் செய்து கொண்டான்.இவர்களுக்கு பத்து பிள்ளைகள் பிறந்தனர்.அவர்களில் பிரசேதஸர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

பர்ஹிஷத் தன் பத்து மகன்களையும் அழைத்து "எல்லோரும் மக்களைப் பெற்று வம்சத்தைப் பெருக்குங்கள்"என்று சொல்ல அவர்கள் இல்லறத்தைத் தொடங்குமுன் இறைவனைத் துதித்து அவன் அருளினைப் பெற ஆசைப்பட்டனர்.

அனைவரும் தவம் செய்ய ஒரு சிறந்த இடத்தைத் தேடிக் கொண்டு புறப்பட்டார்கள்.ஓரிடத்தில் அற்புதபான ஏரி ஒன்றினைக் கண்டார்கள்.ஏரியை நெருங்கிய போது அங்கே இனிமையாக இசை ஒலித்துக் கொண்டிருந்தது.ஏராளமான கந்தர்வர்கள் பலவகையான வாத்தியங்களை இசைத்துக் கொண்டு கானம் பாடிக் கொண்டிருந்தார்கள்.

இசையில் மனம் லயிக்க பிரசேதஸர்கள் நின்று கொண்டிருக்க குபீரெனஒரு ஒளி வெள்ளம் ஏரிக்குள்ளிருந்து வெளிப்பட்டது.முக்கண்ணனாகிய பரமசிவன் ஏரிக்குள்ளிருந்து வெளியே வந்து பிரசேதஸர்களை நெருங்கினார்.

"பிரசேதஸர்களே நீங்கள் ஹரியின் பக்தர்கள் என்பதை நான் அறிவேன்.எனவே பகவான் விஷ்ணுவை பூஜிக்க உங்களுக்கு ஒரு ஸ்தோத்திரத்தை உபதேசிக்கிறேன்.அதைச் சொல்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் உண்டாகி அவர்களின் தூய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்..."எனச் சொன்ன விஷ்ணுவின் போற்றித் துதிக்கும் "ருத்ரகீதத்தை"உபதேசித்தார்.

"நான் விஷ்ணுவைப் பற்றிப் பாடியதால் "ருத்ரகீதம்" என வழங்கப்படும் இந்த யோகாதேசத்தை பகவானே சிருஷ்டி தொழிலுக்கு உதவியாக எனக்கும், பிரம்மாவிற்கும் போதித்தார்.இதை விடியலில் ஜெபிப்பவர்களுக்கு எல்லா பாவங்களும் விலகும்.நீங்களும் பயபக்தியுடன் ஜெபம் செய்யுங்கள்.உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்' என்று சொல்லி மறைந்தார்.

பிரசேதஸர்கள் இந்த யோகாதேசத்தை நீரில் நின்றபடிபதினாறாயிரம் ஆண்டுகள் தூய மனத்துடன் ஜெபித்தனர்.அவர்களின் உறுதியான பக்தியினைக் கண்டு மகிழ்ந்த மகாவிஷ்ணு கருடன் மீதேறி அங்கு வந்து அவர்களுக்கு தரிசனம் தந்தார். 

"பிரசேதஸர்களே! சகோதரர்கள் பத்து பேரும் ஒற்றுமையாக, மன உறுதியுடன் செய்த தவத்தைப் பாராட்டுகின்றேன்.சிவன் உங்களுக்கு உபதேசித்த ருத்ரகீதத்தை ஜெபிப்பதால் தூய உள்ளத்தையும், விரும்பியதை அடையவும் செய்யலாம்"என்று கூறினார்.

பின் பிரசேதஸர்களிடம் கண்டு எனும் முனிவருக்கும், ஒரு தேவலோக மங்கைக்கும் பிறந்தவர் பிரம்மலோசா.அவளின் தாய் குழந்தை பிறந்ததும் கைவிட்டு விஷ்ணுலகம் சென்றுவிட்டாள்.அன்புடன் மரங்களின் தேவதைகள்தான் பிரம்மலேசாவை எடுத்து "மாரிஷை" எனப் பெயர் சூட்டி வளர்த்தனர்.அந்த குழந்தையின் அழகைக் கண்டு மகிழ்ந்த சந்திரன்..அவள் உணபதற்காக அமிர்தத்தைக் கொடுத்தான்.நீங்கள் பேரழகியான அவளை மணந்து கொள்ளுங்கள்.அவள் மூலம் உங்களுக்கு பிரம்மதேவனைப் போன்ற மகன் பிறப்பான்.அவனால் உங்க வம்சம் தழைக்கும்.நீங்கள் நெடுங்கால, பூவுலகை ஆண்டு அதன் பின்னர் என்னை அவந்து அடைவீர்கள்" என அருள் புரிந்தார்.

பகவான் சொன்னபடியே..பிரசேதஸர்கள் மாரிஷையை மணந்தார்.அவர்களுக்கு தட்சன் எனும் மகன் பிறந்தான்.முன்பு சதிதேவியின்
தகப்பனாக இருந்து ருத்னனால் கொல்லப்பட்ட அதே தட்சன்தான்.இப்போதும் தட்சனாகவே பிறந்திருந்தான்.

பிரசேதஸர்கள் பின் பல ஆண்டுகள் ஆட்சி புரிந்து பின் நாரதரிடம் உபதேசம் பெற்று, பகவானைத் துதித்து தவம் இருந்து அவரது திருவடியை அடைந்தனர்."என்று பரீட்சித்துக்கு சொல்லி முடித்த சுக மகரிஷி"மன்னனே! சுவாயம்புவ மனுவின் மகன்களில் ஒருவனான.உத்தான் பாதனின் வம்சத்தைப் பற்ரிக் கூறினேன்.அடுத்து உத்தான பாதனின் சகோதரனான பிரியவரதனின் வம்சத்தைப் பற்றியும் கூறுகிறேன் கேள்" என சொல்ல ஆரம்பித்தார்.

"சுவாயம்புவ மனுவின் மூத்த மகனான பிரியவரதனுக்கு உலக இன்பங்களில் நாட்டமில்லை.பகவானின் பரமபக்தனான அவன்..தந்தை ராஜ்ஜியத்தைக் கொடுத்தும் ஏற்றுக் கொள்ள மறுத்து, எப்போதும் கடவுளை துதித்து வழிபடுவதையே வாழ்க்கையாகக் கழித்தான்.

ஒருமுறை பிரம்மன் பிரியவரதனை அழைத்து "உலக இன்பங்களைத் துறந்து இந்திரியங்களை வென்ற நீ இல்லறத்தில் ஈடுபட்டால் பக்தி குறைந்துவிடும் என எண்ணுகின்றாய்.அது தவறு.இல்லறத்தில் இருப்பது துறவறத்தைக் காட்டிலும் மேலானது.இல்லறத்தில் இருந்து கொண்டு மனதில் பற்றில்லாதவனாக இருந்தால், கடவுள் சிந்தனை எப்போதும் இருக்கும்.எனவே திருமணம் செய்து கொண்டு வம்சத்தை விருத்தி செய்" என்று கூறினார்.

பிரம்மாவின் புத்திமதியின்படி பிரியவரதன் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தான்.அவனுக்கு தேவலோகச் சிற்பியான விஷ்வகர்மாவின் மகளான பர்ஹிஸ்மதியை மனைவியாக நிச்சயித்து மணம் முடித்தனர்.

அவர்களுக்கு..ஊர்ஜஸ்மதி என்ற பெண்ணும் பத்து பிள்ளைகளும் பிறந்தனர்.இது தவிர பிரியவரதன் இரண்டாவதாக மணந்து கொண்ட மனைவியின் மூலம் மேலும் மூன்று பிள்ளைகள் பிறந்தனர்.

பிரியவரதனின் மகளான ஊர்ஜஸ்மதி ,அவர்களின் குலகுருவான சுக்ராச்சாரியாரை மணந்து கொண்டு தேவயானி எனும் மகளைப் பெற்றாள்.

பிரியவரதனின் பிள்ளைகளில் மூவர் ரிஷிகளாகிவிட மற்றவர்கள் தந்தை பிரித்துக் கொடுத்த இடங்களை அரசாண்டனர்.

பிரியவரதன் இறுதியாக பகவானை நோக்கி தவமிருந்து முக்தியடைந்தான்.  

பிரியவரதனின் மகன்களில் ஒருவனான ஆக்னீதரன் எனபவன் ஜம்பூத்வீபத்தை ஆண்டு வந்தான்.இவன் தனக்கு நற்குணங்கள் கொண்ட மகன் ஒருவன் பிறக்க வேண்டும் என பிரம்மனை நோக்கி தவமிருந்தான்.

பிரம்மா, "பூர்வசித்தி" என்ற தேவலோக மங்கையை ஆக்னீதரன் முன் அனுப்பி வைத்தார்.அவள் கால் சதங்கை ஒலி கேட்டு தவத்தில் இருந்த ஆக்னீதரன் கண் விழித்துப் பார்த்தான்.அவளைக் கண்டதும் காதல் கொண்டான்.பின், அவளை மணந்து சந்தோஷமாக குடும்பம் நடத்தினான்..

அவர்களுக்கு ஒன்பது பிள்ளைகள் பிறந்தனர்.ஆக்னீதரன் தனது ராஜ்ஜியத்தை ஒன்பது பகுதிகளாகப் பிரித்து ஒன்பது மகன்களையும் அரசனாக்கினான்.

கடமை முடிந்ததும் பூர்வசித்தி விண்ணுலகம் செல்ல.அவளின் பிரிவினைத் தாங்க முடியாத ஆக்னிதரனும் இறந்தான்.ஆக்னீதரனின் ஒன்பது பிள்ளைகளும் மேரு பர்வதனின் ஒன்பது மகள்களை மணந்தனர்.

ஆக்னீதரனின் முதல் மகனான நாபி ,மேருபர்வதனின் மகள் மேருதேவியை மணந்து கொண்டான்.இவர்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை எனும் குறை இருந்து வந்தது.

பகவான் விஷ்ணுவை பிரார்த்தித்துஇருவரும் யாகங்கள் செய்தார்கள்.இதனால் மனம் மகிழ்ந்த திருமால், யாக குண்டத்தில் தோன்றினார்.யாகத்தை நடத்தி வைத்த முனிவர்கள், நாராயணனை வணங்கித் துதித்தார்கள்.அவர்கள் இறைவனிடம், "பகவானே!எங்களது மன்னன் நாபிக்கு தங்களைப் போன்ற மகன் பிறக்க வேண்டும்"என வேண்டினர்.

"நாபிக்கு நானே மகனாகப் பிறப்பேன்" என அருள்பாலித்து மறைந்தார் திருமால்.

பகவானின் வாக்குப்படி மேருதேவி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.குழந்தைக்கு ரிஷபன் எனப் பெயரிட்டனர்.ரிஷபன் வளர்ந்த பின் அரசாட்சியை ஏற்றுக் கொண்டான்.அவன் இறைவனின் அம்சம் ஆனதால் தேசம் சுபிட்சமாக இருந்தது.அவன் புகழ் எங்கும் பரவியது.

மூவுலகும் ரிஷபனைப் பாராட்டியதால் இந்திரன் அவன் மீது பொறாமை கொண்டு அவனது நாட்டில் மழை பெய்யாதபடி செய்தான்.இதை அறிந்த ரிஷபன் தன் சக்தியால் மழையைப் பொழியச் செய்து இந்திரனின் கர்வத்தை அடக்கினான்.

பின் இந்திரன் ,ரிஷபனிடம் மன்னிப்புக் கேட்டு,தன் மகள் ஜயந்தியை அவனுக்கு மணமுடித்தார்.இவர்களுக்கு நூறு பிள்ளைகள் பிறந்தனர்.அவர்களில் மூத்தவன் பரதன்.அவன் பருவம் அடைந்ததும் அவனிடம் அரசை ஒப்படைத்துவிட்டு  ரிஷபன் காட்டுக்குச் சென்று துறவு மேற்கொண்டு முக்தியடைந்தான்.

பரதன் ஆசாபாசங்களில் சிக்கிக் கொண்டான்.அது அவனது பிறவியை  ஆட்டிப்படைத்தது.ஒரு விலங்கின் மீது கொண்ட பாசத்தால் அது அவனை அலைக்கழித்தது,

  


Wednesday, July 29, 2020

8 - இந்திரன் திருடிச் சென்ற குதிரை

துருவனுக்குப் பிறகு அரசாண்ட அவன் மகன் உத்கலன் ஒரு துறவிபோல வாழ்க்கை நடத்தினான்.தியானத்திலேயே காலத்தைக் கழித்தான்.அரச பரிபாலனம் ஸ்தம்பித்துப் போனது.

உத்கலனுக்கு பதிலாக மற்றொரு மனைவியினான பிரமியின் மகன் வத்சரன் மன்னனாக்கப்பட்டான்.அவன் சுவிதி என்பவளை மணந்து வம்சத்தை விருத்தி செய்தான்.

வத்சரனுக்குப்பின், புஷ்பார்ணன்,வியுஷ்டன்,சர்வட்ஹேஜன்,சக்ஷூஸ்,உல்முகன்,அங்கன் ஆகியவர்கள் அரசாண்டனர்.

அங்கன் அரசாண்டபோது ஒரு அசுவமேதயாகம் செய்தார்.ஆனால் யாகத்தில் அளிக்கப்பட்ட அவிர்பாகத்தை பெற்றுக் கொள்ள தேவர்கள் யாரும் வரவில்லை.அதனால் அங்கன் வேதனைப்பட்டான்..

"எக்குறையும் இல்லமல்தானே யாகம் நடத்தினேன்.அப்படியிருக்கையில் தேவர்கள் ஏன் அவிர்பாகம் பெற்றுக் கொள்ளவில்லை.நான் என்ன தவறிழைத்தேன்' என வருந்தினான்.

அப்போது அங்கு வந்த மகரிஷி ஒருவர்,"மன்னா..இப்பிறவியில் நீ எந்தத் தவறும் செய்யவில்லை .யாகத்திலும் எந்தக் குறையும் இல்லை.ஆனால் முன்ஜன்மத்தில் நீ செய்த பாவத்தின் விளைவாக இப்பிறவியில் உனக்குப் பிள்ளைகள் பிறக்கவில்லை.அப்படி உனக்கு சந்ததி இல்லாததால்தான் தேவர்கள் அவிர்பாகம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்" என்றார்.

இதனால் மனம் கலங்கிய அங்கன்'இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?" என்றான்.

"முதலில் நீ உன் வம்ச விருத்திக்காக புத்திரகாமேஷ்டி யாகம் செய்.அதன் பலனாக சந்ததி பெருகும்.அதன்பிறகு நீ யாகத்தைச் செய்.தேவர்கள் வந்து அவிர்பாகத்தை ஏற்றுக் கொள்வார்கள் "என்றார்.

அங்கன் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தான்.அந்த யாகத்தின் போது, யாக குண்டலத்திலிருந்து கையில் தங்கப் பாத்திரத்துடன் ஒரு தேவ புருஷன் வெளிப்பட்டு அங்கனிடம் அப்பாத்திரத்தைக் கொடுத்து, "இந்தப் பாத்திரத்திலிருக்கும் பாயசத்தை உன் மனைவிக்குக் கொடு"எனச் சொல்லி மறைந்தான்.

பாயசத்தைப் பருகிய அங்கனின் மனைவி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றாள்.

அக்குழந்தைக்கு "வேனன்" எனப்  பெயர் சூட்டி பாசத்துடன் வளர்த்தான் அங்கன்.ஆனால், அக்குழந்தை மிகவும் கொடியவனாகவும், கொடுமைக்காரனாகவும் வளர்ந்தது.

