Sunday, July 19, 2020

1 - பாரதப் போருக்குப் பின்



பதினெட்டாம் நாள் போருடன் பாரதப் போர் முடிவுக்கு வந்திருந்தது.

பீமனால், தொடைகள் பிளக்கப்பட்டு, குற்றுயிரும்..குலைஉயிருமாகக் கிடந்தான் துரியோதனன்.

தரையில் .. எழுந்து கொள்ள இயலாமல் , பூமியை அடித்துக் கொண்டு புழுதியில் புரண்டுக் கொண்டிருந்தான்.

அவன் மரணத்தை எதிர்நோக்கி கழுகுகளும், நரிகளும் அவனை வட்டமிட்டுக் கொண்டிருந்தன.

அப்போது துரோணரின் மகனும், துரியோதனின் நண்பனுமான அஸ்வத்தாமன் அங்கு ஓடி வந்தான்.உயிர் போகாமல் மரணப்பிடியில் இருந்த துரியோதனனைக் கண்டான்.கண்ணீர் விட்டு அழுதான்..பின்..கோபத்துடன்..

"துரியோதனா..என் தந்தை துரோணர் கொடூரமாகக் கொல்லப்பட்ட போது கூட, நான் இவ்வளவு வேதனையை அடையவில்லை.ஆனால்..உன்னைப் பார்த்ததும் என் மன்ம கொதிக்கின்றது.ஒருவர்  விடாது எதிரிகள் கூட்டத்தை
இன்றிரவே ஒழிப்பேன்..இது சத்தியம்" என முழங்கினான்.

நள்ளிரவு ..எல்லோரும் உறக்கத்தில் இருந்த போது, பாண்டவர்கள் பாசறையில் புகுந்தான்.அப்போது பாண்டவர்கள் அங்கு இல்லாததால், திரௌபதியின் ஐந்து மகன்களான உபபாண்டவர்கள் உட்பட அனைவரையும் கொன்றான்.பின், பாண்டவர்களுக்கு பயந்து ஓடி ஒளிந்தான்.

மகன்களை இழந்த திரௌபதி கதறினாள்..

"ஐயோ..என் மகன்கள் போரில் இறந்திருந்தாலும்..வீரத்தாயாக மகிழ்ந்திருப்பேன்.ஆனால்..கொடியவன் அஸ்வத்தாமனால் கொலைசெய்யப்பட்டு இருக்கின்றார்களே!" எனக் கதறினாள். "அந்த அஸ்வத்தாமனைத் தண்டிக்க யாருமில்லையா?" என கூப்பாடுப் போட்டாள்

பெற்ற தாயின் தவிப்பையும், வேதனையையும் கண்டு அர்ச்சுனன் ஆவேசமுற்றான்.

யுத்த தர்மத்தை மீறி அநீதியாக ந்டந்து கொண்ட அஸ்வத்தாமனின் தலையைக் கொய்து திரௌபதியின் காலடியில் போடுவேன்" என்று கூறிவிட்டு கண்ணனுடன் புறப்பட்டான்.

உயிருக்கு பயந்து பாகீரதி நதிக்கரையில் இருந்த வியாசர் ஆசிரமத்தில் ஒளிந்திருந்த அஸ்வத்தாமன் அர்ச்சுனன் வருவதைக் கண்டு பதறி எழுந்தான்.

உடன், அர்ச்சுனனை வெல்ல முடியாது என்ற எண்ணத்தில் மிகக் கொடியதும், உலகையே நாசப்படுத்தக் கூடியதுமான சக்தியையுடைய பிரம்மாஸ்திரத்தை அர்ச்சுனன் மீது ஏவினான்.

நெருப்பைக் கக்கியபடியே வந்த பிரம்மாஸ்திரத்தைக் கண்டு திகைத்த அர்ச்சுனனிடம், கண்ணன், "ஒரு பிரம்மாஸ்திரத்தை..மற்றொரு பிரம்மாஸ்திரத்தால்தான்  வெல்லமுடியும்.நீயும் ஒரு பிரம்மாஸ்திரததை ஏவி அதை அமைதிப்படுத்து" என்றான்

அப்படியே செய்தான் அர்ச்சுனன்

அப்போது வியாசரும், நாரதரும் அந்த அஸ்த்திரங்களுக்கு இடையே வந்து நின்றனர்.அர்ச்சுனனையும், அஸ்வத்தாமனையும் கண்டித்தார்கள்.

"உலகையே அழிக்கக்கூடிய அந்த அஸ்த்திரங்களை திரும்பப் பெறுங்கள்"என்றனர்.

அவர்களின் வேண்டுகோளை ஏற்று அர்ச்சுனன், தான் செலுத்திய அஸ்த்திரத்தைத் திரும்பப் பெற்று கொண்டான்.

பிரம்மாஸ்த்திரத்தை ஏவுவதைவிட திரும்பப் பெறுவது கடினம்.அஸ்வத்தாமனால் அது இயலவில்லை.அதற்கான வலிமை இன்றி அவன் தோற்றுப் போனான்.தலை கவிழ்ந்தான்.

