Sunday, August 9, 2020

14 - வாமன அவதாரம்




தேவர்களிடன் தோற்றுப் போன அவமானத்தை மகாபலியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அவர்கள் அமிர்தத்தை வேறு தராது ஏமாற்றிய கோபம் வேறு.

தேவர்களைப் பழி வாங்கத் துடித்தான் மகாபலி.அவர்களை வெற்றி கொண்டு  தேவலோகத்தைக் கைப்பற்றினால்தான் மனம் அமைதிஅடையும் போல இருந்தது.

மகாபலியின் வேதனையைத் துடைக்க குலகுரு சுக்ராச்சாரியார் சரியான ஒரு திட்டத்துடன் வந்தார்.

"மன்னா..கவலைப்படாதே! அசுரர்முலம் மீண்டும் தழைக்க நான் ஒரு வழி சொல்கிறேன்..நீ உடனடியாக "விஸ்வஜித்" எனும் மகாயாகத்தினைச் செய்.அந்த யாகத்தை நானும்,என் குலத்தாராகிய பிருகு வம்ச அந்தணர்களும் முன் நின்று நடத்தித் தருகிறோம்.யாகத்தை சரியாக நடத்தி முடித்தால் அசுரர்களுக்கு மீண்டும் வலிமைக் கிடைக்கும்.நீங்கள் நினைத்தது நடக்கும்.சொர்க்கத்தை மட்டுமல்ல..மூவுலகினையும் கைப்பற்றி சக்கரவர்த்தி ஆகலாம் நீ" என்றார்.,

அவர் சொன்னது சரியாகத் தோன்றியது அவனுக்கு.நியமங்கள் தவறாது  ,புனிதம் தவறாது செய்யப்பட்ட யாககுண்டத்தின் முதலில் ஒரு தங்க ரதமும்,பின் மிகச் சிறந்த குதிரைகளும்,வில், அம்புறாத்துணி மற்றும் பலவித ஆயுதங்களும் வெளிப்பட்டன.பலியின் பாட்டனாராகிய பிரகலாதன் அங்கு தோன்றி எப்போதும் வாடா மலர் மாலை ஒன்றை அவனுக்கு பரிசாக அளித்தார்.

யாகத்தின் மூலம் கிடைத்த அற்புதத் தேரில் ஏறி, சக்தி வாய்ந்த ஆயுதங்களுடன் தேவர்கள் மீது படையெடுத்தான் மகாபலி..வழியெங்கும் அவனைத் தாக்கிய தேவர்களைத் தோற்கடித்து,இந்திரனின் தலைநகரான அமராவதி நகரை முற்றுகையிட்டான்.இந்திரனை வெளியே வந்து தன்னுடன் போரிடுமாறு அழைத்தான்.

இறந்துபோன மகாபலி உயிர் பெற்று வருவான் என இந்திரன் எதிர்ப்பார்க்கவில்லை.அசுரர் படைகளைக் கண்டு நடுங்கினான்.தன் குருவான பிருகஸ்பதியிடம் ஆலோசனைக் கேட்டான்.

பிருகஸ்பதி,"இந்திரா! பிருகு வம்ச அந்தணர்கள் மூலம் யாகம் செய்து அளவில்லா பலம் பெற்றுவிட்டான் மகாபலி.இப்போது அவனை யாரும் வெல்ல முடியாது.அவனை வெல்லக்கூடியவர் நாராயணன் மட்டுமே!..எனவே தேவர்கள் எல்லோரும் தற்சமயம் தப்பியோடி  தலைமறைவாய் இருங்கள்.காலம்கூடி வருகையில் தேவர்களுக்கு நல்லது நடக்கும்" என்றார்.

