Saturday, August 22, 2020

26 - கண்ணன் மதுராபுரி வந்தான்




பிருந்தாவனத்தில் பலராமனும், கிருஷ்ணனும் தெய்வாம்சம் பொருந்தியவர்கள் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ளத்தொடங்கினர்.தொடர்ந்து பிருந்தாவனவாசிகளைக் காப்பாற்றியிருந்தார்கள் இருவரும்.

முதல் ஆபத்து , ஒரு பாம்பு ரூபத்தில் வந்தது..

மகரிஷிகளின் சாபம் என்று பாம்பாக உலவி வந்த சுதர்சனன் எனும் வித்யாதரன்,"அம்பிகாவனம்" எனும் இடத்திற்கு நந்தகோபர் சென்றபோது,அவர் காலைப் பற்றி விழுங்க முயற்சித்தான்.அப்போது நந்தகோபருடன் சென்றவர்கள் நெருப்புக் கட்டையால் தாக்கியும் விடவில்லை பாம்பு.

ஓடிவந்த கிருஷ்ணன் தனது காலால் பாம்பை ஓங்கி மிதித்தான்.உடன் பாம்பு,வித்யாதரனாக உருமாறியது.நந்தகோபர் தப்பித்தார்.பகவானின் திருவடி ஸ்பரிசத்தில் சாபவிமோசனம் பெற்ற சுதர்சனன் , கண்ணனை வணங்கி, நன்றி தெரிவித்து விட்டு விண்ணுலகம் சென்றான்.

அடுத்த ஆபத்து கோபியர்களுக்கு வந்தது..

ஒரு இரவு நேரத்தில், பலராமனும், கிருஷ்ணனும் கோபிகைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்.கண்ணன் குழலிசைக்க,கோபியர்கள் நடனமாடிக் கொண்டிருந்த நேரத்தில்,அங்கு வந்தான் சங்கசூடன் என்பவன்.அவன் குபேரனின் பணியாள்.

கிருஷ்ணனும், பலராமனும், இசையில் மெய் மறந்து இருந்த நேரத்தில், கோபிகைகளை வெகு தூரத்துக்குக் கடத்திக் கொண்டு போய் விட்டான்.பின், கோபியர்களின் அலறல் சத்தம் கேட்ட பலராமனும், கிருஷ்ணனும் சங்கசூடனைத் துரத்திச் சென்று அவர்களை மீட்டனர்.பலராமன், கோபியர்களுக்குத் துணையாக நிற்க,தப்பித்து ஓடிய சங்கசூடனை துரத்திச் சென்று வீழ்த்தினான் கண்ணன்.பின் சங்கசூடனின் தலையில் இருந்த ரத்தினத்தை அறுத்து எடுத்து ,பலராமனுக்கு அதை அன்பளிப்பாகக் கொடுத்தான்.

இது நடந்து சில நாட்களுக்குள், காளைமாடு உருவில் வந்தது ஒரு ஆபத்து.அரிஷ்டன் எனும் அரக்கன் பெரும் காளைமாட்டு உருவத்தில் .புயல் வேகத்தில் பாய்ந்து வந்தான்.தன் கொம்புகளால் ,அவன் பூமியைக் கிழித்த போது..புழுதியுடன் நெருப்புப் பொறியும் பறந்தது.சீரும் உறுமலுடன் அவன் பிருந்தாவனவாசிகளைத் துரத்தினான்.

கோபர்களும்..கோபியர்களும் குழந்தைகளுடன் அலறியடித்து ஓடினார்கள்."கிருஷ்ணா..கிருஷ்ணா" எனக் கூச்சலிட்டனர்.

கிருஷ்ணன் அங்கு வந்தான்..அரிஷ்டன் தன் மூச்சுக் காற்றில் அனல் பறக்க,தலை தாழ்த்தி..கூரிய கொம்புகளால் கிருஷ்ணனின் குடலைக் குத்திக் கிழித்தெறிய பாய்ந்தபடி வந்தான்.

கண்ணன், அவனின் கூரிய கொம்புகளை இறுகப் பற்றினான்.அவனைக் கீழேத் தள்ளினான்.உடல்மீது கால் வைத்து அழுத்தினான்.

அரிஷ்டன், கிருஷ்ணனின் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ளப் போராடினான்.தலையை உயர்த்தி முட்ட முயற்சித்தான்.பலமனைத்தையும் திரட்டி, கண்ணனை வீழ்த்த முயன்று தோற்றான்.

கண்ணன் கொம்புகளைப் பிடுங்கினான்.முஷ்டியால் ஓங்கி முகத்தில் குத்தினான்.அடுத்தநொடி அரக்கன் ரத்தம் கக்கி மாண்டுப் போனான்.

