Monday, August 31, 2020

33 - குசேலர்




உஷா...

அரக்கனான பாணாசுரனின் ஒரே மகள்

பாணாசுரன், மகாபலி சக்ரவர்த்தியின் மகன். சிவ பக்தன்.ஒருமுறை இவன், சிவ தாண்டவம் ஆடுகையில், தன் ஆயிரம் கைகளாலும்,வாத்தியங்கள் இசைத்தான்.இதனால் மகிழ்ச்சியடைந்த சிவன், "பாணா..உன் வாத்தியத் திறமைக்கு பரிசாக வரம் அளிக்க விரும்புகின்றேன்.என்ன வேண்டும்? கேள்"என்றார்.

பாணாசுரன் அவரை வணங்கி, "பரமேஸ்வரா! எனது நகரான சோணிதபுரத்துக்கு தாங்கள் பாதுகாவலனாக இருந்து காக்க வேண்டும்"என்று வேண்டினான்.சிவனும் அப்படியே வரம் தந்து அவனது நகரத்தைப் பாதுகாத்து வந்தார்.

மும்மூர்த்திகளில் ஒருவரான சிவனே நகரத்தின் காவலனாக இருப்பதால், பாணாசுரன் தன் வலிமையை எண்ணி ஆணவம் கொண்டான்.ஆணவம்
தானே எப்போதும் அழிவிற்குக் காரணம் ஆகிறது. ஆயிரம் கைகளும் அரிப்பெடுக்க அவன் சிவனையேக் கேட்டான்..

"பெருமாளே என் பலத்தைக் கண்டு பயப்படுவதால் யாரும் என்னுடன் யுத்தம் செய்ய வருவதில்லை.கண்ணுக்கு  எட்டிய தூரம் வரை எதிரிகள் தெரியவில்லை.என் கண் முன்னே தாங்கள்தான் தெரிகிறீர்கள்.நாம் யுத்தம் செய்யலாமா?"என்றான்.

சிவனோ, "பாணா...உன் குரலில் ஆணவம் தெரிகிறது.
.அது நல்லதல்ல.ஆனால் உன் ஆசை நிறைவேறப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.விரைவிலேயே நீ மனதில் வேண்டும் அளவிற்கான பலமுள்ள எதிரியை சந்திப்பாய்"என்றார்.

அதற்கான விதை உஷாவின் உள்ளத்தில் காதலாக முளைத்தது.

உஷா...பாணாசுரனின் மகள்.ஆனாலும் மென்மையானவள்,பக்தி நிறைந்தவள்,பண்புள்ளவள், அறிவிலும்..அழகிலும் சிறந்தவள்.

ஒருநாள் அவள் கனவில் ஒரு ஆணழகனைக் கண்டாள்.உறங்கி எழுந்தும் அவனை மறக்க முடியவில்லை.

கனவில் வந்த அழகனைப் பற்றி, மந்திரி குமாரியான சித்ரலேகாவிடம் பகிர்ந்து கொண்டாள் உஷா."உன் காதலன் எப்படியிருப்பான்" என் அவள் கேட்க உஷாவால் பதில் சொல்ல முடியவில்லை..

சித்ரலேகா பலவிதமான யோக சித்திகள் கொண்டவள்.ஓவியம் வரைவதில் கெட்டிக்காரி.அவள் மூவுலகங்களிலும் பேசப்படக் கூடிய அழகான ஆண்களை ஓவியமாக வரைந்து ஒவ்வொன்றாகக் காட்டினாள்.அனிருத்தனின் ஓவியத்தைப் பார்த்து, உஷா முகம் சிவந்தாள்.உடன் அவனே அவள் காதலன் என அறிந்தாள் சித்ரலேகா.

உஷா மீது அதிக அன்பு கொண்ட அவள் உடனே துவாரகைக்கு வந்து,தன் மாயசக்தியால், பஞ்சணையில் தூங்கிக் கொண்டிருந்த அனிருத்தனனை கட்டிலோடு தூக்கிக் கொண்டு சென்று விட்டாள்.

விழித்தெழுந்த அனிருத்தன், நடந்ததைத் தெரிந்து கொண்டான்.அவனும் உஷாவின் மீது காதல் கொண்டான்.

விஷயம் வெளியே தெரிந்தது."கன்னி மாடத்தில் ஆளரவம் கேட்கிறது" என அனைவரும் கிசுகிசுக்க பாணாசுரன் காதிற்கும் அச் செய்தி வந்தது.கொதித்தெழுந்தவன் காவலர்கள் சூழ கன்னிமாடம் சென்றான்.அங்கு அனிருத்தனனைக் கண்டு"இவனை பாதாளச் சிறையில் அடையுங்கள்" என வீரர்களுக்குக் கட்டளையிட்டான்.

உஷா..அழுதாள்..துடித்தாள்..தந்தையின் காலில் விழுந்து கதறினாள்.பாணாசுரன் மசியவில்லை.

விஷயம் துவாரகைக்கு எட்டியது.துவாரகைக்கு வந்த நாரதர்,"அனிருத்தனைக் காணாது நீங்கள் தத்தளித்துக் கொண்டிருக்கிறீர்கள்.அவனோ, பாணாசுரனின் பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றான்.எல்லாம் காதல் படுத்தும் பாடு"என அனைத்து விவரங்களையும் சொன்னார்.

அடுத்த கணம் யாதவர் படைகள் அணி வகுத்தன.பாணாசுரனின் நகரம் நோக்கி செல்ல ஆரம்பித்தன.

கிருஷ்ணன் தலைமையில் கோணிதபுரத்தை முற்றுகையிட்டது யாதவர்படை.பாணாசுரனின் நகரத்தைத் தாக்கி, கோட்டை கொத்தளங்களைத் தகர்த்தெறிந்தது.நகரத்தின் பாதுகாவலரான சிவன், தன் பூத கணங்களுடன் கிருஷ்ணனின் படைகளை எதிர்த்தார்.பாணாசுரனும் தன் அசுரப் படைகளுடன் வந்து யாதவர்களைத் தாக்கினான்.

கிருஷ்ணனுக்கும், சிவனுக்கும் மூண்ட யுத்தத்தைப் பார்க்க,தேவர்களும், ரிஷிகளும் வானத்தில் வந்து கூடினார்கள்.காக்கும் கடவுளுக்கும்,அழிக்கும் கடவுளுக்குமான சண்டை.

வெற்றி, தோல்வியினை நிர்ணயிக்க முடியா சண்டை..

சிவன் மூன்று தலைகள்,மூன்று கால்களைக் கொண்ட ஜுர  புருஷனை சிருஷ்டித்து ஏவினார்.அது நாலாபக்கத்துப் படைகளையும் வெப்பத்தினால் பொசுக்கிக் கொண்டே வர..கிருஷ்ணன் குளிர் ஜுரம் என்ற எதிர் சக்தியை உண்டாக்கி ஏவினான்.விஷ்ணுவின் சக்திக்கு ஈடு கொடுக்க முடியாமல், சிவ ஜுரம் கிருஷ்ணனை தஞ்சம் அடைந்தது.அதற்கு அபயமளித்து விடுவித்தார்.

பாணாசுரன், கிருஷ்ணனை எதிர்த்து தன் ஆயிரம் கைகளினாலும் பாணங்களை விடுவித்தான்.கிருஷ்ணன் தன் சக்கரத்தை வீச, அது அசுரனின் கைகளைத் துண்டக்கத் தொடங்கியது.

பாணாசுரனைக் காப்பதாக வாக்களித்திருந்த சிவன் இடைமறித்தார்.

"வாசுதேவா! இந்த பாணன் என் பக்தன்.இவனைக் காப்பதாக நான் வாக்களித்துள்ளேன்.அது மட்டுமல்ல நீ உன் பக்தனான பிரகலாதனுக்கு, அவன் வம்சத்தைச் சேர்ந்தவரை வதம் செய்ய மாட்டேன் என வாக்கு தந்திருக்கிறாய்.அதன்படி பிரகலாதன் வம்சத்தைச் சேர்ந்த பாணாசுரனைக்  கொல்லாமல் மன்னிக்க வேண்டும்"என்றார்.

கிருஷ்ணனும் அதை ஏற்றுக் கோண்டு நான்கு கைகள் மிச்சமிருந்த பாணாசுரனைக் கொல்லாமல் மன்னித்து அருள் புரிந்தான்.

பாணாசுரன், மனம் திருந்தி, சிறையிலிருந்த அனிருத்தனையும் விடுவித்து, தன் மகள் உஷாவையும் அழைத்து கண்ணனிடம் ஒப்படைத்தான்.அவர்கள் திருமணம் முடிந்து அனைவரும் துவாரகைத் திரும்பினர்.

துவாரகையில் மகிழ்ச்சி துள்ளியது.செல்வச் செழிப்பில் துவாரகை சொர்க்கபுரியாய்த் திகழ்ந்தது.
ஆனாலும், ஒருவர் பஞ்சத்தால் அடிபட்டு பரதேசி போல இருந்தார்.அவர் கிருஷ்ணனுடன் ஒன்றாகக் குருகுலத்தில் படித்த சுதாமன்தான்.

சுதாமன் அதிக ஆசை இல்லாதவர்.கிடைத்ததைக் கொண்டு இல்லறம் நடத்தி வந்தவர்.உடுத்திக் கொள்ள நல்ல ஆடைகள் இல்லாததால் கந்தல் ஆடைகளையே உடுத்திக் கொண்டிருந்ததால் குசேலன் என அழைக்கப்பட்டார்.

அவனது மனைவி க்ஷூத்தமா, மிகவும் பொறுமைசாலி.எத்தனை வறுமையிலும் கணவனின் மனம் கோணாமல் இல்லறம் நடத்தி வந்த புண்ணியவதி.ஆனாலும், அவர்களின் குழந்தைகள் பசியால் தவிப்பதைக் காணமுடியாமல்.. வறுமையிலிருந்து மீள என்ன வழி என யோசித்தாள்.அப்போது ஒரு யோசனைத் தோன்றியது.

கணவனிடம் தயங்கித் தயங்கிச் சொன்னாள்..

"நான் சொல்வது சரியா..தப்பா எனத் தெரியவில்லை.துவாரகையில் இருக்கும் கிருஷ்ணன்..உங்கள் பால்ய நண்பன்தானே..உங்கள் மீது அன்பு கொண்டவன் என்றும் கூறியிருக்கிறீர்கள்.நீங்கள் ஒருமுரை அவரைச் சென்று பார்த்தால்,அவரால் சிறிதளவாவது நம் வறுமை நீங்கும் என்று தோன்றுகிறது..இது நமக்காக அல்ல நம் குழந்தைகளுக்காக.."

குசேலருக்கு மனைவியின் யோசனை சரியென்று தோன்றியது.தவிர கண்ணனைப் பார்க்க வேண்டும் எனும் ஆவலும் அவருக்கு இருந்து வந்தது.அது இப்படியாவது நிறைவேறட்டும்..எனப் புறப்பட்டார்.

ஆனால்..நீண்ட காலம் கழித்து பார்க்கப் போகும் நண்பனை எப்படி வெறும் கையோடு பார்ப்பது...அவர் மனைவி ஓடோடிப் போய் நான்கு வீடுகளில் யாசகம் கேட்டு..சிறிது அவலை ஒரு கந்தல் துணியில் முடிந்து குசேலரிடம் தந்து வழியனுப்பினாள்.

குசேலர் துவாரகைக்குப் போனார்.கிருஷ்ணனின் வாயில் காப்போனிடம், "ஏன் பெயர் சுதாமன்.கிருஷ்ணனின் பால்ய நண்பன்.அவரை தரிசிப்பதற்காக வந்துள்ளேன்" என்றார்.

காவலன் அவரைநிற்கச் சொல்லிவிட்டு, கிருஷ்ணனிடம் சொல்லச் சென்றான்.விஷயத்தைக் கேள்விப்பட்ட கண்ணன் ..தானே ஓடோடி வந்து"வா..சுதாமா" என்றபடியே அவரை கட்டியணைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

கிருஷ்ணன் குசேலனை சந்தோஷமாக  தன் ஆசனத்தில் அமர்வித்தான். அவருடைய பாதத்தை தட்டில் வைத்து, ருக்மிணி நீரை வார்க்க தன் கைகளால் அலம்பினான்.தானே தன் கைகளால் ருக்மிணி பலகாரங்கள் கொண்டு வந்து கொடுத்தாள்.குசேலருக்கு வெண்சாமரம் வீசினாள்.

குசேலர் அவர்களின் அன்பு கண்டு மனம் உருகினார்.இத்தனை அன்புக்கு நான் அருகதையுள்ளவனா?இதற்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்?இப்படி கௌரவம் அளிப்பவர்களிடம், வறுமை தீர்க்க பொருள் கேட்பதா.கூடாது.கண்ணனின் இந்தப் பிரியமே எனக்குப் போதும் என மனதினுள் தீர்மானித்துக் கொண்டார்.

குசேலர் சாப்பிட்டு முடிந்ததும்..அவருக்கு தாம்பூலம் மடித்துக் கொடுத்தபடியே..பழைய குருகுல சம்பவங்களை சொல்லி கண்ணன் மகிழ்ந்தான்.பின்னர் "அண்ணியார் எனக்கு என்ன கொடுத்து அனுப்பியிருக்கிறார்?"என்று கேட்ட கண்ணனிடம், தயங்கியவாறே அவல் முடிச்சைத் தந்தார்.

கிருஷ்ணன், அவலை ஆவலுடன் வாங்கி ஒருவாய் வாய்க்குள் போட்டுக் கொண்டான்."ஆஹா..என்ன ருசி..அண்ணியாரின் கை பக்குவம் அருமை" என்றான்.

மீண்டும் அவன் அவலை எடுக்க..ருக்மிணி கண்ணனின் கையைப் பிடித்துக் கொண்டாள்."நீங்கள் மட்டும் சாப்பிட்டால் போதுமா? எனக்கு வேண்டாமா" என்றபடியே அவல் முடிச்சைப் பெற்றுக் கொண்டாள்.

"ஆம்..கண்ணன் ஒரு பிடி அவல் சாப்பிட்டதற்கே லட்சுமி தேவையான செல்வத்தைக் கொடுத்து விட்டாள்.அடுத்த பிடியை சாப்பிட்டால்..குசேலர் செல்வத்துக்கு அதிபதியாகி..அவள் குசேலர் வீடு செல்லுமாறு ஆகிவிடுமோ"என்றே தடுத்தாள்.

பகவான் என்னைக் கட்டி அணைத்துக் கொண்டார்.லட்சுமி தேவி ருக்மிணியே சாமரம் வீசினார்.இது போதும்.பொன்னும், பொருளும் கொடுத்தால் நான் மாறிவிடுவேன் என்பதாலேயே கண்ணன் எனக்கு செல்வத்தைத் தரவில்லை போலும்..என்று எண்ணியவாறே ஊர் வந்து சேர்ந்தார் குசேலர்.வீட்டை நெருங்கும் போது குட்டிச் சுவராய் இருந்த வீடு பெரிய அரண்மனையாக ஆகியிருந்தது.அவருடைய மனைவி..பட்டும், தங்க ஆபரணங்களுடன் அடையாளமே தெரியாதபடி வந்து அவரது பாதங்களைத் தொட்டு வணங்கினார்.அவர் முகத்தில் சந்தோஷம்.அவரது பிள்ளைகள் அனைவரும் புத்தாடை அணிந்திருந்தனர்.வீட்டில் செல்வச் செழிப்பு தாண்டவமாடியது.குசேலர் கண்களில் ஆனந்தக்கண்ணீர்.

"கண்ணா..காக்கும் தெய்வமே,,நான் கேட்காமலேயே இத்தனை செல்வத்தை எனக்கு அளித்தவனே! செல்வத்தைத் தந்து என்னை சோதிக்கின்றாயா?வறுமையில் உன் மீது கொண்ட அன்பு..செல்வம் வந்தபின் மாறிவிடுமே என பார்க்கின்றாயா..இல்லை கண்ணா..இந்த பக்தி உன் மீது நிலைத்திருக்கும்"மனம் நெகிழ தனக்குள் சொல்லிக் கொண்டார் குசேலர்.

பகவான் அப்படித்தான்..பக்தன் தன்னை நோக்கி ஒரடி வைத்தாலே..அவர் பக்தனை நோக்கி ஆயிரம் அடிகள் வைத்து அரவணைத்துக் கொள்வார்.

ஆனால் அந்த பகவான் அவதரித்த யதுர் குலமோ ஆணவத்தின் உச்சத்தில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது.

கண்ணன் அதை நினைத்தான்.இன்னமும் என் வேலை முடியவில்லை என்று சொல்லிக் கொண்டான்.

அப்படி அவன் சொல்லிக் கொண்டிருந்தது சிவனிடம்.சிவனிடம் அப்படி அவன் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

Sunday, August 30, 2020

32 - சிசுபாலன் மறைந்தான்




அசுவமேதயாகத்தில் "அக்ரபூஜை" எனும் முதல் மரியாதை முக்கியமாகும்.

அந்த மரியாதையை யாருக்குத் தரலாம் என்றார் தருமர்

சகாதேவன் சொன்னான் ,"அண்ணா..நம் கண்ணெதிரே காட்சி தரும் தெய்வமாக நம் முன்னே நிற்பவன் கண்ணன்.அவனே எல்லா உலகங்களாலும், எல்லாவகையிலும் வழிபடத் தக்கவன்.முதல் மரியாதை பெறும் தகுதி அவனுக்கே"

யாகத்தை நடத்தி வைக்க வந்து வியாசர்,கண்வர் முதலான மகரிஷிகளும், பீஷ்மர்,துரோணர் உள்ளிட்ட பெரியோர்களும் அதை ஏற்றனர்.

தருமர் பயபக்தியுடன் முதல் மரியாதை செய்தார்..அப்போது மன்னர்களிடையே இருந்து எழுந்தான் சிசுபாலன்.

"தவத்தில் சிறந்தோரும்,ஞானத்திலும், வீரத்திலும் பெருமை பெற்றவர்களும் இருக்கும் இச்சபையில்..அவர்களில் யாருக்காவது முதல்மரியாதை செய்வதை விட்டு விட்டு தகுதியே இல்லாதவனுக்கு செய்ய பாண்டவர்களுக்கு பித்து பிடித்து விட்டதா?"என்றான்..மெலும் சொன்னான்"இந்த இடையனான கண்ணன் எந்த விஷயத்தில் உயர்ந்தவன்?குலத்திலா.குணத்திலா, வீரத்திலா..? ஜராசந்தனுக்கு பயந்து பின் வாங்கி ஓடிய கோழை இவன்.சூழ்ச்சிக்காரன்,நேர்மையில்லாதவன்.."என இழிவாகப் பேசினான்.

அவன் சொற்களைப் பொறுக்காமல்,பாண்டவர்கள் பொங்கி எழுந்தனர்.சிசுபாலனை எதிர்க்க ஆயுதமெடுத்தனர்.

இவ்வளவு நேரம் சிசுபாலன் சொல்லியவற்றை புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணன்..பாண்டவர்களைத் தடுத்தான்."இது எனக்கும், சிசுபாலனுக்கும் இடையே உள்ள பிரச்னை.நானே தீர்த்து வைக்கிறேன்"என்றான்.

இதைக் கேட்ட சிசுபாலன், கத்தியுடன் கண்ணன் மீது பாய்ந்தான்.

கிருஷ்ணன் அதற்கு மேல் பொறுமை காக்காமல் ,தன் சுதர்சன சக்கரததை ஏவி,சிசுபாலனின் தலையைத் துண்டித்தான்.அப்போது சிசுபாலனின் உடலிலிருந்து ஒளி எழுந்து கிருஷ்ணனின் உடலுக்குள் சென்று மறைந்தது.இதைப் பார்த்த அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

ஆனால் அங்கிருந்த மகரிஷிகள் இதன் காரணத்தை உணர்ந்து கொண்டனர்.

பாற்கடலில் துவார பாலகர்களான ஜய-விஜயர்கள் சாபத்தின் காரணமாக மூன்று பிறவிகள் பெற்று பகவானை விரோதித்தார்கள்.எவன் ஒருவனும் நண்பர்களையும்,உறவினர்களையும் விட விரோதிகளை நினைத்துக் கொண்டிருப்பதே அதிகம்.அதனால் அவர்களும் எப்போதும் பகவான் நினைவுடன் இருந்து முக்தி பெறுகிறார்கள் என்பதை மற்றவர்களுக்கும் கூறினார்கள்.

முதல்பிறவியில் ஜய-விஜயர்கள் முறையே இரண்யாட்சன்,இரண்யகசிபுவாகவும்
இரண்டாவது பிறவியில் ராவணன், கும்பகர்ணனாகவும்
மூன்றாவது பிறவியில் சிசுபாலன்,தந்தவக்த்ரனாகவும் பிறந்தனர்

ஜயனான, சிசுபாலன் முக்தி பெற்று விட,தந்தவக்த்ரன்மட்டுமே மிச்சம்.

அவன் கிருஷ்ணனை அழிப்பதற்காக தன் தோழனான சால்வனை கூட்டு சேர்த்துக் கொண்டிருந்தான்.

ருக்மிணியை கிருஷ்ணன் தூக்கி வந்த போது..நண்பர்களான சிசுபாலன், ருக்மிக்கு ஆதரவாக கிருஷ்ணனை எதிர்த்தவன் சால்வன்.அப்போது பலராமனால் தோற்கடிக்கப் பட்டு துரத்தியடிக்கப் பட்டிருந்தான்.அவமானம் தாங்காமல்...யாதவர்களை பூண்டோடு அழிப்பேன் என சபதம் எடுத்து  சிவனை நோக்கி தவம் இருந்தான்.அவர் அருளால் "ஸௌபம்"எனும் அதிசயமான ஆகாயவிமானததைப் பெற்றான்.