பிருகஸ்பதியின் யோசனைப்படி இந்திரனும் ,தேவர்களும் தலைமறைவானார்கள்.தேவலோகம் சுலபமாக பலிக்கு சிக்கியது.மூவுலகினையும் கைப்பற்றிய பலி..மகாபலி சக்ரவர்த்தி ஆனான்.அனைத்து உலகையும் சிறப்பான ஆட்சியை நடத்தினான்.தன்னை நாடி வந்தவர்களுக்கு கேட்டதை வாரி வழங்கினான்.இந்த நிலைக்கு தன்னை உயர்த்திய குரு சுக்ராச்சாரியாருக்கும் அவரைச்சார்ந்த பிருகு குல அந்தணர்களுக்கும் செல்வங்களை அளித்து கௌரவப்படுத்தினான்.

மகாபலி அடைந்த இந்திரன் பதவி எப்போதும் நிலைக்க வேண்டும் என நூறு அஸ்வமேதயாகங்கள் செய்ய ஏற்பாடு செய்தார் சுக்ராச்சாரியார்.

அதே சமயம், மகாபலியிடமிருந்து இந்திர பதவியைப் பறிக்க ஒரு உயிர் முயன்றுக் கொண்டிருந்தது.அது அதிதி...காஷ்யபர் மகரிஷியின் மனைவி.

காஷ்யப முனிவரின் மற்றொரு மனைவி திதியின் வம்சமான அசுரர் குலம் மகிழ்ச்சியுடன் இருக்க..தன்னுடைய சந்ததியினரான தேவர்கள் ஒளிந்து, மறைந்து வாழ்வது அதிதிக்கு மன வருத்தத்தைத் தந்தது.

காஷ்யபர்  அதிதியின் துயரத்தைப் புரிந்து கொண்டு ஆறுதல் கூறினார்.

'அதிதி நடப்பவை அனைத்தும் நாராயணனின் விருப்பம்.அதை மாற்ற விரும்பினால் அவனிடம்தான் சரணடைய வேண்டும்."பயோவிரதம்" என்ற சிறப்பான நோன்பை ,தூய்மையுடன் செய்தால்..நாராயணன் நிச்சயம் அருள்புரிவார்" என்று கூறி நோன்புக்கான வழிமுறைகளையும் சொன்னார்.

அதிதியும் தன் கணவன் சொல்படி,பக்தியுடனும்,தூய்மையான மனதுடனும்,நெறி தவறாது விரதத்தைக் கடைப் பிடித்தாள்.

அப்போது மகாவிஷ்ணு அவள் முன் தோன்றினார்.

"தேவர்களின் தாயே!உனது நோக்கம் அறிந்தோம்.மகாபலி அசுரன் ஆனாலும்,தர்மநெறி தவறாது,ஒழுக்கத்தில் சிறந்தவனாக,இறைபக்தி செலுத்துபவனாக மூவுகினையும் சிறப்பாக ஆண்டுவருகின்றான்.அதனால் தெய்வ அனுக்கிரகம் கொண்டவனாக உள்ளான்.ஆனாலும் உன் விரதம் வீணாகாது.நானே உனக்கு மகனாகப் பிறந்து சரியான சமயத்தில் தேவர்களுக்கு அவர்களின் உலகை மீட்டுத் தருகின்றேன்"என அருள் பாலித்து மறைந்தார்.

காலம் விரைந்தோடியது.விஷ்ணு தான் சொன்ன வாக்குறுதியின்படி அதிதிக்கும்-காஷ்பருக்கும் மகனாகப் பிறந்தார்.அதுவும் வாமனாக மிகச் சிறிய குள்ள உருவத்துடன் அவதரித்தார்.

தேவர்கள், தங்கள் துயரம் தீரப்போவதை எண்ணி மகிழ்ந்தனர்.பூத்தூவி வாழ்த்தினர்.இறைவனே தங்களுக்குக் குழந்தையாய் பிறந்ததற்கு காஷ்யபரும்-அதிதியும் பரவசமுற்றனர்.

குழந்தையாகப் பிறந்த வாமனன்,குப்புறப் படுக்காது,தவழாது சட்டென ஐந்து வயது சிறுவனாக மாறினார்.

