Friday, July 31, 2020

10 -பரதனும், மானும், ஆசாபாசமும்

பரதன் ஆண்ட பாரத தேசம் எல்லா வளங்களும் பெற்று நீர் நிலைகள் பெருகி மக்களுக்கு சிறு குறையும் ஏற்படாமல் சொர்க்கலோகம் போலத் திகழ்ந்தது.

நீதி நெறி தவறாது ஆட்சி செய்த பரதன் விஸ்வரூபன் என்பவனின் மகளான பஞ்சஜனியை மணந்து ஐந்து பிள்ளைகளைப் பெற்றான்.பல ஆண்டுகள் ராஜ்ஜியத்தை ஆண்டபின்னர், தனது இறுதி நாட்களில் கடவுள் சிந்தனையுடன் காலம் கழித்து மோட்சம் பெற ஆசைப்பட்டான்.

நாடு,அரசாட்சி,அரண்மனை,செல்வ சுகங்கள்,ஆசை மனைவி,பாசத்துக்குரிய மகன்கள் என அனைத்துப் பற்றுகளையும் அறுத்துவிட்டு, ஆட்சியை தன் மகன் களிடம் ஒப்படைத்துவிட்டு கானகம் சென்றான்.

கண்டகி நதிக்கரைக்குச் சென்றவன்,அங்கிருந்து புலஹர் என்பவனின் ஆசிரமத்தில் தங்கினான்.அங்கிருந்த படியே தியானத்தில் ஈடுபட்டான்.

சொந்த பந்தங்கள்,ஆசாபாசங்கள் என அனைத்தையும் உதறி எறிந்துவிட்டு வந்தவனின் வாழ்க்கையில் விதி விளையாடியது.

ஒருநாள் பரதன் நதியில் குளித்துக் கொண்டிருந்த போது, கர்ப்பிணியான பெண்மான் அங்கே வந்து நதியில் தாகத்தைத் தீர்த்துக் கொண்டிருந்தது.அப்போது திடீரென ஒரு சிங்கத்தின் கர்ஜனைக் கேட்க,அதைக் கேட்டு மிரண்ட மான் தப்பியோட தாவிக் குதித்தது. தவறிப் போய் ஆற்றில் விழுந்தது.அது பயந்து தாவும் போது அதன் வயிற்றுக்குள்ளிருந்த குட்டி பிரசவமாகி வெளியே கரையில் வந்து வீழ்ந்தது.தண்ணீரில் விழுந்த தாய்மான் தத்தளித்தது.நீந்த முடியாது, மூழ்கி செத்துப் போனது.

இதனைப் பார்த்துக் கொண்டிருந்த பரதன் மனம் வேதனையடைந்தான்.தாயை இழந்த மான் குட்டியின் மீது துயரம் கொண்டான்.அதைத்தானே வளர்க்க முடிவெடுத்து தூக்கிக் கொண்டான்.ஆசிரமத்திற்கு எடுத்துப் போய் அதை பராமரிக்கத் தொடங்கினான். 

மான்குட்டியின் அழகும், துள்ளலும் துடிப்பும் பரதனின் மனதை மிகவும் கவர்ந்தது.அதை பாசத்துடன் வளர்த்தான்.அதன் மீது அளவிற்கு அதிகமாகப் பிரியம் கொண்டான்.நாள் முழுதும் அதனுடனேயே  செலவிட்டான்.எங்கும்..எப்போதும்..மான்குட்டியைத் தூக்குக் கொண்டு அலைந்தான்.இதனால், அவன் கடவுளை தியானிப்பதும்,பூஜை வழிபாடுகளும் குறைந்தன.

அவனின் இறுதி நாள் நெருங்கியது.கடைசி நேரத்தில் மானின் ஞாபகமாகவே 
உயிர் துறந்தான்.அடுத்த பிறவியில் ஒரு மானாகவேப் பிறந்தான்.

மானாகப் பிறந்தாலும், அவனுக்கு போன ஜென்மத்தின் ஞாபகம் இருந்தது.தான் மான் குட்டியின் மீது வைத்த பாசத்தின் காரணமாகவே இந்தப் பிறவியில் மானாகப் பிறந்திருப்பது குறித்து வருந்தினான்.இனி இப்படி ஒரு தவறு நேரக்கூடாது என தனது தாய் மானைப் பிரிந்து புறப்பட்டான்.முந்தைய பிறவியில் தான் வசித்த புலஹருடைய ஆசிரமத்திற்குச் சென்று கடவுளைத் தியானித்தபடியே தன் இறுதி நாளுக்குக் காத்திருந்தான்.காலம் வந்ததும் கண்டகி நதியில் மூழ்கி உயிர் நீத்தான்.