சிறுவயதிலேயே மிருகங்களை சித்ரவதை செய்து கொல்வதும், சக சிறுவர்களை வதைப்பதும், குழந்தைகளின் கழுத்தைத் திருகிக் கொல்வதுமாக பல கொடூரச் செயல்களைச் செய்தான்.

அங்கன் அவனைத் திருத்த எவ்வளவோ முயன்றும் அவன் திருந்தவில்லை.அதனால் விரக்தியடைந்த அங்கன் யாரிடமும் சொல்லாமல் ராஜ்ஜியத்தைத் துறந்து கானகத்திற்குச் சென்று விட்டான்.

அரசன் காணாமல் போனதை அறிந்த மந்திரிப்பிரதானிகள் அதிர்ந்து போனார்கள்.

அரசன் இல்லா ராஜ்ஜியம் அபாயகரமானது.தீயவர்கள் கட்டுக்கடங்காமல் வளர்ந்து அக்கிரமம் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.அப்பாவி மக்கள் இவர்களிடம் சிக்கிக் கடும் துன்பம் அடைவார்கள்.எதிரி நாட்டு அரசர்களும் படையெடுத்து வந்து ராஜ்ஜியத்தை அபகரிக்க முயல்வார்கள்.

இதையெல்லாம் எண்ணிப் பார்த்த அமைச்சர்கள், தீயவன் எனத் தெரிந்தும் வேறு வழியில்லாமல் மகன் வேனனை அரசனாக்கினார்கள்.ஆனாலும்..அவன் அட்டகாசம் மேலும் அதிகரித்தது.அரசன் என்பதால் தானும் கடவுள் போல பாவித்துக் கொண்டான்.

நாட்டில் யாகம், ஹோமம்,தானம், தவம் எதுவும் நடைபெறக்கூடாது என கட்டளையிட்டான்.அதையும் மீறி செய்ய முறையிட்ட ரிஷிகளையும்,முனிவர்களையும் சிறையில் அடைத்து சித்திரவதைப் படுத்தினான்.அவர்களைக் கொன்றான்.

இதனால் மகரிஷிகள் பதறினர்.அனைவரும் அவனிடம் சென்று , இறைவனைத் துதிப்பதற்கும், யாகங்கள் நடததவும் அனுமதியளிக்கும்படி வேண்டினர்.

இவர்கள் சக்தியை அறியாத வேனன் ஆணவமாக சிரித்தான்.பின், "மன்னனும் கடவுளின் அம்சம்.அதனால் நானே இனி கடவுள்.ஆகவே எனக்குக் கோயில் கட்டுங்கள்.மற்ற கோயில்களை இடியுங்கள்.என்னை ஆராதித்தே வேள்விகளும்,வழிபாடுகளும் நடக்கட்டடும்."என்றான்.

முன்பு அங்கன் ராஜ்ஜியத்தைத் துறந்து சென்றபோது அமைச்சர்கள் எப்படி பயந்தனரோஅப்படி இப்போதும் பயந்தனர்.

வேனன் இறந்து போனபின்னர்,மீண்டும் ஆள அரசன் இல்லாததால் நாட்டில் அதர்மம் தலைவிரித்தாடியது.கொலையும், கொள்ளையும் நடைபெற்றன.மக்கள் துன்பத்தில் ஆழ்ந்தனர்.

இதனால் ரிஷிகள் ஒரு முடிவிற்கு வந்தனர்.வேனனின் வம்சம் அவனுடன் முடிந்து போகாமல் தொடர தீர்மானித்தனர்.

இறந்துபோன வேனனின் தொடையைக் கடைந்தார்கள்.அதிலிருந்து கோரமான உருவமுடைய ஒருவன் தோன்றினான்.அவனால் நாட்டுக்கு நன்மை ஏற்படாது என உணர்ந்த முனிவர்கள் அவனை "விலகி இரு" என்றனர்.அவன் வம்சத்தில் வந்தவர்கள் நிஷாதர்கள் என்று அழைக்கப்பட்ட வேடர்கள் ஆவர்.இவர்கள் ராஜ்ஜியத்தைவிட்டு விலகி காட்டுக்குள் இருந்து கொண்டனர்.

பின் முனிவர்கள் வேனனின் புஜங்களைக் கடைய,அதிலிருந்து ஒரு ஆணும்,ஒரு பெண்ணும் தோன்றினர்.அவர்கள் மகாவிஷ்ணுவின் அம்சமாகத் தோன்றியவர்கள் என்பதால் ஆணுக்கு பிருது என்றூம் பெண்ணுக்கு அர்ச்சி என்றும் பெயர் சூட்டினார்கள்.

பின்னர், பிருதுவிற்கு அர்ச்சியை திரும்ணம் செய்து வைத்தனர்.வானவர்கள் பூமாரி பொழிய,கந்தர்வர்கள் கானம் பாட,அப்சரஸ்கள் நடனமாட, தேவர்கள் வெகுமதிகளைக் கொணர்ந்து குவித்தனர்.

பிருது அனைவருக்கும் நன்றி கூறி வணங்கி நாட்டை ஆளத் தொடங்கினார்கள்.

ஆனால் நாட்டில் பசியும் பட்டினியும் ,பஞ்சமும் என மக்கள் துன்பப்பட்டுக்கொண்டுதான் இருந்தனர்.பூமியில் விளைச்சலே இல்லை.

இதைக் கண்டு மனம் வருந்திய பிருது..அதற்கானக் காரணத்தை ஆராய்ந்த போது, பூமாதேவியே காரணம் என அறிந்தான்.அனைத்து விதமான தானியங்களையும்,விதைகளையும் தனக்கெனவே வைத்துக் கொண்டதால்தான் பூமியில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது என அறிந்து ஆத்திரம் அடைந்தான்.

பூமாதேவியைத் தண்டிக்க வில்லில் அம்பைத் தொடுத்து தாக்க முற்பட்டான்.
பூமாதேவி நடுக்கத்துடன் ஒரு பசுவாக மாறி ஓடத் தொடங்கினாள்.
பிருது அவளைத் துரத்திப் பிடித்தான்.

பூமாதேவி பயத்துடன் "பிருது மன்னனே! ஒரு பெண்ணைப் போய்க் கொல்ல நினைக்கின்றாயே?" என்றாள்.

"மக்களுக்கு கெடுதல் நினைப்பவர்களை தண்டிப்பது மன்னனின் கடமை.யாகங்கள் செய்யப்படும் போது அளிக்கப்படும் அவிர்பாகத்தைப்  பெற்றுக் கொண்டு பிரம்மன் அளித்த தானியவகைகளைத் தராமல் பதுக்கி வைத்துக் கொள்கிறாயே..அது நியாயமா? ஏன் இப்படி மக்களை வதைக்கிறாய்" என்றான் பிருது.

முன்பு வராக அவதாரம் எடுத்து தன்னைக் காத்த மகாவிஷ்ணுவின் அம்சமே பிருது மன்னன் என்பதை உணர்ந்த பூமாதேவி பண்புடன் கூறினாள்.

"மன்னனே! பூமியில் நீண்ட நாட்களாக பூஜைகள்,யாகங்கள்நடைபெறாததால் விளைச்சலை வெளியிடாது அடக்கிக் கொண்டேன்.நெடுநாட்களாக அவை எனக்குள் அடங்கிவிட்டதால் மொத்தமும் ஜீரணம் ஆகிவிட்டது.பகவான் அம்சமாகிய உன்னால் முடிந்தால் அவற்றைப் பெற்றுக்கொள்"

பிருது சில வினாடிகள் யோசித்தான்.பின், தன் முன்னோரான சுவாயம்புவ மனுவை கன்றாக்கி, தன்னையே மாடு கறப்பவனாக ஆக்கிக் கொண்டு பூமியாகிய பசுவிலிருந்து  புல்,பூண்டு,மூலிகைகள்,தானியங்கள்,விதைகள் போன்ற மக்களுக்குத் தேவையான அனைத்து விளைச்சலையும் கறந்து கொண்டான்.

பிருதுவைப் போலவே மற்ற தேவர்களும்,முனிவர்களும், ரிஷிகளும் கூட பூமாதேவியிடமிருந்து தங்களுக்குத் தேவையான ஞானத்தையும்,அமிர்தத்தையும்,மது போன்றவற்றையும் கறந்து கொண்டனர்.

அரசன் பிருது பூமியை தனது மகளாகவே ஏற்றுக் கொண்டதால், பூமிக்கு பிருத்வி என்ற பெயர் ஏற்பட்டது.ம லைகளையும்,சிகரங்களையும் தகர்த்து சமமாக்கி..நிலங்களைச் சமப்படுத்தி பயிர்கள் செழிப்பாக வளரச் செய்தான்.நாடு,நகரங்கள்,கிராமங்களை நிர்ணயித்தான்.குடிமக்கள் சுபிட்சமாக வாழுமாறு பார்த்துக் கொண்டான்.

இதனால் பிருது மன்னன் பூவுலகில் சக்ரவர்த்தியாக அசுவமேதயாகம் செய்ய தீர்மானித்தான்.நூறு அசுவமேதயாகம் செய்ய ஏற்பாடுகள் செய்தான்.அதற்கு மூவுலகில் இருந்து அந்தணர்களும்,ரிஷிகளும்,முனிவர்களும் வந்து குவிந்தனர்.யாகத்திற்கு பிரம்மா, விஷ்ணு,சிவன் என மும்மூர்த்திகளூம் வந்து கலந்து கொண்டனர்.ஒன்றன் பின் ஒன்றாக யாகங்கள் நடைபெற்று வந்தன.

தேவலோகத்தின் அதிபதியான இந்திரன் இதைக் கண்டு மனதிற்குள் பயந்தான்.அசுவமேதயாகங்கள் செய்து..பிருது தனது இந்திரப்பதவியை அடைந்து விடுவானோ என எண்ணி யாகம் நடைபெறாமல் இருக்க திட்டம்மிட்டான்.

யாகம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, யாருக்கும் தெரியாமல் யாகக்குதிரையைத் திருடிக் கொண்டு சென்று விட்டான்.இதைக் கண்ட அத்ரி மகரிஷி, பிருதுவின் மகனான விஜிதாஸ்வனிடம் ,குதிரையை மீட்டுக் கொண்டு வரச் சொல்லி அனுப்பினார்.

விஜிதாஸ்வனிடம் இருந்து தப்ப, இந்திரன் துறவி வேடமிட்டு ஆகாயத்தில் சஞ்சரித்தான்.துறவி வேடத்தில் இருப்பது இந்திரனே என் அறிந்த விஜிதாஸ்வன் அவனைத் துரத்திப் பிடித்தான்.

சிக்கிக் கொண்ட இந்திரன், அப்போதைக்கு குதிரையை விட்டுச் சென்றான்.ஆனால் முயற்சியைக் கைவிடாது மீண்டும் திருடிச் சென்றான்.

இதனால் பிருது கோபமடைந்தான்.தானே சென்று இந்திரனைக் கொன்று குதிரையை மீட்டு வருவதாகக் கூறினான்.

ரிஷிகள் அவனை சமாதானப் படுத்தினர்.

"மன்னா! யாகத்துக்கு தீட்சை எடுத்த நீ இங்கிருந்து போகக் கூடாது.அதுமட்டுமின்றி, யாகப்பசுவைத் தவிர வேறு எந்த ஜீவனையும் கொல்லவும் கூடாது.நாங்கள் மந்திரங்கள் சொல்லி,இந்திரனை இங்கு வரவழைத்து யாககுண்டத்தில் பலியாக்கி விடுகிறோம்" என்றனர்.

அப்போது பிரம்மன் அவர்களைத் தடுத்தான்.

'யாகங்களில் அவிர்பாகம் பெற்றுக் கொள்ளும் தேவர்களின் அதிபதியான இந்திரனைக் கொல்வது சரியல்ல.தொண்ணூற்றி ஒன்பது யாகங்களை செய்து பிருது இந்திரனைவிடப் புகழ் பெற்று விட்டான்.எனவே அவன் நூறாவது யாகத்தைச் செய்ய வேண்டிய அவசியமில்லை"என்றான்.

பின் ,பிருதுவிடம் "மன்னனே! ..தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று எண்ணி பயத்தில் இந்திரன் இப்படி ஒரு காரியத்தை செய்து விட்டான்.நீயும் இந்திரனும் ..இருவருமே விஷ்ணுவின் அம்சம் கொண்டவர்கள்.எனவே இந்திரனை மன்னித்துவிடு"என்றனர்.

பின் பிருது தனது தொண்ணூற்று ஒன்பதாம் யாகத்தை மகாவிஷ்ணுவின் முன் பூர்த்தி செய்தான்ன்.அதற்கு இந்திரனும் வந்து வாழ்த்தினான்.மகாவிஷ்ணு, பிருதுவிடம்"வேண்டும் வரம் கேள்" என்றார்.

பிருது அவரை வணங்கி"பகவானே! எப்போதும் உம்மையே துதித்து..உங்களையேப் பாடி..உங்கள் புகழினைக் கேட்டு பரவசமாக வேண்டும்" என்றான்.

"அதன்படியே பக்திமானாகவே பிருது நீண்ட காலம் அரசாண்டான்.முதுமையில், தன் மகன்களிடம் அரசை ஒப்படைத்துவிட்டு கானகம் சென்றான்.அங்கு தவமிருந்து இறைவனடி சேற்ந்தான்"...என்று சுகர் மகரிஷி சொல்லக் கேட்டுக் கொண்டிருந்தான் பரீட்சித்.

"மகரிஷி..நான் எந்த ஜென்மத்தில் செய்த புண்ணிய இன்று உங்கள் திருவாய் மூலம் புண்ணியக் கதைகளைக் கேட்கும் பாக்கியம் பெற்றேன்.அந்த இறைவனுக்கும்,புண்ணிய சீலரான தங்களுக்கும் நன்றி.தொடர்ந்து சொல்லுங்கள்" என்றான்.

Tuesday, July 28, 2020

7 - துருவனின் கதை

பிரம்மனின் மகனான சுவாயம்புவ மனுவிற்கு மூன்று மகள்கள், இரண்டு மகன்கள்.மகன்கள் பெயர் பிரிய வரதன்,உத்தானபாதன்.

உத்தானபாதன் ,சுநீதி என்னும் பெண்ணை மணந்து அவர்களுக்கு துருவன் எனும் மகன் பிறந்தான்.உத்தானபாதன் ,சுருசி எனும் மற்றொரு பெண்ணைக் காதலித்து மணம் புரிந்தான்.

இரண்டாவது மனைவி சுருசியின் மீது மிகவும் மோகம் கொண்ட உத்தானபாதன், முதல் மனைவி சுநீதியை மறந்து போனான்.அவளை மறந்து சுருசியின் அந்தப்புரமே கதி எனக் கிடந்தான்.சுருசிக்கும் ஒரு ஆண் குழந்தைப் பிறந்தது.அதற்கு உத்தமன் எனப் பெயரிட்டு இருந்தரகள்.

குழந்தைகள் இருவரும் வளர்ந்து சிறுவர் ஆயினர்.

ஐந்து வயது துருவன்..தனது தந்தை தன்னைக் காண வராததால் அவரைத் தேடி சுருசியின் அந்தப்புரம் வந்தான்.அங்கு தனது தம்பியான உத்தமனோடு விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது உத்தமன் அங்கு அமர்ந்திருந்த தந்தையின் மடியில் அமர்ந்து கொள்ள,துருவன் தானும் தந்தையின் மடியில் அமர முயன்றான்.அப்போது அவனின் சிற்றன்னை சுருசி கோபத்துடன் துருவனைப் பிடித்துத் தள்ளினாள்.