காஷ்யபவர் தன் மகனுக்கு உபநயனம் செய்வித்தார்.அந்நிகழ்ச்சியில் தேவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.பிருகஸ்பதி பூணுலை அணிவிக்க,காஷ்யபர் அரைஞாண் கயிற்றினைக் கட்டினார்.பூமாதேவி, மான்தோலை அளிக்க,சந்திரன் தண்டத்தையும்,பிரம்மன் கமண்டலத்தையும்,சரஸ்வதி ஜெப மாலையும்,குபேரன் பிச்சைப் பாத்திரத்தையும் கொடுத்தனர்.பார்வதி தேவி வாமனனின் பிசைப்பாத்திரத்தில் முதல் பிச்சையிட்டார்.

வாமன அவதாரத்தின் நோக்கம் நிறைவேறுவது மட்டுமே மீதமிருந்தது. 

இந்நிலையில்..மகாபலி, நர்மதை நதிக்கரையின் வடபகுதியில் அஸ்வமேதயாகம் நடத்திக் கொண்டிருந்தான்.நூற்றுக்கும் மேலான அந்தணர்கள் சூழ்ந்து மிகச் சிறப்பாக ..மிகச் சிரத்தையுடன் நடந்து கொண்டிருந்தது.

அப்போது சிறுவனான வாமனன்..தாழங்குடையைப் பிடித்தபடி யாகசாலைக்கு வந்தான்.

கோடி சூரியன் பிரகாசிப்பது போல,புன்னகை முகத்துடன் வரும் சிறுவனைக் கண்டு அனைவரும் திகைத்தனர்.யார் இவன்! சூரியனா..சந்திரனா..சரத்குமாரனா என ஆச்சரியப்பட்டனர்.

பலிச் சக்கரவர்த்தி அந்தணச் சிறுவனை அன்புடன் எதிர்கொண்டு வரவேற்றான்.அவனை அழைத்து ஆசனத்தில் அமரச்செய்து உபசரித்தான்.பின், பணிவுடன் கேட்டான்..

"குறு முனிவரே!உமது வரவால்..இந்த யாகசாலை புனிதமடைந்தது.நானும் புண்ணியம் பெற்றேன்.தங்களுக்கு பசுவோ,பொன்னோ,பொருளோ,வீடோ,கிராமமோ,யானைகளோ,குதிரைகளோ ..எது வேண்டுமானாலும் கேளுங்கள்.சந்தோஷமாகத் தருகின்றேன்"ஏன்றான்.

வாமனச் சிறுவன் சிரித்தான்..

பின் சக்கரவர்த்தியிடம்,"கேட்பவர் யாசிப்பதைஅள்ளித் தருபவனே..உனது நல்ல குணத்தைப் பாராட்டுகிறேன்.பிரகலாதன் வம்சத்தில் வந்த நீ தர்மவானாக இருப்பதில் ஆச்சரியமில்லை.தேவர்கள் அந்தணர் வேடத்தில் வந்து யாசிக்கிறார்கள் எனத் தெரிந்தும் தன் உயிரையேக் கொடுத்தான் உன் தந்தை விரோசனன்.அப்படிப்பட்ட குலத்தில் வந்த நீ எது கேட்டாலும் தருவாய் என அறிவேன்.ஆனால் எனக்கு வேண்டியதெல்லாம் என் கால்களினால் அளந்த மூன்றடி நிலம் மட்டுமே! நீ அதைத் தந்தால் போதும்" என்றான்.

சிறுவனின் சொற்களைக் கேட்ட பலி சக்கரவர்த்தி ஆச்சரியப்பட்டான்.

