Saturday, August 15, 2020

19-குழந்தையைக் கொல்ல வந்த அசுரர்கள்




கோபர்களும், கோபியர்களும் விழா ஏற்பாடுகளில் மும்மரமாய் இருந்தனர்.

யசோதைக்கும், ரோஹிணிக்கும் பிறந்த குழந்தைகளால்  கோகுலம் முழுதும் மகிழ்ச்சி நிலவியது.நந்தகோபர், குழந்தைகளுக்கு மங்கள ஸ்நானம் செய்து .அந்தணர்களை அழைத்து  பூஜைகள் நடத்தி ,ஏராளமான தானங்கள் செய்தார்.வந்தவர்கள் அனைவரையும் வரவேற்று அறுசுவை உணவு படைத்தார்.ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என்று வெகு நாட்களுக்குப் பிறகு கோகுலத்தில் சந்தோஷம், கலகலப்பு.

இதனிடையே, ஒருநாள்..நந்தகோபனுக்கு ஒரு முக்கிய வேலை இருந்தது.கம்சனுக்குக் கப்பம் கட்ட வேண்டிய கடமை.தனது ஆட்களை அழைத்து கோகுலத்தில் உள்ள அனைவரையும் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு மதுராவிற்குப் பயணமானார்.

கம்சனுக்கு செலுத்த வேண்டிய கப்பத் தொகையை செலுத்திவிட்டு வசுதேவரை சந்திக்கச் சென்றார்.

வசுதேவர்,தன் உறவினான நந்தகோபரை அன்புடன் வரவேற்றார்.

"நந்தகோபரே! வெகுநட்களுக்குப் பிறகு,தங்களுக்கு மகன் பிறந்திருக்கிறான் எனகேள்விப்பட்டேன்.மிக்க மகிழ்ச்சி.யசோதையும், ரோஹிணியும் நலம்தானே!" என்றார்.

"எல்லோரும் நலம்தான் .ஆனால் தங்களைப் பற்றித்தான் யாதவர்கள் எல்லோரும் துயரம் கொண்டுள்ளோம்.தங்களுக்குப் பிறந்த எல்லாக் குழந்தைகளையும் கம்சன் கொன்று விட்டான் எனக் கேள்விப் பட்டு மிகவும் வேதனையடைந்தோம்'

"எல்லாம் விதியின் செயல்"என்ற வசுதேவர், "நந்தகோபரே! நீங்கள் வந்த வேலை முடிந்து விட்டதல்லவா?இனியும்  காலதாமதம் செய்யாமல் கோகுலத்துக்குப் புறப்பட்டு செல்லுங்கள்.அங்கு ஏதேனும் ஆபத்து நிகழும் எனத் தோன்றுகிறது"

அவர் சொன்னபடியே ஒரு பேராபத்து கோகுலத்தில் அடி எடுத்து வைத்திருந்தது.

எல்லா திசைகளிலும்  குழந்தையைக் கொல்வதற்கு கம்சனால் அனுப்பப்பட்ட அரக்கியர்களில் ஒருத்தி பூதனை.கோர சொரூபம் கொண்ட அவள், கோகுலத்தில் நுழையும் முன்பாக தன்னை ஒரு பேரழகியாக உருமாற்றிக் கொண்டாள்.அடிக்கடி வந்து செல்பவள் போல நந்தகோபரின் வீட்டுக்குள் நுழைந்தாள்.யாரும் அவளை தடுக்கவில்லை.எல்லோரும் அவள் அழகில் மயங்கியிருந்தனர்.

பூதனை தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை நெருங்கி அதைக் கொஞ்சுவது போல தூக்கி மடியில் இருத்தி விஷப்பால் நிரம்பிய தன் மார்பினை குழந்தையின் வாய்க்குள் கொடுத்தாள்.

குழந்தை கண்ணன் அவளைப் பார்த்து கன்னம் குழியச் சிரித்தான்.பூதனையின் எண்ணப்படி மார்பை இறுகப் பிடித்துக் கொண்டு பாலை உறிஞ்சத் தொடங்கினான் .ஆனால் பூதனை அதனைக் கண்டு மகிழாது அலறத் தொடங்கினாள்.

