Monday, July 20, 2020

2 - பரீட்சித்துக்கு பட்டாபிகேஷம்


அஸ்தினாபுரத்தில் தர்மர் அரசராக பதவி ஏற்று திறம்பட அரசாண்டான்.மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.

கண்ணனால் கருவிலே காப்பாற்றப் பட்ட உத்திரையின் கர்ப்பம் நன்கு வளர பத்தாம் மாதம் அவள் ஒரு அழகிய ஆண் குழந்தையினைப் பெற்றாள்.

பகவான் விஷ்ணுவால் காப்பாற்றப்பட்டதால், அக்குழந்தைக்கு விஷ்ணுராதன் எனப் பெயரிட்டனர்.ஆனாலும் அக்குழந்தை தன்னைக் காண வந்தவர்களையெல்லாம்..தன்னைக் கருவிலே காத்தது..இவர்களாக இருக்குமோ என உற்று, உற்று பார்த்தது.அது அப்படி பரீட்சித்துப் பார்த்ததால்..குழந்தை பரீட்சித்து என்று அழைக்கப்பட்டது.

தர்மரும் ஜோதிடர்களை வரவழைத்து குழந்தையின் ஜாதகத்தைக் கணித்து, அதன் எதிர்காலத்தைப் பற்றி விசாரித்தான்.

"குழந்தை நல்ல பண்புகளுடன், இஷ்வாகு,ஸ்ரீராமன், சிபிச்சக்கரவர்த்தி போல உல்கம் புகழ அரசாள்வான்.பின்னாளில் ஒரு ரிஷிபுத்திரனின் சாபத்துக்கு ஆளாகி, அதனால் மரணம் அடைவான்.ஆனாலும் தன் கடைசி நாட்களில் "சுகர்" மகரிஷியிடம் "பாகவதம்" கேட்டு பகவான் நாராயணனின் திருவடியினைச் சேர்வான்" என்றனர் ஜாதகத்தைக் கணித்த ஜோதிடர்கள்.

பாண்டு வம்சத்தின் ஒரே வாரிசான பரீட்சித் ,பெரும் புகழடைவான் எனக் கேட்ட பாண்டவர்கள் மகிழ்ந்தனர்.பரிட்சித்தை பண்புள்ளவனாகவும், அனைத்து கலைகளிலும் வல்லவனாகவும் வளர்த்தனர்.

இந்நிலையில்,பாரதப் போரில் பங்கு பெறாது,மனம் வெறுத்து தீர்த்த யாத்திரை சென்றிருந்த விதுரர் அஸ்தினாபுரம் திரும்பினார்.பாண்டவர்கள் அவரை வரவேற்று உபசரித்தனர்.

விதுரர், தாம் சென்று வந்த திருத்தலங்கள், புண்ணிய தீர்த்தங்கள் பற்றி அவர்களிடம் கூற...பாண்டவர்களும் குருக்ஷேத்திரப் போர் பற்றிய விவரங்களை அவரிடம் பகிர்ந்து கொண்டனர்.

விதுரர் உள்ளத்தில், விரக்தியும், துக்கமும் நிரம்பி இருந்தது.கிருஷ்ணன் பிறந்த குலமான யதுகுலம் முழுதும் வேறு ஒரு ரிஷியின் சாபத்தினால் அழிந்து போயிருந்தது,

கிருஷ்ணனும், பலராமனும் கூட தங்கள் உயிரை விடுத்து பூவுலகைவிட்டு நீங்கியிருந்தனர்.இதுபற்றி பாண்டவர்களீடம் கூறினால் அவர்கள் தாங்க மாட்டார்கள் என்பதால் விதுரர் மனதிற்குள் புழுங்கினார்.

விதுரரைப் போலவே அஸ்தினாபுரத்து அரண்மனையில் இருந்த திருதிராஷ்டிரனும்,காந்தாரியும் கூட மனப்புழுக்கத்தில் இருந்தனர்.

தருமர், அர்ச்சுனன் முதலானோர் அவர்களை  மிகவும் நல்லமுறையிலும் மதிப்புடனும் நடத்தினாலும், பீமன் மட்டும் அவர்கள் மீதான கோபம் குறையாது..அவர்களை கேலியும், கிண்டலுடனும் நடத்தினான்.அவர்கள் மனம் புண்படுமாறு பேசினான்.