கிருஷ்ணன் , சிசுபாலனை வதம் செய்த கோபத்தில் அவனும்,தந்தவக்த்ரனும் ..துவரகை மீது கண்ணன் இல்லா நேரத்தில் விமானத்தில் சென்று போர் தொடுத்தார்கள்.துவாரகையின் நந்தவனங்களையும்,அரண்மனைகளையும் மற்றும் பெரிய கட்டிடங்களையும் தகர்த்தார்கள்.ஆகாயத்தில் இருந்த படியே கற்கள்,மரங்கள், நாகங்கள் போன்றவற்றை பேய்மழை போல பொழிந்தார்கள்.

சால்வனை எதிர்த்து கிருஷ்ணனின் மகனான பிரத்யும்னன் தனது படைகளுடன் சென்று தாக்கினான்.அஸ்திரங்களைத் தொடுத்தான்.ஆனால் விமானம் மாயமாக மறைந்தும்...திடீரென தோன்றியும் தாக்குதல் நடந்ததால்..சமாளிக்க முடியாமல் திணறினான்.

யுத்த செய்தி கேட்டு துவாரகைக்கு வந்தான் கண்ணன்.அவன்பிரத்யும்னனிடம்,"மகனே!..சால்வன் மாயப்போர் புரிவதால்..என்னால் மட்டுமே அவனை எதிர் கொள்ள முடியும்.நான் பார்த்துக் கொள்கிறேன்" என்றான்.

பின் சால்வனுக்கும் கிருஷ்ணனுக்குமான போர் கடுமையாக நடந்தது.இறுதியாக கிருஷ்ணன் தன் கதாயுதத்தால் விமானத்தைத் தாக்கி..கடலில் விழ வைத்தான்.தன் சுதர்சன சக்கரத்தால் சால்வனின் தலையைத் துண்டித்தான்.

தோழன் சால்வனின் மரணத்தால் மேலும் ஆத்திரமடைந்த தந்தவக்த்ரன் கதையை ஓங்கிக் கொண்டு கிருஷ்ணன் மீது பாய்ந்தான்.இருவருக்குமான கதாயுத்தத்தில் கிருஷ்ணனால் தலையில் தாக்கப்பட்டு மரணமடைந்தான்.பின் மோட்சம் பெற்று மேலுலக்ம போனான்.

துவாரகாபுரி மக்கள், படையெடுப்பெல்லாம் ஓய்ந்து மகிழ்ச்சியடைந்தனர்.கண்ணனின் பாதுகாப்பில் அனைவரும் நிம்மதியாய் காலம்கழித்தனர்.

 இந்நிலையில்..கண்ணனின் பாதுகாப்பையும் மீறி காணாமல் போனான் அனிருத்தன்.

அனிருத்தன், கிருஷ்ணனின் மகனான பிரத்யும்னனின் மகன்.

அரண்மனையே களேபரமானது.மூலை..முடுக்கெல்லாம் போய்த் தேடினர்.நாலாதிசைகளிலும் வீரர்கள் தேடுதல் வேட்டையைத் தொடர்ந்தனர்.

துக்கத்தில் இருந்த ருக்மிணியிடம் கண்ணன் சொன்னான்,"அனிருத்தை கண்டு பிடித்து விடலாம்.இது ஒன்றும் புதிதல்ல.முதலில் தகப்பன் காணாமல் போனான்.இப்போது மகன்"என்றான்.

ஆம்..கிருஷ்ணனின் மகன் பிரத்யும்னனும் காணாமல் போய்க் கிடைத்தவந்தான்.

அது அவன் குழந்தையாக இருந்த போது நடந்தது.

பிரத்யும்னன் வேறு யாருமில்லை.மன்மதன்தான் அவன்.

தவத்தில் இருந்த சிவனின் மீது மன்மத பாணம் எய்து நெற்றிக் கண்ணால் சுட்டெரிக்கப்பட்ட மன்மதன்..கிருஷ்ணன்-ருக்மிணிக்கு மகனாகப் பிறந்திருந்தான்.

கம்சனுக்கு எமனாக கிருஷ்ணன் எப்படிப் பிறந்தானோ, அதுபோல சம்பாசுரன் எனும் அரக்கனுக்கு பிரத்யும்னனால் மரணம் என விதி எழுதியிருந்தது.

முன்பு கம்சனனுக்கு அசரீரி இதைச் சொன்னது போல,சம்பாசுரனிடம் சென்று இச்செய்தியை நாரதர் சொல்லி விட்டார்.

எதிரி இவன்தான் என தெரிய வந்தபின் அவனை உயிரோடு விட்டு வைப்பானா சம்பாசுரன்.

துவாரகையில் யாரும் அறியாமல் மாயா ரூபத்தில் புகுந்தான்.பச்சைக் குழந்தை  என்றும் பார்க்காமல், பிரத்யும்னனைத் திருடிக் கொண்டுபோய் கடலில் போட்டான்.

துவாரகையில் குழந்தையைக் காணாமல் அனைவரும் பதறித் துடித்தனர்.அழுது அழுது மயங்கினாள் தாய்.குழந்தை என்னவானது என கடைசி வரைத் தெரியவில்லை.

அனைத்தும் அறிந்த கண்ணனோ..அதைப் பற்றி மூச்சு விடவில்லை.எல்லாவற்றையும் அதனதன் போக்கில் விட்டுவிட்டு..முடிவைத் தீர்மனைப்பது அவன்தானே!

சம்பாசுரனின் மரணம் பிரத்யும்னனால் நடைபெற வேண்டும் என இருக்கையில் அதை வேடிக்கைப் பார்ப்பது மட்டுமே கண்ணனின் வேலை.

கடலில் போடப்பட்ட குழந்தையை ஒரு மீன் விழுங்கியது.அந்த மீன் ஒரு செம்படவனின் வலையில் சிக்கியது.அவன் அந்த மீனை அரசனின் அரண்மனைக்குக் கொண்டு வந்து கொடுத்தான்.அந்த அரசன் சம்பாசுரன்.

அந்த மீனை அரண்மனை சமையல்காரன் நறுக்க முனைந்தான்.மீன் வயிற்றுக்குள் ஒரு குழந்தை இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டான்.அரண்மனைப் பணிப்பெண்ணான மாயாவதி அந்த குழந்தையின் மனைவி.ஆம்...மன்மதனின் மனைவி ரதிதான் அவள்.சம்பாசுரன் ஒருமுறை அவளைக் கடத்தி வந்த போதுதான்..மன்மதனின் மனைவி ரதி என்பதை அவள் வெளிப்படுத்திக் கொள்ளாமல்..மாயாவதி என்ற பெயரில் அரண்மனை பணிப்பெண்ணாக பணியாற்றிக் கொண்டிருந்தாள்.சம்பாசுரன், அவள் மீது மோகம் கொண்டிருந்தான்.அவளை அடையத் துடித்தான்.தன் ஆசைக்கு இணங்கச் சொல்லி வற்புறுத்தினான்.

மாயாவதி அவனிடமிருந்து தப்பிக்க, "மன்னா..நான் தற்போது உங்களை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை.எனக்கு மாங்கல்ய தோஷம் இருக்கிறது.எனவே..என்னை யார் மணந்தாலும், விரும்பி அடைந்தாலும் அவர் இறந்து விடுவார்.இந்த தோஷத்தைப் போக்கிக் கொள்ள சிவனை எண்ணி விரதம் இருந்து வருகிறேன்.தோஷம் நீங்கியதுடன் நான் தங்களை மணந்து கொள்ள எந்தவிதத் தடையும் இல்லை.ஆகவே..தயவு செய்து சிறிது காலம் பொறுத்து கொள்ளுங்கள்" என்று பொய் சொல்லி சம்பாசுரனை ஏமாற்றி வந்தாள்.

அவனும், அவளைத் தொட்டால் உயிர் போய் விடுமே..என்ற பயத்தில் காத்திருந்தான்.

மீன் வயிற்றில் இருந்த குழந்தையை மாயாவதி அன்புடன் வளர்த்து வந்தாள்.நாரதர் ஒருமுறை சம்பாசுரனைப் பார்க்க வந்த போது, மாயாவதியிடம்"மீனின் வயிற்றில் இருந்த இந்த குழந்தை மன்மதனே"எனச் சொல்லி,"இக்குழந்தையை பத்திரமாக வளர்த்து வா.இவன் வாலிபன் ஆனதும் சம்பாசுரனை அழித்து விடுவான்"என்றார்.

அதுபோல மாயாவதி, பிரத்யும்னனை, அறிவு,போரிலும் வல்லவனாக வளர்த்து..மாயக்கலைகளைச் சொல்லிக் கொடுத்து வலிமையுள்ளவன் ஆக்கினாள்.பிரத்யும்னன வாலிபன் ஆனான்.மாயாவதி தன் மனைவியே என அறிந்து கொண்டான்.

இச்சமயம் சம்பாசுரனும் அதை அறிந்து கொண்டான்.அவனுக்கு இச் செய்தியை சொன்னவரும் நாரதரே! அசுர வதம்  நடைபெற வேண்டுமே!

சம்பாசுரன் மன்மதனைக் கொல்ல முற்பட்டான்.இருவருக்கும் நடந்த போரில்  இறுதியில் மன்மதனால் கொல்லப்பட்டான்.

பின் பிரத்யும்னனும்,மாயாவதியும் துவாரகை வந்தனர்.நாரதர் அங்கு வந்து நடந்ததையெல்லாம் விளக்கினார்.பின் இருவருக்கும் மணம் முடித்து வைக்கப்பட்டது.

பிரத்யும்னன் , பின்னாளில் ருக்மிணியின் சகோதரன் ஆன ருக்மியின் மகன் ருக்மவதியை மணந்தான்.அவர்களுக்குப் பிறந்த மகனே காணாமல் போயிருக்கும் அனிருத்தன்.

பிரத்யும்னன் காணாமல் போனது பகையால்..ஆனால்.
அனிருத்தன் காணாமல் போனது காதலால்.

Saturday, August 29, 2020

31 - நரகாசுரனும்...ஜராசந்தனும் மறைந்தனர்




நரகாசுரன்.....

பூமா தேவிக்கும், மகா விஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமாதேவியை தூக்கி வந்த போது தோன்றியவன்.

அசுரனுக்கே உள்ள ஆற்றலும்,தவம் செய்து பெற்ற வரத்தாலும் தன்னை எதிர்க்க யாருமில்லை என்ற ஆணவம் கொண்டவன் நரகாசுரன்.

அதுவும் தவிர மாகாவிஷ்ணு பூமாதேவிக்குத் தந்த "வைஷ்ணவாஸ்திரம்"எனும் அதி சக்தி வாய்ந்த அஸ்திரம் அவனிடம் இருந்தது.இத்துடன் மகாவிஷ்ணுவைத் தவிர வேறு யாராலும் அவனை அழிக்க முடியாது என்ற ஆணவமும் உண்டு.

அவனது வலிமை கண்டு மூவுலகங்களும் நடுங்க வேண்டும் என்பதற்காகவே தேவலோகத்தின் மீது படையெடுத்தான் நரகாசுரன்.தேவேந்திரனை வென்று,அவனது இந்திரபதவியைக் கைப்பற்றியதோடு மட்டுமின்றி,வருணனின் வெண் கொற்றக் குடையையும்,இந்திரனின் தாயான அதிதியின் குண்டலங்களையும் கவர்ந்து கொண்டு விட்டான்.

நரகாசுரனின் தாய் பூமாதேவி அவனுக்கு எவ்வளவோ புத்திமதிகள் சொல்லிப் பார்த்தும் அவன் கேட்கவில்லை.அசுரனான அவன் எதிரிகளான தேவர்களை அடியோடு வெறுத்தான்.அவர்கள் நிம்மதியாய் இருக்கக் கூடாது என துரத்தித் துரத்தி அடித்தான்.மாட்டியவர்களை சித்தரவதைச் செய்தான்.சிக்கியவர்களைத் துரத்தித் துரத்தி விரட்டினான்..

அக்கிரமம் செய்பவர்களை ஆண்டவன் சகித்துக் கொள்வதும் இல்லை..அவர்களை விட்டு வைப்பதும் இல்லை.

அதனால்தான் கிருஷ்ணன் மனம் பொறுக்காமல் பொங்கி எழுந்தான்.தேரில் ஏறிச் சென்றால் கூட தாமதமாகும் என கருடன் மீதேறி பறந்தான்.அவனுடன் சத்யபாமாவும் சென்றாள்.

கிருஷ்ணன் நரகாசுரனின் நகரமான மிராக்யோதிஷபுரத்தை அடைந்தான்.அந்நகரம் பெரிய மதில்களுடன்,பலத்த கோட்டைகள் கொண்டு யாரும் நுழைய முடியாத அளவிற்கு அமைந்திருந்தது.அது மட்டுமின்றி ஐந்து தலைகள்  கொண்ட முராசுரன் என்பவன் அதைப் பாதுகாத்து வந்தான்.

கண்ணன் தன் பாஞ்சஜன்யம் எடுத்து, பகைவர்கள் நடுங்கும் படியாக முழங்கினான்.இதைக் கேட்ட முராசுரன், பெரும் கர்ஜனையுடன் கிருஷ்ணனைத் தாக்கினான்.ஐந்து வாய்கள் மூலம் அக்னியை உமிழ்ந்தான்.பலவித அஸ்திரங்கள் எய்து கிருஷ்ணனுடன் போரிட்டான்.கண்ணன் தொடர்ச்சியாக ஐந்து அஸ்திரங்களை விடுத்து அவனது ஐந்து தலைகளையும் அறுத்தெறிந்தான்.பின் தனது கதாயுதத்தால் நரகாசுரனின் கோட்டை மதில்களை தூள் தூளாக்கினான்.

அடுத்து முராசுரனின் ஏழு பிள்ளைகளும் ஒருவர் பின் ஒருவராக வந்து கண்ணனுடன்  போரிட்டனர்.அவர்கள் உபயோகித்த பாணங்களையெல்லாம் கண்ணன் பொடிப் பொடியாக்கினான்.வரிசையாக அவர்களை விழ்த்தி யமனுலகிற்கு அனுப்பி வைத்தான்.

முராசுரனும் அவன் புதல்வர்களும் படைகளும் அழிந்தது தெரிந்த நரகாசுரன், தன் அசுரப் படைகளுடன் ஆக்ரோஷமாக வெளிப்பட்டான்.சக்தி வாய்ந்த அஸ்திரங்களால் கிருஷ்ணனைத் தாக்கினான்.இருவருக்கும் இடையில் கடும் போர் மூண்டது.

கருடன் புயல் வேகத்தில் பறந்து சென்று நரகாசுரனின் படைக ளைத் தாக்கித் துன்புறுத்தினான்.அவன் யானைகளைத் தாக்கியதில்,அவை மிரண்டு திரும்பியபடி அசுரர் சேனையையே அழித்தன.

கிருஷ்ணன் நரகாசுரனின் வில், வாள் எல்லாவற்றையும் தாக்கி முறித்தான்.அசுரன் சூலாயுதத்தைச்  செலுத்த கண்ணன் தன் சுதர்சன சக்கரத்தை அவன் மீது ஏவினான். அது சூலாயுதத்தைத் தகர்த்து விட்டு, மேலும் சென்று நரகாசுரனின் தலையையும் துண்டித்து வீழ்த்தியது.

தேவர்கள் மகிழ்ச்சியடைந்து பூமாரி  பொழிந்தனர்.

நரகாசுரனின் தாய் பூமாதேவி, மகன் கவர்ந்து சென்ற வருணனின் குடை,அத்தியில் குண்டலங்கள் போன்றவற்றை கிருஷ்ணனிடம் சமர்ப்பித்தாள்.

கண்ணன் அவற்றைப் பெற்றுக் கொண்டு தேவலோகம் செல்ல முற்பட்ட போது, பதினாறாயிரம் அரச குமாரிகள் அவனது காலடியில் வந்து பணிந்தனர்.அத்தனைப் பேரையும் பல தேசங்களிலிருந்து நரகாசுரன் கடத்தி வைத்திருந்தான்.

"பகவானே! இனி நாங்கள் எங்கள் தேசத்திற்குச் செல்ல முடியாது.எங்கள் அனைவரையும் நீங்களே ஏற்றுக் கொண்டு அருள் புரிய வேண்டும்"என்றார்கள்.

கண்ணன் அவர்கள் அனைவரையும் பறக்கும் சிவிகைகளில் ஏற்றி,"எல்லோரும் துவாரகைக்குச் சென்று அங்கிருங்கள்.நான் வந்து உங்களைத் திருமணம் செய்து கொள்கிறேன்" என அனுப்பி வைத்தான்.

பின் , சத்யபாமாவுடன் புறப்பட்டு தேவலோகம் சென்றான்.இந்திரனிடம் கவர்ந்து சென்ற பொருள்களைக் கொடுத்தான்.சத்யபாமா தேவலோகத்தில் இருந்த பாரிஜாத மரத்தின் மீது ஆசை கொண்டாள். அவள் விருப்பத்தை அறிந்த கிருஷ்ணன், அம்மரத்தை துவாரகைக்குக் கொண்டு செல்ல வேருடன் பிடுங்கிக் கொண்டு கருடன் மீது ஏறினான்.

ஆனால் இந்திரனோ..சொர்க்கலோகத்தின் உடைமைகளை பூவுலகிற்கு எடுத்துச் செல்லக் கூடாது என தடுத்தான்,காவலர்களை அனுப்பி பாரிஜாத மரத்தை கிருஷ்ணனிடமிருந்து பிடுங்கச் சொன்னான்.

கிருஷ்ணன்...இந்திரனின் நன்றி மறந்தத் தன்மையை நினைத்து சிரித்தாலும்,காவலர்களையும், இந்திரனையும், மற்ற தேவர்களையும் தன் பாணத்தால் அடித்தான்.

அதன் பின் இந்திரனுக்கு புத்தி வர, பாரிஜாத மரத்துடன்..கிருஷ்ணனையும், சத்யபாமாவையும் வழியனுப்பி வைத்தான்.

துவாரகை திரும்பிய கண்ணன், நரகாசுரனிடம் இருந்து விடுவித்த பதினாறாயிரம் பெண்களையும்,பதினாறாயிரம் கிருஷ்ணன்களாக தானே மாறி மணம் புரிந்து கொண்டான்.ஒவ்வொருவர் வீட்டிலும் ஒவ்வொருவனாக சாதாரண பாமரனைப் போல குடும்பம் நடத்தலானான்.

இச்சமயம் பாண்டவர்களிடமிருந்து தூதுவன் ஒருவன் வந்தான்..

"மன்னர் தருமன்..அசுவமேத யாகம் நடத்த விரும்புகிறார்.தங்களின் யோசனையைக் கேட்பதற்காக உங்கள் வரவை அன்புடன் எதிர்பார்க்கிறார்"என்ற செய்தியை சொன்னான்.

அப்போது அதைக் கேட்டுக் கொண்டே நாரதர் அங்கு வந்தார்.

"அசுவமேதயாகமா? தருமர் நடத்துகிறாரா? நடக்காத காரியம்" என்றார் நாரதர்..கண்ணன் "ஏன்?" என வினவ..

"கண்ணா..ஒரு மன்னன் அசுவமேதயாகம் செய்ய விரும்பினால்..எல்லா தேசத்து மன்னர்களும் அவனை ரஜாதிராஜனாக ஒப்புக் கொள்ள வேண்டும்.அதை ஏற்க விரும்பாத மன்னர்களுடன் போரிட்டு வெல்ல வேண்டும்"

"ஆம்..ஆனால் அர்ஜுனன் ஒருவன் போதுமே! அனைத்து அரசர்களையும் ஒரு நாழிகையில் ஜெயித்து விடும் வீரனாயிற்றே!"

"ஆனால்..ஜராசந்தன் இருக்கின்றானே! அவனை யார் வெல்ல முடியும்?அத்துடன் அவன் நரமேதம் எனும் யாகத்தைச் செய்ய நிச்சயித்து இதுவரை எண்பத்தியாறு அரசர்களை வென்று சிறை பிடித்துள்ளான்.இன்னும் பதினான்கு வீரர்களை ஜெயித்துவிட்டால்..நூறுஅரசர்களை ருத்ரனுக்கு பலி கொடுத்து கட்டுக்கடங்காத சக்தியை பெற்று விடுவான்.ஏற்கனவே அவன் மூர்க்கன்.பின் அவனை யாரால் வெல்ல முடியும்" என்று சொன்ன நாரதர் வந்த காரியம் முடிந்து விட்டது எனக் கிளம்பினார்.

கிருஷ்ணன் ,தருமரிடம் இவ்விஷயத்தைச் சொன்னதும் தருமரும் யோசனையில் ஆழ்ந்தார்.

ஆனால்... அர்ஜுனனும், பீஷ்மரும் சோகத்தில் கொதித்தார்கள்.

"கண்ணா..ராஜசூய யாகம் செய்கிறோமோ இல்லையோ..ஜராசந்தனிடம் சிறைபட்டுள்ள அரசர்களை மீட்டு காப்பாற்றுவதற்காகவாது ஜராசந்தனைத் தோற்கடிக்க வேண்டும்" என்றான் அர்ஜுனன்.

"ஆம்..இப்போதே படை திரட்டிப் புறப்படுவோம்"என்றான் பீமன்.

"இல்லை பீமா..நேர் வழியில் மோதி ஜாரசந்தனை நாம் தோற்கடிக்க முடியாது.சூழ்ச்சியால்தான் வெல்ல முடியும்.ஜராசந்தனுக்கு பிராமணர்களிடம் விஸ்வாசம் அதிகம்.அவர்கள் எதைக் கேட்டாலும் தந்துவிடுவான்.நாம் அந்த பலவீனத்தைப் பயன்படுத்தி வெல்வோம்.நாம் மூவர் மட்டும் அந்தணர்கள் வேடம் போட்டு அவனிடம் செல்வோம்."என்று கிருஷ்ணன் சொல்ல..மூவரும் தங்களை மாற்றிக் கொண்டு..மகத நாட்டுக்குச் சென்று ஜராசந்தனை சந்தித்தனர்.