ஆம்..குழந்தை கண்ணன் விஷப்பாலை மட்டும் ஊறிஞ்சாமல்,அவள் உயிரையும் சேர்த்து அல்லவா உறிஞ்சு விட்டான்.

பூதனை துடித்தாள்.குழந்தையை உதறிடத் துடித்தாள்."விட்டுவிடு ..என்னை விட்டு விடு"எனக் கத்தினாள்.பின் தடாலென சுய உருவத்துடன் உயிரற்று கீழே சாய்ந்தாள்.

அரக்கியின் மரணக் கூச்சலைக் கேட்டு ஓடி வந்தவர்கள்..சிறு குன்றைப் போல வாய் திறந்து விழுந்து கிடந்த பூதனையின் உடலைக் கண்டு மலைத்துப் போனார்கள்.அரக்கியின் உடல் மீது சிரித்தபடி விளையாடிக் கொண்டிருந்த கண்ணனைக் கண்டு  ஆச்சரியமடைந்தார்கள்.யசோதை பதற்றத்துடன் வந்து குழந்தையைத் தூக்கிக் கொண்டாள்.திருஷ்டி கழித்தாள்.

மதுராவிலிருந்து அப்போதுதான் திரும்பிய நந்தகோபர் நடந்ததைக் கேள்விப்பட்டு, வசுதேவர் சொன்னது போல ஆபத்து வந்து விட்டதே என கலங்கினார்.

கோபர்கள் அரக்கி பூதனையின் உடலை கோடரிகளால் துண்டுத் துண்டாக வெட்டி தீயிட்டு கொளுத்தினார்கள்.அது எரியும் போது பிணவாடை வீசாமல்,அதில் சந்தனத்தின் வாசனை வீசுவதை நுகர்ந்து ஆச்சரியப்பட்டனர்.

பகவானின் ஸ்பரிசம் பட்டதுமே அரக்கியின் உடல் எரியும் வாசனை சந்தன மணத்துடன் வந்தது அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது

கோகுலத்தில் அரக்கி செத்துப் போன தகவல் கம்சனுக்குக் கிட்ட,அவன் திடுக்கிட்டான்.அவன் உடல் வியர்த்தது."அப்படியானால் எனக்கு எமனாக வந்திருப்பவன் கோகுலத்தில்தான் இருக்கின்றான்"என்ற தீர்மானத்திற்கு
வந்தவன், சகடாசுரன்,திருணாவர்த்தன் என்ற அரக்கர்கள் இருவரை அழைத்து, "கோகுலத்தில் பிறந்திருக்கும் என் எதிரியைத் தீர்த்துக் கட்டுங்கள் என அனுப்பினான்.

அந்த இரு அரக்கர்களும் உற்சாகமாகக் கிள்மபினர்.

கண்ணன் பிறந்து மூன்று மாதங்கள் ஆகியிருந்தன.குழந்தை அழகாகப் புரண்டு குப்புற தவழத் தொடங்கியிருந்தது.

யசோதையும், கோபியப்பெண்களும் மாற்றி மாற்றி குழந்தையைத் தூக்கிக் கொஞ்சிக் கொண்டிருந்தனர்.மாயவனும் அனைவரின் உள்ளங்களையும் கொள்ளையடித்துக் கொண்டிருந்தான்.

குழந்தை குப்புறக் கவிழ்ந்து கொள்ளத் தொடங்கியதை யசோதை ஒரு விழாவாகக் கொண்டாட எண்ணி கோகுலத்தில் அனைவரையும் விருந்துக்கு அழைத்திருந்தாள்.

குழந்தை குளித்து முடிந்து, பால் குடித்து அசதியில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான்.