அதற்கு அடுத்த பிறவியில் ஒரு அந்தணர்க்கு மகனாகப் பிறந்தான்.அந்த அந்தணர்க்கு இரண்டு மனைவிகள்.முதல் மனைவிற்கு ஒன்பது பிள்ளைகள்.இரண்டாவது மனைவிற்கு ஆண்..பெண்ணுமாகஇரட்டைக் குழந்தைகள்.அதில் ஆண்மகன் தான் மான் பிறவிக்குப் பிறகு இப்பிறவியில் வந்துள்ள பரதன்.

இந்தப் பிறவியிலும் முன் ஜென்ம ஞாபகங்களுடன் பிறந்த பரதன், எந்த பந்த பாசங்களுக்கும் அடிமையாகாது, எதன் மீதும் பற்று வைக்காது..நிர்மலமான மனதுடன் இருக்க வைராக்கியம் கொண்டான்.அதன்படியே வாழ்ந்தான்.

உலக இன்பங்களில் நாட்டம் கொள்ளாமல்,எப்போதும் பகவான் நாராயணின் நினைவாகவே ஓடம் போலத் திரிந்த பரதனை ,எல்லோரும் பித்தன் என எண்ணினர்.அவனுக்குள் ஒரு ஞானி இருப்பதை யாரும் அறியவில்லை.

அறிவற்ற மூடன் போலவே நடந்து கொள்ளும் பரதனைப் பற்றிய துயரத்திலேயே அவனது தாயும், தந்தையும் உயிர் நீத்தனர்.சகோதரர்களோஅவன் மீது சிறிதும் பாசமில்லாமல் அவனை ஒரு வேலைக்காரனைப் போல நடத்தினார்கள்.அவனோ, எதைப்பற்றியும் கவலையில்லாமல் உணர்ச்சியற்றவனாக உலாவினான்.

குளிக்காமல், தினப்படி நியமங்களை அனுசரிக்காமல்,அழுக்கு உடையுடன், கிடைத்த வேலையை செய்து, கொடுத்த உணவை உண்டு, கண்ட இடத்தில் படுத்து காலத்தை ஓட்டினான்.

இப்படி இருக்கையில் பரதனுக்கும் ஒரு ஆபத்து வந்தது...திருடர்கள் தலைவன் ரூபத்தில்.

அந்தத் திருடர் தலைவனுக்கு நீண்ட நாட்களாகக் குழந்தையில்லை.இதனால் மனம் வருந்தியவன்,அவனது பூசாரியின் சொல்படி குலதெய்வம் காளிக்கு நரபலி கொடுக்கத் தீர்மானித்தான்.

ரத்தபலி கொடுத்தால், காளி மனம்  மகிழ்ந்து பிள்ளை வரம் தருவாள் என நம்பினான்.அதனால் அவன் ஆட்களை அனுப்பி நரபலிக்கு ஒரு திடகாத்திர இளைஞனை அழைத்து வரச் சொன்னான்., 

பலிதேடி சென்ற ஆட்களின்
கண்களில் பரதன் பட , அவர்கள் அவனைக் கட்டி இழுத்துச் சென்றனர்.

அவனுக்குக் குளிப்பாட்டி,புத்தாடைகள் அணிவித்து, சந்தனம் பூசி, மாலை அணிவித்து பத்ரகாளியின் முன் பலிபீடத்தில் நிறுத்தினார்கள்.

காளியை அலங்கரித்து பூஜைகள் நடத்தினார்கள்.பின் ரத்தபலி கொடுக்க பரதனின் தலையை நோக்கிக் கத்தியை இறக்கினான் திருடர்த் தலைவன்.

அப்போதும், பதட்டமில்லாமல், பயமின்றி எந்த உணர்ச்சியும் இல்லாமல் நின்று கொண்டிருந்தான் பரதன்.யோகி பரதனின் தவ அக்னி காளியையே சுட்டெரித்து விடுவது போல இருக்க, காளி கடும் கோபம் கொண்டு வெளிப்பட்டு திருடர் தலைவனையும்..அவன் ஆட்களையும் கொன்று அவர்கள் ரத்தத்தைக் குடித்து கூத்தாடினாள்.தன் பூத கணங்களுடன் அவர்களின் தலைகளைக் கொய்து கொண்டாடினாள்

எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வெளியேறினான் பரதன்.

அடுத்து அவன் சிக்கிக் கொண்டது  ஒரு அரசனிடம்.சிந்து தேசத்தின் மன்னர் ரஹூகுணன் என்பவன் கபில முனிவரிடம் உபதேசம் பெற சென்று கொண்டிருந்தான்.