பின் அவனிடம், "நீ மன்னனின் முதல் மகனாய் இருக்கலாம்.ஆனால், அதனாலேயே தந்தையின் மடியில் அமரும் உரிமையும், அரியாசனத்தில் ஏறும் தகுதியும் உனக்கு இருப்பதாக எண்ணிக் கொள்ளாதே!அந்த பாக்கியம் என் மகன் உத்தம னுக்கே! அடுத்த ஜென்மமாவது எனக்கு மகனாக பிறக்க வேண்டும் என தவம் செய்து இறைவனிடம் வரம் பெற்று வா" என்று  கூறி அவனைத் துரத்தி விட்டாள்.

சிற்றன்னையின் கடு மொழியால்  மனம் வேதனையடைந்த துருவன், கண்ணீருடன் வெளியேறினான்.இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த தந்தையின் உள்ளம் வேதனை அடைந்தாலும்..சுருசிக்கு பயந்து மௌனமாகிவிட்டான்.

துருவன் அழுதுக் கொண்டே தாயிடம் ஓடி வந்து அவள் மடியில் விழுந்து கதறினான்.சுநீதி பதறிப் போனாள்.துருவன் நடந்த விஷயங்களைக் கூறினான்.

சுநீதி மனம் உடைந்தாள்.கணவர் தன்னைப் புறக்கணித்ததுடன் தன் குழந்தையையும் புறக்கணிக்கிறாரே..அவனிடம் இப்படி நடந்து கொண்டுவிடடர்களே..என மனம் வருந்தி, பின் மகனிடம் கூறினாள்..

"துருவா..விதி நம்மை வஞ்சித்துவிட்டது.என் வயிற்றில் பிறந்ததால்தான் உன் தந்தையின் மடியில் உட்கார உனக்கு இடமில்லாது போய் விட்டது.ஆதரவற்ற நம்மை அந்த ஆண்டவன்தான் காக்க வேண்டும்.நீ பகவான் விஷ்ணுவைப் பிரார்த்தனை செய்..நல்லதே நடக்கும்" என்றாள்.

"அம்மா..நாராயணனை பிரார்த்தனை செய்தால், அவர் என்ன தருவார்?

"நீ வேண்டும் அனைத்தும் தருவார்.பிரம்மன் அவரை பூஜித்தே பிரம்ம பதவியினை அடைந்தார்.பாண்டவர்கள் தங்கள் ராஜ்ஜியத்தினைப் பெற்றனர்.நீ அரசப் பதவியை அடைய விரும்பினாலும் சரி..தேவலோகத்தையேக் கைப்பற்ற நினைத்தாலும் சரி..இறைவனை சரணடைந்தால் நடக்கும்"

தயைன் இந்த வார்த்தைகள் துருவனின் மனதில் ஆழமாகப் பதிய, தாயின் அனுமதியினைப் பெற்று தவம் செய்ய காட்டுக்குச் சென்றான்.

அப்போது திரிலோகசஞ்சாரியான நாரதர் அந்தப் பக்கம் வந்தார்.சிறுவன் ஒருவன் காட்டுப்பாதையில் பயமின்றி செல்வதைக் கண்டார்.அவனைத் தடுத்து நிறுத்தி, "பாலகனே! நீ யார்?கொடிய விலங்குகள் நடமாடும் இக்காட்டிற்குள் எதற்காக வந்தாய்?"என்றார்.

துருவன் அவரிடம், "நான் உத்தானபாதனின் மகன்.கடவுளைக் காண்பதற்காக தவம் இருக்க  செல்கிறேன்" என்றான்.

இத்தனை சிறு வயதில் தவம் செய்யப் போகிறானா இச்சிறுவன் என ஆச்சரியத்துடன் நாரதர், குழந்தை யார் பேசுவதையோக் கேட்டு அறியாமையால்  பேசுவதாக எண்ணி துருவனுக்கு புரியும்படியாக"குழந்தாய்!இறைவனைக் காண்பது என்பது அவ்வளவு எளிதல்ல.பெரியப் பெரிய முனிவர்களும், ரிஷிகளும் ஆண்டாண்டு காலங்களாக தவமிருந்தும் க்டவுளைக் காணமுடியாத நிலையில் இருக்கும்போது..உன்னால் எப்படி முடியும்? நால் சொல்வதைக் கேள்..நீ பெரியவன் ஆனதும் முயற்சி செய்..இப்போது திரும்பிப் போ" என்றார்.

ஆனால் துருவன் பின் வாங்கவில்லை."என்னால் முடியும்.நான் கண்டிப்பாக பகவானை சந்திப்பேன்.நாம் உண்மையான அன்புடன் கூப்பிட்டால், கண்டிப்பாக கடவுள் வருவார் என என் அம்மா சொல்லியிருக்கிறார்கள்"என்றான் துருவன்.

நாரதர் மேலும் தவமிருப்பதில் உள்ள கஷ்டங்களைச் சொல்லியும் சிறுவனின் மனவுறுதி தளரவில்லை.அவனின் நம்பிக்கையையும், திடமான எண்ணத்தையும் கண்டு அவனுக்கு உதவ அவர் தீர்மானித்தார்.

"குழந்தாய் உன் நம்பிக்கை எனக்கு திகைப்பூட்டுகிறது.மகிழ்ச்சியைத் தருகிறது.உனது முயற்சியில் நீ வெற்றி பெற வேண்டும் என நான் விரும்புகிறேன்."என்று கூறிய நாரதர் அவனுக்கு தவம் செய்யும் வழிமுறைகளைக் கூறினார்.பின்..

"துருவா! யமுனை நதிக்கரையில் மதுவனம் எனும் புண்ணியத்தலம் இருக்கிறது. நீ அங்கு சென்று உன் தவத்தை ஆரம்பி.ஸ்ரீஹரியை மனதில் நிறுத்தி தவம் செய்.இப்போது நான் சொல்லும்'ஓம் நமோ பகவதே வாசுதேவாயா" என்ற மகாமந்திரத்தை இடைவிடாமல் ஜெபித்து வா.பகவான் நாராயணன் கண்டிப்பாக உனக்கு தரிசனம் தருவார்"என ஆசிர்வதித்து அனுப்பினார்.

துருவன் மதுவனம்நோக்கிச் சென்றதும் நாரதர் துருவனின் தந்தை உத்தான பாதனிடம் சென்றார்.அங்கு அவன் துருவனை நினைத்து வருந்திக் கொண்டிருந்தான்.நாரதரைக் கண்டதும் வணங்கி தன் வேதனைகளைச் சொன்னான்.

"துருவனைப் பொறுத்தவரை ஒரு தகுதியில்லாத தந்தையாக நடந்து கொண்டு விட்டேன்.மனம் வெறுத்து அவன் காட்டுக்கு சென்று விட்டான்.கொடிய விலங்குகளால் ஆபத்து ஏற்படலாம்.எங்கு கஷ்டப்படுகிறானோ..அவன் உயிரோடு இருக்கிறானோ என்று கூட பயப்படுகிறேன்"

ஆதற்கு நாரதர், "உனது மகன் துருவன் யாராலும் சாதிக்க முடியாததை சாதிக்கப் பிறந்தவன்.அவன் கண்டிப்பாக கடவுளை தரிசித்து அவன் அருளைப் பெறுவான்.பெரும் புகழைப் பெறுவான்.மனம் வருந்தாதே" என்று கூறினார்.

துருவன் வருகையால் மதுவனம் பலமடங்கு பசுமையுடன் இருப்பது போலக் காட்சியளித்தது.பறவைகளின் இனிய ஒலியும்..மான்களின் துள்ளலுமாக ரம்யமாகக் காட்சியளித்தது.

துருவன் யமுனை நதிக்கரையில் நாரதர் உபதேசித்தபடி தீவிரமான தவத்தில் ஈடுபட்டான்.பகலில் மட்டும் சாப்பாடு..இரவில் உபவாசம் இருந்தான்.

அந்தப் பகல் உணவும் மூன்று நாட்களுக்கு ஒருமுறை விளாம்பழத்தினையும்,இலந்தம்பழத்தைனையும் மட்டுமே சாப்பிட்டு வந்தவன்...இரண்டாம் மாதம்..ஆறு நாட்களுக்கு ஒருமுறை புல்,சருகு, இலை மட்டுமே சாப்பிட்டான்.மூன்றாம் மாதம் ஒன்பது நாட்களுக்கு ஒருமுறை நீரை  மட்டுமே உணவாகக் கொண்டான்.நான்காம் மாதம் வெறும் காற்றினை உணவாகக் கொண்டான்.ஐந்தாம் மாதம் அதையும் நிறுத்தி கல் போல இறுகிப் போனான்.மகாவிஷ்ணுவை தியானித்து ஒற்றைக்காலில் நின்று அவன் செய்த தீவிர தவத்தால் பூமி நடுங்கியது.தேவர்கள் திணறினர்.தவத்தின் உக்கிரகத்தால் வெப்பம் சுட்டெரித்தது.அனைவரும் பயந்து விஷ்ணுவிடம் ஓடிச்சென்றனர்.

துருவனின் பெருமையை தேவர்கள் உணர வேண்டும் என காத்திருந்த பெருமாள் துருவனுக்கு முன் தோன்றினார்.

இடைவிடாது விஷ்ணுவை தியானித்துக் கொண்டிருந்தவன் அவர் நேரில் வந்ததை உணரவில்லை.

மகாவிஷ்ணு புன்னகையுடன் தன் கையிலிருந்த சங்கினால் துருவனின் கன்னத்தை வருடியபடியே"துருவா  கண்விழித்துப் பார்.உன் மகாவிஷ்ணு வந்திருக்கின்றேன்"என்றார்.

பகாவானின் இனிய குரலினைக் கேட்டு கண் விழித்த துருவன்..எதிரில் விஷ்ணுவைப் பார்த்து மெய் சிலிர்த்தான்..பலவித துதிப் பாடினான்."பகவானே என்றும் உம்மை மறக்கா வரம் வேண்டும்" என வேண்டினான்.

விஷ்ணுவும், "என் அன்பு பாலகனே! நீ அடைய விரும்புவதை நான் அறிவேன்! உன் தந்தை உத்தான பாதன் ராஜ்ஜியத்தை உன்னிடம் ஒப்படைத்துவிட்டு காட்டுக்குச் செல்லப் போகிறான்.நீ இந்த பூமியை நீதி தவறாது ஆண்டு வருவாயாக.பின்னர், விண்ணுலகில் அழிவில்லா நித்தியமான ஸ்தானத்தை அடைந்து சிறப்படைவாய்"என வரம் அளித்தார்.

துருவன் மனத்திருப்தியுடன் நாடு திரும்பினான்.அவன் இறைவனை நேரில் தரிசித்து வரும் செய்தி எங்கும் பரவியது.உத்தனபாதனும்,துருவனின் தாயும், சிற்றன்னையும் மற்றும் நாட்டு மக்களும் ஒன்று திரண்டு   வரவேற்றனர்.சிற்றன்னை சுருசி மனம் திருந்தி துருவனை கொஞ்சி மகிழ்ந்தாள்.

தாய் சுநீதி, மகனைத் தழுவி ஆனந்தக் கண்ணீர் விட்டாள்.தந்தை உத்தான பாதன் துருவனுக்கு பட்டாபிஷேகம் செய்துவைத்தார்.பின் ராஜ்ஜியத்தை அவனிடம் ஒப்படைத்து விட்டு தவம் செய்ய காட்டுக்குப் போனான். 

துருவன் நாட்டை நல்ல முறையில் ஆண்டான்.சிம்சுமாரன் என்னும் பிரஜாபதியின் மகளான பிரமியை மணந்தான்.அவர்களுக்கு கல்பன்,வத்சரன் எனும் பிள்ளைகள் பிறந்தனர்.பின் வாயுமகளான 'இளை"என்பவளை மணந்து அவள் மூலம் உத்கலன் எனும் மகனையும் ஒரு பெண்ணையும் பெற்றான்.

துருவனின் தம்பியான உத்தமனோ,திருமணம் செய்து கொள்ளாமல், வேட்டையில் பிரியம் கொண்டவனாகத் திகழ்ந்தான்.ஒருநாள் இமயமலைச் சாரலில் வேட்டைக்குச் சென்றபோது ஒரு யட்சனால் கொல்லப்பட்டான்.உத்தமனைத் தேடிப்போன அவன் தாய் சுருசியும் மகன் இறந்த துக்கம் தாளாமல் மடிந்தாள்.

இதைக் கேள்விப்பட்ட துருவன்..விண்ணுலகில் யட்சர்களின் நகரமாகிய அளகாபுரியின் மேல் படையெடுத்துச் சென்று..யட்சர்களைப் போருக்கு அழைத்து தன்னை எதிர்த்தவர்களைக் கொன்றுக் குவித்தான்.

யட்சர்கள் மாயப் போரில் இறங்கி,மறைந்து அஸ்திரங்களை எய்தினர்.
துருவன் ,மகாவிஷ்ணுவைத் தியானித்து நாராயணாஸ்திரத்தைத் தொடுத்தான்.அதன் சக்தியால் மாயைகள் விலக ..யட்சர்கள் பலர் மடிந்தனர்.

அப்போது..துருவனின் பாட்டனார் மனு அங்கு தோன்றி போரை நிறுத்தும்படி துருவனுக்கு ஆணையிட்டார்.'உத்தமன் விதி முடிந்து விட்டது.அதனால் யாரோ ஒரு யட்சன் செய்த தவறுக்கு எல்லா யட்சர்களையும் கொல்வது நியாயமில்லை "என்றார்.

மனுவின் சொற்களைக் கேட்டு,துருவன் போரினை நிறுத்தினான்.யட்சர்களின் தலைவன் குபேரனுடன் சமாதானம் செய்து கொண்டான்.குபேரனும் மனம் மகிழ்ந்து "தங்களுக்கு வேண்டும் வரம் கேளுங்கள்"என்றான்.

துருவன் அவரிடம், "அற்ப சுகங்கள் ஏதும் வேண்டாம்.எல்லாக் காலங்களிலும் இறைவனை மறக்கா வரம்  வேண்டும்" என்றான்.

பின் துருவன் பூவுலகிற்கு  திரும்பி பல ஆண்டுகள் சிறப்பாக ஆட்சிச் செய்தான்.பின் தன் மகன் உத்கலனிடம் ராஜ்ஜியத்ததை  ஒப்படைத்துவிட்டு துறவறம் மேற்கொண்டான்.பத்ரிகாசிரமம் சென்று தவத்தில் மூழ்கினான்.

ஒருநாள் விண்ணூலகிலிருந்து தங்க விமானம் ஒன்று வந்தது.அதிலிருந்து இறங்கிய இருவர், "நாங்கள் பகவான் நாராயணனிடம் உங்களை அழைத்துச் செல்ல வந்திருக்கிறோம்" என்றனர் துருவனிடம்.துருவன் விமானத்தில் ஏறிக் கொள்ள, வானவர்கள் பூத்தூவி   ,கந்தர்வர்கள் கானம் பாடினர்.

விஷ்ணு அருள் பாலித்தபடி துருவன் வானமண்டலங்களைத் தாண்டி ஆகாயத்தில் நட்சத்திரமாக மாறிப் பிரகாசித்தான்...

துருவனின் கதையை சொல்லி முடித்தார் சுகப்பிரம்ம ரிஷி.பின் "பரீட்சித் மன்னா..துருவ சரித்திரன் அற்புதமானது.இதைக் கேட்டாலோ..பாராயணம் செய்தாலோ..மிகுந்த பலன்கள் உண்டாகும்.யார் யாருக்கு என்ன தேவையோ அது கிடைக்கும்.பாவங்களுக்கு விமோசனம் கிடைக்கும்.எப்போதும் கடவுள் பக்தி மனதில் நிறைந்திருக்கும்" என்றார்.