கோபர்களும், கோபியர்களும் கண்ணனை பாராட்டிக் கொண்டாடினார்கள்.பிருந்தாவனத்துக்கு இனி ஒரு பயமும் இல்லை என நிம்மதி அடைந்தனர்.

ஆனால், கண்ணனிடம் கொண்ட பயத்தால் நிம்மதியிழந்தான் கம்சன்.மதுராபுரியில் கம்சனுக்கு வந்த தகவல்கள் எல்லாம் கசப்பானவையாகவே இருந்தன.

அவன் அனுப்பி வைத்த அசுரர்கள் எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக மரணமடைந்ததை அறிந்த போது ,அவனால் அதை நம்ப முடியவில்லை.சாதாரண சிறுவர்களைக் கொல்ல முடியவில்லையெனில் அதில் ஏதோ சதி இருப்பதாக யூகித்தான்.ஆனால் அது என்ன என அவனுக்குப் புரியவில்லை.

அதை நாரதர் புரிய வைத்தார்..

"என்ன கம்சா! ஏதோ கவலையில் இருப்பது போலத் தெரிகிறது" என்றபடியே அரண்மனைக்குள் நுழைந்தார் ஒருநாள்.

"கவலையா..எனக்கா..அப்படி எதுவுமில்லையே!"

"கம்சா...உன்னைப் போன்றவர்களின் நலனில் அக்கறைக் கொண்டவன் நான்.என்னிடமே நீ மறைக்கிறாய்.அதனால் பரவாயில்லை.ஆனால், நான் எனக்குத் தெரிந்த உண்மையை உன்னிடம் மறைக்க விரும்பவில்லை.ஆனால், அதைச் சொல்ல இதுதான் சரியான சமயமா?எனத் தெரியவில்லை" என்றார்.

ஒரு விஷயத்தை சொல்ல வந்துவிட்டு, சொல்லாமல் போனால் எதிராளியின் மனம் எப்படி தவிக்கும்..அது போன்ற நிலையில் கம்சன் இருந்ததால், ஆர்வத்துடன்"நாரதா..என்ன விஷயம் சொல்லுங்கள்"என்றான்.

"சொல்கிறேன்..அதற்குமுன் நீ எதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தாய்" எனச் சொல்"

"பிருந்தாவனப் பிரதேசத்தில், அடுத்தடுத்து அசுரர்கள்,யாரோ சில பாலகர்களால் கொல்லப்படுவதாகத் தகவல் வந்து கொண்டிருக்கிறது.சாதாரண இடையச் சிறுவர்களால் இது எப்படி முடிகிறது எனத் தெரியவில்லை"

"கம்சா! நானும் அதைச் சொல்லத்தான் நினைத்தேன்.நீ நினைப்பது போல பிருந்தாவனச் சிறுவர்கள்....சாதாரணச் சிறுவர்கள் இல்லை..தேவகியின் ஏழாவது கர்ப்பம் கலைந்து போகவில்லை.அந்த ஏழாவது கர்ப்பமாக இருந்தவன் தான் ரோஹிணியின் மகனான பலராமன்.தேவகியின் எட்டாவது குழந்தையாகப் பிறந்து ஆகாயத்தில் போன பெண் குழந்தை யசோதையின் மகள்.உண்மையில் தேவகியின் எட்டாவது குழந்தை கிருஷ்ணன்.அவன் இப்போது பலராமனுடன், நந்தகோபன்-யசோதையின் மகனாக பிருந்தாவனத்தில் வளர்ந்து வருகிறான்.அவனே உனக்கு எமன்"

"நீங்கள் சொல்வது உண்மையா?"

"நான் பொய் பேச மாட்டேன் என்று உனக்குத் தெரியாதா?சொல்வதை நான் சொல்லி விட்டேன்.இனிமேல் உன் சாமர்த்தியம்"

நாரதர் வந்த வேலை முடிந்ததும் கிளம்பிச் சென்றார்.

கம்சன் கொந்தளித்தான்."வசுதேவா! துரோகி..என்னிடம் பொய் சொல்லி ஏமாற்றி, எனக்கு எமனை மறைவாக வளர்த்து வருகிறாயா? அதற்கு என் தங்கை தேவகியும் உடந்தையா? இப்போதே தீர்த்து விடுகிறேன் உங்களை " எனக் கோபத்துடன் வாளெடுத்துக் கிளமபியவன், பின் தன் முடிவை மாற்றிக் கொண்டான்.காவலர்களை அழைத்தான்..

"வசுதேவனையும், தேவகியையும் பாதாளச் சிறைக்குள் தள்ளிப் பூட்டுங்கள்"எனக் கட்டளையிட்டான்.

அவர்களை சிறைக்குள் அடைத்ததும், கேசி என்ற அரக்கனைக் கூப்பிட்டான்.