அந்தணர்கள் என்பதால் ஜராசந்தன் அவர்களை அன்புடன் வரவேற்றான்.ஆனால், வந்தவர்கள் உடலிலும்,கைகளிலும் வாள் பட்ட வடுக்கள் இருந்ததால்..அவர்கள் உண்மையில் அந்தணர்கள் அல்ல என அறிந்து ,மூவரையும் வணங்கி..

"அந்தணர்களே! நீங்கள் யார்.? வந்த நோக்கம் என்ன?என்னிடம் எதை நாடி வந்தீர்கள்?"எனக் கேட்டான்.

"மன்னா! நாங்கள் உன்னிடம் த்வந்த யுத்தத்தையே யாசிக்கிறோம்.எங்களுள் ஒருவருடன் நீ சண்டையிட வேண்டும்.இவர்கள் குந்தியின் மகன்கள்.இவன்..அர்ஜுனன், இவன் பீமன்..நான் இவர்களின் மாமன் மகன்..உனக்குப் பகைவன் கிருஷ்ணன்"என்றான் கண்ணன்.

இதைக் கேட்டதும் ஜராசந்தன் சிரித்தான்.

"நீங்கள் கேட்ட யுத்தத்தை நானும் தருகிறேன்.நீ எனக்கு பயந்து ஓடிய கோழை.உன்னுடன் யுத்தம் செய்வது எனக்கு அகௌரவம்.அர்ஜூனன் வயதில் சிறியவன்.ஆனால் பீமன் எனக்கு சமமான பலசாலி..எனவே த்வந்த யுத்தம் செய்கிறேன்.அவனை ஜெயித்து விட்டு, பின் உங்கள் இருவரையும் கொன்று விடுகிறேன்" என்றான்.

பின், பீமனுடன் சண்டையிடத் தயாரானான்.

அவனும், பீமனும் முதலில் கதாயுதத்தால் தாக்கிக் கொண்டார்கள்.கதைகள் முறிந்ததும் மல்யுத்தத்தில் இறங்கினர்.சமபலம் கொண்ட இருவரின் யுத்தம் பிரமிக்க வைத்தது.

ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டார்கள்.கட்டித் தழுவிக் குத்திக் கொண்டார்கள்.சுற்றிச் சுழன்ற அந்தப் போராட்டத்தின் முடிவில் பீமன், ஜரசாந்தனை கீழே வீழ்த்தி..அவனது இரு கால்களையும் பற்றி உடலை இரண்டாகக் கிழித்துப் போட்டான்.

என்ன அதிசயம்..

கிழித்துப் போட்ட ஜராசந்தனின் உடல் மீண்டும் ஒட்டிக் கொண்டது.

பீமனும், அர்ஜுனனும் ஆச்சரியமடைந்தனர்.கண்ணன் அதிசயிக்கவில்லை.

ஜராசந்தனின் உடல் தானே ஒட்டிக் கொண்டதற்குக் காரணம் இருந்தது.மகத மன்னனான பிருகத்ரதனுக்கு இரண்டு மனைவிகள்.இருவருக்கும் குழந்தைகள் இல்லை.அதனால் மனம் வருந்தினான்.அப்போது, சண்டகௌசிக் மகரிஷி என்பவர் அவனை சந்தித்து ஒரு பழத்தைக் கொடுத்தார்."இதை சாப்பிட்டால் உன் மனைவிக்கு குழந்தை பிறக்கும் என்றார்"

பிருகத்ரதன், ஒருவர் மட்டுமே சாப்பிட வேண்டிய அந்தக் கனியை இரு மனைவியினருக்கும் பகிர்ந்து கொடுத்தான்.

இருவரும் கர்ப்பமடைந்தனர்.ஆனால், பிறந்ததோ..இரண்டு துண்டான உடல்கள்.அந்த உடல் துண்டுகளை வருத்ததுடன் தூக்கி எறிந்தான்.

உயிரற்ற அந்தப் பிண்டங்களை "ஜரா" எனும் அரக்கி உண்ண எடுத்தாள்.அவள் அந்த இருபாதி உடல்களை ஒன்று சேர்த்தாள்.அந்த குழந்தை உடன் உயிர் பெற்றது.ஜராவால் உயிர் பெற்றதால் ஜராசந்தன் ஆயிற்று.

பீமன் ஜராசந்தனை மீண்டும்..மீண்டும் கிழித்துப் போட்டான்.உடல் சேர்ந்து கொள்வதால் செய்வதறியாது திகைத்தான்.

அப்போது கிருஷ்ணன் அருகே இருந்த புல்லை எடுத்து அதை சரிபாதியாக்கிக் கிழித்து..தலை மாற்றிப் போட்டான்.யுத்தம் செய்து கொண்டே அந்தக் குறிப்பைப் பார்த்த பீமன்..ஜராசந்தனை வீழ்த்தி,உடலைக் கிழித்து..இம்முறை அதை தலை மாறிப் போட்டான்.

ஜராசந்தனின் கிழிந்த உடல் ஒன்று சேர முடியாமல், செத்துப் போனான்.

பின், அவனால் சிறைபடுத்த பட்டிருந்த மன்னர்கள் விடுவிக்கப் பட்டனர்.

அதன்பின் இந்திரபிரஸ்தத்தில் ராஜசூய யாகம் சிறப்பாக நடைபெற்றது.உலகத்தில் அத்தனை அரசர்களும்,கௌரவர்களும், பீஷ்மர்,துரோணர்,கிருபாச்சாரியார் போன்ற பெரியோர்களும் கலந்து கொண்ட அந்த யாகத்தில் முதல் மரியாதை யாருக்குக் கொடுப்பது என்ற கேள்வி எழுந்தது.

அதனால், அங்கு பெரும் கலகம் விளைந்தது.மற்றொரு வதமும் நடந்தது.       



Friday, August 28, 2020

30 - கண்ணனும், எட்டு பட்டமகிஷிகளும்




துவாரகையில் கண்ணனுக்கு ஒரு காதல் கடிதம் வந்தது.

அதை விதர்ப்ப நாட்டு மன்னரின் ஒரே மகளான ருக்மிணி எழுதியிருந்தாள்.

மகாலட்சுமியின் அவதாரமாக பூவுலகில் பிறந்திருந்த அவள், கண்ணனைப் பற்றிக் கேள்விப்பட்ட நாளில் இருந்து அவன் மீது காதலாகித் தவித்தாள்.

விதர்ப்ப நாட்டு சபைக்கு வரும் பெரியோர்கள் கண்ணனைப் புகழ்வதையும்,அவனது சிறப்புகளை  விவரிப்பதையும் மெய் மறந்து கேட்டுக் கொண்டிருப்பாள்.தன் குலதெய்வமான கௌரியை,"கிருஷ்ணனையே எனக்குக் கணவனாக மணம் முடித்து விடு அம்மா" என தினசரி வேண்டுவாள்.

ருக்மிணியின் இந்த விருப்பத்தைக் கேட்ட  தந்தை பீஷ்மனும், தாயும்கூட ஏற்று கொண்டனர்.அவளின் ஐந்து அண்ணன்களான ருக்மி,ருக்மரதன்,ருக்மபாகு,ருக்மகேசன்,ருக்மமாலி என்பவர்களில் ருக்மியைத் தவிர மற்ற நான்கு அண்ணன்கள் கூட..அவள் கிருஷ்ணனை மணப்பதற்கு மறுப்பு சொல்லவில்லை.ஆனால் ருக்மிதான் ,ருக்மிணியின் விருப்பத்தை ஏற்று கொள்ள மறுத்தான்.

அரச மகளான தன் சகோதரி, மாடு மேய்க்கும் குலத்தில் பிறந்தவனை மணப்பது அவனுக்கு விருப்பமில்லை.அது மட்டுமின்றி..கிருஷ்ணனை எதிரியாகக் கருதும் தனது நண்பன் சிசுபாலனுக்கு அவனை மணமுடிக்க ஆசைப்பட்டான்.அத்துடனின்றி சிசுபாலனுக்கு ருக்மிணியை நிச்சயமும் செய்து விட்டான்.எவராலும் அவன் முடிவை மாற்ற முடியவில்லை.

ருக்மிணி கலங்கிப் போனாள்.மனதிற்குப் பிடிக்காத திருமணத்திலிருந்து தப்பவும்,இதயத்திற்குப் பிடித்தவனை மணக்கவும் என்ன வழி என யோசித்தவள்..தனக்கு நம்பிக்கையான ஒரு அந்தணனை, கிருஷ்ணன் மீதான தன் காதலைத் தெரிவிக்க அனுப்பி வைக்க முடிவு செய்தாள்.அந்த அந்தணரிடம் , கண்ணனை விரைவில் நடவடிக்கை எடுக்கச் சொல்லியும் கொல்லி அனுப்பிணாள்.

அந்த அந்தணன் துவாரகைக்குச் சென்று கிருஷ்ணனை சந்தித்து..ருக்மிணியின் காதலை அவள் வார்த்தைகளாலேயே சொல்லத் தொடங்கினார்..

"புவனசுந்தரா

மற்றவர்களின் புகழ்மொழியால் உன் குணாதிசியங்களைக் கேட்டு, மனத் தவிப்பைப் போக்கிக் கொண்டவள் நான்.உன் திருவுருவத்தை தரிசிப்பதற்கென்றே கண்களைப் பெற்ற பாக்கியசாலி நான்.நாணம் கடந்து உன்னையே நாடி நிற்கிறது என் மனம்.

நல்ல குலத்தில் உதித்து,நற்குணங்களில் சிறந்து விளங்குகிற எந்த இளம்பெண்தான் உன்னை விரும்பாதிருக்க முடியும்?

மனதிற்கு இதமானவரே! நீங்கள் என் கணவர் என இதயத்தில் எழுதி விட்டேன்.என்னை ஆட்கொண்டவரே! என் உயிர் தங்களுக்கே அர்ப்பணம்.எனவே உமக்கு உரியவளான என்னை நீங்கள் மனைவியாக ஏற்றுக் கொண்டு..அருள் புரிய வேண்டும்.சிங்கத்தின் இரையை நரி கவர்ந்து   கொள்வது போல..உமக்கே உரியவளான என்னை வேறு எவரும் தீண்டக்கூடாது.

நான் விரதங்கள் இருந்து..நாராயணனை பக்தியுடன் பூஜித்து அவரை மகிழச் செய்தது உண்மையானால்..கிருஷ்ணா நீயே வந்து என்னை மாலையிடு.நாளை எனக்குக் கல்யாணம் நிச்சயித்து இருக்கிறார்கள்.நீ சேனையுடன் வந்து எதிரிகளை சிதறடித்து..உமக்கு உரிய என்னை முறைப்படி கவர்ந்து சென்று மணந்து கொள்ளவும்.

கல்யாணத்துக்கு முன் தினம் எங்களது குலதெய்வமான பார்வதியை பூஜித்து,மணமகளை எல்லையில் இருக்கும் கோயிலுக்கு அழைத்துச் செல்வது சம்பிரதாயம்.அந்த சமயத்தில் நீ வந்து என்னைத் தூக்கிச் செல்லலாம்.

தாமரைக் கண்ணா..இது மட்டும் நடக்காமல் போய்..உன் திருவருளை நான் அடையாது போனால்..நிச்சயம் நான் உயிர் துறப்பேன்.பின் எத்தனைப் பிறவிகள் எடுத்தாலும் உனக்காகக் காத்திருப்பேன்.

ருக்மிணியின் கடிதத்தில் வெளிப்பட்ட அவளின் இதயம் தோய்ந்த அன்பை கண்ணன் உணர்ந்து கொண்டான்.அந்தணரை அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.

ருக்மிணியைக் கண்ணன் மணந்து கொள்ள அவனுக்கு எந்த தடையும் இல்லை.ஆனர்த்தம் தேசத்து அரசனான ரைவதனின் மகள் ரேவதி க்கும் பலராமனுக்கும் திருமணம் நடந்துவிட்டது.அடுத்தது கண்ணன் திருமணம்தான் என்ற போது சரியாக ருக்மிணியின் கடிதம் வந்து சேர்ந்தது.

கிருஷ்ணன், அந்தணருடன் ஒரே இரவில் விதர்ப்பதேசத்தின் குண்டினபுரத்திற்கு வந்தான்.அங்குதான் ருக்மிணிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.

ருக்மிணி கோவிலுக்குப் போகும் நேரம் வந்தது.ஆனாலும் இன்னமும் கிருஷ்ணனிடம் அனுப்பிய அந்தணர் வரவில்லையே எனத் தவித்தாள்.அந்நேரம் அங்கு வந்து சேர்ந்த அந்தணர், "அம்மா..உன்னை ஏற்றுக் கொண்டு அழைத்துப் போக கிருஷ்ணன் வந்து விட்டார்"என காதருகே ரகசியமாகக் கூறினார்.

ருக்மிணி உள்ளம் குளிர்ந்தாள்.நல்ல செய்தி சொன்ன அந்தணர்க்கு என்ன வெகுமதி தருவது எனத் தெரியாததால்..சட்டென அவரை விழுந்து வணங்கினாள் ருக்மிணி.

செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியின் அருளை வேண்டி மூவுலகமும் இருக்க,அந்த மகாலட்சுமியே அந்த அந்தணன் காலில் விழுந்தாள் என்றால் அதைவிட வேறு என்ன வெகுமதி வேண்டும் அவருக்கு.

ருக்மிணி சந்தோஷத்துடன் பார்வதி தேவி கோயிலுக்குச் சென்றாள்.தேவியை வணங்கி விட்டு வெளியே வந்தாள்.அங்கே தயாராக ரதத்தில் அமர்ந்திருந்த கண்ணன் அவளது கரம் பற்றி தன் ரதத்தில் ஏற்றிக் கொண்டான்.தேர் துவாரகைக்குப் புறப்பட்டது.

தோழியர்கள் பதறிப் போய் இத்தகவலை அரண்மனையில் தெரிவித்தனர்.

கண்ணன், ருக்மிணியைத் தூக்கிச் செல்வதை அறிந்த சிசுபாலன் ஆத்திரம் கொண்டான்.அவனும் ருக்மிணியின் அண்ணன் ருக்மியும் மற்றும் அவர்களைச் சேர்ந்தவர்களும் கிருஷ்ணனைப் பின் தொடர்ந்து துரத்தினார்கள்.

இந்நிலையில் கிருஷ்ணன் விதர்ப்ப தேசத்திற்கு தனியே சென்றுள்ளான் என அறிந்த பலராமன்,ஆபத்தை எதிர்பார்த்து தன் படையுடன் விரைந்து வந்தான்.எதிரே ருக்மிணியும்,கிருஷ்ணனையும்  பின்னால் துரத்தி வரும் பகைவர்களையும் கண்டான்.

நடுவழியிலேயே யுத்தம் மூண்டது.கிருஷ்ணனும், பலராமனும் சிசுபாலனையும் அவனுடன் வந்திருந்த அரசர்களையும் தோற்கடித்தனர்.அடித்துத் துரத்தினர்.ஆனால் ருக்மியோ விடாது மேலும் மேலும் தொடர்ந்து சண்டையிட்டான்.முடிவில் கண்ணன் ருக்மியின் தேரோட்டியையும்,தேர்க் குதிரையையும் கொன்றான்.ரதத்தை உடைத்து நொறுக்கினான்.ருக்மியை வாளால் வெட்டப் போனான்.அப்போது ருக்மிணி" அண்ணனை வெட்ட வேண்டாம்" என வேண்டினாள்.அதனால், கண்ணன் ருக்மியின் தலை முடியையும், மீசையையும் சிதைத்து அவனை விகாரப்படுத்தினான்.

அவமானமடைந்த ருக்மி, அதன் பிறகு விதர்ப்ப தேசம் செல்லாது, "போஜகடகம்" எனுன் நகரை நிர்மாணித்து அங்கெயே தங்கி விட்டான்.

கிருஷ்ணனுக்கும் ருக்மிணிக்கும் துவாரகையில் கோலாகலமாகத் திருமணம் நடந்தேறியது.கிருஷ்ணனின் திருமணக் கோலம் இந்த ருக்மிணியுடன் மட்டும் நிற்கவில்லை..பல்வேறு சூழ்நிலைகளில் பல்வேறு பெண்கள் அவன் மனைவியாயினர்.

இதில் கரடிராஜாவான ஜாம்பவானின் மகளை மணந்தது ஒரு சுவாரசியமான நிகழ்வு.

ஒருமுறை விபரீத பழி ஒன்று கண்ணன் மீது  ஏற்பட்டது..

சத்ராஜித் என்பவன் சூரியபகவானை  வழிபடும் சிறந்த பக்தன்.அவனது ஈடு இணையற்ற பக்தி கண்டு மகிழ்ந்த சூரியன் "சியமந்தகம்" எனும் அற்புத ரத்தினத்தை அவனுக்குப் பரிசாக அளித்தான்.

சியமந்தக மணியின் சக்தி அலாதியானது.அது இருக்கும் இடத்தில்   செல்வத்துக்கு பஞ்சம் இருக்காது .வியாதிகளோ..அகால மரணமோ ஏற்படாது.தீயசக்திகள் எதுவும் நெருங்க முடியாது.எப்போதும் சுபிட்சமே நிலவும்.

இத்தகைய மகிமை வாய்ந்த மணி, ஒரு தேசத்தின் அரசனிடம் இருந்தால் அந்தத் தேசமே சுபிட்சமாக இருக்கும் என நினைத்த கிருஷ்ணன்,உக்ரசேன மன்னனுக்கு அதைத் தருமாறு கூறினான்.

சத்ராஜித், கிருஷ்ணன் சொன்னதைத் தவறாகப் புரிந்து கொண்டு , தன்னிடம் அந்த மணியிருப்பதை  கண்ணன் பொறுக்காது, பொறாமையினால் இப்படிச் சொல்கிறான் என நினைத்து அதைத் தர மறுத்து விட்டான்.

ஆனால் விதி விளையாடியது.

ஒருநாள், சத்ராஜித்தின் தம்பி பிரசேனன் என்பவன் அந்தச் சியமந்தக மணியை அணிந்து கொண்டு காட்டுக்கு வேட்டையாடச் சென்றான்.கொடிய மனம் கொண்ட அவன், தேவையின்றி விலங்குகளின் குட்டிகளையெல்லாம் கொன்றபடி சென்றான்.கோபம் கொண்ட ஒரு தாய் சிங்கம் அவன் மீது பாய்ந்து கடித்துக் கொன்று விட்டது.அகால மரணமே நேராது என்று சொல்லப்பட்ட சியமந்தகமணி, பிரசேனனைப் பொறுத்தவரை அவன் செய்த பாவத்தால் அந்த சமயத்தில் சக்தி இழந்தது.சிங்கம் அம்மணியை எடுத்துக் கொண்டு போனது.அப்போது அந்த வழியே வந்த கரடி ராஜாவான ஜாம்பவான் சிங்கத்தின் வாயில் ஜொலிக்கும் மணியைப் பார்த்து, அதைப் பிடுங்கிக் கொண்டு தன் பிள்ளைக்கு விளையாட்டுப் பொருளாய் இருக்கட்டும் என அதை எடுத்துக் கொண்டு குகைக்குச் சென்றது.

வேட்டைக்குப் போன தன் தம்பி திரும்பாததால் சத்ராஜித், கிருஷ்ணன் மீது சந்தேகம் கொண்டான்.அவன் தன் தம்பியைக் கொன்று சியமந்தகமணியைப் பறித்திருப்பான் என்று கண்ணனின் மீது பழியை சுமத்தினான்.எல்லோரிடமும் அதைச் சொல்லி புலம்பினான்.

இதைக் கேட்ட கண்ணன், அதன் மீது சுமத்தப்பட்டப் பழியினைப் போக்க, முக்கியப் பிரமுகர்கள் சிலரை அழைத்துக் கொண்டு காட்டுக்குள் சென்றான்.அங்கு இறந்து கிடந்த பிரசேதனையும்..அங்கிருந்து சற்றுத் தொலைவில் செத்துக் கிடந்த சிங்கத்தையும் கண்டான்.பிரமுகர்கள் பிரசேதனன் சிங்கத்தால் அடிப்பட்டு செத்திருக்கிறான் என தெரிந்து கொண்டனர்.ஆனால்..சியமந்தகமணியைக் காணவில்லை.

அந்த மணியைத் தேடி அலைந்தனர்.ஒரு குகையைக் கண்டனர்.அது ஜாம்பவானின் குகைதான்.மற்றவர்களை வெளியே நிறுத்தி விட்டு..கண்ணன் மட்டும் குகைக்குள் சென்றான்.அங்கு சிறு குழந்தை ஒன்று சியமந்தகமணியை கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தது.கண்ணன் அக்குழந்தையை நெருங்கினான்.

அப்போது உள்ளிருந்து வந்த பணிப்பெண் ஒருத்தி,புதிய மனிதனைக் கண்டதும் அலறினாள்.அந்த சப்தம் கேட்டு வந்த ஜாம்பவான், குழந்தையின் பக்கத்தில் கண்ணனைக் கண்டதும் கோபத்துடன் அவனைத் தாக்கினான்.இருவருக்கும் நீண்ட நேரம் சண்டை நடந்தது. பலவானான ஜாம்பவான் சோர்வடைந்தான்."எளிதில் வெல்ல முடியாதவனான தன்னை இவ்வளவு நேரம் எதிர்ப்பவர் யாராக இருக்கும்"என எண்ணினான்.அது கண்ணன் தான் என உணர்ந்தான்.

"ராமா..என் இதயத்தினுள் வாழ்பவரே! நீங்களா இது?" என் மகிழ்ந்தான்.தன்னை அறிந்து கொண்டு விட்ட ஜாம்பவானை கண்ணன் தழுவிக் கொண்டான்.பின்,

"கரடி ராஜனே! இந்த சியமந்தக மணியினால் என் மீது வீண் பழி ஏற்பட்டுள்ளது.அதைப் போக்கிக் கொள்ளவே இங்கு வந்தேன்" என்றான்.

ஜாம்பவான் அந்த சியமந்தக மணியை மகிழ்ச்சியுடன் கண்ணனிடம் ஒப்படைத்தான்.பின், தன் மகளான ஜாம்பவதியையும் அவனுக்கு மணமகளாக அளித்து மகிழ்ந்தான்.