சிறிது நேரத்திற்குப் பின் "பரீட்சித் மன்னனே! இந்த துருவ நட்சத்திரம் போலவே அவனுக்குப் பின் வந்த பிருது சக்கரவர்த்தியின் வரலாறும் விசேஷமானது.அதையும் சொல்கிறேன்" எனத் தொடர்ந்தார்.

Monday, July 27, 2020

6- தாட்சாயணி

மரீசி,அத்ரி,அங்கிரஸ்,தட்சன் ஆகியோர் பிரம்மனின் புதல்வர்கள் என்பதால் பிரஜாபதிகள் என கௌரவிக்கப் பட்டனர்.பிரஜாபதியின் தலைவன் தட்சன் ஆவான்.

ஒருமுறை இவர்களனைவரும்கூடி சத்ரயாகம் ஒன்றை நடத்தினார்.அந்தயாகத்திற்கு அனைத்து தேவர்களும், முனிவர்களும்,ரிஷிகளும்,பிரம்மனும், சிவனும் வந்து அமர்ந்திருந்தனர்.அப்போது தட்சன் உள்ளே வந்தான்.அவனைக் கண்டதும் பிரம்மனும்,சிவனையும் தவிர மற்ற அனைவரும் எழுந்து நின்று மரியாதைத் தந்தனர்.
பிரம்மன் தனது தந்தை என்பதால் தட்சன் அதைப் பொருட்படுத்தவில்லை.ஆனால் மாப்பிள்ளையாகிய சிவன், மாமனாரும்,பிரஜாபதிகளின் தலைவனுமான தனக்கு மரியாதை செலுத்தாததை பெரும் அவமதிப்பாக எண்ணினான் தட்சன்.கட்டுக்கடங்காத கோபத்துடன் கூடியிருந்தவர்களிடம் பேச ஆரம்பித்தான்...

"தேவர்களே! முனிவர்களே! நான் ஒரு பெரிய தவறிழைத்து விட்டேன்.மான்குட்டியைப் போன்ற அழகியக் கண்களைக் கொண்ட எனது மகள் சதியை, குரங்கின் கண்களைக் கொண்ட இந்தச் சிவனுக்குத் திருமணம் செய்து வைத்தேனே...அது பெரிய தவறு.மாம்னாராகிய என்னை எழுந்து நின்று வரவேற்கவில்லை  .அனைவருக்கும் முன் என்னை அவமதித்துவிட்டான் இந்த ருத்ரன்.

சிவன் என்றால் மங்களம் என்று பொருளானால் இவன் செயல்கள் அனைத்தும் அமங்களம்தான்.சுடுகாட்டில் உலாவி..பிணங்களை எரித்த சாம்பலை உடலில் பூசிக் கொண்டு, சிரிப்பவனிடம் நல்ல குணங்கள் எங்கே இருக்கின்றப் போகிறது? பிரம்மன் சொல்லைக் கேட்டு இவனுக்கு என் மகளைத் திருமணம் செய்து வைத்ததால் எனக்கு இன்று இப்படி ஒரு அவமரியாதை ஏற்பட்டது.."எண்றவன்..மேலும் சொன்னான், "இனி இந்தச் சிவனுக்கு எந்த யாகத்திலும் அவிர்பாகம் கிடைக்காமல் போகட்டும்"என அனைவரும் திடுக்கிடும்படியாக சாபமிட்டான்.பின் அங்கிருந்து வெளியேறினான்.

இத்தனை நடந்தும் சிவபெருமான் புன்னகை மாறா முகத்துடன் அமைதியாய் இருந்தார்.ஆனால், சிவ கணங்களின் தலைவனான நந்தியால் இதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

"மும்மூர்த்திகளில் ஒருவரான இறைவனின் பெருமையை உணராது நடந்து கொண்டு விட்டான் தட்சன்.முழுமூடனான அவன் காமத்தில் உழலட்டும்.பண்பாடின்றி மிருகத்தனமாக நடந்து கொண்டவனுக்கு விரைவிலேயே ஆட்டுத்தலை அமையட்டும்"என்ற நந்தி அங்கிருந்த அந்தணர்கள் மீதும் சீறி விழுந்தான்.

"அறிவற்ற தட்சனை தடுத்து, புத்திக் கூறாது வாளாயிருந்த நீங்கள் அனைவரும் சிவனுக்குத் துரோகம் செய்தவர் ஆவீர்கள்.ஆதலால் நீங்கள் கற்ற வேதமும்,வித்தையும் உங்கள் மேன்மைநிலைக்கு உதவாமல் போகட்டும்.அதை விற்று,வயிற்றுப் பிழைப்பை நடத்தும் வாழ்க்கை அமையட்டும்.மண்ணாசை,பெண்ணாசை,பொன்னாசை என மூன்று ஆசைகளிலும் சிக்கி வதைப்பட்டு, யாசகம் பெற்று வாழும் கதியினை அடைவீர்களாக"என அந்தணர்களை சாபமிட்டான்..

நந்தி அந்தணர்களை சபித்ததால்..பிருகு மகரிஷி கோபம் கொண்டு அவரும் பதிலுக்கு சபித்தார்.

"ருத்ரனின் கணங்களும்,அவரை வணங்குபவர்களும்,அவரை பின்பற்றுபவர்களும் வேதத்தை அறியா மூடர்களாகட்டும்.சடைமுடி கொண்டு, சாம்பலை உடலில் பூசிக் கொண்டு, மது..மாமிசம் வைத்து பூஜிப்பவர்களாக..வேதத்துக்கு வினோத சடங்குகள் செய்யும் ஆண்டிகளாக திரியட்டும்" என்றார்.

யாகத்தில் நடந்த இந்நிகழ்ச்சிகள் சிவனை வருத்தம் கொள்ள வைத்தன.எதுவும் பேசாமல் அவர் கைலாயத்திற்குத் திரும்பினார்.

இதற்குப் பிறகு தட்சனுக்கும், சிவனுக்கும் விரோதம் வளர்ந்தது.தட்சன் "வாஜபேயம்" எனும் யாகத்தைச் செய்த போது சிவனை அழைக்கவுமில்லை, அவருக்கான அவிர்பாகமும் கொடுக்கவில்லை.

அடுத்ததாக "பிகஸ்பதிஸவம்" எனும் மிகப்பெரிய யாகத்தைத் தொடங்கினான் தட்சன்.சிவனைத் தவிர மற்ற அனைவருக்கும் அழைப்பினை  அனுப்பி, அந்த யாகத்தை மிகவும் பொருட்செலவுடன் ஆடம்பரமாக நடத்தத் திட்டமிட்டான்.

அந்த யாகத்தில் கலந்து கொள்வத்ற்காக தேவர்கள்,கந்தர்வர்கள்,பிரம்மா,ரிஷிகள்.தேவ ரிஷிகள் போன்ரவர்கள் சென்று கொண்டிருந்தனர்.இதைப் பார்த்துக் கொண்டிருந்த சதிதேவிக்கு தானும் தந்தையின் யாகத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.அதைத் தன் கணவரான சிவனிடம் கூறினாள்.

"என் தந்தை நடத்தும் யாகத்திற்கு மூவுலகிலிருந்தும் அனைவரும் கலந்து கொள்கின்றனர்.என் சகோதரிகளும்..அவர்களது கணவர்களும் வருவார்கள்.அவர்களை சந்திப்பதுடன், என் தாயையும் சந்திக்க ஆவலாய் உள்ளேன்.அவர் உங்களுக்கு அழைப்பு அனுப்பவில்லை என்பது உண்மைதான்.ஆனால், இம்மாதிரியான யாகங்களுக்கு அழைப்பேத் தேவையில்லை" என்றாள்

தட்சனின் ஆணவத்தை அறிந்த சிவபெருமான் சதியிடம் கூறினார்..

"தாட்சாயணி...எல்ளோருக்கும் அழைப்பு அனுப்பிய உன் தந்தை நமக்கு அனுப்பவில்லையெனில், நம்மை அவர் மதிக்கவில்லை என்றுதானே அர்த்தம்.மதியாதார் இல்லம் செல்வது நல்லதல்ல. நானின்றி நீ சென்றாலும் நீ தட்சனின் மகள் என்றாலும் என் மனைவி என்பதால் அவன் உன்னை மதிக்க
மாட்டான்.கடுஞ்சொற்களைக் கூறி அவமதிப்பான்.ஆகவே யாகத்திற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிடு" என்றார்.

கணவர் சொல்வதைக் கேட்கும் நிலையில் அவள் இல்லை.தாயையும், சகோதரிகளையும் காண வேண்டும் என்ற ஆவல்.அழுதால்..பிடிவாதம் பிடித்தாள்..சண்டையிட்டாள்..கடைசியில் யாகத்திற்கு சென்று வருவது என தீர்மானித்தாள்.

இனி அவளைத்  தடுக்க முடியாது என சிவபெருமான், சதிக்கு துணையாக நந்திதேவரையும் மற்ற கணங்களையும் உடன் அனுப்பி வைத்தார்.

சந்தோஷமாக புறப்பட்ட சதிதேவிக்கு தட்சனின் யாகக்கூடத்தில் சிவன் சொன்னது போலவே நடந்தது.

சதிதேவியை அனைவரும் வரவேற்று உபசரித்தாலும் தட்சன் மட்டும் அவளை புறக்கணித்து அவளை அவமதித்தான்.

தட்சனின் இச்செயலால் மனம் வருந்திய சதி யாகத்தில் தன் கணவருக்கு சேர வேண்டிய அவிர்பாகம் ஒதுக்கப்படாததைக் கண்டு மேலும் கொந்தளித்துப் போனாள்.

தட்சனிடம் சென்றவள்,"தந்தையே! நீங்கள் பெரும் தவறு செய்கிறீர்கள்.மும்மூர்த்திகளில் ஒருவரான என் கணவரை நீங்கள் யாகத்திற்கு அழைக்காதது மன்னிக்க முடியாதக் குற்றமாகும்.யாகத்தில் அவருக்கு சேர வேண்டிய அவிர்பாகத்தை தராதுவிட்டது முறையில்லை.இதனால் தீமைகள்தான் விளையும்.உங்கள் மனதை மாற்றிக் கொண்டு,எனக்கு மரியாதைக் கொடுத்து,அவருக்கான அவிர்பாகத்தை அளித்து நடந்த தவறுக்குப் பரிகாரத்தைத் தேடிக்கொள்ளுங்கள்"என்று அறிவுரை கூறினாள்.

"எனக்கு புத்தி சொல்ல உனக்கு என்ன தகுதியிருக்கிறது? நான் யார்..யாரை மதிக்கின்றேனோ அவர்களையெல்லாம் யாகத்துக்கு அழைத்துவிட்டேன்.புனிதமான இந்த யாகத்தில் கலந்து கொள்ள உன் கணவனுக்கு அருகதையில்லை.அவனது மனைவி நீ என்பதால் உனக்கும் அருகதையில்லை.பித்தனின் மனைவியான உன்னை யார் அழைத்தது? இங்கு ஏன் வந்தாய்?" என்றான் கோபத்துடன்.

தட்சன், சிவனை நிந்தித்து சதியை அவமதித்ததால் சில கணங்கள் கோப மடைந்தன.தட்சனைத் தாக்க முற்பட்டன.சதி அவர்களைத் தடுத்து..தட்சனைப் பார்த்து கூறலானாள்....

"அகம்பாவம் பிடித்த தட்சனே!சிவனை பகைப்பதன் மூலம் உன் அழிவினைத் தேடிக் கொள்கிறாய்.உனக்கு மகளாகப் பிறந்ததையே பாவமாகக் கருதுகிறேன் நான்.உனது ரத்த சம்பந்தத்தால் எற்பட்ட என் உடலையே நான் வெறுக்கிறேன்.இந்த உடல் இனி எனக்கு வேண்டாம் " என்றபடியே,வடக்கு நோக்கி அமர்ந்து யோகத்தில் மூழ்கினாள்.

மனதில் கணவரான ஈஸ்வரனைத் தியானித்தபடியே...தன்னைச் சுற்றி யோகத்தீயினை மூட்டிக் கொண்டாள்.அதில் தன் உடலை எரித்துக் கொண்டு சாம்பல் ஆனாள்.

சதியின் மரணத்தால் நிலைகுலைந்து போன பூதகணங்கள் எழுந்து தட்சனைத் தாக்கியும்,யாகத்தை அழிக்கவும் முயன்றனர்.

இதைக்கேட்ட பிருகு மகரிஷி பூதகணங்களிய வெல்ல,யாக குண்டத்தின் அக்னியில் இருந்து தேவ கணங்களை உண்டாக்கினார்.அந்தத் தேவகணங்கள். சிவ கணங்களுடன் சண்டையிட்டு அவர்களைத் தாக்கி விரட்டின.

யாகத்துக்கு வந்திருந்த அனைவரும் திகைத்து நிற்க, தன் கண்ணெதிரிலேயே மகள் சதி உயிர்விடத் தீர்மனைத்ததையும் தடுக்காத தட்சனை அனைவரும் நிந்தித்தனர்.கோப மூர்த்தியான ருத்ரன் என்ன செய்வாரோ என நடுங்கினர்.

ஆணவத்தின் உச்சியில் ஆட்டம் போடும் தட்சன்,நாசத்தை விரைவில் சந்திக்கப் போகிறான்"என எண்ணியவாறே நாரதர் கைலாயம் நோக்கி விரைந்தார்.

பனி மூடிக்கிடந்த கயிலையில் சிவபெருமான் கண்மூடி நிஷ்டையில் இருந்தார்.

நாரதர் அங்கு வந்து, "பரமேஸ்வரா! நடக்கக் கூடாதது நடந்து விட்டது.சதிதேவியார் யோகத்தீயில் தன் உயிரைப் போக்கிக் கொண்டு விட்டார்" என்றார்.

இதனிடையே தேவகணங்களுடன் போராடித் தோற்றுப் போன பூத கணங்களும் அங்கு வந்து நடந்ததைச் சொல்லின.

ஈஸ்வரனின் முகம் கோபத்தில் சிவந்தது.நெற்றிக்கண் திறந்தது.ஆவேசம் கொண்டவர் தன் சடைமுடியிலிருந்து ஒரு முடியைப் பிடுங்கிக் கீழே போட்டார்.அதிலிருந்து வீர இளைஞன் வீரபத்ரன் வெளிப்பட்டார்.

சடைமுடியும், மூன்று கண்களும், ஆயிரம் கைகளுடன் ஆஜானுபாகுவாக கழுத்தில் கபாலமாலை அணிந்து பார்க்கவே பயங்கரமாகக் காட்சியளித்தான்.

"இறைவா...நான் என்ன செய்ய வேண்டும்?" என்றான்.

"வீரபத்ரா...நம் படைகளுடன் நீ தட்சனின் யாகசாலைக்குப் போ.தட்சனைக் கொன்று அவன் யாகத்தை அழித்துவிட்டு வா" என்றார்.

சில பூதகணங்களுடன் புறப்பட்ட வீரபத்ரன், பெரும் சூறாவளியாய் தட்சனின் யாகசாலைக்குள் புகுந்தான்.பூத கணங்கள் ஆவேசத்துடன் யாக மண்டபத்தை இடித்து நொறுக்கி.. யாக குண்டத்தை உடைத்து மற்ற பொருள்களையையும் சின்னாபின்னமாக்கின.

வீரபத்ரன் தன்னைத் தாக்க முற்பட்ட தேவ கணங்களை ஆக்ரோசமாகத் தாக்கினான்.எதிர்த்தவர்களை நொறுக்கினான்.ஓட ஓட விரட்டினான்.சிவ கணங்களில் ஒருவனான மணிமான், பிருகு முனிவரின் தாடி, மீசையை பிடுங்கி எறிந்து தீயில் பொசுக்கினான்.தட்சன் சிவனை இகழ்ந்தபோது சிரித்த பூஷா என்பவரின் பற்களை   உடைத்து நொறுக்கினார் சண்டிகேஸ்வரர்."நந்திதேவர்" பகன் என்பவனின் கண்களைப் பிடுங்கி வீசினார்.தேவர்களும், பூதகணங்களின் தாக்குதலால் தப்பி ஓடினர்.

