Monday, July 27, 2020

6- தாட்சாயணி

மரீசி,அத்ரி,அங்கிரஸ்,தட்சன் ஆகியோர் பிரம்மனின் புதல்வர்கள் என்பதால் பிரஜாபதிகள் என கௌரவிக்கப் பட்டனர்.பிரஜாபதியின் தலைவன் தட்சன் ஆவான்.

ஒருமுறை இவர்களனைவரும்கூடி சத்ரயாகம் ஒன்றை நடத்தினார்.அந்தயாகத்திற்கு அனைத்து தேவர்களும், முனிவர்களும்,ரிஷிகளும்,பிரம்மனும், சிவனும் வந்து அமர்ந்திருந்தனர்.அப்போது தட்சன் உள்ளே வந்தான்.அவனைக் கண்டதும் பிரம்மனும்,சிவனையும் தவிர மற்ற அனைவரும் எழுந்து நின்று மரியாதைத் தந்தனர்.
பிரம்மன் தனது தந்தை என்பதால் தட்சன் அதைப் பொருட்படுத்தவில்லை.ஆனால் மாப்பிள்ளையாகிய சிவன், மாமனாரும்,பிரஜாபதிகளின் தலைவனுமான தனக்கு மரியாதை செலுத்தாததை பெரும் அவமதிப்பாக எண்ணினான் தட்சன்.கட்டுக்கடங்காத கோபத்துடன் கூடியிருந்தவர்களிடம் பேச ஆரம்பித்தான்...

"தேவர்களே! முனிவர்களே! நான் ஒரு பெரிய தவறிழைத்து விட்டேன்.மான்குட்டியைப் போன்ற அழகியக் கண்களைக் கொண்ட எனது மகள் சதியை, குரங்கின் கண்களைக் கொண்ட இந்தச் சிவனுக்குத் திருமணம் செய்து வைத்தேனே...அது பெரிய தவறு.மாம்னாராகிய என்னை எழுந்து நின்று வரவேற்கவில்லை  .அனைவருக்கும் முன் என்னை அவமதித்துவிட்டான் இந்த ருத்ரன்.

சிவன் என்றால் மங்களம் என்று பொருளானால் இவன் செயல்கள் அனைத்தும் அமங்களம்தான்.சுடுகாட்டில் உலாவி..பிணங்களை எரித்த சாம்பலை உடலில் பூசிக் கொண்டு, சிரிப்பவனிடம் நல்ல குணங்கள் எங்கே இருக்கின்றப் போகிறது? பிரம்மன் சொல்லைக் கேட்டு இவனுக்கு என் மகளைத் திருமணம் செய்து வைத்ததால் எனக்கு இன்று இப்படி ஒரு அவமரியாதை ஏற்பட்டது.."எண்றவன்..மேலும் சொன்னான், "இனி இந்தச் சிவனுக்கு எந்த யாகத்திலும் அவிர்பாகம் கிடைக்காமல் போகட்டும்"என அனைவரும் திடுக்கிடும்படியாக சாபமிட்டான்.பின் அங்கிருந்து வெளியேறினான்.

இத்தனை நடந்தும் சிவபெருமான் புன்னகை மாறா முகத்துடன் அமைதியாய் இருந்தார்.ஆனால், சிவ கணங்களின் தலைவனான நந்தியால் இதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

"மும்மூர்த்திகளில் ஒருவரான இறைவனின் பெருமையை உணராது நடந்து கொண்டு விட்டான் தட்சன்.முழுமூடனான அவன் காமத்தில் உழலட்டும்.பண்பாடின்றி மிருகத்தனமாக நடந்து கொண்டவனுக்கு விரைவிலேயே ஆட்டுத்தலை அமையட்டும்"என்ற நந்தி அங்கிருந்த அந்தணர்கள் மீதும் சீறி விழுந்தான்.

"அறிவற்ற தட்சனை தடுத்து, புத்திக் கூறாது வாளாயிருந்த நீங்கள் அனைவரும் சிவனுக்குத் துரோகம் செய்தவர் ஆவீர்கள்.ஆதலால் நீங்கள் கற்ற வேதமும்,வித்தையும் உங்கள் மேன்மைநிலைக்கு உதவாமல் போகட்டும்.அதை விற்று,வயிற்றுப் பிழைப்பை நடத்தும் வாழ்க்கை அமையட்டும்.மண்ணாசை,பெண்ணாசை,பொன்னாசை என மூன்று ஆசைகளிலும் சிக்கி வதைப்பட்டு, யாசகம் பெற்று வாழும் கதியினை அடைவீர்களாக"என அந்தணர்களை சாபமிட்டான்..