"சிறுவனே! உன் வயதுக்கேற்றதைப் போல குழந்தையாகவே இருக்கின்றீர்.உமது காலடியில் அளந்தால் மூன்றடி என்பது என் கையளவு நிலம் கூட இருக்காது.மூவுலகையும் ஆளும் என்னிடம்..இத்தனை சிறியதாகவா கேட்பது.இனி உன் வாழ்க்கையில் பஞ்சமே இல்லாதபடி..மிகப் பெரியதாகக் கேட்டுப் பெற்றுக் கொள்.நாடோ..நகரமோ..ராஜ்ஜியமோ..என்ன வேண்டும் கேள்"

வாமனன் புன்னகைத்தபடியே, "சக்கரவர்த்தி தேவைக்கு மேல் ஆசைப்படுவனுக்கு எதைக் கொடுத்தாலும் திருப்தி கிடைக்காது.கிடைப்பதைக் கொண்டு திருப்தி அடைபவனே உண்மையான அந்தணன்..எனவே நீ..நான் கேட்ட மூன்றடி நிலத்தைக் கொடுத்தாலே போதும்" என்றான்.

அதற்கும் மேலே ஏதும் கேட்காத பலி....சிறுவனுக்கு மூணடி நீளத்தை தாரை வார்த்து கொடுக்க கமண்டல நீரை எடுத்தான்.அவன் தானம் செய்யப் போகும் தருணம் குரு சுக்ராச்சாரியார் மன்னனைத் தடுத்தார்.

"சக்ரவர்த்தி..இந்த சிறுவனின் நாடகத்தை நானும் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.அப்பாவியாக உள்ள்இவன் யார் தெரியுமா? உன் மூவுலகையும்,ஐஸ்வர்யங்களையும் அபகரித்துக் கொள்ள வந்துள்ள மகாவிஷ்ணு.மூன்றடிகளால் உன் மொத்த சந்தோஷத்தையும்பறித்துக் கொள்ள வந்திருக்கும் காக்கும் கடவுள்" என்றார்.

மேலும்,:தானம்,தருமம் எல்லாம் தனக்கு மிஞ்சித்தான்.ஒருவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள கொடுத்த வாக்குறுதியை மீறலாம்.அதில் எந்த அதர்மமும் இல்லை.ஆகவே இவன் வேண்டியதைக் கொடுக்காமல் திருப்பி அனுப்பி விடு" என்றார்.

பாலி சக்ரவர்த்தி அவர் சொல்வதை ஏற்க மறுத்தான்.

"குருவே! யாசிப்பவர்களுக்காக தன் உயிரைத் தந்தவர் என் தந்தை என இச் சிறுவன் சொன்னார்.அப்படியிருக்கக் கொடுத்த வாக்குறுதியை நான் மீறமுடியுமா?என் குலத்துக்கு களங்கம் ஏற்பட நான் அனுமதிக்க மாட்டேன்.இச்சிறுவன் மகாவிஷ்ணுவாய் இருந்து என்னை ஆசிர்வதித்தாலும் சரி, அழித்தாலும் சரி..அவர் யாசித்ததைத் தருவேன்..என்னைத் தடுக்காதீர்" என்றான் பலி.

மன்னர் தன் பேச்சைக் கேட்க மறுத்ததால், கோபம் கொண்ட சுக்ராச்சாரியார்,"மகாபலி..என் வார்த்தையை அவமதித்த நீ ராஜ்ஜியத்தை இழக்கத்தான் போகிறாய்.."என சபித்தார்.

ஆனாலும்  பலி தான் வாக்களித்தபடி வாமனச் சிறுவனுக்கு தான் அளித்த வாக்குறுதிப்படி மூன்றடி நிலத்தை அளிப்பதாகச் சொல்லி நீரை தாரை வார்த்துக் கொடுத்தான்.

அடுத்த வினாடி ஒரு அற்புதம் நிகழ்ந்தது.வாமனனின் சிறு உருவம் வளரத் தொடங்கியது.பூமிக்கும்..ஆகாயத்துக்கும் விஸ்வரூபம் எடுத்து நின்றார் வாமனன்.
அனைவரும் அப்பேருருவத்தைக் கண்டு மலைத்து நின்றனர்.