வீட்டிற்குள் விருந்துபசாரம் நடந்து கொண்டிருந்ததால், யசோதை குழந்தையைத் தொட்டிலுடன் வெளியே  கொண்டு வந்தாள்.நிழலுக்காக அந்த வண்டியின் கீழே தொட்டிலைக் கட்டி அதனுள் குழந்தையை படுக்க வைத்தாள்.பின், விருந்தினர்களைக் கவனிக்க உள்ளே போனாள்.

கம்சன் அனுப்பி வைத்த சகடாசுர அரக்கன்தான் வண்டியாக மாறி நின்றிருந்தான்.குழந்தையை   அந்த வண்டியின் கீழேயே விட்டுப் போக..அரக்கன் சந்தோஷமானான்.குழந்தையை சுலபமாகக் கொன்றுவிடலாம் என்று அவன் நினைத்தான்.அப்போது குழந்தை பசியால் அழத் தொடங்கியது.

யசோதை வேலையில் ஆழ்ந்திருந்ததால் குழந்தையின் அழுகை அவள் காதுகளில் கேட்கவில்லை.

கண்ணன் பசி தாங்காமல் கை..கால்களை உதைத்துக் கொண்டு அழு ஆரம்பித்தான்.வீறிட்டான்.கை கால்களை அழுதபடியே உதைத்துக் கொண்டான். வண்டியை எட்டி ஒரு உதை உதைத்தான்.அவ்வளவுதான் அந்த பிஞ்சுப் பாதங்கள் பட்டு வண்டி சக்கரங்கள் நொறுங்கியது.வண்டி உடைந்து சிதறியது.சகடாசுரன் அலறியபடியே செத்து மடிந்தான்.

கோபர்களும், கோபியர்களூம் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்தனர்.வண்டி சுக்கு நூறாக சிதறிக் கிடப்பதைப் பார்த்தனர்.அது எப்படி நடந்தது என யாருக்கும் புரியவில்லை.கண்ணன் உதைத்துதான் நடந்தது என் அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் சொன்னதை யாரும் நம்பத் தயாராய் இல்லை.

நந்தகோபரோ, குழந்தையை இன்னமும் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளும்படிச் சொன்னார்.

யசோதை இதனால் எச்சரிக்கை ஆனாளோ இல்லையோ சகடாசுரனுடன் வந்த மற்றொரு அரக்கன் திருணாவர்த்தன் எச்சரிக்கை அடைந்தான்.

"அசுரர்களான எங்களைவிட இக்குழந்தை பெரிய மாயாவியாய் இருக்கின்றானே..இவனை ஜாக்கிரதையாகத் தீர்த்துக் கட்ட வேண்டும்" என எண்ணினான்.

ஒரு பெரும் சூறைக்காற்றாக மாறி, மிகுந்த வேகத்துடன் கோகுலத்தினுள் நுழைந்தான்.

அப்போது யசோதை குழந்தை கண்ணனை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.திடீரென குழந்தை கனக்க ஆரம்பித்தது.

ஆம்..குழந்தையின் பளுவை போகப்போக அவளால் தாங்க முடியவில்லை.ஆச்சரியத்துடன் குழந்தையை தரையில் இறக்கி விட்டாள்.

சூறைக்காற்றாக புழுதியைக் கிளப்பிக் கொண்டு, புயல் போல நுழைந்த திருணாசுரன் வந்த வேகத்திலேயே குழந்தையைத் தூக்கிக் கொண்டு மேலெழுந்தான்.ஒரு சுழற்று சுழற்றி வீசி எறிந்து கொண்று விடலாம் என்று எண்ணினான்.

வானத்தில் புயல் காற்று ஒரு சுழலாகச் சுற்றுவதையும்...கீழே குழந்தையைக் காணாததையும் கண்டு யசோதை அலறினாள்.சுற்றுமுற்றும் பதட்டத்துடன் தேடினாள்.