அர்ச்சுனன்,அவனை கயிற்றினால் கட்டி இழுத்து வந்து திரௌபதியின் முன் நிறுத்தினான்.

அப்போது போலியான கோபத்துடன் "உன் மகன்களைக் கொன்ற இந்தக் கொடியவனை உன் கைகளினாலேயே வெட்டி வீழ்த்து" என்றான் கண்ணன்.

அர்ச்சுனனின் மனம் அதனை ஏற்கவில்லை.தன் குரு துரோணரின் மகனை, தன் கைகளால் கொல்வதா? என்று தயங்கினான்.

அஸ்வத்தாமனைக் கண்டதும், திரௌபதியின் மனமும் மாறியது. "இவன் என் பிள்ளைகளைக் கொன்ற பாவியானாலும், குரு துரோணரின் மகன்.என் மகன்களை நான் பறி கொடுத்தது போல, இவனது தாய் கௌதமியும் இவனை இழந்து கண்ணீர் வடிக்க வேண்டாம்.இவனை விட்டு விடுங்கள்" என்றாள் .

பீமனைத் தவிர மற்ற அனைவரும் அவனை மன்னித்துவிடலாம் என்றனர்.

"தூங்கிக் கொண்டிருந்த அப்பாவி குழந்தைகளைக் கொன்ற இவனை மன்னிக்கவேக் கூடாது" என்றான் பீமன்.

கண்ணனும் அதை ஆமோதித்தான்.

"அர்ச்சுனா...பீமன் சொன்னது சரிதான்.அஸ்வத்தாமன் தலையைத் துண்டிப்பேன் ..என சபதம் செய்தவன் நீ,,அதனால், அவனுக்கு என்ன தண்டனைக் கொடுக்க வேண்டும் ..என நினைக்கிறாயோ..அதைச் செய்"

கண்ணன் சொன்னதற்கான அர்த்தத்தைப் புரிந்து கொண்ட அர்ச்சுனன்,அஸ்வத்தாமனின் தலையில் அணிந்திருந்த மிகச் சதி வாய்ந்த ரத்தினமணியுடன் சேர்த்து, அவன் சிகையினை அறுத்து, அவனை ஓட விட்டான்.

ஒரு அந்தணனின் சிகையை அறுப்பது என்பது அவனைக் கொல்வதற்குச் சமம் என்பதால், இந்த தண்டனையே போதும் என எண்ணினான் அர்ச்சுனன்.

ஆனாலும் ,அஸ்வத்தாமனின் கொடுஞ்செயல் இத்துடன் நிற்காது..தொடர்ந்தது.

போரில் உயிரிழந்த அனைவருக்கும் இறுதிக்கடன் செலுத்திய பின்னர் கண்ணன் துவாரகைக்குக் கிளம்பத் தயாரானான்.

அப்போது அபிமன்யுவின் மனைவியான உத்திரை பயந்து ஓடி வந்தாள்.

"கண்ணா..என்னைக் காப்பாற்றுங்கள்.எனக்கு அடைக்கலம் கொடுங்கள்.சீறும் பாம்பு விஷத்தினைக் கக்குவது போல நெருப்பினைக் கக்கியவாறு..என்னை ஒரு அஸ்திரம் துரத்தி வருகிறது.அதனால் என் உயிர் போகுமானால் கவலையில்லை..ஆனால் என் வயிற்றில் இருக்கும் குழ்ந்தையும் இறந்து..பாண்டு குல வம்சமே அழிந்து போய் விடுமே என பயப்படுகின்றேன்.கண்ணா, நீங்கள்தான் என் வயிற்றில் இருக்கும் கருவினைக் காக்க வேண்டும்" என்றாள்.

பாண்டவர் குலத்தையே அடியோடு அழிக்க அஸ்வத்தாமன் "அபாண்ட வீயம்" என்னும் அஸ்திரத்தை ஏவியிருக்கின்றான் என்பதைக் கண்ணன் உணர்ந்தான்.அந்த அஸ்திரத்தை தன் சுதர்சன சக்கரத்தால் மட்டுமே அழிக்க முடியும் என்பதால்,தன்னை "ஜோதி" உருவெடுத்து உத்திரையின் கர்ப்பத்தில் புகுந்து காத்தான்.

கண்ணனின் கருணையினைக் கண்டு அனைவரும் அவனைப் போற்றித் துதித்தனர்.குந்தி ஆனந்தக் கண்ணீருடன் கண்ணனை வணங்கினாள்.

"கண்ணா..ஆதியும், அந்தமும் இல்லாதவனே! உன்னை வணங்கிகின்றேன்.எங்களைத் துன்பங்களிலிருந்து தொடர்ந்து நீ காத்து வருகிறாய்.இப்போதும், பாண்டு குலம் அழியாமல் நீயே காத்தாய்.உன் கருணைக்கான் நன்றிக்கடனை நாங்கள் எப்படித் தீர்ப்போம்? எந்த இடையூறுகள் ஏற்பட்டாலும், நதியானது எப்படி எல்லாவற்றினையும் தாண்டி..கடலைச் சென்று அடைகின்றதோ..அதுபோல எல்லாப் பிறப்புகளிலும் உன் நினைவே..எங்கள் நெஞ்சத்தில் இருந்து உன்னை சரணடைய வேண்டும்.நீயே அதற்கு அருள வேண்டும். " என்றாள்.