வீரபத்ரன், தட்சனை உதைத்துத் தள்ளி, வாளால் அவன் கழுத்தை வெட்ட, வாளோ மழுங்கியது.உடனே தட்சனை இழுத்துப் போய் யாகப் பசுக்களை  கொல்லும் பலிபீடத்துக்கு இழுத்துச் சென்று அவன் தலையை பீடத்தில் வைத்து ஆட்டை அறுப்பது போல அறுத்து தீயில் வீசினான்.அது பொசுங்கி சாம்பலானது.

இதைக் கண்ட பூத கணங்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.வெற்றியுடன் கயிலைத் திரும்பினர்.

சிவ கணங்களிலிருந்துதப்பியோடிய தேவர்கள், அலறி அடித்துக் கொண்டு பிரம்மலோகம் சென்று பிரம்மனிடம் நடந்ததைக் கூறினர்.

பிரம்மனும் வேதனையுடன், "தட்சன் சிவனை நிந்தித்தான்.அவருக்கானஅவிர்பாகம் கொடுக்காமல் போனதும் மன்னிக்க முடியாத செயல்களாகும்.நீங்களும் அங்கு சென்றதோடு இல்லாமல், பூர்த்தியாகாத யாகத்தில் கலந்து கொண்ட குற்றத்தினையும் புரிந்துள்ளீர்கள்.தன்னை அவமதித்ததுடன், தன் மனையையும் இறக்கக் காரணமாய் இருந்த தட்சன் மீது கோபத்தில் இருந்த சிவனின் கோபம் மூவுலகினையும் அழிக்கக்கூடியது.கோபம் கொள்வதுபோல..உடனேயே கோபம் தணிந்து சந்தோஷநிலை அடைபவரும் சிவனே.நீங்கள் அவரிடம் சரணடைந்தால்..காப்பவர் அவர்" என்றார்.

பிரம்மனின் சொற்படியே எல்லோரும் சிவனை தரிசிக்க சென்றனர்.

கயிலையில் ஒரு பெரிய ஆலமரத்தடியில் அமர்ந்திருந்தார் சிவன்.யோகிகள் அவரைச் சூழ்ந்து நிஷ்டையில் இருக்க, நாரதருக்கு பிரம்ம தத்துவத்தை உபதேசித்துக் கொண்டிருந்தார் ஈசன்.பிரம்மன் வருவதைக் கண்ட அவர் அவரை அன்புடன் வரவேற்றார்.

பிரம்மன், சிவனை நோக்கி,"விதியின் மாயையில் சிக்கியதால் தட்சன் அவிர்பாகம் தராது தவறிழைத்துவிட்டான்.எனவே அவனது தவறினை மன்னித்து அவனை உயிர்ப்பித்துத் தர வேண்டும்.யாகத்தை பூர்த்தி செய்ய அருளவேண்டும்" என வேண்டினார்.

"பிரம்மதேவரே! தட்சனின் ஆணவத்தை அழித்து அவனுக்கு பாடம் புகட்டவே நான் அவனைத் தண்டித்தேன்.இனி தங்களின் விருப்பப்படி அவனை உயிர்ப்பிக்கிறேன்.ஆனால் அவன் தலை பொசுங்கிவிட்டதால்,ஆட்டின் தலையினை அவனுக்குப் பொருத்துங்கள்.அதுபோல பகனுக்குக் கண்கள்,பூஷாவிற்கு பற்களும்..இன்னமும் யார் யாருக்கு என்ன அவயங்கள் இழந்தனரோ அவை திரும்பக் கிடைக்கும்.பிகுரு முனிவர்க்கு,ஆட்டின் தாடியு, மீசையும் முளைக்கும்" என்றார் ஈசன்.

சிவன் சொன்னபடி தட்சன் ஆட்டுத்தலையுடன் உயிர் பெற்று எழுந்தான்.சிவனிடம் மன்னிப்புக் கேட்டவன்"ஈஸ்வரா..நின்றுப் போன யாகத்தை தாங்கள் முன்னின்று நடத்தித் தர வேண்டும்"என வேண்டினான்.

தட்சனின் வேண்டுகோளினை ஏற்று சிவன் யாகசாலைக்கு வந்தார்திருமால் விஷ்ணுவும் வந்திருந்து அனைவரையும் ஆசிர்வதித்தார்.பின், யாகம் நல்லபடியாக முடிந்து அவரவர் இருப்பிடத்திற்குத் திருமிச் சென்றனர்.

தட்சன் மகளாக உயிர் நீத்த சதிதேவி, பின் இமவானுக்கும்,மேனாவிற்கும் மகளாகப் பிறந்து பார்வதியாக பரமேஸ்வரனை தவமிருந்து திருமணம் செய்து கொண்டாள்.அனைத்தும் சுபமாக முடிந்தது...என்று சொல்லி முடித்தார் சுகர் மகரிஷி.

பரமேஸ்வரனையும், பார்வதியையும் மனதிற்குள் வேண்டிக் கொண்டார் பரீட்சித்.பின் கேட்டார்,"சுவாயம்புவ மனுவின் ஐந்து மக்களில் மூன்று மகள்களைப் பற்றிக் கூறினீர்கள்..அவரது மகன்களைப் பற்றி ஏதும் சொல்லவில்லையே"

சுகர் மகரிஷி சொன்னார்.."அந்த மகன்களில் ஒருவனுக்குப் பிறந்த வாரிசு, பகவானின் அருளால் விண்ணுலகில் மிக அற்புதப் பதவியை அடைந்தான்.தட்சனால் அவனது மகள் சதிதேவி எவ்வளவு தவித்தாலோ,அதுபோல தந்தையால் புறக்கணிக்கப்பட்ட மனிதனின் கதை இது. அந்த மகன் சிறுவனாய் இருந்தபோது அவன் விரும்பியது தன் தந்தையின் மடியில் சிறிது இடம்" என்றவர் தொடர்ந்து அந்தக் கதையைக் கூறலானார்.     

Saturday, July 25, 2020

5 - துவார பாலகர்கள்



பிரம்மனின் புத்திரர்களான சனகாதி முனிவர்கள் நால்வரும் விண்வெளியில் சஞ்சரித்தபடியே வந்து கொண்டிருந்தனர். அவர்கள் வைகுண்டத்தைக் கடந்த போது, திருமாலை மகாலட்சுமியுடன் சந்திக்க எண்ணி வைகுண்டத்தில் இறங்கினார்கள்.

பூத்துக் காய்த்து குலுங்கும் செடி, கொடிகளுடன் வைகுண்டம் அழகாகக் காட்சி தந்தது.கந்தர்வர்கள் உச்சரிக்கும் பகவானின் நாமாவளிகள்,நாலு திசைகளிலும் காதுக்கு இனிமையாக ஒலித்துக் கொண்டிருந்தன.

சனகர்,சனந்தனர்,சனாதனர்,சனத் குமாரர் ஆகிய நான்கு முனிவர்களும் வைகுண்டத்தில் ஆறு தங்க வாசல்களையும் கடந்து ஏழாவது வாசலை நெருங்கினர்.

ஏழாவது வாசலில் ஜய,விஜயர்கள் எனும் இரு துவார பாலகர்கள் காவல் காத்தபடி நின்றிருந்தனர்.

முனிவர்கள், துவார பாலகர்களைக் கண்டுக் கொள்ளாமல் அவர்களைக் கடந்து உள்ளே செல்ல முயன்றனர்.

இதைக் கண்டு கோபம் கொண்ட ஜெய ,விஜயர்கள், முனிவர்களை உள்ளே செல்ல முடியாது தடுத்து நிறுத்தினர்.

இதனால் முனிவர்கள் கோபம் கொண்டு, "இறைவன் தன்னிடம் பக்தி செலுத்துபவர்களை எந்தத் தருணத்திலும் சந்திக்க மறுப்பதில்லை.ஒரு பக்தன் தன்னை நோக்கி ஒரு அடி வைத்தால்..கடவுள் அவனை நோக்கி பல அடிகள் நெருங்கி வருவார்.அப்படிப்பட்ட இறைவன் இருக்குமிடத்தில் வசிக்கத் தகுதியற்றவர்கள் நீங்கள்.அகங்காரம்,ஆணவம் போன்ற அற்பத்தனமான குணங்களைக் கொண்ட நீங்கள் ஆசாபாசங்கள் நிரம்பிய பூமியில் சென்று விழுவீர்களாக!" என்று சாபமிட்டனர்.

துவார பாலகார்கள் அதிர்த்து போய் முனிவர்கள்  பாதங்களில் விழுந்து வணங்கி, "அறியாமையாலும்,ஆணவத்தாலும் தவறிழைத்த எங்களை மன்னித்துவிடுங்கள்.உங்கள் சாபத்தை மனமார ஏற்றுக் கொள்கிறோம்.ஆனாலும் சிறிதளவாவது எங்களிடம் கருணை காட்டுங்கள்.உங்கள் சாபப்படி பூமியில் பிறந்து எத்தனைப் பிறவிகள் எடுத்தாலும் பகவானை மறக்காமலிருக்க அருள வேண்டும்" என வேண்டினர்.

அப்போது திருமால், மகாலட்சுமியுடன் அங்கு காட்சியளித்தார்.முனிவர்கள் ஆனந்த பரவசத்துடன் தரிசித்து மகிழ்ந்தனர்.பின் ஜெய..விஜயர்களுக்கு தாங்கள் அளித்த சாபம் பற்றியும் கூறி வருந்தினர்.

திருமால் புன்முறுவலுடன் சொன்னார்...

"முனிவர்களே! நீங்கள் வருந்த வேண்டாம்.என் பக்தர்களுக்கு நேர்ந்த அவமதிப்பு..எனக்கு நேர்ந்ததாகவே எண்ணுகின்றேன்.ஆணவத்துடன் செயல்பட்ட துவாரபாலகர்களுக்கு நீங்கள் அளித்த சாபம் சரியானதே! எனினும் அவர்கள் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டதால், நீங்களும் மனம் இரங்கி, மீண்டும் அவர்கள் என்னிடம் வர கருணை காட்டலாம்"என்றார்.

"பகவானே! மூவுலகில் எது நடந்தாலும் அது தங்கள் திருவுள்ளத்தினாலேயே நடந்தது என்பதை அறிந்தவர்கள் நாங்கள்.அனைத்தும் உங்கள் திருவிளையாடல்களே என அறிவோம்.ஆனாலும்..நீங்கள் கூறியபடி ஜய விஜயர்கள் விரைவிலேயே சாப விமோசனம் பெற வேண்டும் என ஆசிர்வதிக்கின்றோம்" என்றனர்.

பகவான், ஜெய விஜயர்களிடம் கூறினார்..

"துவாரபாலகர்களே! எந்தப் பிறவியிலும் என்னை மறக்காத வரத்தை முனிவர்களிடம் கேட்டீர்கள் அல்லவா?அது  நிச்சயம் நடக்கும். மனித சுபாவமானது நேசிப்பவர்களை விட வெறுப்பவர்களைத்தான் அதிகம் நினைத்துக் கொண்டிருக்கும்.எனவே பூமியில் நீங்கள் அரக்கர்களாகப் பிறந்து,என்னை வெறுப்பவர்களாக...என்னை எப்போதும் நினைத்து நிந்திப்பவர்களாக இருந்து மூன்று பிறவிகளுக்குப் பின் என்னை சேர்வீர்களாக"

அப்போதே துவார பாலகர்கள் பூமியை நோக்கி இழுக்கப்பட்டனர்.

அதே சமயம் பூமியில் அவர்கள் பிறப்பதற்கான சூழலை காலம் வகுத்துக் கொடுத்தது..

*********************************************************

செக்கச் செவேலென சூரியன் மேற்கில் மறைந்து கொண்டிருந்த நேரம்,நதிக்கரையில் அமைந்திருந்த அந்த ஆசிரத்தில் சூரியஒளி ஜொலித்துக் கொண்டிருந்தது.

காஷ்யப முனிவரும் அவரது மனைவி திதியும் அந்த ஆசிரமத்தில் வசித்து வந்தனர்.

அந்த பிரதோஷக் காலத்தில் காஷ்யபர் தியானத்தில் இருந்தார்.கணவர் தியானத்தில் இருந்து  மீள்வதற்காக திதி தவிப்புடன் காத்துக் கொண்டிருந்தாள்.

ஆசிரமக் கூறையின் கீற்று வழியே நுழைந்த மஞ்சள் வெயிலில் அவளது மேனி தங்க நிறத்தில் ஜொலித்தது.

வாசலில் தோட்டத்தில் பூத்திருந்த மல்லிகையின் மணமும், சிலு..சிலு என வீசிய காற்றும்..மயக்கும் மாலைப்பொழுதும் எல்லாம் சேர்ந்து திதியின் உள்ளத்தை தாபத்தில் மிதக்க வைத்தது.உடலில் உணர்ச்சி புரண்டு..சல்லாபத் துடிப்பு பெருமூச்சாக வெளி வந்தது.

கணவர் தியானத்தில் இருந்து எழுவார் எனக் காத்திருந்த திதி பொறுமை இழந்தாள்.அவளின் உடலும், உள்ளமும் கணவரின் அணைப்புக்காகத் தவித்தன.

தாளமுடியாது காஷ்யபரை நெருங்கியவள்,"சுவாமி" என அவர் காதோரம் கிசுகிசுப்பாகக் கூப்பிட்டு தன் கரங்களை அவரது தோள்களின் மீது போட்டு வளைத்தாள்.

தியானம் கலைந்து காஷ்யபர்..பக்கத்தில் பார்த்தார்.

மனைவி திதி சல்லாபத்துக்கு அழைப்பு விடுவதை உணர்ந்தார்.

"திதி..உன் விருப்பம் புரிகிறது.சற்று பொறு.இது சிவனுக்கான பிரதோசக் காலம்.முக்கண்ணனான ருத்ரன் தனது கணங்களுடன் உலாவரும் புனிதவேளை.இந்த சமயத்தில் கணவனும், மனைவியும் கூடுவது மகாபாவம்.இரவாகட்டும் பொறு" என்றார்.

அவர் கூறுவது திதியின் காதுகளில் ஏறவில்லை.தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதிலேயே முனைப்பாக இருந்தாள்.

"தயவு செய்து மறுக்காதீர்கள்..இரவுவரைப் பொறுத்துக் கொள்ளும் நிலையில் நான் இல்லை.காமம் என்னைத் தின்றுக் கொண்டிருக்கிறது.வெட்கத்தை விட்டுக் கேட்கின்றேன்.இப்போதே என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்" என்றாள்.

மனைவியின் உடற்பசியைப் போக்குவது கணவனின் கடமை என வேறு வழியின்றி திதியின் கட்டாயத்துக்கு இணங்கினார்.அவளது விருப்பத்தை பூர்த்தி செய்தார்.

தகாத நேரத்தில் அவர்கள் உறவு கொண்டதன் பலனாக..அரக்கர்களாகப் பிறக்க வேண்டிய சாபத்தைப் பெற்ற ஜெய,விஜயர்கள் திதியின் கர்ப்பத்தைச் சேர்ந்தனர்.

மோக உணர்வு முடிந்ததும் திதி தகாத நேரத்தில்..தகாத முறையில் நடந்து கொண்டதற்காக வருந்தினாள்.இந்த தவறினால் ஏதாவது விபரீதம் ஏற்பட்டுவிடுமோ என அஞ்சினாள்.அதை காஷ்யபரிடம் சொன்னாள் "பிரதோஷ காலத்தில் உறவு கொண்டதால் ருத்ரனின் கோபத்துக்கு ஆளாகி கரு கலைந்துவிடுமோ என அஞ்சுகிறேன்.நீங்கள்தான் அப்படி நேராது காக்க வேண்டும்" என்றாள்.