கண்ணன், ஜாம்பவதி, மற்றும் தன்னுடன் வந்த பிரமுகர்களுடன் நகரத்திற்கு வந்து,எல்லோர் முன்னிலையிலும் சத்ராஜித்திடம் மணியை ஒப்படைத்தான்.அது கிடைத்த விவரத்தையும் கூறினான்.

சத்ராஜித் மனம் வருந்தினான்."நிரபராதியான கிருஷ்ணன் மீது சந்தேகப்பட்டு அவனை அபவாதத்திற்கு உள்ளாக்கி விட்டோமே"என்ற குற்ற உணர்ச்சியால் வருந்தினான்.அதற்கான பிராயச்சித்தம் செய்ய தீர்மானித்தான்.

கிருஷ்ணரிடம், தனது மகள் சத்யபாமாவையும் அழைத்துச் சென்று  , சொன்னான்,"கிருஷ்ணா..என்னை மன்னித்துக் கொள்.உன்னைத் தவறாக நினைத்து வீண்பழி சுமத்தி விட்டேன்.அதற்கு பிராயச்சித்தமாக என் மகள் சத்யபாமாவை உனக்கு அளிக்கிறேன்.அவளை மனைவியாக மறுக்காமல் ஏற்றுக் கொள்" என்றான்.

அவனது வேண்டுகோளின்படி சத்யபாமாவை சந்தோஷத்துடன் ஏற்றுக் கொண்ட கிருஷ்ணன்,சியமந்தக மணியை சத்ராஜித்திடம் திருப்பிக் கொடுத்து விட்டான்.

இந்நிலையில், அவனுக்கு ஒருநாள் அஸ்தினாபுரத்திலிருந்து தகவல் வந்திருந்தது.காசியில் அரக்குமாளிகையில் சிக்கி மாண்டுவிட்டதாகக் கருதப்பட்ட பாண்டவர்கள் உயிரோடு வந்து விட்டார்கள் என்றும், திருதிராஷ்டிரன் அவர்களுக்கு ராஜ்ஜியத்தில் பாதியைத் தர ஒப்புக் கொண்டு விட்டதாகவும், கிருஷ்ணனை அங்கு வரவேண்டும் என தருமர் விருப்பட்டதாக தூதுவன் சொன்னான்

கிருஷ்ணன் புறப்பட்டுச் சென்றான்.பாண்டவர்களையும்,அத்தை குந்தியையும் சந்தித்துப் பேசினா ன்.பாண்டவர்களுக்குக் கொடுக்கப் பட்டிருந்த பகுதி முன் காலத்தில் காண்டவப் பிரஸ்தம் என்று அஸ்தினாபுரத்தின் தலைநகராக இருந்த பகுதி.அது இப்பொழுது பாழடைந்திருந்தது.

கிருஷ்ணன்..தேவலோக சிற்பியான விசுவகர்மாவை அழைத்து,புதிதாக ஒரு நகரை நிர்மாணித்தான்.தேவலோகத்திற்கு நிகராக இருந்தது அந்நகரம்.அதற்கு "இந்திரப் பிரஸ்தம்" எனப் பெயரிட்டான்.பாண்டவர்களுடன் சில நாட்கள் அங்கு தங்கியிருந்தான்.

அப்போது ஒருநாள் கிருஷ்ணனும், அர்ஜுனனும் வேட்டைக்குச் சென்றனர்.மிருகங்களைத் துரத்திக் களைத்துப் போய் நீர் அருந்த நதிக்கரைக்குப் போனார்கள்.அங்கு ஒரு அழகியப் பெண் நின்று கொண்டிருந்தாள்.அர்ஜுனன் "அவள் யார்?" என விசாரித்தான்.

அவள், "ஏன் பெயர் காளிந்தீ..சூரியனின் புத்ல்வி. பகவான் நாராயணனின் அவதாரமான கிருஷ்ணனை மனதிற்குள் விரும்பி, அவரையே திருமணம் செய்து கொள்ள தவமிருக்கின்றேன்" என்றாள்.

கிருஷ்ணன் அவளை ஏற்றுக் கொண்டான்.

மித்ரவிந்தை என்பவள் வசுதேவரின் தங்கை  மகள்.அவந்தி நாட்டு இளவரசி.அவளும் கிருஷ்ணனை விரும்பினாள்.அவள் அண்ணன்கள், கிருஷ்ணனை மணக்கக் கூடாது என தடுத்தனர்.தன்னை எதிர்த்த அவர்களை தோற்கடித்து மித்ரவிந்தையை தூக்கிச் சென்று மணந்தார்.

மித்ரவிந்தையைப் போலவே மற்றொரு அத்தை மகளான பத்ரை என்பவளையும்.மத்ர தேசத்து இளவரசியான லக்ஷ்மணை என்பவளையும் மணந்தான் கிருஷ்ணன்.

இந்த சமயத்தில் கோசல நாட்டு மன்னனானநக்னஜித் என்பவன் தன் மகள் நக்னஜிதேவி எனும் சத்யாவிற்கு ஒரு சுயம்வரப் போட்டி அறிவித்திருந்தார்."என்னிடம் உள்ள ஏழு முரட்டுக் காளைகளையும் எவன் வென்று வீழ்த்துகிறானோ..அவனுக்கே மகளை திருமணம் செய்து வைப்பேன்'என்ற நிபந்தனை வைத்தான்.

ஏராளமான இளைஞர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டு இறந்து போயிருந்தனர்.

இந்நிலையில் கண்ணனும் களத்தில் இறங்கினான்.

சீறிப்பாய்ந்த ஏழு காளைகளுக்கும் ..காளைக்கு ஒரு கண்ணனாக தன்னை ஏழு கண்ணன்களாக மாற்றிக் கொண்டான்.காளைகளின் கொம்பைப் பிடித்து இழுத்து, அலைக்கழித்து,அவற்றின் திமில்களைப் பிடித்து அழுத்தி எல்லா காளைகளையும் அடக்கினான். வெற்றி வீரனாக சத்யாவை அடைந்தான்..

இவ்விதமாக, ருக்மிணி,சத்யபாமா,ஜாம்பவதி,காளிந்தீ,சத்யா,பத்ரா,மித்ரவிந்தை,லக்ஷ்மண் என கண்ணனுக்கு எட்டு பேர் பட்டமகிஷி ஆயினர்.

எல்லோரையும் சரிசமமாக நேசித்த கண்ணன் அவர்களுடன் இன்பமாகக் காலம் கழித்தான்.ஆனால் பரமாத்மா..அப்படியே இருந்திட முடியுமா?

ஒருநாள் அழுது புலம்பியபடியே இந்திரன் ஓடி வந்தான்.

"கோவிந்தா...கோபாலா..காப்பாற்றுங்கள்..காப்பாற்றுங்கள்"என்றான்.

"இந்திரா..எதற்காக இந்த பதற்றம்?" என்றான் கண்ணன்.

"பூமாதேவியின் மகன் என் இந்திரப் பதவியைப் பறித்துக் கொண்டு விரட்டி விட்டான்.தேவர்களையும், ரிஷிகளையும் துன்புறுத்துகிறான்.அவனது கொடுமை தாங்க முடியவில்லை.நீங்கள் தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்"

ஆபத்பாந்தவன் புறப்பட்டான்.

ஆம்..யார் அந்த பூமாதேவியின் மகன்...?

அவன் தான் நரகாசுரன்.


Wednesday, August 26, 2020

29 - ஜராசந்தன்




மகதநாட்டு மன்னன் ஜராசந்தன் கோபத்தின் உச்சியில் இருந்தான்.

அவனின் இரண்டு மகள்களான அஸ்தியும்,பிராப்தியும் கண்ணெதிரே கணவனை இழந்து நின்ற காட்சி ..மனதை வருத்தியது.

மதுராபுரி மன்னன் கம்சனுக்குத்தான்..அவனது இரண்டு மகள்களையும் திருமணம் செய்து தந்திருந்தான் ஜராசந்தன்.கண்ணன் கம்சனைக் கொன்றதால்,துயரும், வேதனையும், கண்ணீருமாக நிற்கும் மகள்களின் அவலம்..அவனை கண்ணன் மேல் கோபம் கொள்ள வைத்தது.

இரண்டு இடையச்சிறுவர்கள் என் மாப்பிள்ளையைக் கொன்றார்களா?ஆடு மேய்ப்பவர்கள், என் மகள்களின் தாலியை அறுபட வைத்தார்களா? பழி வாங்காமல் விட மாட்டேன்.அந்த இரண்டு சிறுவர்களையும் என் கைகளாலேயே கொன்று, யாதவ குலத்தையே ஒழிப்பேன்..என முழங்கினான்.

பெரும்படையுடன் மதுராபுரியை முற்றுகையிட்டான்.

ஜராசந்தனின் லட்சக்கணக்கான வீரர்களைக் கொண்ட  படையைப் பார்த்ததுமே கிருஷ்ணன் மனதிற்குள் உற்சாகமானான்.அவதார நோக்கத்திற்கான காலம் வந்து விட்டது என மகிழ்ந்தான்.பலராமனிடம் சொன்னான்.

"அண்ணா..உங்கள் வீரத்துக்கு..பெரும் தீனியுடன் வந்திருக்கிறான் ஜராசந்தன்.இந்த மதுராபுரி நகரையும்..குடிமக்களையும் காக்கும் பொறுப்பு இனி உங்களுக்குத்தான்" என்றான்.

"ஜராசந்தனையும், அவன் படையையும் வெல்வேன்"எனச் சொன்ன பலராமனுடன் கிருஷ்ணனும் புறப்பட..மதுராபுரி படைகள், ஜராசந்தனின் படைகள் மீது பாய்ந்து துவம்சம் செய்தன.பலராமன், கிருஷ்ணன் தந்த உற்சகத்தில் மதுராபுரி வீரர்கள் ஒவ்வொரு பத்து வீரர்களுக்கு சமாகப் போரிட்டனர்.

பலராமனின் தாக்குதலால், ஜராசந்தனின் வில் முறிக்கப்பட்டது.வாள் உடைபட்டு, தேரை இழந்து தெருவில் நின்றான் .பலராமன் அவனை வருணபாசத்தால் கட்டிப் போட்டான்.பின், கிருஷ்ணன் பலராமனிடம் சொல்ல ஜராசந்தனை விடுவித்தான்.

அவமானப்பட்டு, தலை குனிந்து நாடு திரும்பிய ஜராசந்தன் மனதில் வன்மம் அதிகரித்தது.

எதிரியான ஜராசந்தனை அழிக்காமல் அவனை ஏன் கண்ணன் விடுவிக்கச் சொன்னான் என பலராமனுக்குப் புரியவில்லை.

"அண்ணா..ஜராசந்தனை கொல்வதைவிட, அவனது சேனைகளை அழிப்பதுதான் நம் அவதார நோக்கத்திற்கு பலம் சேர்க்கும்.ஜராசந்தனை உயிருடன் விட்டால் ,அவன் மீண்டும்...படைகளைத் திரட்டிக் கொண்டு வருவான்.நமக்கு பூமியின் பாரத்தைக் குறைப்பது சுலபமாக இருக்கும்"என சிரித்தான் கண்ணன்.

கிருஷ்ணன் எதிர்பார்த்தது போல மீண்டும் படையினைத் திரட்டிக் கொண்டு போனான் ஜராசந்தன்.இம்முறையும் அவன் படைகளை அழித்து அவனை விரட்டி அடித்தார்கள்.அப்போதும் ஜராசந்தன் அடங்கவில்லை.சில நாட்களிலேயே மீண்டும் போருக்கு வந்தான்.மீண்டும் தோற்கடிக்கப் பட்டான்.இப்படி ஒருமுறை..இருமுறைகள்அல்ல பதினேழு முறைகள் போர்  ந்டத்தித் தோற்றான்.

ஆனாலும் சலிக்காமல் பதினெட்டாம் முறை படை திரட்டி மதுராபுரியை தாக்க முயன்றான்

அதே சமயம் மதுராபுரி நோக்கி மற்றொரு ஆபத்தினையும் அனுப்பி வைத்தார் நாரதர்.

அந்த ஆபத்தின் பெயர் காலயவனன்.

காலயவனன் ஒரு முரட்டு அரக்கன்.கொரூர புத்தி கொண்டவன்.மிகப் பெரிய படைபலம் கொண்டவன்.உலகையே தன் காலடியின் கீழ் கொண்டு வரும் பேராசை மிக்கவன்.

கோடிக்கணக்கான வீரர்களைக் கொண்ட தனது படைபலத்தால், கண்ணில் படும் ராஜ்ஜியங்களை எல்லாம் தாக்கி அடிமைப்படுத்தினான்.அந்த நாட்டு மக்களைக் கொடுமைப்படுத்தி, கொள்ளை அடித்தான்.நகரங்களை தீ வைத்துக் கொளுத்தினான். 

அவனை எதிர் கொள்ள முடியாமல் மன்னர்கள் பலரும் தோற்றுபோய் தலை வணங்கினர்.பலர் அவனுடன் சமாதானம் செய்து கொண்டனர்.இதனாலேயே காலயவனன் ஆணவம் கொண்டான்.பலத்திலும், வீரத்திலும் வல்லவனான தன்னை வீழ்த்த யாருமில்லை என மார் தட்டினான்.

இவன் பகவானின் கையில் சிக்க வேண்டிய பூச்சி என எண்ணினார் நரதர்.

அவனிடம் சென்று, "காலயவனா! நீ மா பெரும் வீரன்.ஆனாலும் மதுராபுரியில் கிருஷ்ணன் பெரிய பலசாலியாம்.மல்லர்களையும்..அவ்வளவு ஏன்..யானையைக் கூட தன் கையினாலேயே குத்திக் கிழித்தவனாம்.அவனை யாரும் வெல்ல முடியாது என்கிறார்கள்.காலயவன் வந்தாலும் அவனிடம் தோற்றுப் போவான்..என்கிறார்கள்."என்றார்.

அவர் எதை எண்ணி இப்படிப் பேசினாரோ..அந்த எண்ணம் நிறைவேறியது..

"நாரதா..நல்லது.அந்த கிருஷ்ணனை வெற்றி கொண்ட பிறகு உங்களுக்குத் தெரிவிக்கிறேன்"என்றவன் அப்போதே படையுடன் கிளம்பினான் மதுராபுரிக்கு.

பலராமன் ,கிருஷ்ணனிடம் கவலையுடன் கேட்டான்..

"கிருஷ்ணா..ஒரு பக்கம் ஜராசந்தன்.மறுபுறம் காலயவனன்.இருவருக்கும் இடையில் மதுராபுரி.மத்தளம் போல மாட்டிக் கொண்டு விட்டது..என்ன செய்யலாம்?"

இது குறித்து முன்னமேயே யோசித்து வைத்திருந்த கண்ணன், "அண்ணா..இந்த சிக்கலான சூழ்நிலையில் இரண்டு பக்கங்களிலிருந்தும் தாக்கப்படுவோமாயின்..மதுராபுரி அழிவது உறுதி.மதுராபுரி மக்களை ஆபத்திலிருந்து காக்க வேண்டுமானால் உடனடியாக இப்போது வெளியேறி வேறு எங்கேனும் குடியேற வேண்டும் "என்றான்.

மேலும் கண்ணன் சொன்னான்,"கடலுக்கு நடுவே..ஒரு நகரை உருவாக்கி மதுராபுரியை அங்குக் கொண்டு சேர்க்கலாம்.பின் திரும்பி வந்து எதிரிகளைப் பார்த்துக் கொள்ளலாம்"

கண்ணனின் யோசனை பலராமனுக்கும் பிடித்திருந்தது.உடனே தேவசிற்பியான விசுவகர்மாவைக் கொண்டு..கடல் நடுவே ஒரு நகரத்தை உண்டாக்கினான் கண்ணன்.தன் மாயசக்தியால் மதுராபுரி மக்களை அந்நகருக்குக் கொண்டு சென்றான்.அந்நகருக்கு துவாரகை என்றும் பெயரிட்டான்.

பின் துவாரகையைக் காக்கும் பொறுப்பை பலராமனிடம் விட்டுவிட் டு மதுராபுரிக்கு வந்தான் கிருஷ்ணன்.காலயவனன் முற்றுகையிட்டிருந்த வடக்கு வாசலைத் திறந்து கொண்டு நிராயுதபாணியாக வெளிப்பட்டான்.

காலயவனன் அவனை ஆச்சரியமாகப் பார்த்தன."இவன்தான் கண்ணனா..ஏதும் ஆயுதங்கள் இன்றி ஏன் வருகிறான்?நேருக்கு நேர் மோதும் எண்ணமோ?அப்படியாயின் நானும் ஆயுதம் ஏதும் ஏந்தாமல் இவனிடம் போர் புரிவேன்"என எண்ணியபடியே..தானும் தேரிலிருந்து இறங்கி கிருஷ்ணனை நோக்கி வந்தான்.

"கிருஷ்ணன் முதலில் தாக்குவானா? அல்லது..நாம் அவனைத் தாக்குவதா?"ஏன யோசித்தபடி நடந்த காலயவனன் ஆச்சரியமும்..அதிர்ச்சியும் அடைந்தான்.

அவன் கொஞ்சமும் எதிர்பாராதபடி,ஓடத் தொடங்கினான் கிருஷ்ணன்.எதிர்பாரா ஏமாற்றத்தால் கோபம் கொண்ட காலயவனன்  கிருஷ்ணனைப் பின் தொடர்ந்து ஓடினான்.வெகுநேரம் ஓடிக் கொண்டிருந்த கிருஷ்ணன் ஒரு மலையின் மீது ஏறி அங்கிருந்த குகைக்குள் சென்று மறைந்தான்.

"இனி, இந்த கோழை என்னிடமிருந்து தப்ப முடியாது.குகைக்குள் வைத்தே அவனை நான் கொன்றுவிடுவேன்"என்றபடியே..காலயவனனும் கண்ணனைப் பின் தொடர்ந்து குகைக்குள் சென்றான்.உள்ளே இருள் மண்டிக் கிடந்தது.தட்டுத்தடுமாறி நடந்தான்.கண்கள் இருட்டுக்குப் பழகியப் பின்னர்..சற்று தூரத்தில் யாரோ படுத்திருப்பது தெரிந்ததும்..அவனுக்கு கோபம் ஏற்பட்டது.

மாபெரும் வீரனான தன்னை இத்தனை தூரம் மூச்சிறைக்க ஓடவிட்டு..இங்கே வந்து நிம்மதியாகப் படுத்துக் கொண்டு விட்டானே..என்று சினத்துடன் ஓங்கி ஒரு உதை விட்டான்.படுத்திருந்தவன் உறக்கம் கலைந்து..கண் விழித்தான்.எதிரே நின்றிருந்த காலயவனனைப் பார்த்தான்.அவ்வளவுதான்..காலயவனன் எரிந்து சாம்பலானான்.

காலயவனை..எரித்து சாம்பலாக்கியவன் முசுகுந்தன்.

இஷ்வாகு குலத்தில் தோன்றிய முசுகுந்தன், முன்பொரு சமயம் ,தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நடந்த போரில் தேவர்கள் சார்பில் போரிட்டான்.பின் முருகப்பெருமான் சேனாதிபதியானதும், முசுகுந்தன் பூமிக்குத் திரும்பி விட்டான்.பூமியில் அதற்குள் தலைமுறைகள் கடந்திருந்ததால்..அவனுடன் வாழ்ந்தவர்கள் யாரும் இப்போது இல்லை.

பலவருடங்கள் உறங்காமல் போய் விட்டதால்,யுத்தம் செய்து களைத்திருந்த முசுகுந்தான்..யாருடைய தொந்தரவும் இல்லாமல் உறங்க வேண்டும் என விரும்பினான்.அதன்படியே..தேவர்கள் இந்தக் குகையைக் காண்பித்து..அங்கு அவன் ஆயிரம் ஆண்டுகள் தூங்கலாம் என்றும்..அவனை யாராவது தூக்கத்திலிருந்து எழுப்பினால், அவர்கள் முசுகுந்தனின் அக்கினிப் பார்வையால் பொசுங்கிப் போவார்கள் என்று வரம் அளித்துவிட்டு சென்றிருந்தனர்.

கலாயவனன், முசுகுந்தனை..கிருஷ்ணன் என நினைத்து காலால் உதைத்து அவனை எழுப்ப, அவனைப் பார்த்தான் முசுகுந்தன்.அவன் பொசுங்கிப் போனான் .

முசுகுந்தனுக்கு கண்ணன் தரிசனம் தந்து "பக்தியில் சிறந்தவனான நீ..உரிய காலத்தில் என்னை வந்து அடைவாய்" என ஆசிர்வதித்தார்.

முசுகுந்தன் அங்கிருந்து புறப்பட்டு,பதரிகாசிரம் சென்று..நாராயணனை நோக்கி தவம் செய்யத் தொடங்கினான்.

கிருஷ்ணன் மீண்டும் மதுராபுரி சென்று, பலராமனுடன் சேர்ந்து காலயவனனின் கோடிக்கணக்கான வீரர்களையும் போரிட்டுக் கொன்றான்.

அப்போது ஜராசந்தன் பதினெட்டாம் முறையாக, தன் படைகளுடன் வந்து, பலராம, கிருஷ்ணன் முன் நின்றான்.பலராமனும், கிருஷ்ணனும் அவனது படையை எதிர்க்க முடியாதவர்கள் போல பின் வாங்கி ஓடினர்.

ஜராசந்தன் வெற்றிப் பெருமிதத்துடன், அவர்களைத் துரத்த இருவரும் ப்ரவர்ஷணம் எனும் மலையின் மீது ஓடி ஒளிந்து கொண்டனர்.ராம கிருஷ்ணர்களைக் கண்டு பிடிக்க முடியாத ஜராசந்தன் அந்த மலையைச் சுற்றிலும் கட்டைகளை அடுக்கி தீ மூட்டினான்.அந்தத் தீயில் ராம..கிருஷ்ணர்கள் அழிந்து போயிருப்பார்கள் எனும் எண்ணத்தோடு நாடு திரும்பினான்.