வாமன ரூபம் எடுத்த பெருமாள்..தன் ஓரடியால் பூலோகத்தை அளர்ந்தார்.தன் உடலால் வானத்தை வியாபித்து..இரு கைகளால் எட்டுத் திசையையும் தொட்டு நின்றார்.அடுத்த இரண்டாவது அடியில் சொர்க்கலோகம், மஹர்லோகம்,தபலோகம் அனைத்தையும் தாண்டி சத்தியலோகத்தில் அவரின் பாதம் பதிந்தது.

சத்தியலோகத்தில் இருந்த பிரம்மன்..பகவானின் திருவடிக்கு கமண்டல நீரால் அபிஷேகம் செய்ய, அதுவே "விஷ்ணுபதி"ஏன்ற புனித கங்கையாகக் கீழே பாய்ந்தது.

வாமனின் மூன்றாவது அடிக்கு இடமே இல்லை.பலியிடம் கேட்டார்,"அசுர மன்னனே!மூன்றடி நிலம் தருவதாக வாக்களித்தாய்.பூலோகமும்..மேல் உலகங்கள் எல்லாம் இரண்டு அடிகளுக்கு சரியாகி விட்டன.மூன்றாவது அடிக்கு இடம் எங்கே?"என்றார்.

"விஷ்ணு பிரபுவே! தயவு செய்து என்னை சத்தியம் தவற வைத்து நரகத்தில் ஆழ்த்தி விடாதீர்கள்.உங்களது மூன்றாவது அடிக்கு என் தலையைத் தருகின்றே ன்"என்றபடியே பலி சக்ரவர்த்தி மண்டியிட்டுப் பணிந்தார்.

அடியை பகவான் அவனது தலையின் மேல் வைத்து அழுத்தி அவனை பாதாள லோகத்துக்கு அனுப்பி வைத்தார்.

காஷ்யபர்..அதிதிக்கு மகனாகப் பிறந்த உபேந்திரன் எனும் வாமனன்,இந்திரனுக்கு மீண்டும் சொர்க்கலோகத்திக் கொடுத்து அவனது இழந்தப் பதவியை மீட்டுக் கொடுத்தார்.பின் விஷ்ணு சுக்ராச்சாரியாரிடம்
"ஆரம்பித்த யாகம் முடிவடையாதுப் போனால் அது மகாபலியைப் பாதிக்கும்..எனவே யாகத்தை நீங்கள் பூர்த்தி செய்யுங்கள்"என்றார்.

சுக்ராச்சாரியாரும் யாகத்தைப் பூர்த்தி செய்தார்.

வாமன அவதாரத்தை சொல்லி முடித்தார் சுகர் மகரிஷி

அப்போது பரீட்சித்"பகவான் நாராயணனே பாராட்டிய நற்குணங்கள் கொண்ட பலிச் சக்ரவர்த்தியை குலகுரு சுக்ராச்சாரியார் சபித்தது எந்த விதத்தில் நியாயம்?" என்றான்.

"அந்த சாபம் அன்பில் மிகுதியால் வந்தது.தவசீலர்கள் கோபமடைந்தால்..யார்..என்ன..என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள்.இதே சுக்ராச்சாரியார் தன் மாப்பிள்ளை யயாதியையே சபித்தவர் தெரியுமா?" என்றார் சுகர்.

"மாப்பிள்ளையை..மாமனார் சபித்தாரா? எதற்காக..யயாதி ஒரு மன்னர்.அவன் அசுரகுலகுருவான சுக்ராச்சாரியாரின் மகளை மணந்தவன் என்பதே ஆச்சரியம்.அதைப்பற்றி சொல்லுங்கள்"என்றான் பரீட்சித்.

சுகர் மகரிஷி..மன்னன் யயாதியின் கதயைச் சொல்ல ஆரம்பித்தார்.

  

No comments:

Post a Comment