Saturday, July 25, 2020

3 - செத்த பாம்பும் சாபமும்



பரீட்சித் ,திறமையானவனாகவும், நற்குணங்கள் கொண்டவனாகவும்,தன் முன்னோர்கள் பெயருக்கு களங்கம் ஏற்படாதபடி ராஜ்ஜியத்தை நடத்தி வந்தான்.

விராட மன்னரின் புதல்வி இராவதியை மணந்து, ஜனமேஜயன் முதலான நான்கு புதல்வர்களைப் பெற்றான்.

பரீட்சித் தன் குடி மக்களையும் தன் மக்களாகவே பார்த்துக் கொண்டான்.தனது வல்லமையால் அஸ்தினாபுரத்துக்கு பகைவர்களே இல்லாமல் வைத்துக் கொண்டான்.

பகவான் நாராயணனிடம் பக்திக் கொண்டவனாகத் திகழ்ந்தான்.

அவ்வப்போது மக்கள் குறைகளை அறிய இரவு நேரத்தில் மாறுவேடத்தில் நகர்வலம் வந்தான்.

அப்படி ஒருநாள் வரும் போது ஒரு விசித்திரக் காட்சியினைக் கண்டான்.

ஒரு கம்பீரமானக் காளை ஒன்று தன் மூன்று கால்களிலும் அடிபட்டு..மீதமிருந்த ஒரு காலில் தட்டுத்தடுமாறியபடி வேதனையுடன் நின்று கொண்டிருந்தது.அதன் அருகில் ஒரு அழகான பசு ஒன்று கண்களில் கண்ணீர் வழியக் காட்சித் தந்தது.

பூவுலகில் தர்மமே காளையாகவும், பூமாதேவியே பசுவாகவும் நின்றிருந்தனர்.

அழுதுக் கொண்டிருந்த பசுவிடம், ஒற்றைக் காலில் தடுமாறிச் சென்ற காளை அதன் துயரை விசாரித்தது.

"பூமாதேவியே! எதற்கு அழுகிறாய்? உன் கவலை என்ன? மனித குலம் நல்லபண்புகளைக் கைவிட்டு தீய எண்ணங்கள் பின் செல்வதைக் கண்டு வருந்துகிறாயா? அல்லது..நேர்மையில்லா மன்னர்கள் இப்பூமியை ஆளப்போகிறார்கள் எனக் கவலைப்படுகிறாயா? வரபோகும் , காலங்கள் யாகங்கள் இல்லாமல்போய் வேதங்கள் நிலை பெறாமல் இருக்கப் போகிறது என்ற வேதனையா?தருமமாகிய நான் ,எனது மூன்று கால்களும் பழுதுப்பட்டு ஒற்றைக் காலில் நிற்கும் நிலை  வந்துவிட்டதே அதற்காகவா? இல்லை பகவான் கிருஷ்ணன், இப்பூமியை விட்டு நீங்கியதற்காகத் துக்கமா? எதற்காகக் கண்ணீர்" எனக் கேட்டது.

பூமியாகிய பசு, "நீ சொல்வது சரிதான்.நான்கு கால்களால் திடமாக மனித குலத்தைக் காத்துவந்த தர்மதேவதையான நீ, உன் மூன்று கால்களும் சிதைக்கப்பட்டு ஒற்றைக்காலில் வேதனைப்படுவதை என்னால் சகிக்க முடியவில்லை.அதுபோல மனிதகுலம், தங்கள் நல்ல குணங்களான சத்தியம்,பொறுமை,கருணை,தானம், தைரியம் ஆகியவற்றைக் கைவிட்டு ஆசைகளின் பிடியில் சிக்கி..சுயநலப்பாதையில் போகிறதே என்றும் வருந்துகிறேன்.மேலும் கண்ணனின் பாதக்கமலங்கள் என் மீது பட்டுக்கொண்டிருந்த வரை..நான் சந்தோஷமாக இருந்தேன்.இன்றோ கலியின் ஒட்டு மொத்த பாவங்கள் ஆளுமை செய்யத் தொடங்கிவிட்டன.இனி என் கதி என்னாவகுமோ? தெரியவில்லையே!" என்றது.

இப்படி இவை பேசிக்கொண்டிருந்த போது, கருத்த உடலும், கோரமான உருவமும் கொண்ட ஒருவன் அங்கே வந்தான்.தன் கையிலிருந்த தடியால் பசுவையும், காளையையும் அடித்துத் துன்புறுத்தத் தொடங்கினான்.

இதைக்கண்ட பரீட்சித் கோபத்துடன் அந்த இடத்துக்கு விரைந்தான்.பசுவையும், காளையையும் வதைத்துக் கொண்டிருந்தவனைப் பார்த்துக் கேட்டான்..

"எதற்காக இந்த வாயில்லா ஜீவன்களை இம்சிக்கிறாய்.? அவை உனக்கு என்ன தீமையினைச் செய்தன?எனது ஆட்சியில், இப்படி ஒரு கருணையில்லா செயலைச் செய்யும் உன்னைக் கொன்றாலும் பாவமில்லை" என்றவன், பின் பசுவைனையும், காளையையும் பார்த்து,"துயரத்தில் இருக்கும் நீங்கள் வருந்த வேண்டாம்.உண்மையில் நீங்கள் தேவதைகளாகத்தான் இருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.இப்படிக் கொடுமைப்படுத்தும் இவன் யார்?எதற்காக உங்களை வதைக்கின்றான்." என்றான்.