ஆனால்..பலராமனும், கிருஷ்ணனும் மலையிலிருந்து கீழே குதித்து பத்திரமாக துவாரகை சென்று சேர்ந்து விட்டார்கள் என அப்போது அவன் அறியவில்லை.

Tuesday, August 25, 2020

28 -குருதட்சணை




வசுதேவரும், தேவகியும் வருடக்கணக்கில் பிரிந்திருந்த குழந்தைகளைப் பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டனர்.பலராமனையும், கிருஷ்ணனையும் கேட்டுக் கேட்டு அவர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்தனர்.

வசுதேவர் இரு பிள்ளைகளுக்கும் முதல் காரியமாகக் கல்வி கற்க ஏற்பாடு செய்தார்.

"பலராமா, கிருஷ்ணா..மாடுகள், கன்றுகள் மேய்ப்பதிலேயே உங்கள் பெரும்பான்மைக் காலம் ஓடிவிட்டது.உரிய காலத்தில் கல்வி கற்க முடியாமல் போனது.இப்போதும் இன்னமும் காலம் இருக்கிறது.கல்வி கற்க நீங்கள் குருகுலம் செல்ல வேண்டும்.ஒரு சிறந்த குருவை உங்களுக்கு ஏற்பாடு செய்கிறேன்" என்றார்.

"அப்படியே ஆகட்டும் தந்தையே" என்றார்கள் அவர்கள்.

சாந்தீபினி முனிவர்க்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை.பலராமன், கிருஷ்ணன் சாதாரண மனிதர்கள் இல்லை.அவதார நாயகர்கள்...என்பதை அவரது உள்ளுணர்வால் அறிந்திருந்தார்.அந்த திவ்ய புருஷர்களுக்கு தான் குருவாக இருந்து கல்வி  கற்றுத்தர வேண்டுமா? என திகைத்துப் போனார்.

"குருவே நமஸ்காரம்" என இருவரும் அவர் தாள் பணிந்து வணங்கினர்.சுய நினைவிற்கு வந்தவர் அவர்களுக்கு ஆசி கூறினார்.

"மகரிஷியே! இவர்கள் இனி உங்களது பிள்ளைகள்.இவர்களைக் கல்வியில் சிறந்தவர்கள் ஆக்குவது உங்களது பொறுப்பு" என்ற வசுதேவர், அவர்களை அவரிடம் ஒப்படைத்து விட்டு விடை பெற்று கொண்டார்.

சாந்தீபினி..அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த சில நாட்களிலேயே புரிந்து கொண்டார்.

பெயருக்குத்தான் தான் குரு.பலராம, கிருஷ்ணனுக்கு எந்த குருவும் தேவையில்லை.அவர்கள் அத்தனை சூட்டிகையாக இருந்தனர்.ஒருமுறை சொன்னதுமே, புரிந்து, அதை நன்றாக உள் வாங்கிக் கொண்டனர்.நுணூக்கமாக உணர்ந்து அதன் பொருளை தெள்ளத் தெளிவாக விளக்கினர்.

இப்படி சீடர்கள் கிடைத்ததற்கு சாந்தீபினி பெருமிதம் அடைந்தார்.அறுபத்துநான்கு கலைகளையும்..அறுபத்து நான்கு நாட்களில் கற்றுத் தேர்ந்தனர் கிருஷ்ணனும், பலராமனும்.

"அற்புதம்..மிக அற்புதம்..கிருஷ்ணா..பலராமா...இதுவரை உங்களைப் போன்ற சீடர்களை நான் பார்த்ததேயில்லை.வாழிய நீங்கள்" என வாழ்த்தினார் சாந்தீபினி.

"குருவே! தங்கள் அருளால் நிறைந்த கல்வியினைப் பெற்றோம்.அதற்கான குருதட்சணை செலுத்த விரும்புகிறோம்.என்ன வேண்டுமோ..கேளுங்கள்" என்றான் கண்ணன்.

ஆசிரமவாசியான சாந்தீபினி ஆசைகள் ஏதும் இல்லாதவர்.தேவையே அற்றவர்.என்ன கேட்பது எனத் தெரியாமல் திகைத்தார்.அப்போது அவரது மனைவி ..அவரை உள்ளே அழைத்தார்.ஏதோ சொன்னார்.

பின்னர் அவர் தயங்கபடியே அவர்கள் முன் வந்து நின்றார்.அவர் தயக்கத்தைப் பார்த்த கண்ணன்,"குருவே..தயங்காமல் எது வேண்டுமோ கேளுங்கள்.தரத் தயாராய் இருக்கிறோம்" என்றான்.

"கிருஷ்ணா..பலராமா..நீங்கள் இருவரும் தெய்வீக புருஷர்கள்.அதனால் மனிதர்கள் சக்திக்கு மீறிய ஒன்றை உங்களிடம் கேட்கிறேன்..முடியுமானால் நிறைவேற்றுங்கள்.இல்லையானாலும் மனம் வருந்த வேண்டாம்'

"உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதே எங்கள் பாக்கியம்"

"எனது மகன் சில வருடங்களுக்கு முன் பிரபாஸ க்ஷேத்திரத்தில் கடலில் மூழ்கி இறந்து விட்டான்.அவனை உங்களால் மீட்டுத் தர முடியும் என என் மனைவியின் எண்ணம்.என் விருப்பமும் அதுவே"என்றார்.

பலராம..கிருஷ்ணன் உடனே புறப்பட்டு பிரபாஸ க்ஷேத்திரம் வந்தனர்.கடலரசனை அழைத்து, கடலில் மூழ்கி இறந்த குரு புத்திரனின் உடலை கொண்டு வருமாறுக் கேட்டனர்.

கடலரசன், "கண்ணா..குருபுத்திரன் என்னிடத்தில் இல்லை.பிள்ளைகளைக் கடத்திப் போகும்..சங்கின்  உடலைக் கொண்ட பஞ்சஜனன் என்னும் அரக்கன் ஒருவேளை உங்கள் குருவின் புதல்வனைக் கடத்திப் போயிருக்கலாம்"என்றான்.

கண்ணன் ,கடலுக்குள் புகுந்து..அரக்கனைத் தேடிப் பிடித்துக் கொன்றான்..ஆனால் குருவின் புதல்வன் அங்கும் இல்லை.பஞ்சஜனன் எனும் அரக்கன் உடலிலிருந்து சங்கை கண்ணன் எடுத்துக் கொண்டான்.

பின் அங்கிருந்து புறப்பட்டு, எமனுடைய நகரான "ஸ்ம்யமஸி" பட்டிணத்துக்குச் சென்றான்.கிங்கரர்கள் அவர்கள் வருகையை எமனுக்குத் தெரிவிக்க கண்ணனை எதிர்கொண்டு வரவேற்று உபசரித்தான்.

"எனது குரு சாந்தீபினியின் மகன் கடலில் மூழ்கி மாண்டுவிட்டான்.குரு தட்சணையாக அவர் தன் மகனைக் கேட்பதால் அவனைத் தேடிக் கொண்டு இங்கு வந்தேன்" என்றான் கண்ணன்.

எமன் ஒரு வார்த்தையும் பேசாமல் குரு புத்திரனை கொண்டு வந்து ஒப்படைத்தான்.

கிருஷ்ணனும், பலராமனும் குரு புத்திரனுடன் சாந்தீபினியிடம் வந்தனர்.

சாந்திபீனியாலும், அவ்ருடைய மனைவியினாலும் இதை நம்ப முடியவில்லை.சில நொடிகள் ஸ்தம்பித்துப் போனார்கள்.மகனை வாரித் தழுவிக் கொண்டனர்.ஆனந்தக் கண்ணீர் விட்டனர்.கிருஷ்ணனையும், பலராமனையும் வாழ்த்தி ஆசிர்வதித்தனர்.

இருவரும் மீண்டும் மதுராபுரி திரும்பினர்.

கல்வியில் சிறந்தவர்களாக,ஆயுதப் பயிற்சியில் திறமையுள்ளவர்களாக,சாஸ்திரங்களை உணர்ந்தவர்களாகத் திரும்பிய மகன்களைக் கண்டு வசுதேவரும்,தேவகியும் மன்ம மகிழ்ந்து போனார்கள்.

தாய் தந்தையர்க்கு சந்தோஷத்தைத் தந்த கிருஷ்ணன்...தொலை தூரத்தில் தன்னை நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கும் ஜீவன்களை நினைத்துப் பார்க்கவும் தயங்கவில்லை.

பிருந்தாவனத்தில் நந்கோபரும், யசோதையும் ,கோபியர்களும் தன்னை நினைத்து வருந்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஒரு புறமிருக்க,அஸ்தினாபுரத்தில் அத்தை குந்தியும் தன்னையே நினைத்துக் கொண்டு ஏதோ வேதனையில் தவித்துக் கொண்டிருக்கின்றாள் என்று அவளுக்குத் தெரிந்தது.

விருஷ்ணி வம்ச மந்திரியான உத்தவரை பிருந்தாவனத்திற்கும், அக்ரூரரை அஸ்தினாபுரத்துக்கும் தன் சார்பாக அனுப்பி வைத்தான்.

உத்தவர் பிருத்தாவனத்திற்குச் சென்றார்.நந்தகோபரும், யசோதையும் கண்ணனின் நினைவாகவே துயரத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்டார்.அவர்களுக்கு ஆறுதல் கூறினார்."நந்தகோபரே! கண்ணனை சிறு வயது முதல் வளர்த்து வந்த பாக்கியம் பெற்றவர்கள் நீங்கள்.உங்களைக் கண்டதாலேயே பாக்கியம் பெற்றவன் நான்.பகவான் நாராயணனின் அவதாரமான கிருஷ்ணன்..விரைவில் உங்களைக் காண வருவார்.தங்களுக்கும்யசோதைக்கும் இதைத் தெரிவிக்கச் சொன்னார்.தங்கள் நலனையும் கண்டறிந்து வரச்சொல்லி என்னை அனுப்பியுள்ளார்"என ஆறுதல் கூறினார்.பின் யசோதையிடமும், நந்தகோபரிடமும் கண்ணனின் பால்ய லீலைகளைக் கேட்டு பரவசமானார்.

நந்தகோபரின் வீட்டு வாசலில் தேர் நிற்பதைக் கண்டு, கண்ணனை அழைத்துப்போன அக்ரூரர், மீண்டும் கொண்டுவிட வந்திருப்பாரோ என ஆவலுடன் கோபியர்கள் அனைவரும் வந்து சூழ்ந்து கொண்டனர்.கண்ணன் வரவில்லை என்றதும் ஏமாற்றம் அடைந்தனர்.

கண்ணனின் தூதுவராக உத்தவர் வந்துள்ளார் எனத் தெரிந்ததும்..அவரிடம் தங்கள் மனக் குமுறலைத் தெரிவித்தனர்.

"கண்ணனின் தூதுவரே! எங்கள் கண்ணன் எப்படியிருக்கிறான்.அவனுக்கென்ன..மதுராபுரியில் ஏராளமான அழகிகள் இருப்பார்கள்.மன்மதன் போல சந்தோசமாக அவன் இருப்பான்.இங்கே..நாங்கள் தான் அவனை நினைத்தே உருகிக் கொண்டிருக்கிறோம்.தனது தாய் தந்தையருக்குத் தகவல் சொல்லி அனுப்பியவன்,எங்களை எங்கே நினைக்கப்போகிறான்.அவன் எங்களை மறந்திருப்பானோ?" என புலம்பினர்.

உத்தவர் பிரம்மித்துப் போனார்.கண்ணன் மீது கொண்ட காதலால், வெட்கத்தை விட்டு புலம்பி..அவனை உரிமையுடன் கடிந்து கொள்ளும் கோபியர்கள் அன்பு அவரை நெக்குருக வைத்தது.அதை மனம் திறந்து அவர்களிடம் சொல்லவும் செய்தார்..

"கோபியர்களே! நீங்கள் கண்ணன் மீது கொண்டுள்ள எல்லையில்லா காதல் என்னை பிரமிக்க வைக்கிறது.கிருஷ்ணரிடம் மனதைப் பறிக்கொடுத்து ..அவனால் ஆண்டு கொள்ளப்பட்ட உங்களுக்கு உலகில் அடைய வேறேதும் இல்லை.பிறவியின் பயன் முழுதும் அடைந்தவர்கள் நீங்கள்..உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.எத்தனை அன்பை பகவான் விரும்புவானோ..அந்த அன்பின் வடிவம் நீங்கள்" என்று அவர்களிடம் சொல்லி விட்டு..கண்ணன் அவர்களுக்கு சொல்லியனுப்பிய செய்தியைக் கூறினார்..

"கோபியர்களே! நான் ஒரு போதும் உங்களை விட்டு பிரியப் போவதில்லை.எங்கும்  நிறைந்திருக்கும் காற்றினைப் போல..நான் அனைத்து இடத்திலும் நிறந்தவன்.என்னை நினைத்து..என்னிடம் உங்கள் மனதை நிலை நிறுத்த வேண்டும் என்பதற்காகவே நான் உங்களை விட்டு விலகி நிற்கிறேன்.நான் உங்கள் அருகில் இருப்பதை விட, வெகு தூரத்தில் இருக்கும் போதுதான் என் நினைவு உங்களிடத்தில் பசுமையாக நிலைத்திருக்கும்"

கண்ணனின் இந்த செய்தியால், கோபியர்கள் மன சாந்தியடைந்தனர்.உத்தவரிடம், கண்ணனின் லீலா வினோதங்களைச் சொல்வதிலேயே ஆத்ம திருப்தி அடைந்தனர்.சில நாட்கள் உத்தவர், கோபியர்கள்  மன ஆறுதலுக்காக அவர்களுடன் தங்கி விட்டு மதுராபுரி திரும்பினார்.கண்ணனிடம் கோபியர்களின் பக்தியைப் பற்றிச் சொல்லி, அவர்கள் இருக்கும் திசை நோக்கி வணங்கினார்.

உத்தவர் சென்ற பிருந்தாவனம் பக்திபாவத்தில் சிறந்தது என்றால், அக்ரூரர் சென்றிருந்த அஸ்தினாபுரமோ விரோதபாவத்தில் இருந்தது.

துரியோதனன் தலைமையில் கௌரவர்கள், பாண்டவர்களை வெறுத்து, அவர்களுக்கு பல விதத்திலும் தீங்கிழைத்துக் கொண்டிருந்தனர். இதைக் கண்டிக்க வேண்டிய அஸ்தினாபுர மன்னன் திருதிராஷ்டிரனோ, துரியோதனன் மீது கொண்ட பாசத்தால் வாய்மூடிக் கிடந்தான்.

குந்தி அனைத்தையும் அக்ரூரரிடம் கூறி புலம்பினாள்.பின், "அக்ரூரரே! நான் நம்பியிருப்பது என் சகோதரன் வசுதேவனின் பிள்ளைகளான பலராமனையும், கிருஷ்ணனையும்தான்.அவர்கள் அவதரித்திருப்பது தீயோரை அழித்து நல்லவர்களை காப்பதற்காகவே1 அவர்கள்தான் இங்கு வந்து எங்கள் துன்பத்தைப் போக்க வேண்டும்"என்றாள்.

அக்ரூரர் மதுராபுரிக்குத் திரும்பி ..குந்தி சொன்ன  தகவல்களையும்..அஸ்தினாபுரத்தில் தான் பார்த்த நிலைமையையும் கண்ணனிடம் சொல்ல...கண்ணன் அஸ்தினாபுரம் செல்லலாம் என தீர்மானித்த போது..அவனை குறுக்கே வழி மறைத்தது ஒரு பெரும் போர்.

Sunday, August 23, 2020

27 - கம்சன் இறந்தான்




மதுராபுரியில் பலமான பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.உயர்ந்த மதில்கள்,உச்சியில் ஆயுதம் தாங்கிய வீரர்கள்,நகரைச் சுற்றி அகலமான அகழி..ஆயிரக் கணக்கில் முதலைகள் என எளிதில் எதிரிகள் நெருங்க முடியாதபடி இருந்தன.

அக்ரூரருடன் வந்த பலராமனும், கிருஷ்ணனும் நகரை நெருங்கியதும் தேரிலிருந்து இறங்கிக் கொண்டார்கள்.

"ஆக்ரூரரே! நம்முடன் புறப்பட்ட தந்தையும், மற்ற கோபர்களூம் நகருக்கு வெளியே உபவனத்தில் தங்கியிருக்கும் இடத்திற்கேச் சென்று அவர்களுடன் நாங்களும் தங்கிக் கொள்கிறோம்.நீங்கள் நகருக்குள் செல்லுங்கள்.எங்கள் அன்பு மாமனிடம் நாங்கள் வந்து விட்டதாகத் தகவல் சொல்லி விடுங்கள்.நாளை அவரை சந்திக்கிறோம்" என்றனர்.

"கண்ணா..ஒரு சிறு வேண்டுகோள்.நீ எங்கள் இல்லத்திற்கு வந்து என்னை புனிதப்படுத்த வேண்டும் "என்றார் அக்ரூரர்.

"கண்டிப்பாக வந்த காரியம் முடிந்ததும் வருகிறேன்"என்றான் கண்ணன்.

கண்ணன் வாக்குறுதி அளிக்க,சந்தோஷமான அக்ரூரர், கம்சனிடம் அவர்கள் வந்து விட்ட செய்தியினைச் சொல்லி விட்டு தன் இல்லம் சென்றார்.

கம்சன் அடுத்தநாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

உபவனத்தில், தந்தையரும் மற்ற கோபியர்களும் தங்கியிருந்த இடம் வந்தார்கள் பலராமனும், கண்ணனும்.பின், மதுராபுரியைச் சுற்றிப் பார்க்கப் புறப்படனர்.

நகரத்தின் அழகையும்,அலங்காரத்தையும் ,செல்வச் செழிப்பையும் கண்டு ரசித்தனர்.அப்போது ஒரு சலவைத் தொழிலாளி எதிர்ப்பட்டான்.அவனுடைய மூட்டையில் ராஜ உடைகள் இருந்தன.

அதைப் பார்த்த கண்ணன், "உன் மூட்டையிலிருந்து நாங்கள் அணிந்து கொள்ள ஒரு நல்ல ஆடையைத் தருவாயா?"என்றான்.

"நீங்கள் இப்படி கேட்டதற்கே உங்கள் தலையை சீவி விடுவார் மன்னன்.இது அரசருக்கான் உடைகள்.இதை அணிய உங்களுக்குத் தகுதியில்லை.உடனே இந்த இடத்தை விட்டுச் செல்லுங்கள்" என்றான் சலவைத் தொழிலாளி.

பலராமன் கோபத்துடன் அவனை அறைந்து கீழே தள்ளினான்.பின் , அவனும், கிருஷ்ணனும் மூட்டையிலிருந்த ஆடைகளை எடுத்துத் தோழர்களுக்குக் கொடுத்துவிட்டு ,தாங்களும் அணிந்து கொண்டனர்.

சிறிது தூரம் சென்றதும்,பூமாலைகள் கட்டுபவனான சுதாமா என்பவனைக் கண்டனர்.கிருஷ்ண பலராமனின் தெய்வாம்ச சொரூபத்தில் கவரப்பட்ட சுதாமா..இருவருக்கும் சந்தனமும்,புஷ்ப மாலைகளையும் அளித்தான்.சுதாமாவை அன்புடன் தழுவி ஆசிர்வதித்தான் கண்ணன்.

அங்கிருந்து நகர்ந்ததும் திரிவிக்ரா என்ற அரண்மனை தாதி.உடலில் மூன்று கோணல்கள் கொண்ட கூனி.அவள் கம்சனுக்காக சந்தனம் போண்ற வாசனைத் திரவியங்களை தயாரித்து எடுத்துச் சென்று கொண்டிருந்தாள்..

நறுமணப்பிரியன் கிருஷ்ணன் அவளிடம், "அம்மா..இந்த வாசனைத் திரவியங்களை எனக்குத் தருவாயா?" என்றான்.

உடனே அவள் மகிழ்ச்சியுடன், "உங்களுக்கு இல்லாத வாசனைப் பூச்சா?இதைப் பூசிக் கொள்ள தகுதியான்வர்கள் நீங்கள் தான்"என்று சொல்லி,ஆசையுடன் அவைகளை அள்ளிக் கொடுத்தாள்.

திருவிக்ராவின் அன்பால் மனம் மகிழ்ந்த கிருஷ்ணன், அவளது கூனைப் போக்க எண்ணி,அவளின் கால்களை தன் விரல்களால் அழுத்திக் கொண்டு,தன் மிருதுவான கையால் அவளது முகவாயைப் பற்றி லேசாகத் தூக்கினான்.திரிவிக்ராவின் மூன்று கோணல்களும் மறைந்து போயின.கூன் அகன்று, அழகிய இளம் பெண்ணாக மாறினாள் அவள்.

ஆனந்தக் கண்ணீருடன் . கிருஷ்ணன் முன் மண்டியிட்டு,அவன் பாதங்களைத் தொட்டு வணங்கினாள்.கண்ணன் அவளை ஆசிர்வதித்து விட்டுப் புறப்பட்டான்.

கம்சன் ஏற்பாடு செய்திருந்த "தனுர் யாகம்"நடைபெறும் இடத்திற்கு வந்தனர் இருவரும்.

யாகசாலையில் பலவிதமான ரத்தினங்கள் பதிக்கப்பட்ட வில் ஒன்று அலங்கரிக்கப்பட்டு ஜொலித்துக் கொண்டிருந்தது.வில்லைச் சுற்றி நிறைய காவலாளிகள் பாதுகாப்பாக நின்று கொண்டிருந்தனர்.

கிருஷ்ணன், அந்த வில்லை எடுக்க முயல..காவலர்கள் கோபத்துடன் தடுத்தனர்.பலராமன் அவர்களை எதிர்த்துத் தள்ளிவிட, கிருஷ்ணன் வில்லை எடுத்தான்.நாணேற்றினான்.அது படீரென சத்தத்துடன் முறிந்தது.

