Tuesday, August 18, 2020

22 - காளிங்க நர்த்தனம்




யமுனை ஆற்றங்கரையினையொட்டி ஒரு காடு இருந்தது.அந்த பிரதேசத்தில் காற்றில் விஷம் கலந்திருந்தது.விஷக்காற்றை சுவாசித்ததாலேயே..ஏராளமான பறவைகள் அங்கு செத்து 
விழுந்திருந்தன.மடுவின் கரையிலுள்ள மரங்கள் கூட கருகிப் போயிருந்தன.

இவற்றிற்கெல்லாம் காரணம்..அந்த மடுவில் வசித்து வந்த காளிங்கன்.

காளிங்கன் ,நூறு தலைகள் கொண்ட விஷ நாகம்.அவன் இந்த மடுவிற்கு வருவதற்கு வருவதற்கு முன்பாக  , கடலிலுள்ள ரமணகம் என்ற தீவில்தான் வசித்து வந்தான்.

அங்கு தொடர்ந்து கருடன் வந்து துன்புறுத்தியதால், உயிருக்கு பயந்து தன் மனைவி மக்களுடன் இந்த மடுவிற்குள் வந்து குடியேறி இருந்தான்.

இந்த இடத்துக்கு கருடன் வர முடியாது.அருகில் சௌபரி என்னும் முனிவரின் ஆசிரமம் இருக்கிறது. ஒருமுறை கருடன் மீன்களைத் தின்றுவிட்டு, ஆசிரத்தைச் சுற்றி அசுத்தப்படுத்தியதால்..இனி இந்த ஆசிரம எல்லைக்குள் வந்தால் உன் உயிர் போய் விடும் என கருடனுக்கு சாபம் கொடுத்து இருந்தார் முனிவர்.

சாபத்திற்குப் பிறகு, கருடன் அங்கு வருவதில்லை.இது தெரிந்ததால் காளிங்கன் இங்கு பயமின்றி வாழ்ந்தான்

இப்படி ஒரு ஆபத்து இருப்பது தெரியாமல் கிருஷ்ணனும் அவனது நண்பர்களும் ஒருமுறை வந்து சிக்கிக் கொண்டனர்.அன்று பலராமன் அவர்களுடன் வரவில்லை.

மண்டையைப் பிளக்கும் உச்சி வெயில்.மேய்ந்து கொண்டிருந்த பசுக்களும்,கன்றுகளும், சிறுவர்களும் தாகம் ஏற்பட தண்ணீர் கிடைக்குமா?என அலைந்தனர்

ஒரு சிறுவன் சொன்னான்,"கிருஷ்ணா..பக்கத்தில் ஒரு மடு இருக்கிறது.வா அங்கு போய் நீ அருந்துவோம்"

பசுக்களையும், கன்றுகளையும் உடன் ஓட்டிச் சென்றனர்.

மடுவுக்கு வந்து தாகம் தணித்துக் கொள்ள நீர் அருந்த..அருந்திய அனைவரும் செத்து மடிந்தனர்.

இறந்து போனவர்களை தன் அருட்பார்வையால் உயிர்ப்பித்தான் .அவர்கள் உயிர் பெற்று எழுந்ததும்,அனைவரையும் ஓரமாக இருக்கச் சொல்லிவிட்டு, அருகிலிருந்த மரத்தின் மீது ஏறி நின்று தண்ணீரில் குதித்தான் கண்ணன்.

அவன் குதித்த வேகத்தில் மடுவின் நீர் உயரக் கிளம்பிச் சிதறியது.நீருக்குள் இருந்த காளிங்கன் சீற்றத்துடன் வெளிப்பட்டான்.அதைக் கண்டதும் மடுவின் கரையில் இருந்த சிறுவர்கள் அலறி ஓடினர்.சிலர் மயங்கினர்..சிலர் கோபர்களிடம் சொல்ல விரைந்தனர்.

மடுவிலிருந்து வெளிப்பட்ட காளிங்கன்,கண்ணனை கோபத்துடன் தன் வாளால் வளைக்க முயன்றான்.விஷப்பற்களால் கடிக்க முற்பட்டான்.கண்ணன் அவனிடமிருந்து எச்சரிக்கையாக நழுவினான்.

காளிங்கன் பொறுமை இழந்தான்.தனது நூறு படங்களையும் உயர்த்தி, பிளவுபட்ட நாக்கினால் "உஷ்" என சீறினான்.விஷ மூச்சினை பரவ விட்டான். 

இதற்குள் செய்தி அறிந்து கோப, கோபியர் அங்குக் கூடினர் கண்ணெதிரே நூறு தலை நாகத்துடன் கிருஷ்ணன் போராடுவதைப் பார்த்து அலறினார்கள்.அழுதார்கள்.

நந்தகோபரும்,யசோதையும்...தாங்களும் மடுவில் இறங்க முயற்சித்தனர்."கண்ணனுக்கு ஒன்றும் ஆகாது" என சொல்லி பலராமன் அவர்களைத் தடுத்தான்.

காளிங்கன் கடிக்க முயற்சிப்பதும்,கண்ணன்நழுவுவதுமாக நேரம் கழிந்தது.இனியும் தாமதிக்க வேண்டாம் என கிருஷ்ணன்..ஒரே தாவலில் காளிங்கனின் தலை மீது ஏறினான்.

நூறு தலை கொண்ட காளிங்கன்,,சீறிச் சீறி படமாடி கண்ணனைக் கொத்த முயன்றான்.ஆனால் கண்ணனோ..அவனது நூறு தலைகளின் மேலும் ஒவ்வொன்றாகத் தாவித் தாவிக் குதித்து நரத்தனம் செய்தான்.

அவனது அழகிய பிஞ்சு பாதங்களுக்கு, காளிங்கனின் படம் விரித்த நூறு தலைகளும் நடன அரங்கமானது.பாம்பின் தலைக்குள் இருந்த ரத்தினங்கள் விளக்குகளாக மின்னின.கண்ணனின் காளிங்க நர்த்தனத்தை தேவர்களும் கூடி நின்று கண்டனர்.

கிருஷ்ணனின் நர்த்தன வேகம் தாங்காது..காளிங்கன் துடித்தான்.கண்ணனின் திருவடிகள்..தனது நூறு தலைகளின் மீதும், பதிந்த வேகத்தில் அவை புண்ணாக..ரத்தம் கசிய..வாய்களால் விஷம் கக்கி மூச்சு திணறினான்.வலிமை குறைந்து பலவீனமானான்.

காளிங்கன் நிலை கண்டு கலங்கிய மனைவி, மக்கள் கண்ணன் முன் மணியிட்டு..மன்னிக்கும்படி வேண்டினார்கள்.காளிங்கனும் கண்ணன் முன் மண்டியிட்டான்."கண்ணா..நான் கருடனுக்கு பயந்து இங்கே மறைந்திருக்கிறேன்.என்னை மன்னித்து விடு"என்றான்.

"காளிங்கா! நீ உடனடியாக இந்த இடத்தைவிட்டு கடலுக்கு செல்வாயாக.உன் மேனியில் எனது கால்கள் பட்ட தழும்புகள் உள்ளதால்..கருடன் இனி உன்னைத் துன்புறுத்தமாட்டான்" என்றான் கண்ணன்.

பின், காளிங்கன் தன் மனைவி..மக்களுடன் கடலுக்குப் புறப்பட்டான்.

யுமனை நதிதீரம் மீண்டும் தூய்மையானது.

No comments:

Post a Comment