ஆகாயத்திலோ குழந்தை தன்னிடம் சிக்கிக் கொண்டு  விட்டது என எண்ணிய திருணாசுரன், இப்போது கண்ணனிடம் சிக்கி அவதிப் பட்டான்.குழந்தையை பூப்போல கசக்கி வீசி விடலாம் என நினைத்தவன், கண்ணன் தன் கழுத்தைப் பற்றிக் கொண்டதுமே திகைத்தான்.குழந்தையின் கனத்தைத் தாங்க முடியவில்லை அவனால்.

குழந்தையின் பிஞ்சுக் கைகள் அசுரனின் கழுத்தைப் பற்றி நெறித்தது.கண்கள் பிதுங்க அசுரன் வேதனைப் பட்டான்.குழந்தையின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயன்று,அது முடியாது மூச்சுத் திணறி பிணமாக தரையில் விழுந்தான்.

கோகுலவாசிகள் ஓடி வந்து பார்த்த போது,ஒரு பெரும் பூதம் போல விழுந்து கிடந்த அசுரனின் மார்பில் அமர்ந்து குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது.

இது எப்படி சாத்தியமாயிற்று என யாருக்கும் எதுவும் புரியவில்லை.குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை என நிம்மதியடைந்தனர்.

இச்சமயம், யாதவர்களின் குலகுருவான கர்க்கசாரியார் கோகுலம் வந்தார்.வசுதேவர்தான் அவரை அங்கு அனுப்பி வைத்திருந்தார்.நந்தகோபரும் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றார்.

அவரிடம்,"நீங்கள்தான் யசோதையின் குழந்தைக்கும், ரோஹிணியின் குழந்தைக்கும் பெயர் வைக்க வேண்டும்" என்றார் நந்தகோபர்.

"நந்தகோபா..நான் யாதவர்கள் குரு.குழந்தைகளுக்கு நான் பெயர் சூட்டியது தெரிந்தால், கம்சன் சந்தேகப்படுவான்.நீயும், வசுதேவரும் நண்பர்கள் என்பதால்..இது வாசுதேவரின் குழந்தையோ என எண்ணி..இதற்கு ஏதேனும் ஆபத்தை விளைவிக்கலாம்" என்றார் குரு.

"சரி..அப்படியாயின், யாருக்கும் தெரியாமல்...என் வீட்டுக்குள்ளேயே பெயர் சூட்டும் வைபவத்தை வைத்துக் கொள்ளலாம்"ஏன்றார் நந்தகோபர்.

அதன்படி குரு, பெயர் சூட்டும் நிகழ்வினை நடத்தினார்.

"ரோஹிணியின் இக்குழந்தைக்கு ராமன் என பெயர் சூட்டுகின்றேன்.ராமன் என்றால் எல்லோரையும் மகிழ்விப்பவன் என அர்த்தம்.இவன் பலசாலியாகவும் இருப்பதால் "பலன்"என்றும் அழைக்கலாம்.மொத்தத்தில் இவன் பலராமன்" என்றார்.

பின், யசோதையிடம், "இந்த குழந்தை நாராயணனின் அவதாரம்.இவன் ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு நிறத்தில் பிறந்தவன்.கடந்த மூன்று யுகங்களில் வெள்ளை,சிவப்பு, மஞ்சள் நிறங்களில் பிறந்தான்.இப்போது கருப்பு நிறம்.ஆகவே கருநிறத்தவன் என்ற பொருளில் கிருஷ்ணன் என பெயர் சூட்டுகிறேன்.இவன், முன்னர் வசுதேவருக்கு மகனாய்ப் பிறந்ததால் "வாசுதேவன்" என்றும் அழைக்கப்படுவான்"என்றும் சொன்னார்.நந்தகோபா..இந்த குழந்தையால் கோகுலமும், கோப..கோபியரும் சிறப்பு அடைவார்கள்.இவன் அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுப்பான்.எல்லாத் துன்பங்களிலிருந்தும் காப்பாற்றுவான்" என்று சொல்லி விடை பெற்றார்.

யசோதையும், ரோஹிணியும் தங்கள் பிள்ளைகளின் பெயர் சொல்லிக் கூப்பிட்டு மகிழ்ந்தனர்.

No comments:

Post a Comment