மனைவியின் கோரிக்கையைக் கேட்ட காஷ்யபர் கோபமுற்றார்.

"மோகத்தால் மதி கெட்டவளே! எனது சொல்லைக் கேட்காது கர்ப்பம் தரிக்கக் கூடாத நேரத்தில் கர்ப்பம் கொண்டாய்.அத்துடன் ருத்ரனின் கோபத்துக்கு ஆளானாய்.எனவே, உனக்கு இரண்டு கொடிய அரக்கர்கள் பிள்ளைகளாகப் பிறப்பார்கள்.மூவுலகையும் துன்புறுத்தி கொடுமை புரிவார்கள்.கடைசியாக பகவான் விஷ்ணுவின் கைகளாலேயே மரணமடைவார்கள்" என்றார்.

இதைக் கேட்ட திதி அதிர்ந்து போனாள்.மனம் கலங்கி அழதாள்.தன் பிள்ளைகள் பெருமாளின் கைகளாலேயே மரணமடைவார்கள் என்பதால் சற்றே சமாதானம் அடைந்தாள்.

திதியின் நிலை கண்டு பரிதாபப்பட்ட காஷ்யபர், அவளைத் தேற்றி, "திதி..உன் பிள்ளைகளில் ஒருவனுக்கு பிறக்கப்போகும் மகன் மிகச் சிறந்த பக்திமானாக, பகவான் மீது பற்று கொண்டவனாகத் திகழ்வான்"என ஆறுதல் அளித்தார்.

திதியின் வயிற்றில் கரு வளர்ந்து வரும் போதே பல கெட்ட சகுனங்கள் தோன்றின.பிறக்கப் போகும் தன் பிள்ளைகளால் உலகுக்கு ஏற்படப்போகும் தீமைகளின் காரணமாகவே கெட்ட சகுனங்கள் தோன்றுவதாக நினைத்தாள்.

அதனாலேயே பிள்ளை பெறுவதை..தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தாள்.பின் ஒருநாள் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றாள்.அப்போது சூரியன்,சந்திரன் ஆகியவை ஒளி மங்கின.மூவுலகும் இருண்டது.

முதலில் பிறந்த குழந்தைக்கு இரண்யாட்சன் என்றும்,அடுத்து பிறந்ததற்கு இரண்யகசிபு என்றும் பெயர் சூட்டப்பட்டது.

பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனார்கள்.வலிமை மிக்கவர்களாக இருந்த அவர்கள் மூவுலகையும் தங்கள் காலடியில் கொண்டுவருவதில் ஈடுபட்டனர்.இதற்காகவே தங்கள் சக்தியை அதிகரிக்க, பிரம்மனை நோக்கி தவம் இருந்தனர்.

இவர்கள் தவத்தால், விண்ணுலகே தகித்தது.தேவர்கள் வெப்பம் தாளாது, பிரம்மனிடம் சென்று முறையிட்டனர்.

பிரம்மனும், காஷ்யபரின் பிள்ளைகளின் தவத்தால்  அவர்கள் முன்னே காட்சி  தந்து "என்னவரம் வேண்டும்..கேளுங்கள்" என்றான்.

இருவரும் பிரம்மனிடம் பலவிதமான வரங்களைக் கேட்டுப் பெற்றனர்.இதனால் அவர்களை யாரும் வெல்லமுடியாத நிலை ஏற்பட்டது.அவர்களின் ஆணவம் அதிகமானது.மூவுலகையும் தங்கள் காலடியில் கொண்டுவர போருக்குத் தயாரானார்கள்.



தேவர்கள் போரிட்டுத் தோற்றார்கள்.கொடியவர்களான அரக்கர்களுக்குப் பயந்து ஓடி ஒளிந்தார்கள்.தேவர்களின் தலைவனான இந்திரனும் தலைமறைவானான்.

தேவலோகத்தைக் கைப்பற்றிய இரண்யாட்சன் இந்திரனை சிறைப்பிடிக்கத் தேடினான்.அவனைக் காணாத கோபத்தில் ஆத்திரம் கொண்டு கடலுக்குள் இறங்கித் தன் கதாயுதத்தால் அலைகளை ஓங்கி அடித்து சமுத்திரத்தைக் கல்ககி துவம்சம் செய்தான்.அவன் அட்டூழியத்தால் கடல் உயிரினங்கள் மரணமடைந்தன.கடலரசன்..அவனை எதிர்கொள்ள இயலாது சரணடைந்தான்.

மூவுலகையும் வென்றவன் மேலும் ஆணவம் கொண்டு வருணனிடம் சென்று போருக்கு அழைத்தான்.இது வருணனுக்குக் கோபத்தை மூட்டினாலும், அதைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவனிடம் "காஷ்யபர் புதல்வரே!சம வலிமை உள்ளவரிடம் நீ போரிட்டால்தான் புகழ் பெறுவாய்.உன்னை எதிர்க்கும் சக்தி எனக்கில்லை.என்னை விட்டு விடு.பகவான் விஷ்ணு  ஒருவர்தான் உனக்கு நிகரானவர்.அவர் இப்போது வராஹ அவதாரம் எடுத்து பூமியை மீட்டுவர கடலினுள் சென்றுள்ளார்.உன்னால் முடிந்தால் அவரிடம் போரிட்டு வெல்"என்றான்.

அந்த சமயத்தில்தான் வராஹ அவதாரம் எடுத்திருந்த பகவான், தன் கோரைப் பற்களால் பூமியை மீட்டெடுத்து மேலே கொண்டு வந்துக் கொண்டிருந்தார்.பன்றி உருவத்தில் இருந்த அவரே விஷ்ணு என அறிந்த இரண்யாட்சன் "வராஹமே! இந்த பூமி பாதாள லோகத்தில் இருப்பவர்களுக்காக..பிரம்மா அனுப்பியது.மரியாதையாக அதை வைத்துவிட்டுப் போ.இல்லையெனில் என்னுடன் போரிட்டு என்னை வென்று விட்டு பூமியை மீட்டுச் செல்"என்றான்.

திருமாலும் பூமியை பத்திரமாக வைத்து விட்டு..அவனை எதிர்க்கத் தயாரானார்.

இரண்யாட்சன் ..தனது கதாயுதத்தை ஓங்கிக் கொண்டு அவர் மீது பாய்ந்தான்.இருவருக்கும் கடும் போர் நடந்தது.

வராஹமூர்த்தி அவரின் கதாயுதத்தைப் பிடுங்கி ஒடித்து எறிந்தார்.

ஆத்திரம் அடைந்த அரக்கன், அடுத்து அவரை சூலத்தால் தாக்க முயன்றான்.பகவானின் சக்ராயுதம் சூலத்தை தூள் தூளாக்கியது..

இப்போது இரண்யாட்சன் மாயப் போரில் ஈடுபட்டான்.சுற்றிலும் இருளை ஏற்படுத்தி..பெரும் காற்றினை உண்டாக்கி, கல்,மழை பொழியச் செய்து வராகத்தை எதிர்த்தான்.திருமால், தனது சுதர்சன சக்கரத்தால் அவன் மாயைகள் அனைத்தையும் அறுத்தெரிந்தார்.பின் இரண்யாட்சகனின் செவியின் கீழ் ஓங்கி அறைந்தார்.அடியின் வேகம் தாங்காது, ரத்தம் கக்கியபடியே விழுந்து இறந்தான் இரண்யாட்சன்,

பிரளய நீரிலிருந்தும், இர்ண்யாட்சனிடம் இருந்தும் விஷ்ணு மீட்டுக் கொடுத்த பூமியில், மனுவும், சதரூபையும் தங்களது வம்ச விருத்தியைச் செய்தனர்.

பிரம்மனும் மீண்டும் சிருஷ்டியில் ஈடுபடத் தொடங்கினார்.இம்முறை அவருடைய அங்கங்களிலிருந்து பதின்மூன்று ரிஷிகள் தோன்றினர்.அப்படி உண்டானவர்களில் பிரம்மனின் நிழலிலிருந்து தோன்றியவர் கர்த்தமர் என்பவர்.

சுவாயம்புவ மனு தனது மூன்று பெண்களில் தேவஹூதி என்பவளை கர்த்தமருக்குத் திருமணம் செய்தி வித்தார்.மற்றொரு மகளான அஹூதியை ருசிப் பிரஜாபதிக்கும், ப்ரஹூதி என்பவளை தட்சனுக்கும் மணம் செய்வித்தார்.

ப்ரஹூதியை மணந்த தட்சனுக்கு , பதினோரு பெண்கள் பிறந்தனர்.அத்தனைப் பெண்களுக்கும் திருமணம் செய்த தட்சன் தன் கடைசிப் பெண்ணான சதி எனும் தாட்சாயணியை சிவபெருமானுக்கு மனைவியாக்கினான்.அதன் மூலம் அழிக்கும் கடவுளுக்கு மாமனாராக பெரும் பெருமை அடைந்தான்.

ஆனால் இதே தட்சன் தான் பின்னாளில் சிவபெருமானுக்கு எதிரியாகவும் மாறிப்போனான்.தனது மகளின் மரணத்துக்கும் காரணமானான்.

3 - செத்த பாம்பும் சாபமும்



பரீட்சித் ,திறமையானவனாகவும், நற்குணங்கள் கொண்டவனாகவும்,தன் முன்னோர்கள் பெயருக்கு களங்கம் ஏற்படாதபடி ராஜ்ஜியத்தை நடத்தி வந்தான்.

விராட மன்னரின் புதல்வி இராவதியை மணந்து, ஜனமேஜயன் முதலான நான்கு புதல்வர்களைப் பெற்றான்.

பரீட்சித் தன் குடி மக்களையும் தன் மக்களாகவே பார்த்துக் கொண்டான்.தனது வல்லமையால் அஸ்தினாபுரத்துக்கு பகைவர்களே இல்லாமல் வைத்துக் கொண்டான்.

பகவான் நாராயணனிடம் பக்திக் கொண்டவனாகத் திகழ்ந்தான்.

அவ்வப்போது மக்கள் குறைகளை அறிய இரவு நேரத்தில் மாறுவேடத்தில் நகர்வலம் வந்தான்.

அப்படி ஒருநாள் வரும் போது ஒரு விசித்திரக் காட்சியினைக் கண்டான்.

ஒரு கம்பீரமானக் காளை ஒன்று தன் மூன்று கால்களிலும் அடிபட்டு..மீதமிருந்த ஒரு காலில் தட்டுத்தடுமாறியபடி வேதனையுடன் நின்று கொண்டிருந்தது.அதன் அருகில் ஒரு அழகான பசு ஒன்று கண்களில் கண்ணீர் வழியக் காட்சித் தந்தது.

பூவுலகில் தர்மமே காளையாகவும், பூமாதேவியே பசுவாகவும் நின்றிருந்தனர்.

அழுதுக் கொண்டிருந்த பசுவிடம், ஒற்றைக் காலில் தடுமாறிச் சென்ற காளை அதன் துயரை விசாரித்தது.

"பூமாதேவியே! எதற்கு அழுகிறாய்? உன் கவலை என்ன? மனித குலம் நல்லபண்புகளைக் கைவிட்டு தீய எண்ணங்கள் பின் செல்வதைக் கண்டு வருந்துகிறாயா? அல்லது..நேர்மையில்லா மன்னர்கள் இப்பூமியை ஆளப்போகிறார்கள் எனக் கவலைப்படுகிறாயா? வரபோகும் , காலங்கள் யாகங்கள் இல்லாமல்போய் வேதங்கள் நிலை பெறாமல் இருக்கப் போகிறது என்ற வேதனையா?தருமமாகிய நான் ,எனது மூன்று கால்களும் பழுதுப்பட்டு ஒற்றைக் காலில் நிற்கும் நிலை  வந்துவிட்டதே அதற்காகவா? இல்லை பகவான் கிருஷ்ணன், இப்பூமியை விட்டு நீங்கியதற்காகத் துக்கமா? எதற்காகக் கண்ணீர்" எனக் கேட்டது.

பூமியாகிய பசு, "நீ சொல்வது சரிதான்.நான்கு கால்களால் திடமாக மனித குலத்தைக் காத்துவந்த தர்மதேவதையான நீ, உன் மூன்று கால்களும் சிதைக்கப்பட்டு ஒற்றைக்காலில் வேதனைப்படுவதை என்னால் சகிக்க முடியவில்லை.அதுபோல மனிதகுலம், தங்கள் நல்ல குணங்களான சத்தியம்,பொறுமை,கருணை,தானம், தைரியம் ஆகியவற்றைக் கைவிட்டு ஆசைகளின் பிடியில் சிக்கி..சுயநலப்பாதையில் போகிறதே என்றும் வருந்துகிறேன்.மேலும் கண்ணனின் பாதக்கமலங்கள் என் மீது பட்டுக்கொண்டிருந்த வரை..நான் சந்தோஷமாக இருந்தேன்.இன்றோ கலியின் ஒட்டு மொத்த பாவங்கள் ஆளுமை செய்யத் தொடங்கிவிட்டன.இனி என் கதி என்னாவகுமோ? தெரியவில்லையே!" என்றது.

இப்படி இவை பேசிக்கொண்டிருந்த போது, கருத்த உடலும், கோரமான உருவமும் கொண்ட ஒருவன் அங்கே வந்தான்.தன் கையிலிருந்த தடியால் பசுவையும், காளையையும் அடித்துத் துன்புறுத்தத் தொடங்கினான்.

இதைக்கண்ட பரீட்சித் கோபத்துடன் அந்த இடத்துக்கு விரைந்தான்.பசுவையும், காளையையும் வதைத்துக் கொண்டிருந்தவனைப் பார்த்துக் கேட்டான்..

"எதற்காக இந்த வாயில்லா ஜீவன்களை இம்சிக்கிறாய்.? அவை உனக்கு என்ன தீமையினைச் செய்தன?எனது ஆட்சியில், இப்படி ஒரு கருணையில்லா செயலைச் செய்யும் உன்னைக் கொன்றாலும் பாவமில்லை" என்றவன், பின் பசுவைனையும், காளையையும் பார்த்து,"துயரத்தில் இருக்கும் நீங்கள் வருந்த வேண்டாம்.உண்மையில் நீங்கள் தேவதைகளாகத்தான் இருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.இப்படிக் கொடுமைப்படுத்தும் இவன் யார்?எதற்காக உங்களை வதைக்கின்றான்." என்றான்.

காளை குற்றவாளியை யார் எனக் காட்டிக் கொடுக்கவில்லை."மன்னா..எல்லாம் எங்கள் தலைவிதி.வேறு என்ன சொல்ல..நான் யாரையும் குற்றம் சொல்ல வில்லை" என்றது.

பரீட்சித் புரிந்து கொண்டு பேசலானான்.

"விரோதியைக்கூட காட்டிக் கொடுக்காத நீ தர்மதேவதையாகத்தான் இருக்க வேண்டும்.தவம்,நல்லொழுக்கம்,இரக்கம்,சத்தியம் எனும் நான்கு கால்களைக் கொண்ட நீ இப்போது பெண்ணாசை,மது மயக்கம், தற்பெருமை போன்ற அதர்மக் காரணங்களால் ,சத்தியத்தைத் தவிர மூன்று கால்களையும் இழந்திருக்கின்றாய் எனத் தெரிகிறது.சத்தியம் எனும் அந்த ஒற்றைக்காலையும்  ஒடிக்க வந்திருக்கும் இந்த கரிய உடல் கொண்டவன் கலிபுருஷன் என எண்ணுகீறேன்.கண்ணீர்விட்டு கதறி அழும் இப்பசு, கிருஷ்ணனை இழந்து துக்கப்படும் பூமாதேவிதானே!" என்றான்.

