Thursday, July 30, 2020

9 -ருத்ரகீதம்

பிருதுவிற்குப் பிறகு அவன் மகன் விஜிதாஸ்வன் பட்டத்திற்கு வந்தான்.அவன் தன் சகோதரர்களான தன்வகேசன்,திரவிணன்,ஹர்யக்ஷன்,விருகன் என்னும் நால்வருக்கும் நான்கு திசைகளை பங்கிட்டுக் கொடுத்து பூவுலகை ஆண்டு வந்தான்.

பின் விஜிதாஸ்வன் மகன் தானன் பட்டத்துக்கு வந்தான்.இவனுக்குப் பிறகு அவிர்த்தானனின் ஆறு மகன்களில் ஒருவரான பர்ஹிஷத் அரசன் ஆனான்.

பர்ஹிஷத் சமுத்திர ராஜனின் மகளாகிய சதக்ருசி என்பவளை மணம் செய்து கொண்டான்.இவர்களுக்கு பத்து பிள்ளைகள் பிறந்தனர்.அவர்களில் பிரசேதஸர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

பர்ஹிஷத் தன் பத்து மகன்களையும் அழைத்து "எல்லோரும் மக்களைப் பெற்று வம்சத்தைப் பெருக்குங்கள்"என்று சொல்ல அவர்கள் இல்லறத்தைத் தொடங்குமுன் இறைவனைத் துதித்து அவன் அருளினைப் பெற ஆசைப்பட்டனர்.

அனைவரும் தவம் செய்ய ஒரு சிறந்த இடத்தைத் தேடிக் கொண்டு புறப்பட்டார்கள்.ஓரிடத்தில் அற்புதபான ஏரி ஒன்றினைக் கண்டார்கள்.ஏரியை நெருங்கிய போது அங்கே இனிமையாக இசை ஒலித்துக் கொண்டிருந்தது.ஏராளமான கந்தர்வர்கள் பலவகையான வாத்தியங்களை இசைத்துக் கொண்டு கானம் பாடிக் கொண்டிருந்தார்கள்.

இசையில் மனம் லயிக்க பிரசேதஸர்கள் நின்று கொண்டிருக்க குபீரெனஒரு ஒளி வெள்ளம் ஏரிக்குள்ளிருந்து வெளிப்பட்டது.முக்கண்ணனாகிய பரமசிவன் ஏரிக்குள்ளிருந்து வெளியே வந்து பிரசேதஸர்களை நெருங்கினார்.

"பிரசேதஸர்களே நீங்கள் ஹரியின் பக்தர்கள் என்பதை நான் அறிவேன்.எனவே பகவான் விஷ்ணுவை பூஜிக்க உங்களுக்கு ஒரு ஸ்தோத்திரத்தை உபதேசிக்கிறேன்.அதைச் சொல்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் உண்டாகி அவர்களின் தூய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்..."எனச் சொன்ன விஷ்ணுவின் போற்றித் துதிக்கும் "ருத்ரகீதத்தை"உபதேசித்தார்.

"நான் விஷ்ணுவைப் பற்றிப் பாடியதால் "ருத்ரகீதம்" என வழங்கப்படும் இந்த யோகாதேசத்தை பகவானே சிருஷ்டி தொழிலுக்கு உதவியாக எனக்கும், பிரம்மாவிற்கும் போதித்தார்.இதை விடியலில் ஜெபிப்பவர்களுக்கு எல்லா பாவங்களும் விலகும்.நீங்களும் பயபக்தியுடன் ஜெபம் செய்யுங்கள்.உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்' என்று சொல்லி மறைந்தார்.

பிரசேதஸர்கள் இந்த யோகாதேசத்தை நீரில் நின்றபடிபதினாறாயிரம் ஆண்டுகள் தூய மனத்துடன் ஜெபித்தனர்.அவர்களின் உறுதியான பக்தியினைக் கண்டு மகிழ்ந்த மகாவிஷ்ணு கருடன் மீதேறி அங்கு வந்து அவர்களுக்கு தரிசனம் தந்தார். 

"பிரசேதஸர்களே! சகோதரர்கள் பத்து பேரும் ஒற்றுமையாக, மன உறுதியுடன் செய்த தவத்தைப் பாராட்டுகின்றேன்.சிவன் உங்களுக்கு உபதேசித்த ருத்ரகீதத்தை ஜெபிப்பதால் தூய உள்ளத்தையும், விரும்பியதை அடையவும் செய்யலாம்"என்று கூறினார்.