இதை திருதிராஷ்டினர், விதுரரிடம் கூறி வருந்தினார்.

அதற்கு விதுரர், "கலிகாலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.கலி புருஷனின் லீலையால் மிக நல்லவர்கள் கூட மனம் பிறழத்தான் செய்வார்கள்.மனம் வருந்தி பயனில்லை.பெற்ற நூறு பிள்ளைகளையும்  பறி கொடுத்து விட்டீர்கள்.வயதும் ஆகிவிட்டது. இனியும் எதற்காக அரண்மனை சுக வாழ்க்கை?இங்கே நிம்மதி உங்களுக்குக் கிட்டாது.பீமன், ஏதோ பிராணிக்குப் போடுவதைப் போல தூக்கிப் போடும் உணவினை உண்டு இங்கு இருக்கத்தான் வேண்டுமா? இனியும் நீங்கள்  இங்கு இருக்க வேண்டாம்.காட்டுக்குச் சென்று துறவறம் மேற்கொண்டு நற்கதியடைய  முயற்சி செய்யுங்கள்" என்று கூறினார்..

விதுரர் சொன்னதைக் கேட்ட திருதிராஷ்டிரன் யோசித்தார்.பின்  அன்றிரவே
யாரிடமும் சொல்லாமல் காந்தாரியையும் அழைத்துக் கொண்டு விதுரருடன் அரண்மனையை விட்டு வெளியேறினார்.

அடுத்தநாள்...திருதிராஷ்டிரன், காந்தாரியைக் காணாது திடுக்கிட்டான் தருமன்.ஆட்களை அனுப்பி பல இடங்களில் தேடிப் பார்த்தான்.கிடைக்காததால் மனம் வருந்தினான்.

அப்போது நாரதரும், தும்புருவும் அஸ்தினாபுரத்து அரண்மனைக்கு வந்து தருமரை சந்தித்தனர்.

நாரதர், "தர்மா..திருதிராஷ்டிரரை எண்ணி வருந்தாதே! அவர், விதுரர்,காந்தாரியுடன் இமயமலையின் தென்பாகத்துக்குச் சென்று விட்டனர்.அங்கே அவர்கள் கங்கையில் நீராடி,அப்புனித நீரை அருந்தி மனநிம்மதியோடு ரிஷிகள் மத்தியில் வேதங்களைக் கேட்டு, பகலவனைப் பிரார்த்திக் கொண்டிருக்கிறார்கள். இன்றிலிருந்து ஐந்தாம் நாள் திருதிராஷ்டிரன்,காந்திரி வசிக்கும் ஆசிரமம்  எரிந்து அவர்கள் உயிரிழந்து விடுவார்கள்.விதுரர் மீண்டும் தீர்த்த யாத்திரை மேற்கொள்வார்" என்றார்.

மேலும் நாரதர் சொன்னார், "அவர்களைப் பற்றிய கவலையை மறந்துவிட்டு, தொடர்ந்து உன் கடமையைச் செய்.உறவுகளை உருவாக்குவதும்,இணைத்து வைப்பதும் பின் பிரித்து வைப்பதும் எல்லாம் இறைவன் செயலாகும்.நீ தனியாகத்தான் வ்ந்தாய்..தனியாகத்தான் செல்லப் போகிறாய். அதனால் எவர் மீதும் ஆசையோ, அன்போ வைத்து துயரத்தில் மூழ்காதே!"

நாரதர் சொல்லிச் சென்ற தத்துவார்த்தம் தருமருக்குப் புரிந்தாலும்,அவனால் எதையும் சுலபமாக உதறிட முடியவில்லை.பாழும் பந்தபாசத்தால் மனம் வருந்தத்தான் செய்தது.

திருதிராஷ்டிரன், காந்தாரி வெளியேறியது ஒரு பக்கக் கவலை என்றாலும், கண்ணனைப் பார்க்க சென்ற அர்ச்சுனன் திரும்பாதது மேலும் கவலையினைத் தந்தது.