அவனது பல்லக்கைத் தூக்கி சென்ற ஆட்களில் ஒருவனுக்கு உடல்நலம் சரியில்லாததால்..வேறு ஒரு நபரை அவர்கள் தேடிக்கொண்டிருந்த போது பரதன் அங்கு வந்து சேர்ந்தான்.

அவனைக் கண்டதும், அரசனின் ஆட்கள் அவனை பல்லக்குத் தூக்கி வேலைக்குச் சேர்த்துக் கொண்டனர். 

பரதன் வழக்கம்போல பகவானைத் தியானித்தபடியே உலகநினைவின்றி ஏனோ தானோவென
பல்லக்கைத் தூக்கி நடந்துவர உடன் தூக்கிகள் வேகம் இதனால் தடைப்பட்டு தள்ளாடினார்கள்.பல்லக்கு இங்கும் அங்குமாக அசைந்தது.

அரசன் ரஹூகு௳ன் வெளியே எட்டிப்பார்த்து,பல்லக்கைத் தூக்கி வருபவர்களைக் கோபித்துக் கொண்டார்.அவர்கள் பரதனைக் காட்டி, "இந்தப் பித்தனால்தான் இப்படி ஆகிறது.இவன் ஏதோ யோசனையுடன் வருகிறான்"என குற்றம் சாட்டினர்.

அரசனும் ,பரதனைப் பார்த்து,"ஏய்..நீ ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றால் கடும் தண்டனை அளிப்பேன்" என்றான்.

பரதன் சிரித்துவிட்டு, "மன்னா..நீ என்னை எப்படி தண்டித்தாலும். அது உடலுக்குத்தானே தவிர ஆத்மாவாகிய எனக்கு இல்லை.அரசன் எனும் ஆணவத்தால் ..என்னைத் தண்டிப்பேன் என்கிறாய்.இது மாறும்.நாளை நான் அரசனாகலாம்.நீ வேலைக்காரன் ஆகலாம்.எதுவும் நிரந்தரமில்லை..எதுவும் நம் கையில் இல்லை" என்றபடியே பல்லக்கினைத் தூக்கினான்.

பரதனின் வார்த்தைகளைக் கேட்ட மன்னன் திகைத்தான்.பல்லக்கிலிருந்து இறங்கி, பரதனை பணிவுடன் வணங்கினான்.

"பித்தனைப் போலக் காணப்படும் நீங்கள் நிச்சயம் யோகியாகத்தான் இருக்க வேண்டும்.தயவு செய்து என் குற்றத்தை பொறுத்தருளவும்.என்னை மன்னித்து..ஞான உபதேசம் அருளுங்கள்"என்றான்.

பரதன் ,அரசனை உற்று நோக்கினான்.ஞானப்பிச்சை பெறத் தகுதியானது அரசர் மனம் என்பது புரிய அவருக்கு உபதேசங்கள் செய்தான்.
ஆதமாவிற்கும்..பரமாத்மாவிற்கும் உள்ள தொடர்பை விளக்கிக் கூறி,"ரஹூகுணா ..நிலையற்ற மனித வாழ்க்கையின் மீது ஆசை வைக்காதே!ஆசாபாசங்களை அறுத்தெறிந்து விடு.முதலும்..முடிவுமாகிய பகவானின் திருவடிகளை பற்றிக்கொள்.முக்தி அடைவாய்"ஏன்று சொல்லி விட்டுப் போகத் தொடங்கினான்.

பரதனுக்கு சுமதி என்றொரு மகன் இருந்தான். பரதனின் வம்சம் அவன் மூலம் தழைத்தது.சுமதியின் மகன் தேவாசித்து..அவனது மகன் தேவத்திமுகன் என்று தலைமுறை தலைமுறையாக செழுத்து பரவியது"என்று சொல்லி நிறுந்தினார் சுக மகரிஷி.

பரீட்சித் கேட்டான் , "பிரசேதஸர்களின் புதல்வனாக தட்சன் மீண்டும் பிறந்தான் என்றீர்களே..அவன் என்ன ஆனான்? என்ன செய்தான்?"

சுகர் பிரம்ம ரிஷி "மறுபடி பிறந்த தட்சன்..மீண்டும் ஏதாவது பிரச்னை செய்திருப்பானோ...எனும் ஆர்வத்தில் கேட்கிறாயா?இல்லை..அப்படி நடைபெறவில்லை.ஆனால், நாரதர்தான் தட்சனின்  காரியத்துக்கு இடையூறு செய்து சாபத்தை வாங்கிக் கட்டிக் கொண்டார்.அதைச் சொல்கிறேன்..கேள்" எனக் கதையைத் தொடர்ந்தார். 

No comments:

Post a Comment