பின் பிரசேதஸர்களிடம் கண்டு எனும் முனிவருக்கும், ஒரு தேவலோக மங்கைக்கும் பிறந்தவர் பிரம்மலோசா.அவளின் தாய் குழந்தை பிறந்ததும் கைவிட்டு விஷ்ணுலகம் சென்றுவிட்டாள்.அன்புடன் மரங்களின் தேவதைகள்தான் பிரம்மலேசாவை எடுத்து "மாரிஷை" எனப் பெயர் சூட்டி வளர்த்தனர்.அந்த குழந்தையின் அழகைக் கண்டு மகிழ்ந்த சந்திரன்..அவள் உணபதற்காக அமிர்தத்தைக் கொடுத்தான்.நீங்கள் பேரழகியான அவளை மணந்து கொள்ளுங்கள்.அவள் மூலம் உங்களுக்கு பிரம்மதேவனைப் போன்ற மகன் பிறப்பான்.அவனால் உங்க வம்சம் தழைக்கும்.நீங்கள் நெடுங்கால, பூவுலகை ஆண்டு அதன் பின்னர் என்னை அவந்து அடைவீர்கள்" என அருள் புரிந்தார்.

பகவான் சொன்னபடியே..பிரசேதஸர்கள் மாரிஷையை மணந்தார்.அவர்களுக்கு தட்சன் எனும் மகன் பிறந்தான்.முன்பு சதிதேவியின்
தகப்பனாக இருந்து ருத்னனால் கொல்லப்பட்ட அதே தட்சன்தான்.இப்போதும் தட்சனாகவே பிறந்திருந்தான்.

பிரசேதஸர்கள் பின் பல ஆண்டுகள் ஆட்சி புரிந்து பின் நாரதரிடம் உபதேசம் பெற்று, பகவானைத் துதித்து தவம் இருந்து அவரது திருவடியை அடைந்தனர்."என்று பரீட்சித்துக்கு சொல்லி முடித்த சுக மகரிஷி"மன்னனே! சுவாயம்புவ மனுவின் மகன்களில் ஒருவனான.உத்தான் பாதனின் வம்சத்தைப் பற்ரிக் கூறினேன்.அடுத்து உத்தான பாதனின் சகோதரனான பிரியவரதனின் வம்சத்தைப் பற்றியும் கூறுகிறேன் கேள்" என சொல்ல ஆரம்பித்தார்.

"சுவாயம்புவ மனுவின் மூத்த மகனான பிரியவரதனுக்கு உலக இன்பங்களில் நாட்டமில்லை.பகவானின் பரமபக்தனான அவன்..தந்தை ராஜ்ஜியத்தைக் கொடுத்தும் ஏற்றுக் கொள்ள மறுத்து, எப்போதும் கடவுளை துதித்து வழிபடுவதையே வாழ்க்கையாகக் கழித்தான்.

ஒருமுறை பிரம்மன் பிரியவரதனை அழைத்து "உலக இன்பங்களைத் துறந்து இந்திரியங்களை வென்ற நீ இல்லறத்தில் ஈடுபட்டால் பக்தி குறைந்துவிடும் என எண்ணுகின்றாய்.அது தவறு.இல்லறத்தில் இருப்பது துறவறத்தைக் காட்டிலும் மேலானது.இல்லறத்தில் இருந்து கொண்டு மனதில் பற்றில்லாதவனாக இருந்தால், கடவுள் சிந்தனை எப்போதும் இருக்கும்.எனவே திருமணம் செய்து கொண்டு வம்சத்தை விருத்தி செய்" என்று கூறினார்.

பிரம்மாவின் புத்திமதியின்படி பிரியவரதன் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தான்.அவனுக்கு தேவலோகச் சிற்பியான விஷ்வகர்மாவின் மகளான பர்ஹிஸ்மதியை மனைவியாக நிச்சயித்து மணம் முடித்தனர்.

அவர்களுக்கு..ஊர்ஜஸ்மதி என்ற பெண்ணும் பத்து பிள்ளைகளும் பிறந்தனர்.இது தவிர பிரியவரதன் இரண்டாவதாக மணந்து கொண்ட மனைவியின் மூலம் மேலும் மூன்று பிள்ளைகள் பிறந்தனர்.

பிரியவரதனின் மகளான ஊர்ஜஸ்மதி ,அவர்களின் குலகுருவான சுக்ராச்சாரியாரை மணந்து கொண்டு தேவயானி எனும் மகளைப் பெற்றாள்.