அதைக் கண்ட காவலர்கள், கோபத்துடன் பலராமன்,கிருஷ்ணனைத் தாக்கத் தொடங்கினார்கள்.முறிந்த வில் துண்டுகளை வைத்தே பலராமனும், கிருஷ்ணனும் அவர்களைத் தாக்கி வீழ்த்தினார்கள்.பின் உபவனத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.இரவாகி விட்டதால், சாப்பிட்டு முடித்து நிம்மதியாக உறங்கினர்.

ஆனால் கம்சனோ உறக்கம் வராமல் தவித்தான்.சிறுவர்கள் வில்லை முறித்த செய்தி அவனுக்குத் தெரிய வந்தது.மேலும் சலவைத் தொழிலாளியிடமிருந்து அரசு உடைகளை அவர்கள் அபகரித்ததையும் கேள்விப் பட்டான்.ஆத்திரத்தில் நரம்புகள் தெறித்துவிடும் போல இருந்தது...உடனே ஆத்திரமாகவும் இருந்தது.

பூதனை முதல் கேசி வரை வென்ற இச்சிறுவர்கள் மிகவும் பலசாலிகள்.அப்படியானால் இந்த எட்டாவது பிள்ளை என் உயிருக்கு எமன் என்பது உண்மையாகி விடுமோ? என எண்ணினான்.

அதற்கேற்றாற் போல ..அவனைச் சுற்றி தீய சகுனங்கள் ஏராளமாகத் தென்பட்டன.கண்ணாடியில் தலையில்லாமல் உடல் மட்டும் தென்பட்டது.அவன் நிழலில் ஓட்டைகள் தெரிந்தது.ஆவிகள் தவழ்வது போலவும்..கழுதையின் மீது ஊர்வலம் செல்வது போலவும்..கனவுகள் வந்தன.

இரவு முடிந்து விடிந்தது கூடத் தெரியாமல் அமர்ந்திருந்தவன், பின் சுதாரித்துக் கொண்டு...தான் நியமித்திருந்த மல்லர்களை அழைத்தான்.குவாலயாபீட யானையை தயாராக நிறுத்தி வைக்கச் சொல்லி விட்டு,மல்லர்களையும் எச்சரித்து அனுப்பினான்.பின், தானும் குளித்து முடித்துப் புறப்பட்டான்.

மன்றம் நிரம்பியிருந்தது.சானூரன்,முஷ்டிகன்,கூடன்,சாலன்,தோசலன் போன்ற புகழ் பெற்ற மல்யுத்த வீரர்கள் வரிசையாக அணி வகுத்து நின்றனர்.பேரிகைகள் ஒலிக்க..கம்சன் வந்து சிம்மாசனத்தில் அமர்ந்தான்.நந்தகோபரும் மற்ற கோபர்களும் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் சென்று அமர்ந்தனர்.

அப்போது, பலராமனும், கிருஷ்ணனும் மல்யுத்த அரங்கிற்கு வருவதற்காக நுழைவாயிலுக்கு வந்தனர்.அங்கே தோரணவாயிலில் குவாலய பீடம் என்ற பட்டத்து யானை வழி மறித்து நின்று கொண்டிருந்தது.

'பாகனே! யானையை விலக்கி நிறுத்து.நாங்கள் உள்ளே செல்ல வேண்டும்" என்றான் கண்ணன்.

"நீங்கள் உள்ளே செல்ல வேண்டிய அவசியமே இல்லை.மேலே யமனுலகம் செல்லுங்கள்.."என்றவாறே,யானையை பலராம கிருஷ்ணர்கள் மீது ஏவினான் பாகன்.

யானை தன் துதிக்கையால் கிருஷ்ணனை வளைத்துப் பிடிக்க முனைந்தது.அதன் பிடியிலிருந்து தப்பிய கிருஷ்ணன்..யானையின் கால்களுக்குள் புகுந்து கொண்டு போக்குக் காட்டினான்.அதன் வாலை இழுத்து வேதனை தந்தான்.இந்த விதமாக யானையைக் களைப்புறச் செய்தான்.பின் திடீரென அதன் முன் நின்று, கைகளால் முகத்தில் பலமாக அறைந்தான்.

யானை கோபத்துடன் கிருஷ்ணனை தன் தந்தத்தால் குத்த பாய்ந்து வந்தது.கண்ணன் அதன் தந்தங்களைப் பிடித்து, வேகமாக இழுத்துத் தள்ளினான்.பின், இரண்டு தந்தங்களையும் அடியோடு பிடுங்கி,அதனாலேயே யானையையும், பானைப் பாகனையும் குத்திக் கொன்றான்.

யானையின் வேதனை அலறலைக் கேட்டு, கிருஷ்ணன் அதைக் கொன்று விடடன் என்பதை கம்சன் உணர்ந்து கொண்டான்.திகிலடைந்தான்.ஆனாலும் பலசாலியான மல்லர்களைப் பார்த்து நிம்மதியடைந்தான்.

அப்போது பட்டத்து யானையின் இரண்டு தந்தங்களையும் ரத்தம் சொட்ட தோளில் போட்டுக் கொண்டு மல்யுத்த அரங்கினுள் நுழைந்தனர் பலராமனும்..கிருஷ்ணனும்.

எல்லோரது பார்வையும் அவர்கள் மீது பதிந்தது.ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொருவித உணர்வு..

"இடி போன்றவர்கள் இவர்கள்" என மல்லர்கள் நினைத்தனர்
"போற்றத்தக்க புருஷோத்தமன்"என்றனர் மக்கள்
"மன்மத அவதாரம்" என எண்ணினர் இளம் பெண்கள்
"தீயவர்களின் எதிரி"என்றனர் கோபர்கள்
குழந்தைகள்" என்றனர் பெற்றோர்கள்
கம்சன் மட்டுமே.."எனது யமன்" என எண்ணினான்.

இப்படி ஒவ்வொருவரும்..ஒவ்வொரு விதமாக நினைக்க வைத்த பிருந்தாவன நாயகன் கிருஷ்ணனும், பலராமனும் மன்றத்தின் மையப் பகுதிக்கு வந்து நின்றனர்.

கண்ணனை அழகை ரசித்த மக்கள், அவனது வசீகரத்தால் கவரப்பட்டார்கள்.அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தனர்.அவர்கள் கவனத்தைக் கலைப்பது போல தாரை,தப்பட்டை,பேரிகைகள் முழங்கின.

மல்யுத்தவீரன் சாணூரன் உரத்தக் குரலில் கிருஷ்ணனை அழைத்தான்

"கிருஷ்ணா....நீயும் உன் சகோதரன் பலராமனும் யுத்தத்தில் வல்லவர்கள் என எங்கள் மன்னர் கேள்விப்பட்டார்.உங்கள் வீரத்தைக் கண்டு மகிழவே உங்களை இங்கு வரவழைத்திருக்கிறார்.எங்களுடன் மல்யுத்தம் செய்து மன்னரின் விருப்பத்தை நிறைவேற்று"

கிருஷ்ணன் சொன்னான்...

"மன்னனின் விருப்பத்தை நிறைவேற்றவே விரும்புகிறோம்.சிறுவர்களாகிய நாங்கள் எங்களுக்கு சமமானவர்களுடன் போட்டியிடத் தயாராயுள்ளோம்."

சாணூரன் கோபமாக"பட்டத்துயானையான குவாலயா பீடத்தையே கொன்ற நீங்களா சிறுவர்கள்?தோற்றத்தில் சிறுவர்களாக இருந்தாலும் ஆயிரம் யானை பலமுள்ளவர்கள் நீங்கள் என எனக்குத் தெரியும்.எனவே எங்களுடன் போட்டியிட தகுதியானவர்கள்தான் நீங்கள் என நான் அறிவேன்.நீ என்னுடன் சண்டையிடு.பலராமன் முஷ்டிகனோடு மோதட்டும்" என்றான்.

அடுத்து அங்கே மல்யுத்தம் தொடங்கியது.

மெல்லிய பூவினை பிய்த்தெறிய புயல் காற்று வீசுவது போல இருந்தது போல உணர்ந்தனர் மக்கள்.

சாணுரனும் அப்படியே நினைத்தான்.கிருஷ்ணனின் உயிரை சுலபாக பறித்து,உதிர்த்து விடலாம் என எண்ணினான்.ஆனால் அது முடியவில்லை.வலிமையாகப் பற்றிய கிருஷ்ணனின் கைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியவில்லை.இருவரும் கட்டிப் புரண்டு உருண்டார்கள்.ஒருவருக்கொருவர் சளைக்கவில்லை.

பலராமனுடன் மோதிய முஷ்டிகனும் அவதிப்பட்டான்.பலராமனின் பிடியில் சிக்கி மூச்சுத் திணறினான்.விடுவித்துக் கொள்ள போராடி கண்கள் பிதுங்கினான்.

ராட்சஷ பலம் கொண்டவர்களுடன் பால் மாறா சிறுவர்களை சண்டையிடச் சொல்கிறார்களே..இது அநியாய யுத்தம்"என எண்ணிய மக்கள்,யுத்தம் போகும் போக்கினைக் கண்டு மகிழ்ந்து..உற்சாகத்துடன் கூக்குரலிட்டனர்.

கிருஷ்ணன், சாணூரன் எதிர்பாராத சமயத்தில் சட்டென அவனை தலைக்கு மேல் தூக்கி வேகமாக சுழற்றி தரையில் மடாலென  அறைந்தான்.அந்த நொடியே சாணூரன் ரத்தம் கக்கி உயிரை விட்டான்.

பலராமன் தன் முஷ்டியினாலேயே, முஷ்டிகனை இடைவிடாமல் குத்திக் கொன்றான்.

 அடுத்தடுத்து சவால் விட்டு வந்த சாலன்,கூடன்,தோசலன் ஆகிய அனைத்து மல்யுத்த வீரர்களையும், பலராமனும், கிருஷ்ணனும் போராடி வீழ்த்தினர்.இதைப்பார்த்துக் கொண்டிருந்த மற்ற மல்யுத்த வீரர்கள் பயந்து ஓடி ஒளிந்தனர்.

அரங்கம் முழுதும் மக்கள் ஆரவாரம்.

கம்சனின் முகம் கோபத்தில் சிவக்க..அதிர்ச்சியும்..ஏமாற்றமும் அவனை கொலைவெறி கொள்ள வைத்தது.தன் காவலாளிகளை அழைத்து கட்டளையிட்டான்.

"அந்த் ராம கிருஷ்ணர்களை அடித்து விரட்டுங்கள்.நந்தகோபனைப் பிடித்து சிறையில் அடையுங்கள்.சிறையிலிருக்கும் வசுதேவனைக் கொன்று விடுங்கள்.யாதவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யுங்கள்"என அடுக்கடுக்காகக் கட்டளையிட்டான்.

இதைக் கேட்ட  கண்ணன் கோபத்துடன் பாய்ந்து கம்சனின் சிம்மாசனத்தின் மீது குதித்தான்.

இதை எதிர்பாராத கம்சன், திகைத்துப் போய் கண்ணனை வெட்ட வாளினை எடுத்தான்.கண்ணன் அந்தக் கையினைப் பற்றி முறித்தான்.கம்சனின் தலைமுடியை இழுத்து..சிம்மாசன மேடையிலிருந்து கீழே தள்ளினான்.

கிரீடம் கழன்று தனியே தரையில் விழ, மல்லாந்து விழுந்து கிடந்தான் கம்சன்.கண்ணன் மேடைமேலிருந்து அவன் மார்பின் மீது மிகுந்த வேகத்துடன் இடிபோல இறங்கினான்.அந்த வேகத்திலேயே கம்சனின் உயிர் அவன் உடலை விட்டுப் பிரிந்தது.யாரால் தனக்கு மரணம் என நடுங்கிக் கொண்டிருந்தானோ..அந்த கண்ணனிடமே அவன் ஜீவன் சென்று அடைக்கலமானது.

அண்ணன் கம்சனின் மரணத்தால் கோபம் அடைந்த அவனது எட்டுச் சகோதரர்களூம் கண்ணனைத் தாக்க வந்தனர்.அவர்கள் அத்தனைப் பேரையும் பலராமன் அடுத்தடுத்துக் கொன்றான்.

தேவர்கள் மலர் தூவ..கந்தர்வர்கள் கானம் பாட..அப்சரஸ்கள் நடனமாட..ரிஷிகள் மனம் குளிர்ந்தனர்.

பகவானின் அவதாரக் காரியம் ஒன்று நடந்து முடிந்தது.

கம்சன் இறந்ததும் மதுராபுரியில் சிறையில் இருந்த தேவகியும், வசுதேவரும் விடுவிக்கப்பட்டனர்.பலராமனும், கிருஷ்ணனும் அவர்களின் பாதம் பணிந்து வணங்கினார்கள்.ஆனால் தேவகியும், வசுதேவரும்..பிள்ளைகளை நெருங்காமல் தயங்கி நின்றனர்.பலராம கிருஷ்ணர்கள் பகவானின் அவதாரங்கள் என அவர்கள் உணர்ந்திருந்தனர்.உரிமையுட ன் அவர்களை தழுவிட முடியாமல் தயங்கினர்.

பெற்றோர்களின் தயக்கத்தை உணர்ந்த கிருஷ்ணன், தனது மாயையால் அந்த நிலையை மறக்கடித்தான்.அதன் பிறகு வசுதேவரும், தேவகியும் குழந்தைகளை தழுவி உச்சி முகர்ந்தனர்.

மதுராபுரியின் மன்னனாக , கிருஷ்ணனுக்கு பட்டாபிஷேகம் செய்ய அனைவரும் விரும்பினர்.கிருஷ்ணன் அன்புடன் மறுத்து, கம்சனின் தந்தையான உக்ரசேனனை மீண்டும் மதுராபுரியின் மன்னன் ஆக்கினான்.

நந்தகோபர் பிருந்தாவனம் புறப்படத் தயரானார்.கண்ணன் அவரிடம்"தந்தையே நீங்களும்,அன்னையரும் பேரன்புடனும், பாசத்துடனும் எங்களை வளர்த்தீர்கள்.இப்போது இத்தனை காலம் பிரிந்திருந்த தேவகி,வசுதேவருடன் சில காலம் தங்கி இருக்க விரும்புகிறோம்.நீங்கள் பிருந்தாவனம் சென்று அன்னையரிடம் தெரிவியுங்கள்" என்றான்

வண்டி புறப்பட்டது.பார்வையிலிருந்து மறையும் வரை பலராம கிருஷ்ணங்களை கண்ணிமைக்காது பார்த்துக் கொண்டே சென்றார் நந்தகோபர்.பிரிவின் வலி அவர் மனத்தை வருத்தியது.


Saturday, August 22, 2020

26 - கண்ணன் மதுராபுரி வந்தான்




பிருந்தாவனத்தில் பலராமனும், கிருஷ்ணனும் தெய்வாம்சம் பொருந்தியவர்கள் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ளத்தொடங்கினர்.தொடர்ந்து பிருந்தாவனவாசிகளைக் காப்பாற்றியிருந்தார்கள் இருவரும்.

முதல் ஆபத்து , ஒரு பாம்பு ரூபத்தில் வந்தது..

மகரிஷிகளின் சாபம் என்று பாம்பாக உலவி வந்த சுதர்சனன் எனும் வித்யாதரன்,"அம்பிகாவனம்" எனும் இடத்திற்கு நந்தகோபர் சென்றபோது,அவர் காலைப் பற்றி விழுங்க முயற்சித்தான்.அப்போது நந்தகோபருடன் சென்றவர்கள் நெருப்புக் கட்டையால் தாக்கியும் விடவில்லை பாம்பு.

ஓடிவந்த கிருஷ்ணன் தனது காலால் பாம்பை ஓங்கி மிதித்தான்.உடன் பாம்பு,வித்யாதரனாக உருமாறியது.நந்தகோபர் தப்பித்தார்.பகவானின் திருவடி ஸ்பரிசத்தில் சாபவிமோசனம் பெற்ற சுதர்சனன் , கண்ணனை வணங்கி, நன்றி தெரிவித்து விட்டு விண்ணுலகம் சென்றான்.

அடுத்த ஆபத்து கோபியர்களுக்கு வந்தது..

ஒரு இரவு நேரத்தில், பலராமனும், கிருஷ்ணனும் கோபிகைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்.கண்ணன் குழலிசைக்க,கோபியர்கள் நடனமாடிக் கொண்டிருந்த நேரத்தில்,அங்கு வந்தான் சங்கசூடன் என்பவன்.அவன் குபேரனின் பணியாள்.

கிருஷ்ணனும், பலராமனும், இசையில் மெய் மறந்து இருந்த நேரத்தில், கோபிகைகளை வெகு தூரத்துக்குக் கடத்திக் கொண்டு போய் விட்டான்.பின், கோபியர்களின் அலறல் சத்தம் கேட்ட பலராமனும், கிருஷ்ணனும் சங்கசூடனைத் துரத்திச் சென்று அவர்களை மீட்டனர்.பலராமன், கோபியர்களுக்குத் துணையாக நிற்க,தப்பித்து ஓடிய சங்கசூடனை துரத்திச் சென்று வீழ்த்தினான் கண்ணன்.பின் சங்கசூடனின் தலையில் இருந்த ரத்தினத்தை அறுத்து எடுத்து ,பலராமனுக்கு அதை அன்பளிப்பாகக் கொடுத்தான்.

இது நடந்து சில நாட்களுக்குள், காளைமாடு உருவில் வந்தது ஒரு ஆபத்து.அரிஷ்டன் எனும் அரக்கன் பெரும் காளைமாட்டு உருவத்தில் .புயல் வேகத்தில் பாய்ந்து வந்தான்.தன் கொம்புகளால் ,அவன் பூமியைக் கிழித்த போது..புழுதியுடன் நெருப்புப் பொறியும் பறந்தது.சீரும் உறுமலுடன் அவன் பிருந்தாவனவாசிகளைத் துரத்தினான்.

கோபர்களும்..கோபியர்களும் குழந்தைகளுடன் அலறியடித்து ஓடினார்கள்."கிருஷ்ணா..கிருஷ்ணா" எனக் கூச்சலிட்டனர்.

கிருஷ்ணன் அங்கு வந்தான்..அரிஷ்டன் தன் மூச்சுக் காற்றில் அனல் பறக்க,தலை தாழ்த்தி..கூரிய கொம்புகளால் கிருஷ்ணனின் குடலைக் குத்திக் கிழித்தெறிய பாய்ந்தபடி வந்தான்.

கண்ணன், அவனின் கூரிய கொம்புகளை இறுகப் பற்றினான்.அவனைக் கீழேத் தள்ளினான்.உடல்மீது கால் வைத்து அழுத்தினான்.

அரிஷ்டன், கிருஷ்ணனின் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ளப் போராடினான்.தலையை உயர்த்தி முட்ட முயற்சித்தான்.பலமனைத்தையும் திரட்டி, கண்ணனை வீழ்த்த முயன்று தோற்றான்.

கண்ணன் கொம்புகளைப் பிடுங்கினான்.முஷ்டியால் ஓங்கி முகத்தில் குத்தினான்.அடுத்தநொடி அரக்கன் ரத்தம் கக்கி மாண்டுப் போனான்.

கோபர்களும், கோபியர்களும் கண்ணனை பாராட்டிக் கொண்டாடினார்கள்.பிருந்தாவனத்துக்கு இனி ஒரு பயமும் இல்லை என நிம்மதி அடைந்தனர்.

ஆனால், கண்ணனிடம் கொண்ட பயத்தால் நிம்மதியிழந்தான் கம்சன்.மதுராபுரியில் கம்சனுக்கு வந்த தகவல்கள் எல்லாம் கசப்பானவையாகவே இருந்தன.

அவன் அனுப்பி வைத்த அசுரர்கள் எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக மரணமடைந்ததை அறிந்த போது ,அவனால் அதை நம்ப முடியவில்லை.சாதாரண சிறுவர்களைக் கொல்ல முடியவில்லையெனில் அதில் ஏதோ சதி இருப்பதாக யூகித்தான்.ஆனால் அது என்ன என அவனுக்குப் புரியவில்லை.

அதை நாரதர் புரிய வைத்தார்..

"என்ன கம்சா! ஏதோ கவலையில் இருப்பது போலத் தெரிகிறது" என்றபடியே அரண்மனைக்குள் நுழைந்தார் ஒருநாள்.

"கவலையா..எனக்கா..அப்படி எதுவுமில்லையே!"

"கம்சா...உன்னைப் போன்றவர்களின் நலனில் அக்கறைக் கொண்டவன் நான்.என்னிடமே நீ மறைக்கிறாய்.அதனால் பரவாயில்லை.ஆனால், நான் எனக்குத் தெரிந்த உண்மையை உன்னிடம் மறைக்க விரும்பவில்லை.ஆனால், அதைச் சொல்ல இதுதான் சரியான சமயமா?எனத் தெரியவில்லை" என்றார்.

ஒரு விஷயத்தை சொல்ல வந்துவிட்டு, சொல்லாமல் போனால் எதிராளியின் மனம் எப்படி தவிக்கும்..அது போன்ற நிலையில் கம்சன் இருந்ததால், ஆர்வத்துடன்"நாரதா..என்ன விஷயம் சொல்லுங்கள்"என்றான்.

"சொல்கிறேன்..அதற்குமுன் நீ எதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தாய்" எனச் சொல்"

"பிருந்தாவனப் பிரதேசத்தில், அடுத்தடுத்து அசுரர்கள்,யாரோ சில பாலகர்களால் கொல்லப்படுவதாகத் தகவல் வந்து கொண்டிருக்கிறது.சாதாரண இடையச் சிறுவர்களால் இது எப்படி முடிகிறது எனத் தெரியவில்லை"

"கம்சா! நானும் அதைச் சொல்லத்தான் நினைத்தேன்.நீ நினைப்பது போல பிருந்தாவனச் சிறுவர்கள்....சாதாரணச் சிறுவர்கள் இல்லை..தேவகியின் ஏழாவது கர்ப்பம் கலைந்து போகவில்லை.அந்த ஏழாவது கர்ப்பமாக இருந்தவன் தான் ரோஹிணியின் மகனான பலராமன்.தேவகியின் எட்டாவது குழந்தையாகப் பிறந்து ஆகாயத்தில் போன பெண் குழந்தை யசோதையின் மகள்.உண்மையில் தேவகியின் எட்டாவது குழந்தை கிருஷ்ணன்.அவன் இப்போது பலராமனுடன், நந்தகோபன்-யசோதையின் மகனாக பிருந்தாவனத்தில் வளர்ந்து வருகிறான்.அவனே உனக்கு எமன்"

"நீங்கள் சொல்வது உண்மையா?"