கண்ணனும் தன் மோகனப்புன்னகையுடன் "அப்படியே ஆகட்டும்" என அருளினான்.

பின்னர், அவன் துவாரகைக்குப் புறப்படத் தயாரான போது, தருமர் அவனைத் தடுத்தான்.

"கண்ணா..நண்பர்கள்,உறவினர்கள்,பெரியோர்கள் என அனைவரையும் போரில் பறிகொடுத்து நிம்மதியின்றி இருக்கின்றேன்.நீ இன்னமும் கொஞ்ச நாட்கள் எங்களுடன் இருந்தால் ஆறுதலாய் இருக்கும்" என்றான் தருமர்.

தருமரின் கோரிக்கையினை ஏற்று கண்ணன் அவர்களுடன் தங்கினான்.

"யுத்தத்தில் நடந்த மரணங்களுக்கு நான் பொறுப்பாகி விட்டேன்" என கலங்கிய தருமருக்குக் கண்ணன் ஆறுதல் கூறினான்.

"தர்மபுத்திரா! நீ ஒரு போதும் கலக்கம் அடைய வேண்டாம்.சமாதானத்தையே நீ நாடிய போதும், யுத்தம் உன் மீது திணிக்கப்பட்டது.போரை எதிர்கொள்வதே சத்திரிய தர்மம்.எனவே ஒரு சத்திரியனுக்குரிய  கடமையையே நீ செய்திருக்கிறாய்.இது ராஜநீதி.இது குறித்து பிதாமகன் பீஷ்மரிடம் கேட்டுப்பார்.உன் மனதில் உள்ள குழப்பங்கள் தீறும்" என பாண்டவர்களை அழைத்துக் கொண்டு..அம்புப் படுக்கையில் இருந்த பீஷ்மரைக் காணச் சென்றான் கண்ணன்.

(பீஷ்மர் தருமருக்குச் சொன்ன உபதேசங்களை விரிவாக "மினியேச்சர் மகாபாரதம்" எனும் நூலில் குறிப்பிட்டுள்ளேன்)

குருக்ஷேத்ர பூமியில் உத்திராயண காலத்தில் உயிர் விடுவதற்காக அம்புப் படுக்கையில் காத்திருந்தார் பீஷ்மர்.அனைவரும் அவனை வணங்கி நின்றனர்.

கண்ணன் பீஷ்மரைக் காண வருவதை அறிந்து தேவரிஷிகளும்,விசுவாமித்திரர் போன்ற ராஜ ரிஷிகளும் மற்றும் பிரம்மாவும், நாரதரும் கூட அங்கு வந்துவிட்டனர்.

மரணத்தறுவாயில் இருந்தாலும், புன்னகையுடன் அவர்களை வரவேற்றார் பீஷ்மர்.பெரியோர்களை வணங்கி, சிறியவர்களுக்கு ஆசி கூறினார்.பின், தர்மரின் மனக்கலக்கத்தைத் தெரிந்து கொண்டு,அவர் மனம் தெளிவடையும்படி தர்மநெறிகளையும்,ராஜநீதியையும் விரிவாக உபதேசித்தார்.

ஸ்ரீமன் நாராயணனே..கண்ணனாக அவதரித்துள்ளான் என்பதை உணர்ந்தவரான பீஷ்மர்,இறுதியாக அவனை தன் மனத்திரையிலேயே போற்றித் துதித்தார்.பின்னர் உத்திராயண காலம் நெருங்கியதும் அவன் நாமத்தை உச்சரித்தவாறே..உயிரை விட்டு முக்தியினை அடைந்தார்.

அவரது ஜீவன் ஜோதி வடிவத்தில் கண்ணனின் உடலுடன் கலந்ததைக் கண்ட அனைவரும்..பரவசத்துடன் கண்ணனை வணங்கினர்.

தருமர், பிதாமகர் பீஷ்மருக்கு ஈமக்கடனை செய்து முடித்ததும், கண்ணன் துவாரகாபுரிக்குத் திரும்பினான்.,

துவாரகாபுரி மக்கள் கண்ணனின் வருகையால் மகிழ்ந்தனர்.அவதாரப் புருஷனான கிருஷ்ணரும் அவர்களுக்கு மாயையை ஏற்படுத்தித் தன்னை சாதாரண மானிடனைப் போல காட்டிக்கொண்டான்.

கோபிகைகளுடன் கொஞ்சிக் குலாவி,அவர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தி தன்னை ஒரு பெண் பித்த்னைப் போலக் காட்டிக் கொண்டான்.

பிருந்தாவனத்தில் அவனது சிருங்கார ராஜலீலைகள் தொடர்ந்தன .

No comments:

Post a Comment