பின் கட்டுப்படுத்த முடியாத கோபத்துடன் கலிபுருஷனிடம் திரும்பி, "அப்பாவிகளையும், திக்கற்றவர்களையும் வதைக்கும் உன்னை இப்போதே கொன்று போடுகிறேன்" என வாளால் வெட்டப்போனான்.

"வேண்டாம் மன்னா.தயவு செய்து என் மீது இரக்கம் காட்டுங்கள்.என்னைக் கொல்லாதீர்கள்"என்றபடியே பரீட்சித்தின் கால்களில் விழுந்தான் கலிபுருஷன்.

"தஞ்சம் அடைந்ததால் பிழைத்தாய்.தெய்வ பக்தியும், வேத முழக்கமும் நடைபெறும் என் ராஜ்ஜியத்தில் இனி அடி எடுத்து வைக்காமல் ஓடிவிடு" என்றான் பரீட்சித்.

"மன்னா! இந்த பூமி முழுவதும் உன் வசத்தில் உள்ளது.நான் வேறு எங்கு போவேன்? அடைக்கலம் கேட்டு வருவோர்க்கு அன்பு காட்டும் நீ..நான் எந்த இடத்தில் இருக்க வேண்டும்..என்று கூறிடு"

அடைக்கலம் என வருவோரைக் காக்க வேண்டியது தனது கடமை என்று உணர்ந்ததால் பரீட்சித், "சரி,மது,சூது,பெண் மோகம்,ஜீவஹிம்சை ஆகிய நான்கு இடங்களில் நீ இருந்து கொள்"

கலிபுருஷன் தயக்கத்துடன்.."இந்த நாலு இடங்கள் போதாதே.."என்றான்.

"அப்படியானல்...பொன்னாசை இருக்குமிடத்தையும் எடுத்துக் கொள்"

கலிபுருஷன் அவ்விடத்தைவிட்டு அகன்றதும்..தர்மதேவதை, தவம்,ஆசாரம்,கருணை,சத்தியம் என தனது நான்கு கால்களையும் பூரண நலத்துடன் திரும்பப் பெற்றது.பூமாதேவியும் துயரம் நீங்கி சுபிட்சத்துடன் காணப்பட்டாள்.

ஆனால்..யாரையும் விதி விட்டு வைப்பதில்லை.காலத்தின் கணக்குப்படி அவரவர் பாவ, புண்ணிய பலங்களின்படி துரத்தியே செல்கிறது.

பரீட்சித்தின்  வாழ்க்கையிலும் விதி விளையாடியது. பரீட்சத்தின் மனதில் தேவையற்ற கோபத்தை ஏற்படுத்தி மோசமான சாபத்தைப் பெற்றுத் தந்தது.

--------------------------------------------------------------------------------------------------
காட்டு விலங்குகள் அடிக்கடி நாட்டு எல்லைக்குள் புகுந்து மக்களைத் துன்புறுத்தி வந்ததால்,அவற்றை வேட்டையாட அவ்வப்போது காட்டுக்குள் புகுந்திடுவான் பரீட்சித்.

அப்படி ஒருமுறை அடர்ந்த காட்டுக்குள் அவன் பரிவாரங்களுடன் சென்றபோது, வேட்டை மும்மரத்த்தில் பரிவாரங்களைப் பிரிந்து காட்டினுள் வெகுதூரம் சென்று விட்டான்..

உச்சிப் பொழுது..தொண்டை தாகத்தால் வரண்டது.பசி உயிர் போனது.களைப்பு வேறு.

தன் தாகத்தைத் தணிக்க பக்கத்தில் குளம், குட்டை ஏதேனும் இருக்கின்றதா எனத் தேடினான்.தூரத்தில் ஒரு ஆசிரமம் இருப்பதைக் கண்டான்.ஆசிரமத்தில் இருப்பவர் மூலம் தனக்குத் தண்ணீரும்,உணவும் கிடைக்கக் கூடும் என அங்கு விரைந்தான்.

ஆசிரமத்தில் அங்கிரஸ் எனும் முனிவரும் ,அவரது மகன் சிருங்கியும் வசித்து வந்தனர்.பரீட்சித் சென்ற சமயம் வளாகத்தில் யாரையும் காணோம்.

"ஐயா..இங்க யாராவது இருக்கீங்களா?மன்னன் பரீட்சித் வந்திருக்கேன்.தாகத்தாலும், பசியாலும் தவிக்கிறேன்.கொஞ்சம் தண்ணீரும், உணவும் கொடுத்து உதவுங்க" எனக் குரல் கொடுத்தான்.

அதற்கு பதில் ஏதும் இல்லாததால்,"உள்ளே யாரும் இல்லையா?"என்றபடியே தயங்கித் தயங்கி ஆசிரமத்தின் உள்ளே சென்றான்.

உள்ளே அங்கிர்ஸ் முனிவர் தியானத்தில் இருந்தார்.தான் உள்ளே வந்த சப்தம் கேட்டும் ,அவர் கண் விழிக்காமல் இருந்தது பரீட்சித்து எரிச்சலூட்டினாலும்,மகரிஷி என்பதால், "வணக்கம்.நான் மன்னன் பரீட்சித் வந்திருக்கின்றேன்"என்றான் மன்னன்.

முனுவரிடம் சலனம் ஏதும் இல்லாததால் மீண்டும்..மீண்டும் சொன்னான்.

பசியும், தாகமும் அவனை மேலும் எரிச்சலூட்ட,தான் வந்திருப்பது தெரிந்தும், உபசரிக்க மனமின்றி தியானத்தில் இருப்பது போல ரிஷி நடிப்பதாக மன்னன் எண்ணினான்.

ஆத்திரத்தில் அறிவிழந்தவனுக்கு..ஆசிரம வாசலில் செத்துக் கிடந்த பாம்பு ஒன்று கண்ணில் பட்டது.அதை, தன் வாளின் நுனியில் எடுத்து வந்து தியானத்தில் இருக்கும் முனிவரின் கழுத்தில் மாலையாய்ப் போட்டான்.பின், தன்னை அவமானப் படுத்தியவரை...அவமானப் படுத்தி விட்ட திருப்தியுடன் வெளியேறினான்.

இந்த சிறு பிள்ளைத்தனமான செயல், பரிட்சித்தின் வாழ்வில் மிகப் பெரிய விபரீதத்தை ஏற்படுத்தப் போவதை அவன் அறியவில்லை.

மன்னன் பரீட்சித், ஆசிரமத்தை விட்டுச் சென்ற சிறிது நேரத்தில் முனிவரின் மகன் சிருங்கி அங்கு வந்தான்.தனது தந்தையின் கழுத்தில் செத்த பாம்பு மாலையாய்க் கிடப்பதைப் பார்த்தான்.

தன் தவ வலிமையால் மன்னன்தான் அச்செயலைச் செய்ததை அறிந்தான்.

மகா தவசியான தன் தந்தையை அவமானப்படுத்திய மன்னனை தண்டித்தே தீருவேன்..என்ற படியே தன் கமண்டலத்திலிருந்து சிறிது நீரை வார்த்து, "என் தந்தைக்கு அவமானம் செய்த மன்னன் இன்றிலிருந்து ஏழாம்நாள்,நாகராஜனான தட்சகன் எனும் பாம்பினால் கடிபட்டு..மரணமடைவான்" என்றிட்டான்.

இவன் இவ்வாறு சொல்லி முடித்த போது தியானத்தில் இருந்த முனிவர் அங்கிரஸ் மகனின் சாபச் சொற்களைக் கேட்டு மனம் வருந்தினார்.

"மகனே! என்ன காரியம் செய்து விட்டாய்?மன்னன் பரீட்சித் மிகவும் நல்லவன்.பக்திமான்..அப்படிப்பட்டவன் தாகத்திலும் ,பசியிலும் இருந்தபோது..என்ன செய்கிறோம் என அறியாது செய்து விட்டான்.அவன் செய்த ஒரு சாதாரணத் தவறுக்கு இப்படி ஒரு தண்டனையா? பெரிய தவறு செய்து விட்டாய் மகனே! உன்னை அந்த இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்" என்றபடியே துயரத்தில் ஆழ்ந்தார்.

சிறுவன் சாபமிட்டாலும்..அந்த சாபத்தை மாற்றமுடியாது என்பதால், "எல்லாம் விதியின் செயல்' என எண்ணி பெருமூச்சு விட்டார்




Thursday, July 23, 2020

4 - பூமியை மீட்ட வராக அவதாரம்


அரண்மனையில்.. தான் செய்த தவறுக்கு பரீட்சித் வருந்தினான்.

எளிய அந்தணரை அவமதிப்பது பாவம்.அதிலும் ஒரு முனிவருக்கு நான் அபசாரம் செய்து விட்டேன்.புத்திக் கெட்டுப்போய் எப்படி இப்படி ஒரு செயலைச் செய்தேன்.இதற்கு பரிகாரம் என்ன? என்றேல்லாம் வருந்தினான்.

இந்நிலையில் ரிஷியின் குமாரன் தனக்கு சாபம் அளித்து விட்டான் என்ற விஷயமும் அவனுக்கு எட்டியது.

"மன்னன் எனும் ஆணவத்தால்,நான் செய்த தவறுக்காகவே இந்த தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.இதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்" என மனதை சமாதானப் படுத்திக் கொண்டான்.

அடுத்து செய்ய வேண்டியவற்றை செய்யத் தொடங்கினான்..

முதலில் தன் மகன் ஜனமேஜயனுக்கு பட்டாபிஷேகம் நடத்தி அரசை அவனிடம் ஒப்படைத்தான்.அனைத்தையும் துறந்து, அரண்மனையைவிட்டுப் புறப்பட்டு கங்கைக்கரையை அடைந்தான்.தர்ப்பைப்புல்லை பரப்பி அதன் மீது வடக்கு நோக்கி அமர்ந்தான்.மீதமுள்ள ஏழு நாட்களும்..அன்னம்,தண்ணீர் அருந்தாது பட்டினியோடு இருந்து பகவானை எண்ணியபடியே உயிரைவிடத் தீர்மானித்தான்.

பக்திமானான அவன் முடிவினை அறிந்து ஏராளமான முனிவர்களும், ரிஷிகளும் அங்கு வந்தனர்.நாரதர்,அகத்தியர்,பிருகு,அங்கிரஸ்,விசுவாமித்திரர் என்ற மாமுனிவர்களும் கூட கூடினர்.

பரீட்சித் அனைவரையும் வணங்கினான்.

பின் கைகளைக் கூப்பி சொல்லலானான்..

"மகரிஷிகளே! முனிவரின் மகனின் சாபத்தை நான் முழுமனதுடன் ஏற்கிறேன்..இந்த உலகத்தில் பந்தபாசத்தால் கட்டுண்டு உழல்வதைவிட உயிர் துறந்து விண்ணுலகம் செல்வதை அவர் எனக்கு ஒரு வரமாகத் தந்ததாகவேக் கருதுகிறேன்.நான் நல்லவிதமாக மோட்சத்தினையடைய நீங்கள்தான் அருள்பாலிக்க வேண்டும்" என்றான்.

அப்போது  வானத்தில் பல் மங்கல வாத்தியங்கள் முழங்கின.தேவர்கள் பூமாரிப் பொழிந்தனர்.பிரகாசமான ஒளியுடன் "சுகர்" மகரிஷி அங்கு வந்தார்.பரீட்சித் அவரது பாதங்களில் விழுந்து வணங்கினான்.

"பின் மகரிஷியே! தங்கள் பாதங்கள் பூமியில் பதிந்ததால் இந்த பூமி புனிதமாயிற்று. எனது மரண சமயத்தில் எனக்கு அனுஹ்ரகம் செய்ய இங்கு வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியினைத் தருகிறது.தங்கள் தரிசனம்
 என் பாவங்களைப் போக்கும்.என் ஆயுளின் கடைசி  இந்த ஏழு நாட்கள்..நான் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தாங்கள்தான் கூறி அருள வேண்டும்" என வேண்டினான்.

சுக மகரிஷி பரீட்சித்தை ஆசிர்வதித்து விட்டுக் கூறினார்.."மன்னனே! ஒரு மனிதன் வாழ்ந்த நாட்களில் எப்படி வாழ்ந்திருந்தாலும்,தனது இறுதி நாட்களில் பகவானிடம் சரணடைந்து, அவன் திருநாமங்களை உச்சரித்து..அவனையே தியானித்து வந்தால்..உறுதியாக நல்வினையடைவான் என்பது நிச்சயம்.நீயும் மனதினை அடக்கி உணர்ச்சிகளை வென்று..நாராயணனின் பாதக்கமலங்களிலே உன் நினைவினைச் செலுத்து.அதனால் பிறவியின் உன்னத நிலையை நீ அடைவாய்"

"அப்படியே ஆகட்டும்.ஸ்ரீநாராயணனின் நினைவை நான் எந்தத் தருணத்திலும் கைவிட்டதில்லை.இப்போது என் மரணத் தறுவாயிலும் கண்ணனின் லீலா.. ,அளக்கமுடியா அவன் புகழினையும்..பெருமைகளையும் கேட்டபடியே உயிரைவிட ஆசைப்படுகின்றேன்.தயவு செய்து தாங்கள் இவ்வுலகை ரட்சிக்கும் பரமாத்வாவின் கதையான, பாகவதத்தைக் கூற வேண்டும்" என பரீட்சித் கேட்டுக் கொண்டான்.

பரீட்சித்தின் வேண்டுகோளின் படி சுகர் மிகுந்த மனமகிழ்ச்சியுடன் அவனுக்கு பாகவதத்தைக் கூறத் தொடங்கினார்...

"பரீட்சித்து மன்னனே! பாகவதமானது, எதிலும் பற்றில்லாமல் ஜீவமுக்தி அடைந்த ரிஷிகளின் மனதினையும் கவரக்கூடியது.இதை இயற்றியவர் எனது தந்தையான வேதவியாசர்.வேதங்களைத் தொகுத்து, இதிகாசங்களை எழுதி முடித்து,மேலும் பதினெட்டு புரணங்களையும் கூட அவர் செய்து முடித்தார். ஆனால்..இத்தனை செய்து முடித்தும் அவருக்கும் மனதில் ஏனோ  திருப்தி இல்லை.எதையோ தான் செய்ய்த் தவறிவிட்டது போல ஏதோ ஒரு தரப்பு அவரை உறுத்திக் கொண்டிருந்தது.ஆனால் அது என்ன என்று தெரியவில்லை.இதைப் பற்றி நாரதரிடம் சொல்லி வருந்தினார்..அவர்..

அப்போது நாரதர் கூறினார்..

வியாசரே! அதற்கான  காரணம் எனக்குத் தெரியும்.வேதம், வேதாந்தம்,இதிகாசங்கள்,புராணங்கள் என்று எத்தனையோ தாங்கள் செய்தும்..முக்கியமான ஒன்றை செய்யத் தவறி விட்டீர்கள்.உலகைக் காத்து ரட்சிக்கும் நாராயணனின் பெருமைகளையும், மகிமையையும்,
திருக்கல்யாண குணங்களையும் எடுத்துச் சொல்லாமல் விட்டு விட்டீர்கள்.

நீங்கள் இயற்றிய காவியங்களும்,புராணங்களும் மக்களிடையே கடவுள் பக்தி ஏற்படுவதற்குப் பதிலாக.அவர்களை பந்தபாசங்களில் பற்று கொண்டவர்களாகவே மாற்றிவிட்டன.புராண,இதிகாசங்களில் இறைவனின்
பெருமைகளையும் அவனுடைய மகிமைகளையும் நீங்கள் ஆங்காங்கே கூறியிருந்தாலும், சத்தியம்,தர்மம்,நல்லொழுக்கம் போன்றவற்றுக்கே முக்கியத்துவம் தந்ததால் பகவானின் பெருமையும்,புகழும் முழுமையயையாமல் போய் விட்டது.இதனாலேயே தங்கள் மனதில் ஒரு நிறைவின்மை ஏற்பட்டுள்ளது..

