Monday, May 30, 2022

ஆதிசங்கரர்- 7 (குறுந்தொடர்)

 குமாரிலபட்டர்

-------------------------

குமாரிலபட்டர் ,வேதாந்தத்தின் முற்பகுதியான கர்ம காண்டம் எனப்படும் பூர்வ மீமாம்சா குறித்து "மீமாம்சா சுலோக வார்த்திகம்"எனும் விரிவான நூலை எழுதிப் புகழ் பெற்றவர்.இவரது சீடர்களில் புகழ் பெற்றவர் பிரபாகரர்.இவரும் பல வேத தத்துவ நூல்களை எழுதியவர்.

சுருதிகளில் குறிப்பிடும் மந்திரங்கள் மற்றும் யாகம்,யக்ஞம் போன்ற வைதீக கர்மங்களை மட்டுமே செய்வதன் மூலம் சொர்க்கத்தை எளிதாக அடைய முடியும் எனும் கொள்கை உடையவர்.ஈஸ்வரன் எனும் இறை தத்துவத்தை ஏற்றுக் கொள்ளாதவர்.வேதங்களில் கூறப்பட்ட சடங்குகளைச் செய்வதால் மட்டுமே ஒருவன் எளிதாக சொர்க்கத்திற்குச் செல்ல முயலும் போது..உத்தர மீமாம்சையான வேதாந்தம் எனும் உபநிடதங்கள் மூலம் பிரம்மத்தை அறிவதன் மூலம் சொர்க்கத்தை அடைய இயலாது என்ற கொள்கை உடையவர்.


புத்த மதத்தவர்களுக்கு வேதகர்மங்கள் கிடையாது.ஆதியில் அவர்களது கருத்துகளை வெல்ல எண்ணிய குமாரில பட்டர்..பௌத்தனாக மாறுவேஷம் பூண்டு பௌத்தர்களுடனேயே வசித்தால்தான் அவர்களது கருத்துகளை ஏற்கலாம்.பிறகு அவற்றை எதிர் வாதத்தால் முறிக்கலாம் என்றெண்ணினார்.அவ்விதமே பௌத்தரகாக வேஷம் போட்டு அம் மதக்கொள்கைகள் முழுவதையும் கற்றுக் கொண்டார்.நாளந்தா  பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்தார்.பிற்பாடு வேத கர்மங்கள் அவசியம் என்பதை நிலைநாட்டும் போது..இக்கர்மங்களை விலக்கும் புத்த மதத்தை ஆணித்தரமாக கண்டித்தார்.

ஒருமுறை வேதநெறிகளையும்,சடங்குகளையும் தாக்கிப் பேசிய பௌத்தகுரு தர்மகீர்த்தியை எதிர்த்து வாதிட்டதால் குமரிலப்ட்டர் பௌத்த மதத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

பின்..ஒருநாள்..அவருக்கு வருத்தம் ஏற்பட்டது."என்னைத் தங்களில் ஒருவராக எண்ணி..அந்த பௌத்தர்கள் பேணிக் காத்தனரே!அவர்களிடம் வேஷம் போட்டு வஞ்சனை செய்து விட்டேனே!"என்று மனம் கலங்கினார்.இதற்கான தண்டனை "துஷாக்னிப்  பிரவேசம்"தான்.

துஷம் என்றால் தவிடு.இந்தத் தவிடால் உடல் முழுமைக்கும் மூடி..தீயிட்டுக் கொண்டு..சிறுகசிறுக உயிர் போகும்படி செய்வதற்கே துஷாக்கினி பிரவேசம் என்று பெயர்.

குமாரிலபட்டர் செய்த தண்டனைக்குரிய பாவம் என்னவென்றால்..வஞ்சனையாக தன்னை பௌத்தன் என்று சொல்லிக் கொண்டு..அவர்களுடைய சாத்திரக் கொள்கைகளை மறுத்து ஒதுக்கியது.


இந்நிலையில்..


நாடு முழுவதிலும் அத்வைத உண்மையை சங்கரர் பரப்ப வேண்டும் என்று வியாசர் விரும்பியபடி..சங்கரர் காசியிலிருந்து புறப்பட்டார்.அலகாபாத் என்று சொல்லப்படும் பிரயாகைக்கு வந்தார்.காரணம்..குமாரிலபட்டரைக் கண்டு..அவர் அத்வைதத்தை ஏற்குமாறு செய்து விட்டால்..அவரைச் சார்ந்த ஏராளமான சிஷ்ய கோடிகளும் அத்வைதத்தைத் தழுவி விடுவர் என்பதால்தான்.

குமாரிலபட்டர் உடல் முழுதும் வெந்துக் கொண்டிருந்த நிலையில்..ஆதிசங்கரரைக் கண்டதும் மகிழ்ச்சி அடைந்தார்.ஆதிசங்கரர் அவர் நிலைக்கு வருந்தி..நீங்கள் செய்த செயலில் எந்தத் தவறும் இல்லை..பின் ஏன் இப்படி ஒரு முடிவெடுத்தீற்கள்? என வினவினார்.பின்..தன் அத்வைத தத்துவத்தை அவருக்குப் படித்துக் காட்டினார்.இதனைக் கேட்ட குமாரிலபட்டர் பாராட்டினார்.

இந்த அத்வைத சித்தாந்தத்தை நாடு முழுதும் பரப்பிட வேண்டும்..உயிரைவிடும் தம்மால் ஏதும் செய்ய முடியாது.தன் சீடனான மண்டனமிச்சரை சந்தித்து அவரிடம் வாதம் புரிந்து அவரை அத்வைத தத்துவத்தைஏற்கும்படி செய்ய வேண்டும்.அவரைக் கொண்டு அத்வைதத்தைப் பரப்புங்கள் என்றார்.