காளை குற்றவாளியை யார் எனக் காட்டிக் கொடுக்கவில்லை."மன்னா..எல்லாம் எங்கள் தலைவிதி.வேறு என்ன சொல்ல..நான் யாரையும் குற்றம் சொல்ல வில்லை" என்றது.

பரீட்சித் புரிந்து கொண்டு பேசலானான்.

"விரோதியைக்கூட காட்டிக் கொடுக்காத நீ தர்மதேவதையாகத்தான் இருக்க வேண்டும்.தவம்,நல்லொழுக்கம்,இரக்கம்,சத்தியம் எனும் நான்கு கால்களைக் கொண்ட நீ இப்போது பெண்ணாசை,மது மயக்கம், தற்பெருமை போன்ற அதர்மக் காரணங்களால் ,சத்தியத்தைத் தவிர மூன்று கால்களையும் இழந்திருக்கின்றாய் எனத் தெரிகிறது.சத்தியம் எனும் அந்த ஒற்றைக்காலையும்  ஒடிக்க வந்திருக்கும் இந்த கரிய உடல் கொண்டவன் கலிபுருஷன் என எண்ணுகீறேன்.கண்ணீர்விட்டு கதறி அழும் இப்பசு, கிருஷ்ணனை இழந்து துக்கப்படும் பூமாதேவிதானே!" என்றான்.

பின் கட்டுப்படுத்த முடியாத கோபத்துடன் கலிபுருஷனிடம் திரும்பி, "அப்பாவிகளையும், திக்கற்றவர்களையும் வதைக்கும் உன்னை இப்போதே கொன்று போடுகிறேன்" என வாளால் வெட்டப்போனான்.

"வேண்டாம் மன்னா.தயவு செய்து என் மீது இரக்கம் காட்டுங்கள்.என்னைக் கொல்லாதீர்கள்"என்றபடியே பரீட்சித்தின் கால்களில் விழுந்தான் கலிபுருஷன்.

"தஞ்சம் அடைந்ததால் பிழைத்தாய்.தெய்வ பக்தியும், வேத முழக்கமும் நடைபெறும் என் ராஜ்ஜியத்தில் இனி அடி எடுத்து வைக்காமல் ஓடிவிடு" என்றான் பரீட்சித்.

"மன்னா! இந்த பூமி முழுவதும் உன் வசத்தில் உள்ளது.நான் வேறு எங்கு போவேன்? அடைக்கலம் கேட்டு வருவோர்க்கு அன்பு காட்டும் நீ..நான் எந்த இடத்தில் இருக்க வேண்டும்..என்று கூறிடு"

அடைக்கலம் என வருவோரைக் காக்க வேண்டியது தனது கடமை என்று உணர்ந்ததால் பரீட்சித், "சரி,மது,சூது,பெண் மோகம்,ஜீவஹிம்சை ஆகிய நான்கு இடங்களில் நீ இருந்து கொள்"

கலிபுருஷன் தயக்கத்துடன்.."இந்த நாலு இடங்கள் போதாதே.."என்றான்.

"அப்படியானல்...பொன்னாசை இருக்குமிடத்தையும் எடுத்துக் கொள்"

கலிபுருஷன் அவ்விடத்தைவிட்டு அகன்றதும்..தர்மதேவதை, தவம்,ஆசாரம்,கருணை,சத்தியம் என தனது நான்கு கால்களையும் பூரண நலத்துடன் திரும்பப் பெற்றது.பூமாதேவியும் துயரம் நீங்கி சுபிட்சத்துடன் காணப்பட்டாள்.

ஆனால்..யாரையும் விதி விட்டு வைப்பதில்லை.காலத்தின் கணக்குப்படி அவரவர் பாவ, புண்ணிய பலங்களின்படி துரத்தியே செல்கிறது.

பரீட்சித்தின்  வாழ்க்கையிலும் விதி விளையாடியது. பரீட்சத்தின் மனதில் தேவையற்ற கோபத்தை ஏற்படுத்தி மோசமான சாபத்தைப் பெற்றுத் தந்தது.

--------------------------------------------------------------------------------------------------
காட்டு விலங்குகள் அடிக்கடி நாட்டு எல்லைக்குள் புகுந்து மக்களைத் துன்புறுத்தி வந்ததால்,அவற்றை வேட்டையாட அவ்வப்போது காட்டுக்குள் புகுந்திடுவான் பரீட்சித்.

அப்படி ஒருமுறை அடர்ந்த காட்டுக்குள் அவன் பரிவாரங்களுடன் சென்றபோது, வேட்டை மும்மரத்த்தில் பரிவாரங்களைப் பிரிந்து காட்டினுள் வெகுதூரம் சென்று விட்டான்..