ஆகவே, மனிதர்களுக்கு பக்தி ஏற்படும்படியாக இறைவனின் லீலைகளையும், மகிமைகளையும் போற்றி..அவனது எல்லையில்லா கருணையை மனிதர்கள் மனதில் பதியுமாறு ஒரு காவியத்தை இயற்றுங்கள்.இதைச் செய்தாலே உங்களின் மனக்குறை நீங்கி ஆத்ம திருப்தி கிடைத்துவிடும்" என்றார்.

என் தந்தை இதைக் கேட்டு மகிழ்ந்தார்.எவன் ஆதியும்..அந்தமுமாய் இருக்கின்றானோ...எவன் மோட்சத்தை அளிக்கக் கூடியவனோ..அந்தத் திருமாலின் திவ்விய லீலைகளைப் பாடத் தீர்மானித்தார்.

உலகத்தில் தர்மத்தை நிலைநாட்டவும்,அநீதியை அழிக்கவும் பகவான் விஷ்ணு பல அவதாரங்களை எடுத்தார்.ஆனால் அவதாரங்களில் நாராயணனின் அம்சங்களைச் சொன்ன அதிகாரங்கள் ராமாவதாரமும், கிருஷ்ணாவதாரமுமே.

அதிலும் ஸ்ரீராமன் தன்னை கடவுளாகவே காண்பித்துக் கொள்ளவில்லை.மானிட அவதாரம் எடுத்து..மனிதனாகவே வாழ்ந்துக் காட்டிய அவதாரமாகும்.

ஆனால், கிருஷ்ணன் பிறந்தது முதல் தன்னைக் கடவுளாகக் காட்டிக் கொண்ட அவதாரம். பால்ய பருவத்தில் பல லீலைகள் செய்து எல்லோர் மனங்களையும் கொள்ளை கொண்டவன்.எனவே கிருஷ்ணனின் லீலாவினோதங்களிலேயே மனம் லயித்து, அவனது பெருமைகளையும் ,புகழையும் மகிமையையும் வைத்து காவியம் எழுதத் தொடங்கினார்.

சரஸ்வதி நதியின் மேற்குக் கரையில்,"சம்யாப்ராசம்" எனும் ஆசிரமம் அமைத்து,கண்ணனின் திருவிளையாடல்களை"பாகவதம்" எனும் பிரபந்தமாக இயற்றினார்.பின் அந்த பாகவதத்தை எனக்கும் போதித்தார்.

பாகவதமானது கேட்பவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் பாவங்களைப் போக்கி பலவிதங்களில் நன்மையினைத்  தரக்கூடியது.பந்தபாசங்களில் சிக்கித் தவிப்பவர்களுக்கு,பிறவிப் பெருங்கடலில் இருந்து மீட்டு மோட்சம் தரக்கூடியது...என பாகவதத்தின் சிறப்புகளைக் கூறிய சுக மகரிஷி, "கோபால கிருஷ்ணனின் லீலாவினோதங்களை அழகாகச் சொல்லும் பாகவதம்,நாராயணனின் அன்டசராசரங்களையும் படைப்பதும்,காப்பதும், அழிப்பதுமான செயல்களிலிருந்து தொடங்குகிறது..என்றபடியே கதையைச் சொல்லத் தொடங்கினார்.

உலகளந்த நாயகன் விஷ்ணு தன்னுடைய செயல்களை ஒடுக்கிக் கொண்டு நித்திரையில் இருக்கும் காலத்தில்..உலகங்கள் எல்லாம் நீரில் மூழ்கிப் போய்க் கிடந்தன.இப்படி பகவான் ஆயிரம் ஆண்டுகள் நித்திரையில் இருந்த பிறகு,சிருஷ்டியானது மீண்டும் செயல்படும் நேரம் வந்தது.

அப்போது விஷ்ணுவின் நாபிக்கமலத்திலிருந்து ஒரு தாமரை வெளிப்பட்டது.தாமரை மலரின் மீது பிரம்மன் தோன்றியிருந்தார்.அவர் வெளிப்பட்டவுடன் ஆவலுடன் நான்கு புறமும் திரும்பிப் பார்த்தர்.எங்கு பார்த்தாலும் நீர் நிரம்பி இருக்க,தான் மட்டும் எப்படி தோன்றினோம் என்று புரியாமல் திகைத்தார்.குழம்பினார்.

அப்போது பகவான் நாராயணன் அங்குத் தோன்றி..பிரம்மனுக்கு அருள்பாலித்து,அவரை உலக சிருஷ்டியை உண்டு பண்ணுமாறு பணித்தார்.

சிருஷ்டியானது இப்படித்தான் தோன்றியது.

பிரம்மன், திருமாலின் கட்டளைப்படியே தாவரங்கள்,விலங்குகள்,மனிதர்கள்,தேவர்கள் என்று சகலஜீவராசிகளையும் படைத்தார்.

காலம் எனப்படுவதை பகவான் படைத்தார்.நிமிடம், நாழிகை,மாதம்,வருடம் என்று பலவிதமாக கால  நிர்ணயங்களை அவர் வகுத்தார்.கிருதயுகம்,திரேதாயுகம்,துவாபரயுகம்,கலியுகம் என நான்கு யுகங்களைப் படைத்தார்.

இதன்படியே, மனிதர்களுக்கு நூறு வருடங்கள் என்பது  தேவர்களுக்கு ஒருநாள் ஆகும்.உத்திராயணகாலம் தேவர்களுக்கு பகல் பொழுது.தட்சிணாயன காலம் அவர்களுக்கு இரவுப் பொழுது.இதில் பகல் பொழுதில் பிரம்மன் சிருஷ்டியைச் செய்வார்.இரவுப்பொழுதில் உறங்குவார்.அப்படி பிரம்மன் உறங்கும் காலம் பிரளயம் ஏற்படும் காலமாகும்.

பிரம்மன் அனைத்தையும் படைத்த போது..கூடவே, அறியாமை,உடலையே தானாகப் பாவித்துக் கொள்ளும்  தவறான எண்ணம்,போகத்தின் மீது ஆசை,கோபம்,மரணமே முடிவு என நினைப்பவர் போன்ற ஐந்து   குணங்களையும் சிருஷ்டித்துவிட்டார்.

பின் ஒரு கட்டத்தில் இந்த ஐந்து குணங்களைப் படைத்ததற்காக வருந்திய பிரம்மா,கடவுளைத் தியானித்து மனதைத் தூய்மைப் படுத்திக் கொண்டு மீண்டும் சிருஷ்டியில் ஈடுபட்டார்.

அப்போது அவர் சனகர்,சனந்தர்,சனாதனர்,சனத்குமாரர் என்ற நான்கு ரிஷிகளைப் படைத்தார்.அவர்களிடம், புத்திரர்களே! நீங்கள் நால்வரும் இனி உங்கள் சந்ததியை விருத்தி செய்து அதன் மூலம் உலகை நிரப்புங்கள் என்றார்.

ஆனால், நால்வருக்குமே இல்லறத்தில் ஈடுபட விருப்பமில்லை.அவர்கள் பகவான் நாராயணன்மீது பற்றுக் கொண்டார்கள்.புலன்களை அடக்கி தியானத்தில் மூழ்கிப் போனார்கள்.

இதைக்கண்ட பிரம்மன் ஆத்திரம் அடந்தார்.தன் வார்த்தைகளை மதிக்காமல் மகன்கள் தியானத்தில் மூழ்கிவிட்டார்களே என்ற கோபம் ஏற்பட்டது.அவரின் புருவங்களின் மத்தியிலிருந்து அது பொறியாக வெளிப்பட..அந்தப் பொறியிலிருந்து குமரன் ஒருவன் வெளிப்பட்டான்.

சிவந்த நிறமுடைய அவன் ..அழுதவாறே பிரம்மனை வழிபட்டு:நான் எங்கு வாழ வேண்டும் எனக் கூறுங்கள்?" என்றான்.

பிரம்மன் "நீ தோன்றியபோதே அழுதுக் கொண்டு பிறந்ததால் "ருத்ரன்" என்ற பெயரைப் பெறுவாய்.இதயம் மற்றும் இந்திரியங்கள்,உயிர்,ஆகாயம்,வாயு,அக்னி,நீர்,பூமி,சூரியன்,சந்திரன் ,தவம் போன்ற பதினோரு இடங்கள் உன் இருப்பிடங்கள்" என்று கூறி..ருத்ரனுக்கு
காலன்,மனு,மகா காலன்,வாமதேவன் என மேலும் பல பெயர்களையும் சூட்டினார்.
"ருத்ரா!இந்த பதினோரு பெண்களையும் உனது மனைவிகளாக்கிக் கொண்டு இவர்கள் மூலம் சந்ததிகளை உண்டாக்கு" எனக் கட்டளையிட்டார்.

ருத்ரனும், பிரம்மனின் கட்டளைப்படியே தன் மனைவிகள் மூலம் தன்னைப்போலவே சக்தி கொண்டவர்களாகவும்,கோபமுடையவர்களாகவும் ஏராளமான பிள்ளைகளைப் பெற்றான்.

ருத்ர அம்சத்துடன் சினம் கொண்டவர்களாகப் பிறந்த பிள்ளைகளைக் கண்டு பிரம்மன் கலக்கமும், கவலையும் அடைந்தார்.

ருத்ரனை அழைத்து ,"ருத்ரனே! நீ பெற்ற பிள்ளைகளின் சுட்டெரிக்கும் பார்வையால் எல்லாத் திக்குகளும் பொசுங்கிப் போகின்றன.தேவர்களும் அஞ்சுகின்றனர்.இப்படிப்பட்ட பிள்ளைகளைப் பெற்றது போதும்.இனி நீ,தவத்தில் ஈடுபடுவதே நன்மை விளைவிக்கும்" என்றார்.

பிரம்மன் சொன்னபடி ருத்ரன் தவம் செய்யலானான்.

அடுத்து பிரம்மன் தானே பிள்ளைகளை சிருஷ்டிக்கும் முயற்சியில் இறங்கினார்.உலகத்தை விருத்தி செய்வதற்காக தன்னைப்போலவே சக்தி கொண்டவர்களாக மரீசி,அத்ரி,அங்கிரஸ்,புலஸ்தியர்,புலகர்,கிருது.புருகு,வசிஷ்டர்,தட்சர்,நாரதர் என பத்து மகன்களை உண்டாக்கினார்.

ஆனால், இதன் பிறகும் உலகம் அவர் எதிர்ப்பார்க்கும் விருத்தியை அடையவில்லை.அதனால் பிரம்மன் மனம் வருந்தி வேதனைப்பட்டபோது, அவருடைய  உடலே இரண்டாகப் பிரிந்தது.அதில்  ஒரு பாதி ஆணாகவும் ஒரு பாதி பெண்ணாகவும் ஆனது.

ஆணுக்கு சுவாயம்புவ மனு என்றும், பெண்ணுக்கு சதருபை என்றும் பெயர் ஏற்பட்டது.சுவாயும்புவ மனுவுக்கு சதருபை மனைவியானாள்.பின்னாளில் இவர்களூக்கு ஐந்து  குழந்தைகள் பிறந்தனர்.இரு ஆண் குழந்தைகளூக்கு பிரியவிரதன்,உத்தானபாதன் என்றும் பெண் குழந்தைகளுக்கு ஆஹூதி,தேவஹூதி,பிரஹூதி என்றும் பெயர் சூட்டப்பட்டது.

மூன்று பெண்களும் முறையே ருசி,கர்தமர்,தக்ஷன் என்பவர்களை மணந்தனர்.இவர்கள் மூலம் உலகில் மனித குலம் விருத்தியானது.சுவாயம்புவ மனுவின் சந்ததியினர் மூலமாகத் தோன்றியவர்கள் என்பதாலேயே மானிடர்கள் மனுஷர்கள் என்றாயினர்.

உலகம்.....முதலில் உலகமானது சுவாயம்புவ மனுவும் சதரூபையும் தோன்றியபோது இருக்கவில்லை.பிரம்மனிடம் இருந்து தோன்றிய அவர்கள் பிரம்மனை சென்று வணங்கினார்கள்.

மனு பிரம்மனிடம் "பிரம்மதேவரே! இனி  நாங்கள் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றி சொல்லுங்கள்" என்று கேட்டனர்.

பிரம்மர் அவர்களிடம் "மனுவே! நீயும் சதரூபையும் சேர்ந்து மக்களைப் பெற்று இனவிருத்தி செய்து பூமியாகிய உலகத்தை  ஆண்டு வாருங்கள்"என்று கூறினார்.

மனு அதைக் கேட்டு திகைத்தான்."பூமியா..அது எங்கு இருக்கிறது? என் கண்களில் தென்படவில்லையே!" என்றான்.

பிரம்மாவிற்கும் அப்போதுதான் பூமி பிரளய வெள்ளத்தில் மூழ்கிக் கிடப்பது நினைவிற்கு வந்தது.

மனுவும், சதரூபையும் மக்களைப் பெற்று வாழ வேண்டுமானால், பூமியாகிய உலகம் வேண்டும்.ஆனால் அதுவோ நீருக்குள் மூழ்கிக் கிடக்கிறது.அதை எப்படி வெளியே பிரம்மனின் மூக்குத் துவாரத்தின் வழியாக கொண்டு வருவது என யோசித்தார்.வழி ஏதும் தெரியாததால் கவலையில் மூழ்கினார்.பகவானை பிரார்த்தித்தார்.

அப்போது விஷ்ணு  பிரம்மனின் மூக்கு துவாரத்தின் வழியாக கட்டைவிரல் அளவுள்ள குட்டிப் பன்றியாகத் தோன்றி வெளிப்பட்டார்.சிறிது நேரத்திலேயே அந்தப் பன்றியானது படிப்படியாக வளர்ந்து ஒரு காட்டுயானை அளவிற்கு ஆனது.

பகவான் எடுத்த அந்த அவதாரமே வராக அவதாரம்.அதை உணர்ந்த பிரம்மா,மரீசி மற்றும் பல ரிஷிகள் பகவானைப் போற்றி வணங்கினர்.

அந்தப் பன்றி தனது கோரைப் பற்களை நீட்டிக் கொண்டு, பூமியை நீரில் இருந்து மீட்டு வர..கடலினுள் புகுந்தது.நீந்தியபடியே பாதாளலோகம் சென்று பூமி மூழ்கிக்கிடந்த இடத்தைக் கண்டு பிடித்தது,இரு கோரைப்பற்களால் பூமியை மீட்டுத் தூக்கியது.

அப்போது வராகத்தைத தடுக்கும் விதமாக ஒரு கட்டளைக் குரல் கேட்டது.
"ஏய்..வராகமே! நில்..இந்த பூமி பாதாள லோகத்தில் வாழ்பவர்களுக்காக பிரம்மன் படைத்தது.மரியாதையாக அதை அங்கேயே வைத்துவிட்டு என்னோடு வந்து யுத்தம் செய்"

அந்தக் குரல் அரக்கன் இரண்யாட்சகனுடையது.

யார் இந்த இரண்யாட்சகன்?பகவானின் வராக அவதாரத்தையே எதிர்ப்பவன் என்பதை அறிய சற்றே பின்னோக்கி செல்ல வேண்டும்..

திருமாலின் இருப்பிடமான வைகுண்டத்தில் நடந்த அந்நிகழ்ச்சியினைப் பார்ப்போம.