"நான் பொய் பேச மாட்டேன் என்று உனக்குத் தெரியாதா?சொல்வதை நான் சொல்லி விட்டேன்.இனிமேல் உன் சாமர்த்தியம்"

நாரதர் வந்த வேலை முடிந்ததும் கிளம்பிச் சென்றார்.

கம்சன் கொந்தளித்தான்."வசுதேவா! துரோகி..என்னிடம் பொய் சொல்லி ஏமாற்றி, எனக்கு எமனை மறைவாக வளர்த்து வருகிறாயா? அதற்கு என் தங்கை தேவகியும் உடந்தையா? இப்போதே தீர்த்து விடுகிறேன் உங்களை " எனக் கோபத்துடன் வாளெடுத்துக் கிளமபியவன், பின் தன் முடிவை மாற்றிக் கொண்டான்.காவலர்களை அழைத்தான்..

"வசுதேவனையும், தேவகியையும் பாதாளச் சிறைக்குள் தள்ளிப் பூட்டுங்கள்"எனக் கட்டளையிட்டான்.

அவர்களை சிறைக்குள் அடைத்ததும், கேசி என்ற அரக்கனைக் கூப்பிட்டான்.

"கேசி..நீ உடனே பிருந்தாவனத்துக்குச் சென்று..அங்கிருக்கும் பலராமன், கிருஷ்ணன் ஆகிய இருவரையும் கொன்று விடு"எனக் கட்டளையிட்டான்.

அடுத்து, என்ன செய்யலாம் என யோசித்தவன், அடுத்தநாள் ராஜ்ஜிய சபையைக் கூட்டினான்.சானூரன், முஷ்டிகன் போன்ற மல்லர்களை வரவழைத்தான்.மந்திரிகள், சேனாதிபதிகள் மத்தியில் தன் திட்டத்தை விளக்கினான்.

"பலராமனும், கிருஷ்ணனும் என் உயிருக்கு எமன்கள்.நான் அவர்களை இங்கு வரவழைக்கப் போகிறேன்.அவர்கள் இங்கு வந்ததும் மல்யுத்தப் போட்டியில் பங்குக் கொள்ளச் செய்வேன்.அப்போது சானூரனும்,முஷ்டிகனும் அவர்களுடன் மோதி இருவரையும் சதைப் பிண்டங்களாக்கி விடவேண்டும்" என்றான்.பின் மல்லர்களை நோக்கி,

"உங்களுடன் அவர்கள் சண்டையிடுவதற்கு முன்,நமது குவாலய பீடம் என்ற யானையால் நசுக்கவும் ஏற்பாடு செய்துள்ளேன்.அவர்கள் அதில் தப்பி விட்டால்..நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்" என அப்போதே வெற்றியடைந்தாற் போலச் சொல்லிச்  சிரித்தான்.

அப்போது மந்திரிகள் கேட்டனர்.."மன்னவா..அவர்களை என்ன காரணம் சொல்லி இங்கு வரவழைக்கப் போகிறீர்கள்/ அவர்களை அழைத்து வரப்போவது யார்?"

கம்சனின் பார்வை அவையிலிருந்த அக்ரூரரின் பக்கம் சென்றது.

அக்ரூரர் நல்ல குணங்களைக் கொண்டவர்.மிகச் சிறந்த பக்திமான்.யாதவர்களின் மதிப்பிற்குரியவர்.வசுதேவரின் உறவினர்.அவர் சென்று கூப்பிட்டால் எந்த சந்தேகமும் வராது என தீர்மானித்தான் கம்சன்.

"அக்ரூரரே! நாளையே என் சார்பில் பிருந்தாவனம் செல்லுங்கள்.மதுராவில் நான் தனுர்யாகம் நடத்தப் போவதாகவும்,அந்த யாகத்தில் பங்கேற்கவும்,மதுராபுரியின் சிறப்பை கண்டு களிக்கவும் ,பலராமனையும், கிருஷ்ணனையும் அழைத்ததாகச் சொல்லுங்கள்.நந்தனிடம் சம்மதம் பெற்று இருவரையும் அழைத்து வாருங்கள்" என்றான்.

அக்ரூரர் தலையசைத்தார்.

"விழா என்ற பெயரில் இரு பாலகர்களை வரவழைத்து கொல்லத் துடிக்கின்றானே!"என் வேதனைப்பட்டாலும், "கண்டிப்பாக அவன் எண்ணம் ஈடேறாது"என உள்ளம் சொல்ல..மேலும் பிருந்தாவனம் என்றால் கிருஷ்ணனை தரிசிக்கலாமே..என்ற சந்தோஷமும் அவருக்கு ஏற்பட்டது.

அக்ரூரக்கு முன்னேயே நான்கு கால் பாய்ச்சலில்..பிருந்தாவனம் வந்தான் கேசி.

ஆம்..அவன் பிரம்மாண்ட குதிரை உருவில் வந்திருந்தான்.அசுரப் பாய்ச்சலில் நிலம் அதிரப் பாய்ந்து வந்த கேசியைக் கண்டு..கோபர்கள் பயந்தனர்.கேசியின் குளம்பொலியால் நிலமே நடுங்கியது.புல் பூண்டுகள் சிதறிப் பறந்தன.எங்கும் புழுதி கிளம்பி பார்வையை மறைத்தது.

முன்னங்கால்களை பனைமர அளவிற்கு உயர்ந்து, பயங்கரமாகக் கணைத்தான் கேசி.அதைக் கேட்டு அலறினர் மக்கள்.

கிருஷ்ணன் குதிரையின் எதிரே வந்து நின்றான்.

கேசி, கிருஷ்ணனைப் பார்த்து..சிரித்து."சிறுவனே!வா.உன்னை என் குளம்பொலியால் மிதித்து சிதைக்கின்றேன்"என எண்ணியபடியே தாவிப் பாய்ந்தான்.

கண்ணன் வேகமாக நகர்ந்து கொள்ள,அவனை பின்னகாலால் உதைக்க முயற்சித்தான் கேசி.கண்ணன் அந்தக் கால்களைப் பற்றித் தூக்கினான்..பின்..வேகமாக சுழற்றித் தூக்கி எறிந்தான்.

கேசி, சமாளித்துக் கொண்டு எழுந்தான்.நேருக்கு நேராகத் தாக்க ஓடினான்.குதிரை வந்த வேகத்திலேயே கண்ணன்  தன் கையை குதிரையின் வாய்க்குள் செலுத்தினான்.குதிரைக்கு மூச்சுத் திணற தன் கைகளைப் பெரியதாக ஆக்கிக் கொண்டான்.

அசுரனான கேசிக்கு மூச்சு முட்டியது.கண்கள் விரிந்தன.துள்ளினான்..துடித்தான்..உயிர் மூச்சு நின்று, நிலத்தில் விழுந்து செத்தான்.

கோபர்கள் சந்தோஷத்துடன் ஆரவாரம் செய்து ,கண்ணனை"கேசிநிகேதன்" என வாழ்த்தினர்.

இப்படிப்பட்ட மகிழ்ச்சியான வேளையில் அக்ரூரர் பிருந்தாவனத்திற்குள் நுழைந்தார்.

நந்தகோபர் அவரை அன்புடன் உபசித்தார்.ஆசனம் தந்து அமர வைத்தார்.அப்போது கண்ணன் மஞ்சள் பட்டு உடுத்தியும், பலராமன் நீலப்பட்டு உடுத்தியும்    வந்து அக்ரூரரை வணங்கினார்கள்.

அக்ரூரர் பலராம ,கிருஷ்ணர்களின் தரிசனம் கிடைத்ததில் மெய் சிலிர்த்தார்.ஆனந்தக்கண்ணீர் வழிய இருவரின் கரங்களையும் பற்றிக் கொன்டு..பக்கத்தில் அமர வைத்துக் கொண்டார்.அவர்களுடன் பேசி மகிழ்ந்தார்.

அன்றைய இரவு பிருந்தாவனத்தில் தங்கி..மறுநாள் தான் வந்த காரியத்தைத் தெரிவித்தார்.

"நந்தகோபரே! மதுராபுரியில் மன்னன் கம்சன் தனுர்யாகம் செய்யப் போகிறான்.அதில் பலராம கிருஷ்ணன்கள் கலந்து கொள்ள வேண்டுமென விரும்புகிறான்.நீங்களும் அவர்களுடன் வந்தால் நானும் மகிழ்வேன்"என்றார்.

அவர் முன்தின இரவே பலராம..கிருஷ்ணன்களிடம் கூறி, கம்சனின் சூழ்ச்சி குறித்தும் சொல்லியிருந்தார்.நந்தகோபருக்குத் தெரிந்தால் அச்சம் கொள்வார் என அவரிடம் சொல்லவில்லை.சொல்ல வேண்டாம் என்றும்
பலராம கிருஷ்ணனிடம் கேட்டுக் கொண்டார்..

கம்சன் அழைப்பால் நந்தகோபர் மனம் சஞ்சலப்பட்டாலும், அதைக் காண்பித்துக் கொள்ளாது,"அரசனின் அழைப்பை நிராகரிக்க முடியாது.மதுராவிற்குச் செல்லத்தான் வேண்டும்"என்றார்.கோபர்களிடம் அதற்கான ஏற்பாடுகளை செய்யச் சொன்னார்.

அக்ரூரர், கிருஷ்ணனை அழைத்துப் போக வந்திருக்கிறார் என அறிந்த கோபியர்கள் துயரத்தில் ஆழ்ந்தனர்."கிருஷ்ணா!மதுரைக்குப் போனாலும்..எங்களை   மறக்கமாட்டாயே! மீண்டும் பிருந்தாவனம் வருவாய் இல்லையா?"என்றெல்லாம் கேட்டு கண் கலங்கினர்.

கண்ணன் அவர்களுக்கு ஆறுதல் கூறி, தேரில் ஏறி புறப்பட்டான்.மற்றவர்களும் அவனைத் தொடர்ந்தனர்.

தங்கள் உயிரே புறப்பட்டுப் போவதாக எண்ணி  கோபியர்கள் தேரின் பின்னாலேயே,"கோவிந்தா..தாமோதரா..மாதவா..மணிவண்ணா.."என்று தொடர்ந்து சென்றனர்.

"என் அன்பு கோபியர்களே!மன வருத்தம் வேண்டாம்.நிச்ச்யம் நான் உங்களைக் காண திரும்பி வருவேன்" என கண்ணன் வாக்களித்தான்.

கண்ணீருடன், கோபிகைகள் அவனுக்கு பிரியாவிடை தந்து அனுப்பினார்கள்.கொடியவனான கம்சனின் மதுராபுரி பார்வைக்குத் தட்டுபடத் துவங்கியது. 

Friday, August 21, 2020

25 - உலக ஜீவன்களும், பரமாத்மாவும்




கோபர்கள் பிருந்தாவனத்தில் எந்த பயமும் இன்றி காலம் கழிக்க ஆரம்பித்தனர்.

ஒரு சரத்கால இரவு..

ஆகாயத்தில் சந்திரன் குளிர்ந்து பிரகாசித்தான்.பிருந்தாவனம் முழுதும் மல்லிகை மலர்கள் வாசம்.நிசப்தமான சூழலில் ஒரு மெல்லிய குழலோசை,மனதை மயக்கும் விதத்தில் கேட்டது.

வேணுகானம்..

அந்த குழலோசையில்    கோபியர்களும் தங்களை மறந்து இதயத்தைப் பறி கொடுத்தனர்.உயிரெல்லாம் ஊடுருவிய அந்த கானம் அவர்கள் இதயத்தையும் உருக வைத்து ஆத்மாவை ஈர்த்து கவர்ந்தது.காதலில் மூழ்க வைத்தது.

கோபியர்கள் தவித்துப் போனார்கள்.

வீட்டு வேலையில் ஈடுபட்டிருந்தவர்கள் அதை அப்படியே நிறுத்தி ஸ்தம்பித்தனர்.
ஒரு கோபியரின் வீட்டில் பால் பொங்கி வழிந்து கொண்டிருந்தது.
இன்னொருத்தர் வீட்டில் சாதம் கொதித்துக் கொண்டிருந்தது.
குழந்தைக்கு பால் புகட்டியவர்கள், அதை அப்படியே விட்டு விட்டு புறப்பட்டனர்
கணவனுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தவள்..அதை அப்படியே மறந்து போனாள்.
தலையலங்காரம் செய்து கொண்டிருந்தவள், உடை மாற்றிக் கொண்டிருந்தவள்,தயிர் கடைந்து கொண்டிருந்தவள் என பல வேலைகளில் ஈடுபட்டிருந்தவர்கள்..அதை..அதை..அப்படியே நிறுத்தி விட்டு..குழலோசை கேட்கும் இடம் நோக்கி விரைந்தனர்.

யமுனை நதிக்கரைக்கு வந்தனர்.அங்கே ஒரு அழகிய மாயன், புல்லாங்குழல் ஊதியபடியே, ஒற்றைக் காலில் நின்று..மற்றொரு காலை சற்றே மடித்து நின்றவாறு..கண்களை மூடி..மனம் லயித்துப் போய் வேணுகானம் பொழிந்து கொண்டிருந்தான்.

கோபியர்கள் வரவால்..மோன நிலையிலிருந்து விடுபட்டு, அவர்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டான்.

"இப்போது எல்லோரும் எதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள்?இது இரவு வேளை.உங்கள் கடமைகளை மறந்து இப்படி வருவது தவறில்லையா?"

"நாங்கள் என்ன செய்வோம் கண்ணா! உன் மீது நாங்கள் எல்லையில்லா அன்பினை வைத்துவிட்டோம்.உனது குழலோசை எங்களைக் கட்டி இழுத்து அழைத்து வந்து விட்டது.அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.நீயே பொறுப்பு"

"கோபியர்களே! உங்கள் அன்பை நான் அறிவேன்.அதற்காக எப்போதும் என் அருகில் இருக்க வேண்டும் என ஆசைப்படுவது சரியல்ல.தூர இருந்தாலும்,என்னை நினைத்து என்னிடம் மனதை செலுத்துங்கள்.நான் உங்கள் அருகில் இருப்பது போலவே உணருவீர்கள்.இப்போது அவரவர் இல்லங்களுக்கு செல்லுங்கள்"

கோபியர்களின் கண்களில் கண்ணீருடன் சொல்கிறார்கள்..

"கண்ணா! எல்லாவற்றையும் துறந்து,உன்னிடம் ஓடி வந்த எங்களை உதறுவது நியாயமா?வீடு,குடும்பம்,குழந்தைகள் என கடமைகள் எங்களுக்கு உண்டு.ஆனால்..உன் மீது பற்று வைத்த பின், அவற்றின் மீது எங்களுக்கு நாட்டம் வரவில்லை.எங்கள் இதயம் உன் வசப்பட்டு விட்டது.நாங்கள் என்ன செய்வோம்? எங்களைப் போகச் சொல்லாதே! இனி உன்னைத் தவிர எங்களுக்கு வேறு யாருமில்லை .எங்களை நீ ஏற்க மறுத்தால்,இப்பவே..உன் பாதங்களில் உயிர் துறப்போம்"

கண்ணன் அவர்களின் மன உறுதியைப் புரிந்து கொண்டான்.அவர்களை அழைத்துக் கொண்டு யமுனை நதிக்கரையின் வெண்மணல் பரப்பினை அடைந்தான்.அனைவரோடும் "ராசலீலை" செய்தான்.

வைஜயந்தி மாலை அணிந்த, பட்டுப் பீதாம்பரதாரியான கண்ணன், நூற்றுக் கணக்கான கோபியர்களுடன், வேணுகானம் இசைத்தபடி நடனம் ஆடினான்.அவர்களை உல்லாசத்தில் ஆழ்த்தி,பல்வேறு காமக் கேளிக்கைகள் செய்தான்.பருவப் பெண்கள்,சிறுமிகள்,மணமானவர்கள்,மூத்தவர்கள் என எந்த பாகுபாடும் இன்றி அவனுடன் கலந்து இன்பமடைந்தனர்.வேட்கை தணிந்தனர்.கூடவே கர்வமும் அடைந்தனர். 

அண்ட சராசரங்களையும் த்ன்னுள் கொண்டுள்ள கண்ணன்,தங்களிடம் மையல் கொண்டு,தங்களை  மோகிக்கிறான் எனும் நினைப்பு  கோபியர்களின் மனதில் தோன்றியது.கூடவே தங்கள் அழகின் மீது கர்வமும் அடைந்தனர்.

ஒவ்வொரு அணுவின் அசைவினையும் தெரிந்து கொள்ளும் மாயனுக்கு,கோபிகைகளின் எண்ணம் புரியாமலா இருக்கும்.அவர்களின் கர்வத்தை அழிக்கத் தயாரானான்.கோபியர்கள் மத்தியிலிருந்து மாயமானான்.

கிருஷ்ணனைக் காணாத கோபியர்கள் திகைத்தனர்.தேடினர்.கண்டுபிடிக்க முடியாது பரிதவித்தனர்.மரம், செடி கொடிகளிடமெல்லாம் நின்று"எங்கள் கண்ணனைப் பார்த்தீர்களா", என்று கேட்டு அழுதனர்.பைத்தியம் பிடித்தவர்கள் போல ஊரை சுற்றிச் சுற்றி வந்தனர்.

கண்ணனைப் போல, பேசிக் கொண்டும், பாடிக் கொண்டும்,தங்களை அவனாகவே பாவித்துக் கொண்டனர்.அவனது பாலலீலைகளை அபிநயத்து ஆடினர்.அவர்கள் சுயநிலைக்கு வரும் போது...கண்ணனின் மகிமைகளைச் சொல்லிச் சொல்லி புலம்பிப் பாடினர்.அந்தப் பாடல்களே "கோபிகா கீதம்"எனப்போற்றப்படுகிறது.

கோபியர்களை சோதித்தது போதும் என்று கருதிய கண்ணன்,அல்ங்கார சொருபீயாக,மன்மதனே வெட்கப்படும் அழகியவனாக அவர்கள் முன் தோன்றி அவர்களை அழைத்தான்.

 அருகே கண்ணனைக் கண்டதும் ஆனந்தக் கண்ணீருடன் ஓடி வந்தனர்.

ஒருத்தி தன் கைகளோடு அவன் கைகளை சேர்த்துக் கொண்டாள்

தாபத்தால் அவன் விரல்களைப் பற்றி நெரித்தாள் இன்னொருத்தி

அவன் தோள்மீது சாய்ந்து கொண்டு,அவனது புஜத்தை வலிக்காமல் கடித்தாள் மற்றவள்

ஒருத்தி மார்புற தழுவிக் கொண்டு, தன் திரண்ட மார்பகங்களில் அவன் தலையை சாய்த்துக் கொண்டாள்

மற்றொருத்தி அவன்முதுகின் மீது தன் மார்பகங்களை வைத்து அழுத்தி,அணைத்து,இறுக்கிக் கட்டிக் கொண்டாள்.

அவன் தலை முடியைப் பற்றி,சிவந்த உதடுகளை அன்புடன் ஒத்தி,அவனது திவ்விய உருவத்தை கண்களில் நிரப்பிக் கொண்டு,அதிலிருந்து அவன் வெளியேற முடியாதபடி ஒருத்தி.

"கண்ணா எங்களை விட்டு ஏன் பிரிந்து சென்றாய்?எங்களை ஏன் சோதிக்கிறாய்?எங்களை விட்டு ஏன் பிரிந்து சென்றாய்?"என கெஞ்சலாகவும்,கொஞ்சலாகவும், கோபமாகவும் கேட்டனர்.

"ஒரு பொருளைத் தொலைத்து விட்டு,அதைத் தேடி ஏங்கி, மீண்டும் அது கைக்குக் கிடைத்தால் இரட்டிப்பு சந்தோஷம் கிடைக்குமல்லவா? அந்த சந்தோஷத்தை நீங்கள் உணரவேண்டும் என்றே காணாமல் போனேன்' என்றான்."ஊடலுக்குப் பின் கூடல்களும் தேனாய் இனிக்கும் தெரியுமா" என்று கள்ளநகைப் புரிந்தான்.

யமுனையின் வெண்மணல் பரப்பு.நிலவின் ஒளி பிரகாசித்துக் கொண்டிருந்தது.ஒரு சிறு மணல் குன்றின் மீது, கோபிகைகள் தங்கள் மேலாடைகளை விரித்தனர்.நடுவே கண்ணனை அமர்த்தி,அவனைச் சுற்றி அமர்ந்தனர்.அவனைப் பிரிந்து தவித்தது,துடித்தது,தாபவசப்பட்டது என பல கதைகளைப் பேசிக் கொண்டிருந்தனர்.நேரம் போவதேத் தெரியாமல், இரவு கழிந்துக் கொண்டிருந்தது.

பின்னர் "ராஸநடனம்" தொடங்கியது.

ஒருவர்..ஒருவருடன் கைகளைக் கோர்த்து..வட்ட வட்டமாகக் கூடிக் கொண்டும், ஒருவர் தோள் மீது ஒருவர் கைவைத்து அணைத்துக் கொண்டும் ஒரே லயத்துடன் நடனமாடினர்.கண்ணனும், கோபியர்களும் ஆடிய அந் த ராஸலீலை கண்களைக் கவர்ந்தது.

கண்ணனின் ராஸலீலையைக் காண, வானவர்களும் விண்ணில் கூடினர்.கந்தர்வர்களும் கானம் பாடினர்.யாழ் இசைத்தனர்.அப்சரஸ்களும் கலந்து கொள்ள நடனத்தின் வேகம் கூடியது.கால் சலங்கைகளும், கை வளையல்களும் குலுங்கும் சப்தம் இன்னிசையாக எங்கும் ஒலித்தது.