உச்சிப் பொழுது..தொண்டை தாகத்தால் வரண்டது.பசி உயிர் போனது.களைப்பு வேறு.

தன் தாகத்தைத் தணிக்க பக்கத்தில் குளம், குட்டை ஏதேனும் இருக்கின்றதா எனத் தேடினான்.தூரத்தில் ஒரு ஆசிரமம் இருப்பதைக் கண்டான்.ஆசிரமத்தில் இருப்பவர் மூலம் தனக்குத் தண்ணீரும்,உணவும் கிடைக்கக் கூடும் என அங்கு விரைந்தான்.

ஆசிரமத்தில் அங்கிரஸ் எனும் முனிவரும் ,அவரது மகன் சிருங்கியும் வசித்து வந்தனர்.பரீட்சித் சென்ற சமயம் வளாகத்தில் யாரையும் காணோம்.

"ஐயா..இங்க யாராவது இருக்கீங்களா?மன்னன் பரீட்சித் வந்திருக்கேன்.தாகத்தாலும், பசியாலும் தவிக்கிறேன்.கொஞ்சம் தண்ணீரும், உணவும் கொடுத்து உதவுங்க" எனக் குரல் கொடுத்தான்.

அதற்கு பதில் ஏதும் இல்லாததால்,"உள்ளே யாரும் இல்லையா?"என்றபடியே தயங்கித் தயங்கி ஆசிரமத்தின் உள்ளே சென்றான்.

உள்ளே அங்கிர்ஸ் முனிவர் தியானத்தில் இருந்தார்.தான் உள்ளே வந்த சப்தம் கேட்டும் ,அவர் கண் விழிக்காமல் இருந்தது பரீட்சித்து எரிச்சலூட்டினாலும்,மகரிஷி என்பதால், "வணக்கம்.நான் மன்னன் பரீட்சித் வந்திருக்கின்றேன்"என்றான் மன்னன்.

முனுவரிடம் சலனம் ஏதும் இல்லாததால் மீண்டும்..மீண்டும் சொன்னான்.

பசியும், தாகமும் அவனை மேலும் எரிச்சலூட்ட,தான் வந்திருப்பது தெரிந்தும், உபசரிக்க மனமின்றி தியானத்தில் இருப்பது போல ரிஷி நடிப்பதாக மன்னன் எண்ணினான்.

ஆத்திரத்தில் அறிவிழந்தவனுக்கு..ஆசிரம வாசலில் செத்துக் கிடந்த பாம்பு ஒன்று கண்ணில் பட்டது.அதை, தன் வாளின் நுனியில் எடுத்து வந்து தியானத்தில் இருக்கும் முனிவரின் கழுத்தில் மாலையாய்ப் போட்டான்.பின், தன்னை அவமானப் படுத்தியவரை...அவமானப் படுத்தி விட்ட திருப்தியுடன் வெளியேறினான்.

இந்த சிறு பிள்ளைத்தனமான செயல், பரிட்சித்தின் வாழ்வில் மிகப் பெரிய விபரீதத்தை ஏற்படுத்தப் போவதை அவன் அறியவில்லை.

மன்னன் பரீட்சித், ஆசிரமத்தை விட்டுச் சென்ற சிறிது நேரத்தில் முனிவரின் மகன் சிருங்கி அங்கு வந்தான்.தனது தந்தையின் கழுத்தில் செத்த பாம்பு மாலையாய்க் கிடப்பதைப் பார்த்தான்.

தன் தவ வலிமையால் மன்னன்தான் அச்செயலைச் செய்ததை அறிந்தான்.

மகா தவசியான தன் தந்தையை அவமானப்படுத்திய மன்னனை தண்டித்தே தீருவேன்..என்ற படியே தன் கமண்டலத்திலிருந்து சிறிது நீரை வார்த்து, "என் தந்தைக்கு அவமானம் செய்த மன்னன் இன்றிலிருந்து ஏழாம்நாள்,நாகராஜனான தட்சகன் எனும் பாம்பினால் கடிபட்டு..மரணமடைவான்" என்றிட்டான்.

இவன் இவ்வாறு சொல்லி முடித்த போது தியானத்தில் இருந்த முனிவர் அங்கிரஸ் மகனின் சாபச் சொற்களைக் கேட்டு மனம் வருந்தினார்.

"மகனே! என்ன காரியம் செய்து விட்டாய்?மன்னன் பரீட்சித் மிகவும் நல்லவன்.பக்திமான்..அப்படிப்பட்டவன் தாகத்திலும் ,பசியிலும் இருந்தபோது..என்ன செய்கிறோம் என அறியாது செய்து விட்டான்.அவன் செய்த ஒரு சாதாரணத் தவறுக்கு இப்படி ஒரு தண்டனையா? பெரிய தவறு செய்து விட்டாய் மகனே! உன்னை அந்த இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்" என்றபடியே துயரத்தில் ஆழ்ந்தார்.

சிறுவன் சாபமிட்டாலும்..அந்த சாபத்தை மாற்றமுடியாது என்பதால், "எல்லாம் விதியின் செயல்' என எண்ணி பெருமூச்சு விட்டார்




No comments:

Post a Comment