"கேசி..நீ உடனே பிருந்தாவனத்துக்குச் சென்று..அங்கிருக்கும் பலராமன், கிருஷ்ணன் ஆகிய இருவரையும் கொன்று விடு"எனக் கட்டளையிட்டான்.

அடுத்து, என்ன செய்யலாம் என யோசித்தவன், அடுத்தநாள் ராஜ்ஜிய சபையைக் கூட்டினான்.சானூரன், முஷ்டிகன் போன்ற மல்லர்களை வரவழைத்தான்.மந்திரிகள், சேனாதிபதிகள் மத்தியில் தன் திட்டத்தை விளக்கினான்.

"பலராமனும், கிருஷ்ணனும் என் உயிருக்கு எமன்கள்.நான் அவர்களை இங்கு வரவழைக்கப் போகிறேன்.அவர்கள் இங்கு வந்ததும் மல்யுத்தப் போட்டியில் பங்குக் கொள்ளச் செய்வேன்.அப்போது சானூரனும்,முஷ்டிகனும் அவர்களுடன் மோதி இருவரையும் சதைப் பிண்டங்களாக்கி விடவேண்டும்" என்றான்.பின் மல்லர்களை நோக்கி,

"உங்களுடன் அவர்கள் சண்டையிடுவதற்கு முன்,நமது குவாலய பீடம் என்ற யானையால் நசுக்கவும் ஏற்பாடு செய்துள்ளேன்.அவர்கள் அதில் தப்பி விட்டால்..நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்" என அப்போதே வெற்றியடைந்தாற் போலச் சொல்லிச்  சிரித்தான்.

அப்போது மந்திரிகள் கேட்டனர்.."மன்னவா..அவர்களை என்ன காரணம் சொல்லி இங்கு வரவழைக்கப் போகிறீர்கள்/ அவர்களை அழைத்து வரப்போவது யார்?"

கம்சனின் பார்வை அவையிலிருந்த அக்ரூரரின் பக்கம் சென்றது.

அக்ரூரர் நல்ல குணங்களைக் கொண்டவர்.மிகச் சிறந்த பக்திமான்.யாதவர்களின் மதிப்பிற்குரியவர்.வசுதேவரின் உறவினர்.அவர் சென்று கூப்பிட்டால் எந்த சந்தேகமும் வராது என தீர்மானித்தான் கம்சன்.

"அக்ரூரரே! நாளையே என் சார்பில் பிருந்தாவனம் செல்லுங்கள்.மதுராவில் நான் தனுர்யாகம் நடத்தப் போவதாகவும்,அந்த யாகத்தில் பங்கேற்கவும்,மதுராபுரியின் சிறப்பை கண்டு களிக்கவும் ,பலராமனையும், கிருஷ்ணனையும் அழைத்ததாகச் சொல்லுங்கள்.நந்தனிடம் சம்மதம் பெற்று இருவரையும் அழைத்து வாருங்கள்" என்றான்.

அக்ரூரர் தலையசைத்தார்.

"விழா என்ற பெயரில் இரு பாலகர்களை வரவழைத்து கொல்லத் துடிக்கின்றானே!"என் வேதனைப்பட்டாலும், "கண்டிப்பாக அவன் எண்ணம் ஈடேறாது"என உள்ளம் சொல்ல..மேலும் பிருந்தாவனம் என்றால் கிருஷ்ணனை தரிசிக்கலாமே..என்ற சந்தோஷமும் அவருக்கு ஏற்பட்டது.

அக்ரூரக்கு முன்னேயே நான்கு கால் பாய்ச்சலில்..பிருந்தாவனம் வந்தான் கேசி.

ஆம்..அவன் பிரம்மாண்ட குதிரை உருவில் வந்திருந்தான்.அசுரப் பாய்ச்சலில் நிலம் அதிரப் பாய்ந்து வந்த கேசியைக் கண்டு..கோபர்கள் பயந்தனர்.கேசியின் குளம்பொலியால் நிலமே நடுங்கியது.புல் பூண்டுகள் சிதறிப் பறந்தன.எங்கும் புழுதி கிளம்பி பார்வையை மறைத்தது.

முன்னங்கால்களை பனைமர அளவிற்கு உயர்ந்து, பயங்கரமாகக் கணைத்தான் கேசி.அதைக் கேட்டு அலறினர் மக்கள்.

கிருஷ்ணன் குதிரையின் எதிரே வந்து நின்றான்.

கேசி, கிருஷ்ணனைப் பார்த்து..சிரித்து."சிறுவனே!வா.உன்னை என் குளம்பொலியால் மிதித்து சிதைக்கின்றேன்"என எண்ணியபடியே தாவிப் பாய்ந்தான்.

கண்ணன் வேகமாக நகர்ந்து கொள்ள,அவனை பின்னகாலால் உதைக்க முயற்சித்தான் கேசி.கண்ணன் அந்தக் கால்களைப் பற்றித் தூக்கினான்..பின்..வேகமாக சுழற்றித் தூக்கி எறிந்தான்.