ஒவ்வொரு கோபிகைகளும் தனித்தனியே..கண்ணன்கள் ஏராளமாக உருவாக நடனமாடிக் கொண்டிருந்தனர்.வேகம்..வேகம்..என வேகம் கூடியதில்  சோர்வடைந்த கோபிகைகளின் வேர்வைத் துளிகளால் கண்களில் இட்ட மை கலைந்து வழிந்தது.நெற்றித் திலகம் ஈஷிக் கொண்டது.கூந்தல் கலைந்தது.ஆடைகள் நழுவின.ஆபரணங்கள் கலைந்து விழுந்தன..மாலைகள் உதிர்ந்தன.

ஆட்டம் முடிந்து கோபியர்களை அணைத்து,யமுனை நதியின்  குளிர்ந்த நீரில் குளிக்கச் செய்தான் கண்ணன்.

அங்கும் சிரிப்பும், கேலியும், குதூகலமுமாக "உல்லாச ஜலக்ரீடை" நடத்தினான்.

ஆமாம்..பிருந்தவனத்திலிருந்து கோபிகைகள் அனைவரும் யமுனை நதிக்கரைக்கு வந்துவிட்டார்களே! அவர்கள் வீட்டில் யாருக்கும் தெரியாதா?

தெரியாது..ஏனெனில்..

கண்ணனுடன் கோபிகைகள் இருந்த அதே நேரத்தில் அவர்கள் கணவர்களுடனும் இருந்தனர்.பிரம்மா குறும்பு செய்த போது, தானே கன்றுகளாகவும், சிறுவர்களாகவும் உருக் கொண்ட மாயவன், கோபியர்கள் வடிவத்திலும் தானே கோபிகைகளாகவும் இருந்தான்.
அதனால்தான், கண்ணனின் லீலைகளில் மனம் குளிர்ந்து, கோபிகைகள் வீடு திரும்பிய போது, அவர்களின் கணவர்கள் தங்களை விட்டு அவர்கள் பிரிந்திருந்ததை உணரவில்லை.இதுவரை கோபியர்களாக இருந்தது கண்ணன்தான் என்பதை கணவன்மார்களும் அறியவுமில்லை.

கோபியர்களுடான "ராஸலீலை" என்பது,ஆத்மா..பரமாத்மா என்பதான ஜீவ தத்துவம்.

இந்த உலகமே பிருந்தாவனம்.இங்கு வாழும் ஜீவன்களே கோபியர்கள்.பரமாத்மாவாகிய கிருஷ்ணன் , இந்த ஜீவன்களிடம் மறைந்தும், வெளிப்பட்டும் விளையாடுகிறான்.தான் பரமாத்மா..என்பதை ஜீவன்கள் உணர்ந்து தன்னிடம் லயப்பட வேண்டும் என அவன் இப்படி செய்கிறான்.எனவே, இருஷ்ண லீலை எல்லாம் ஜீவன்கள் சுகப்படத்தானேத் தவிர..தான் சுகப்பட அல்ல.



Wednesday, August 19, 2020

24 -கோவர்த்தன கிரிவாசன்




யாதவர்களின் மிகப் பெரிய சொத்தாக பசுக்களை சொல்ல வேண்டும்.அவை நன்றாக இருந்தால்தான்,யாதவ குலம் சிறப்பாக இருக்கும்.பசுக்கள் ஆரோக்கியமாய் இருக்க வேண்டுமென்றால்,தாவரங்களுக்கு செழுமையும்.நீர் வளமும் அவசியம்.இவற்றை அளிப்பது மழை.மழைக்குக் காரணம் வருணன்.வருணனைப் போன்ற திசைபாலகர்களின் தலைவன் இந்திரன்.எனவே யாதவர்கள் இந்திரனை வழிபடுவது வழக்கம்.இந்திரவிழா என ஆண்டுக்கும் ஒருமுறை கோலாகல விழா எடுப்பது வழக்கம்.

அந்த ஆண்டும் விழா எடுப்பதற்காக நந்தகோபரும், மற்ற பெரியவர்களும் கூடி பேசிக் கொண்டிருந்த போது, கிருஷ்ணன் அவர்களிடம்,இந்திர விழா" கொண்டாட்டம் எதற்காக " என்றான்.

"கண்ணா..இடையர்களான நம் வாழ்க்கைக்கு பசுக்கள் ஆதாரம்.பசுக்களுக்குத் தேவை புல், தாவர வகைகள் மற்றும் நீர் வளம்.மழை பெய்வதால்தான் நமக்கு இவை கிடைக்கின்றன.தவிர நாம் உண்ணத் தேவையான தானியங்கள் முதலானவையும் மழை பெய்வதால் விளைச்சல் அதிகமாகி நமக்குக் கிடைக்கிறது.ஆகவே மழைக் கடவுளான இந்திரனுக்கு நாம் நன்றி தெரிவிக்கவும், அவரை மகிழ்ச்சிப் படுத்தவும் தொடர்ந்து அவன் அருளைப் பெறுவதற்கும் இந்திரவிழா எடுத்து வருகிறோம்" என்றார் நந்தகோபர்.

"அப்பா..நம்ம வாழ்க்கைக்குத் தேவையானவை காடுகள்,மலைகள் மற்றும் பசுக்கள் தான்.அப்படியிருக்க,இந்திரனை ஏன் வழிபட வேண்டும்?அதைவிட கோவர்த்தன மலைக்கு பூஜை செய்ய ஏற்பாடு செய்யலாம்.யாகம் செய்து அந்த அக்னி தேவனை ஆராதிப்போம்" என்றான் கண்ணன்.

கிருஷ்ணன் சொன்னதற்குப் பிறகு யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை.

கோவர்த்தன மலைக்கு விழா எடுக்க ஏற்பாடு செய்தனர்.

இந்திரவிழாவிற்கு செய்வது போலவே..பசுக்களை நன்கு அலங்கரித்தனர்., வேதியர்களுக்குத் தானங்கள் செய்தனர்.கோவர்த்தன மலைக்கு கும்பலாக படையலிட்டு கிரிவலம் செய்து பூஜித்தனர்.

கண்ணனின் மாயத்தால் கோவர்த்தன மலையானது பிரம்மாண்ட உருவம் எடுத்து,"நானே இந்த மலை தேவன் "எனச் சொல்லி ..கோபியர்கள் படைத்தவைகளை திருப்தியாக சாப்பிட்டு விட்டு சென்றது.

கோபியர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்றே கண்ணன் இந்த மாயையைச் செய்தான்.அதுபோலவே அனைவரும் ,"இத்தனை காலமாக இந்திரனுக்கு விழா எடுத்தோம்.ஒருமுறைகூட அவன் வரவில்லை.ஆனால், கோவர்த்தன கடவுள், முதல்முறை பூஜை செய்கிறோம் என கேள்விப்பட்டு அருள் பாலித்து விட்டாரே!"என பேசிக்கொண்டனர்.

ஆமாம்..கண்ணன், இந்திரவிழாவை ஏன் வேண்டாம் என்றான்.

இந்திரனின் ஆணவத்தைப் போக்கத்தான்.

அளவில்லா செல்வமும், மூவுலகங்களுக்கு அதிபதி என்ற எண்ணமும் இந்திரனிடம் மிகுந்த ஆணவத்தை உண்டாக்கிவிட்டது.கண்ணன் இதை உணர்ந்ததால் இந்திர பூஜையை,கோவர்த்தன பூஜையாக மாற்றினான்.

இதனால்..இந்திரன் கோபமானான்.பகவானின் அவதாரமான கிருஷ்ணனையே..சாதாரண மானிடச் சிறுவன் என நினைத்துவிட்டான்.

"ஓரு சிறுவன் சொல்லைக் கேட்டு..கோபர்கள் என்னை அவமானப்படுத்தி விட்டனர்.நான் யார் என்பதை இவர்களுக்கு புரிய வைக்கிறேன்.இவர்களுடைய சொத்து சுகங்கள் எல்லாவற்றையும் அழித்து..புத்தி புகட்டுகிறேன்' என்று சபதம் மேற்கொண்டான்.

மேகக் கூட்டங்களை அனுப்பி..பிருந்தாவனத்தின் மேல் பெருமழையை பெய்வித்தான்.பிரளயமே வந்துவிட்டதோ என அஞ்சும்படியான மழை.உடன் சூறாவளிக் காற்றும் சேர்ந்தது.மரங்கள் சாய்ந்தன..பலர் வீடுகள் துவம்சம் ஆகின.பிருந்தாவனம் முழுதும் வெள்ளம் சூழ்ந்தது.

மக்கள் பசுக்கள்,கன்றுகள் எதற்குமே தங்க இடமில்லை.கோபர்கள் பயந்தனர்.

"கிருஷ்ணா..இந்திரனை பூஜிக்காததால் தான் கோபம் கொண்டு விட்டான்.இந்த கடுமையான மழை அதனால் தான் ஏற்பட்டிருக்கிறது.நீதானே கோவர்த்தன மலைக்கு பூஜை செய்யலாம் என்றாய்.இந்த மழையிலிருந்தும் நீதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்" என்றனர்.

கிருஷ்ணன் அப்போது புன்னகை செய்தான்.ஒரு அதிசயம் நிகழ்ந்தது.

கோவர்த்தன மலையை சிறிதும் சிரமில்லாமல் பெயர்த்து எடுத்து, தன் சுண்டு விரலால்..அம்மலையைக் குடைபோல பிடித்தான்.அனைவரும் இதனுள் வாருங்கள்" என்றான்.
கோபர்கள்,கோபியர்கள்,பசுக்கள்,கன்றுகள் மற்றும் அவர்கள் வளர்த்த செல்லப் பிராணிகள்,அவர்களின் உடைமைகள் எல்லாம்..மதுசூதனன் பிடித்த மலைக்குடையின் கீழ் தஞ்சம் புகுந்தன.

இந்திரன் விடாது ஏழு நாட்கள் மழை பெய்வித்தான்.ஏழு நாட்களும் கண்ணனும் சோர்வில்லாமல் மலையைப் பிடித்து நின்றான்.

இந்திரன் கர்வத்திலிருந்து மீண்டான்.பரமாத்மாவின் அவதார புருஷனுக்கு எதிராக செயல்பட்டது முட்டாள்தனம் என உணர்ந்து மழையை நிற்க வைத்தான்.

யாதவர்களும்,பசுக்களும்,கன்றுகளும் வீடு திரும்பினர்.கண்ணனை "கோவர்த்தனதரன்" என்றும் கிரிதாரி என்றும் பாராட்டினர்.

அனைவரும் சென்றவுடன், இந்திரன் வந்து பகவானின் அடி பணிந்தார்."நான் பொல்லாத அகங்காரத்தால் தவறு செய்து விட்டேன்.என்னை மன்னித்து அருள வேண்டும்"என வேண்டினார்.

"இந்திரா..புகழும், பதவியும்,செல்வமும், அதிகாரமும் எப்போது வரும்..எப்போது கைவிட்டுப் போகும் என யாருக்கும் தெரியாது.எந்த நிலையிலும் ஆணவம் இல்லாமல் இருப்பதுதான் சிறந்தது.இதை நீ அடிக்கடி மறந்து விடுவதால், அதை உணர்த்தவே இப்படி செய்தேன்" என்றான் கண்ணன்.

மனம் திருந்திய இந்திரன், தெய்வப் பசுவான.காமதேனுவின் பாலாலும்,ஐராவதத்தின் மீது கொண்டு வரப்பட்ட தேவ கங்கையினாலும் பகவானுக்கு அபிஷேகம் செய்ய..தேவர்களும், ரிஷிகளும் வந்திருந்து "கோவிந்தன்" என்று சொல்லி கொண்டாடி மகிழ்ந்தனர்.

23 - கோபியர் கொஞ்சும் ரமணா...




கிருஷ்ணனும்,பலராமனும் இப்போது வாலிப வயதை எட்டியிருந்தார்கள்.ஆணழகர்களாக ஜொலித்தார்கள் கிருஷ்ணனின் பேரழகில் உள்ளத்தைப் பறி கொடுத்தனர் கோபிகைகள்.

காதல் வயப்பட்டு தூக்கத்தைத் தொலைத்தார்கள்.பித்துப்பிடித்தாற் போலத் திரிந்தனர்.கண்ணன் ஒருவனாலேயே பிருந்தாவனம் சொர்க்கலோகமாகத் தெரிந்தது அவர்களுக்கு.

கண்ணன் தன் நண்பர்களுடன் அதிகாலை பசுக்களை மேய்ச்சலுக்கு அழைத்துப் போய் விடுவான்.பசுக்களை மேயவிட்டு,தன் புல்லாங்குழலை எடுத்து,இனிமையாக ஊதத் தொடங்கிவிடுவான்.

தலையில் மயில் தோகையும், காதுகளில் அழகிய குண்டலங்கள்.இடுப்பில் பட்டும் ,பீதாம்பரமும், கழுத்தில் வைஜயந்தி மாலையும்,சிவந்த இதழ்களில் புல்லாங்குழலுமாக அவன் வேணுகானம் இசைக்கும் போது..உலகமே அக்கணம் ஸ்தம்பித்துவிடும்.

பசுக்கள் மேய மறந்து,தன் காதுகளை விறைத்துக் கொண்டு இசையில் லயித்துவிடும்.கன்றுகளும் கூட தாயிடம் பால் குடிப்பதையும்,புற்கள் மேய்வதையும் நிறுத்தி சிலைபோல ஆகிவிடும்.பறவைகளும், மான்களும் ஏன் மரங்கள் கூட...சகல ஜீவராசிகளுமே உறைந்து போய்விடும்.

யமுனை நதிக்கரையில் கண்ணன் ஊதும் வேணுகானம் காற்றில் மிதந்து வந்து பிருந்தாவனத்துக்குள்ளும் நுழைந்து தவழ்கிறது.கோபியர்களின் இதயம் இசைப் பிரவாகம் மிதக்க..அவர்கள் கண்கள் சொக்கி கிறங்கிப் போகிறார்கள்.

"முதலில் கண்ணனிடம் இருந்து புல்லாங்குழலைப் பிடுங்க வேண்டும்" என் கிறாள் ஒருத்தி

"ஆம்..அது நம் வேலைகளைக் கெடுக்கிறது" என்கிறாள் மற்றொருத்தி.

"அது மட்டுமில்ல..அந்தப் புல்லாங்குழல்தான் எப்போதும் அவனோடு நெருக்கமாக இ ருக்கிறது.அவனது இதழ் அமுதத்தை சுவைத்துக் கொண்டே இருக்கிறது" எனபொறாமையில் புலம்பினாள் இன்னொருத்தி.

"ஆனாலும்..என்ன செய்வது?கிருஷ்ணனின் வேணுகானத்தை கேட்காமலும் இருக்க முடியவில்லை.அந்த இசை என் உள்ளத்தில் ஊடுருவி..எத்தனை விஷயங்களைச் செய்கிறது..தெரியுமா?" சற்றே வெட்கத்துடன் சொல்கிறாள் ஒருத்தி.

கிருஷ்ணனை,பிருந்தாவனத்தில் ஒவ்வொரு கோபியரும் காதலித்தனர்.ஒவ்வொரு நாளும்..ஒவ்வொரு நொடியும் அவனை நினைத்து..அவனுடன் தங்களை இணைத்து..ஆனந்தமும்,அவஸ்தையுமாகக்
காலம் கழித்தார்கள்.

அது ஒரு மார்கழி மாத பனிக்காலம்.

பிருந்தாவனத்தில் கோபியர்கள் "காத்யாயனி விரதம்" எனும் நோன்பினை  நோற்றார்கள்.

அத்தனைப் பேருக்கும் ஒரே பிரார்த்தனைதான்.

"காத்யாயனி தேவி! உலக நாயகி..நந்தகோபருக்கு மகனான கிருஷ்ணனை எனக்கு கணவனாக வாய்த்திட அருள் செய்"என்ற பிரார்த்தனையுடன் விரதத்தைக் கடைப் பிடித்தனர்.

கிருஷ்ணனை அடைவதற்கு அவர்கள் விரதம் இருந்ததில் தப்பில்லை.ஆனால்..அதைச் செய்ததில்தான் சிறு தவறிழைத்துட்டனர்.

நோன்பு முடியும் நாள்..அவர்கள் அனைவரும் யமுனைக்குச் சென்றார்கள்.தங்கள் ஆடைகளை அவிழ்த்து  கரையிலேயே வைத்து விட்டு
வெற்றுடம்புடன் நதியில் இறங்கிக் குளித்தார்கள்.

அப்போது கிருஷ்ணன் அங்கு வந்தான்.கோபியர்களின் ஜலக்ரீடையைப் பார்த்தான்.அவர்கள் ஆடையின்றி நீராடுகிறார்கள் என்பது தெரியவர..எல்லா கோபியர்களின் ஆடைகளையும் எடுத்துக் கொண்டு கடம்ப மரத்தில் ஏறி..அதன் கிளை மீது அமர்ந்து கொண்டான்.

கிருஷ்ணன் இதைச் செய்ய குறும்புத்தனம் மட்டுமே காரணமில்லை.வேறு ஒரு காரணமும் இருந்தது.

மரத்தின் மீது இருந்த கிருஷ்ணன்,"இன்னுமா உங்கள் நீராடல் முடியவில்லை"என்று குரல் கொடுத்தான்.

நிமிர்ந்து பார்த்த கோபியர்கள்..மரக்கிளையில் கண்ணன் ஆடைக்குவியலுடன் இருப்பதைக் கண்டனர்.கரையைப் பார்த்தார்கள்.அவர்கள் அவிழ்த்து வைத்திருந்த அவர்களின் ஆடைகளைக் காணவில்லை.திடுக்கிட்டனர்.அவர்கள் ஆடைகளை கண்ணன் கைகளில் வைத்திருக்கிறான்..என் அறிந்து கோபத்துடன் சீறினர்

"கண்ணா! இது என்ன விளையாட்டு..எங்கள் ஆடைகளைத் திருப்பிக் கொடு"என்றாள் ஒருத்தி.

"கண்ணா! உன் குறும்புத்தனத்திற்கும் ஒரு எல்லை இருக்கிறது.எங்களைக் கோபப்படுத்தாமல் ஆடைகளைக் கொடுத்து விடு"என்றாள் மற்றொருத்தி.

"நான் தருகிறேன்.எல்லோரும் கரையேறி வந்து என்னிடமிருந்து ஆடைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்"என்றான் கிருஷ்ணன்.

"கேலி செய்கிறாயா?ஆடையில்லா வெறும் மேனியாய் இருக்கிறோம்.ஆண்பிள்ளையான உன்னிடம் வந்து எப்படி எங்களால் ஆடைகளைப் பெற முடியும்?தயவு செய்து எங்கள் ஆடைகளைக் கொடுத்து விடு"என்றனர் கோபியர்கள்.

"என் அன்பு கோபியர்களே! ஆடையில்லாமல் நீராடக்கூடாது என்பது சாஸ்திரம்.அதுவும் காத்யாயனி விரதம் மேற்கொண்ட நீங்கள் இப்படி நீராடியதால்..விரதத்தின் பலனை இழந்து விடுவீர்கள்.தவிர..தோஷமும் உண்டாகும்.அதிலிருந்து விடுபட வேண்டுமானால்..நான் சொல்வது போல செய்யுங்கள்.இரு கைகளையும் தலைக்கு மேலே குவித்து, எனக்கு அஞ்சலி செலுத்தியபடி..நீரிலிருந்து எழுந்து வந்து ஆடைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்" என்றான் கண்ணன்.

கோபமும், பயமும் ,வெட்கமுமாக கோபியர்கள் திண்டாடினர்.குளிர் நீரிலேயே..கழுத்துவரை நின்று கொண்டு..வெட வெடக்க''கண்ணனை வேண்டினார்கள்..கெஞ்சினார்கள்..கொஞ்சினார்கள்..சீறினார்கள்..சினந்தார்கள்.

கண்ணன் உறுதியாக இருந்தான்.

கோபியர்கள், கண்ணன் சொன்னதன் அர்த்தத்தை யோசித்தனர்.மனம் தெளிந்தனர்.அவன் கூறியபடியே..தலைக்கு மேல் கை கூப்பி தொழுது அவனிடம் வந்து ஆடைகளைப் பெற்றுக் கொண்டனர்.

கண்ணன் அவர்களுக்கு வாக்களித்தான்..

"கோபியர்களே!உங்கள் விருப்பங்கள் எனக்குத் தெரியும்.நோன்பின் பலனை விரைவிலேயே நீங்கள் அடைவீர்கள்.சரத்கால இரவுதனில் என்னுடன் கூடி ஆனந்தம் பெறுவீர்கள்.என்னிடம் காதல் கொண்ட உங்கள் மனங்களில் மற்ற ஆசைகள் எதுவும் இனி வராது"என அருள் வழங்கினான்.

கோபியர்கள் உடைகளை அபகரித்த கிருஷ்ணலீலை சொல்லும் தத்துவம் மிக எளிதானது.

கோபியர்கள், "தான் வேறு..கிருஷ்ணன் வேறு"என நினைத்த போது தான் வெட்கம், பயம் போன்ற உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப் பட்டனர்.பின் மதுசூதனின் சொன்ன பிறகு மனம் தெளிந்தனர்.

"கண்ணன் வேறு நான் வேறில்லை.கண்ணனே நான்.நானே கண்ணன்" கோபியர்கள் இதை உணர்ந்த பிறகு அவர்களுக்கு அச்சம் இல்லை..நாணம் இல்லை.

ஜீவாத்மா..பரமாத்மாவை உணர்ந்து..அதனுடன் ஐக்கியப்பட்டுவிட்டது.

கிருஷ்ணனுடைய இந்த லீலையின் நுட்பத்தை உணர்ந்த மனம் காமத்தை வென்று விடுகிறது.பரமானந்தத்தில் திளைத்து விடுகிறது.