தவிர்த்து அஸ்தினாபுரத்தில் அவனைச் சுற்றி பலவித கெட்ட சகுனங்கள் தோன்றின.நாட்டு மக்களிடையே மனக்கட்டுப்பாடுகள் தளர்ந்து,பலவித கெட்ட குணங்கள் படியத் தொடங்கின.நல்லொழுக்கம் சிறுகச் சிறுக சிதைந்துக் கொண்டிருந்தது நாட்டில்.

இந்நிலையில் கண்ணனைக் காண துவாரகைச் சென்ற அர்ச்சுனன் திரும்பி வந்தான்.அவன் முகம் இருண்டிருந்தது.கண்களில் கண்ணீர்.

"அர்ச்சுனா..என்னவாயிற்று?  துவாரகையில் கண்ணனைக் கண்டாயா? எல்லோரும் நலமா?" என்று கேட்டான் தருமர்.

அர்ச்சுனன் மனம் உடைந்து கதறினான்..

"அண்ணா! கண்ணன் நம்மை மோசம் செய்து விட்டான்.நாம் இனி அவனைப் பார்க்க முடியாதபடி நம்மை விட்டு நீங்கி விட்டான்.நாம் எவருடைய ஆதரவாலும், உதவியாலும் யாராலும் வெல்லமுடியாதவர்களாக விளங்கினோமோ, அவன் நம்மை விட்டுப் போய் விட்டான்.நம்மைவிட்டு வைகுண்டம் போய் விட்டான்.இனி நான் என் செய்வேன்?..அவனால்தான் நான் இந்திரனை வென்றேன்.அவன்தான் ஜராசந்தனை அழிக்க பீமனுக்கு வழி வகுத்துத் தந்தான்.அவன் துணை இருந்ததால்தான் நாம், துரியோதனன்,துச்சாதன் போன்ற கொடியவர்களைக் கொன்று பழி தீர்க்க முடிந்தது.துர்வாச முனிவரின் சாபத்துக்கு ஆளாகாமல் நம்மைக் காத்தவனும் அவன்தான்.இப்படி நம் ஒவ்வொரு அசைவையும் தீர்மானித்தவன்..இந்த உலகத்தை விட்டுப் போய் விட்டான் அண்ணா.யாதவ குலத்தினரியையே சண்டை ஏற்பட்டு அந்தக் குலமே அழிந்துவிட்டது.பலராமனும் தன் தேகத்தை விட்டு விண்ணுலகம் சென்று விட்டார்.இப்போது நான் வெறும் பொம்மைதான்.கிருஷ்ணன் இல்லாததால் நான் சக்தியற்றுப் போய் விட்டேன்.கிருஷ்ணனுக்குப் பிடித்தமான  அவரின் மனைவிமார்களை க் காக்க கயவன்மார்களை தடுக்க முயன்றேன்.ஆனால், என்னை அந்த இடையர்கள் எளிதில் வென்றனர்.நான் வைத்திருந்தது, கிருஷ்ணன் இருந்தபோது வைத்திருந்த அதே காண்டீபம்தான்.அதே அம்புகள்..அதே ரதம்.ஆனால் கிருஷ்ணன் இல்லாததால்  அவையும் வலிமை இழந்துவிட்டன."எனத் தேம்பினான்.

இதைக் கேட்டு தருமரும்..மற்றவர்களும் மிகவும் வருந்தினர்.கிருஷ்ணனை இழந்தபின் இப்பூமியில் நாம் இருக்க வேண்டிய அவசியமில்லை எனும் முடிவுக்கு வந்தனர்.

தருமர், தன் பேரனான பரீட்சித்துக்கு பட்டாபிஷேகம் செய்து அவனை அஸ்தினாபுரத்து மன்னன் ஆக்கினான்.பின் பாண்டவர்கள் துறவுக் கோலம் பூண்டு,திரௌபதியையும் அழைத்துக் கொண்டு வடதிசை நோக்கிச் சென்றனர்.உயிரைத் துறக்கும் முடிவுடன் பயணப்பட்டார்கள்.வழியிலேயே ஒருவர் பின் ஒருவராக மோட்சம் அடைய இறுதியில் தருமர் சொர்க்கத்தை அடைந்தார்.

இவர்களைப் போலவே விதுரரும் கடும் விரதம் இருந்து உடலிலிருந்து உயிரை விடுவித்துக் கொண்டார்.

No comments:

Post a Comment