கேசி, சமாளித்துக் கொண்டு எழுந்தான்.நேருக்கு நேராகத் தாக்க ஓடினான்.குதிரை வந்த வேகத்திலேயே கண்ணன்  தன் கையை குதிரையின் வாய்க்குள் செலுத்தினான்.குதிரைக்கு மூச்சுத் திணற தன் கைகளைப் பெரியதாக ஆக்கிக் கொண்டான்.

அசுரனான கேசிக்கு மூச்சு முட்டியது.கண்கள் விரிந்தன.துள்ளினான்..துடித்தான்..உயிர் மூச்சு நின்று, நிலத்தில் விழுந்து செத்தான்.

கோபர்கள் சந்தோஷத்துடன் ஆரவாரம் செய்து ,கண்ணனை"கேசிநிகேதன்" என வாழ்த்தினர்.

இப்படிப்பட்ட மகிழ்ச்சியான வேளையில் அக்ரூரர் பிருந்தாவனத்திற்குள் நுழைந்தார்.

நந்தகோபர் அவரை அன்புடன் உபசித்தார்.ஆசனம் தந்து அமர வைத்தார்.அப்போது கண்ணன் மஞ்சள் பட்டு உடுத்தியும், பலராமன் நீலப்பட்டு உடுத்தியும்    வந்து அக்ரூரரை வணங்கினார்கள்.

அக்ரூரர் பலராம ,கிருஷ்ணர்களின் தரிசனம் கிடைத்ததில் மெய் சிலிர்த்தார்.ஆனந்தக்கண்ணீர் வழிய இருவரின் கரங்களையும் பற்றிக் கொன்டு..பக்கத்தில் அமர வைத்துக் கொண்டார்.அவர்களுடன் பேசி மகிழ்ந்தார்.

அன்றைய இரவு பிருந்தாவனத்தில் தங்கி..மறுநாள் தான் வந்த காரியத்தைத் தெரிவித்தார்.

"நந்தகோபரே! மதுராபுரியில் மன்னன் கம்சன் தனுர்யாகம் செய்யப் போகிறான்.அதில் பலராம கிருஷ்ணன்கள் கலந்து கொள்ள வேண்டுமென விரும்புகிறான்.நீங்களும் அவர்களுடன் வந்தால் நானும் மகிழ்வேன்"என்றார்.

அவர் முன்தின இரவே பலராம..கிருஷ்ணன்களிடம் கூறி, கம்சனின் சூழ்ச்சி குறித்தும் சொல்லியிருந்தார்.நந்தகோபருக்குத் தெரிந்தால் அச்சம் கொள்வார் என அவரிடம் சொல்லவில்லை.சொல்ல வேண்டாம் என்றும்
பலராம கிருஷ்ணனிடம் கேட்டுக் கொண்டார்..

கம்சன் அழைப்பால் நந்தகோபர் மனம் சஞ்சலப்பட்டாலும், அதைக் காண்பித்துக் கொள்ளாது,"அரசனின் அழைப்பை நிராகரிக்க முடியாது.மதுராவிற்குச் செல்லத்தான் வேண்டும்"என்றார்.கோபர்களிடம் அதற்கான ஏற்பாடுகளை செய்யச் சொன்னார்.

அக்ரூரர், கிருஷ்ணனை அழைத்துப் போக வந்திருக்கிறார் என அறிந்த கோபியர்கள் துயரத்தில் ஆழ்ந்தனர்."கிருஷ்ணா!மதுரைக்குப் போனாலும்..எங்களை   மறக்கமாட்டாயே! மீண்டும் பிருந்தாவனம் வருவாய் இல்லையா?"என்றெல்லாம் கேட்டு கண் கலங்கினர்.

கண்ணன் அவர்களுக்கு ஆறுதல் கூறி, தேரில் ஏறி புறப்பட்டான்.மற்றவர்களும் அவனைத் தொடர்ந்தனர்.

தங்கள் உயிரே புறப்பட்டுப் போவதாக எண்ணி  கோபியர்கள் தேரின் பின்னாலேயே,"கோவிந்தா..தாமோதரா..மாதவா..மணிவண்ணா.."என்று தொடர்ந்து சென்றனர்.

"என் அன்பு கோபியர்களே!மன வருத்தம் வேண்டாம்.நிச்ச்யம் நான் உங்களைக் காண திரும்பி வருவேன்" என கண்ணன் வாக்களித்தான்.

கண்ணீருடன், கோபிகைகள் அவனுக்கு பிரியாவிடை தந்து அனுப்பினார்கள்.கொடியவனான கம்சனின் மதுராபுரி பார்வைக்குத் தட்டுபடத் துவங்கியது. 

No comments:

Post a Comment