பிரியவரதனின் பிள்ளைகளில் மூவர் ரிஷிகளாகிவிட மற்றவர்கள் தந்தை பிரித்துக் கொடுத்த இடங்களை அரசாண்டனர்.

பிரியவரதன் இறுதியாக பகவானை நோக்கி தவமிருந்து முக்தியடைந்தான்.  

பிரியவரதனின் மகன்களில் ஒருவனான ஆக்னீதரன் எனபவன் ஜம்பூத்வீபத்தை ஆண்டு வந்தான்.இவன் தனக்கு நற்குணங்கள் கொண்ட மகன் ஒருவன் பிறக்க வேண்டும் என பிரம்மனை நோக்கி தவமிருந்தான்.

பிரம்மா, "பூர்வசித்தி" என்ற தேவலோக மங்கையை ஆக்னீதரன் முன் அனுப்பி வைத்தார்.அவள் கால் சதங்கை ஒலி கேட்டு தவத்தில் இருந்த ஆக்னீதரன் கண் விழித்துப் பார்த்தான்.அவளைக் கண்டதும் காதல் கொண்டான்.பின், அவளை மணந்து சந்தோஷமாக குடும்பம் நடத்தினான்..

அவர்களுக்கு ஒன்பது பிள்ளைகள் பிறந்தனர்.ஆக்னீதரன் தனது ராஜ்ஜியத்தை ஒன்பது பகுதிகளாகப் பிரித்து ஒன்பது மகன்களையும் அரசனாக்கினான்.

கடமை முடிந்ததும் பூர்வசித்தி விண்ணுலகம் செல்ல.அவளின் பிரிவினைத் தாங்க முடியாத ஆக்னிதரனும் இறந்தான்.ஆக்னீதரனின் ஒன்பது பிள்ளைகளும் மேரு பர்வதனின் ஒன்பது மகள்களை மணந்தனர்.

ஆக்னீதரனின் முதல் மகனான நாபி ,மேருபர்வதனின் மகள் மேருதேவியை மணந்து கொண்டான்.இவர்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை எனும் குறை இருந்து வந்தது.

பகவான் விஷ்ணுவை பிரார்த்தித்துஇருவரும் யாகங்கள் செய்தார்கள்.இதனால் மனம் மகிழ்ந்த திருமால், யாக குண்டத்தில் தோன்றினார்.யாகத்தை நடத்தி வைத்த முனிவர்கள், நாராயணனை வணங்கித் துதித்தார்கள்.அவர்கள் இறைவனிடம், "பகவானே!எங்களது மன்னன் நாபிக்கு தங்களைப் போன்ற மகன் பிறக்க வேண்டும்"என வேண்டினர்.

"நாபிக்கு நானே மகனாகப் பிறப்பேன்" என அருள்பாலித்து மறைந்தார் திருமால்.

பகவானின் வாக்குப்படி மேருதேவி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.குழந்தைக்கு ரிஷபன் எனப் பெயரிட்டனர்.ரிஷபன் வளர்ந்த பின் அரசாட்சியை ஏற்றுக் கொண்டான்.அவன் இறைவனின் அம்சம் ஆனதால் தேசம் சுபிட்சமாக இருந்தது.அவன் புகழ் எங்கும் பரவியது.

மூவுலகும் ரிஷபனைப் பாராட்டியதால் இந்திரன் அவன் மீது பொறாமை கொண்டு அவனது நாட்டில் மழை பெய்யாதபடி செய்தான்.இதை அறிந்த ரிஷபன் தன் சக்தியால் மழையைப் பொழியச் செய்து இந்திரனின் கர்வத்தை அடக்கினான்.

பின் இந்திரன் ,ரிஷபனிடம் மன்னிப்புக் கேட்டு,தன் மகள் ஜயந்தியை அவனுக்கு மணமுடித்தார்.இவர்களுக்கு நூறு பிள்ளைகள் பிறந்தனர்.அவர்களில் மூத்தவன் பரதன்.அவன் பருவம் அடைந்ததும் அவனிடம் அரசை ஒப்படைத்துவிட்டு  ரிஷபன் காட்டுக்குச் சென்று துறவு மேற்கொண்டு முக்தியடைந்தான்.

பரதன் ஆசாபாசங்களில் சிக்கிக் கொண்டான்.அது அவனது பிறவியை  ஆட்டிப்படைத்தது.ஒரு விலங்கின் மீது கொண்ட பாசத்தால் அது அவனை அலைக்கழித்தது,

  


No comments:

Post a Comment