நந்தி அந்தணர்களை சபித்ததால்..பிருகு மகரிஷி கோபம் கொண்டு அவரும் பதிலுக்கு சபித்தார்.

"ருத்ரனின் கணங்களும்,அவரை வணங்குபவர்களும்,அவரை பின்பற்றுபவர்களும் வேதத்தை அறியா மூடர்களாகட்டும்.சடைமுடி கொண்டு, சாம்பலை உடலில் பூசிக் கொண்டு, மது..மாமிசம் வைத்து பூஜிப்பவர்களாக..வேதத்துக்கு வினோத சடங்குகள் செய்யும் ஆண்டிகளாக திரியட்டும்" என்றார்.

யாகத்தில் நடந்த இந்நிகழ்ச்சிகள் சிவனை வருத்தம் கொள்ள வைத்தன.எதுவும் பேசாமல் அவர் கைலாயத்திற்குத் திரும்பினார்.

இதற்குப் பிறகு தட்சனுக்கும், சிவனுக்கும் விரோதம் வளர்ந்தது.தட்சன் "வாஜபேயம்" எனும் யாகத்தைச் செய்த போது சிவனை அழைக்கவுமில்லை, அவருக்கான அவிர்பாகமும் கொடுக்கவில்லை.

அடுத்ததாக "பிகஸ்பதிஸவம்" எனும் மிகப்பெரிய யாகத்தைத் தொடங்கினான் தட்சன்.சிவனைத் தவிர மற்ற அனைவருக்கும் அழைப்பினை  அனுப்பி, அந்த யாகத்தை மிகவும் பொருட்செலவுடன் ஆடம்பரமாக நடத்தத் திட்டமிட்டான்.

அந்த யாகத்தில் கலந்து கொள்வத்ற்காக தேவர்கள்,கந்தர்வர்கள்,பிரம்மா,ரிஷிகள்.தேவ ரிஷிகள் போன்ரவர்கள் சென்று கொண்டிருந்தனர்.இதைப் பார்த்துக் கொண்டிருந்த சதிதேவிக்கு தானும் தந்தையின் யாகத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.அதைத் தன் கணவரான சிவனிடம் கூறினாள்.

"என் தந்தை நடத்தும் யாகத்திற்கு மூவுலகிலிருந்தும் அனைவரும் கலந்து கொள்கின்றனர்.என் சகோதரிகளும்..அவர்களது கணவர்களும் வருவார்கள்.அவர்களை சந்திப்பதுடன், என் தாயையும் சந்திக்க ஆவலாய் உள்ளேன்.அவர் உங்களுக்கு அழைப்பு அனுப்பவில்லை என்பது உண்மைதான்.ஆனால், இம்மாதிரியான யாகங்களுக்கு அழைப்பேத் தேவையில்லை" என்றாள்

தட்சனின் ஆணவத்தை அறிந்த சிவபெருமான் சதியிடம் கூறினார்..

"தாட்சாயணி...எல்ளோருக்கும் அழைப்பு அனுப்பிய உன் தந்தை நமக்கு அனுப்பவில்லையெனில், நம்மை அவர் மதிக்கவில்லை என்றுதானே அர்த்தம்.மதியாதார் இல்லம் செல்வது நல்லதல்ல. நானின்றி நீ சென்றாலும் நீ தட்சனின் மகள் என்றாலும் என் மனைவி என்பதால் அவன் உன்னை மதிக்க
மாட்டான்.கடுஞ்சொற்களைக் கூறி அவமதிப்பான்.ஆகவே யாகத்திற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிடு" என்றார்.

கணவர் சொல்வதைக் கேட்கும் நிலையில் அவள் இல்லை.தாயையும், சகோதரிகளையும் காண வேண்டும் என்ற ஆவல்.அழுதால்..பிடிவாதம் பிடித்தாள்..சண்டையிட்டாள்..கடைசியில் யாகத்திற்கு சென்று வருவது என தீர்மானித்தாள்.

இனி அவளைத்  தடுக்க முடியாது என சிவபெருமான், சதிக்கு துணையாக நந்திதேவரையும் மற்ற கணங்களையும் உடன் அனுப்பி வைத்தார்.

சந்தோஷமாக புறப்பட்ட சதிதேவிக்கு தட்சனின் யாகக்கூடத்தில் சிவன் சொன்னது போலவே நடந்தது.

சதிதேவியை அனைவரும் வரவேற்று உபசரித்தாலும் தட்சன் மட்டும் அவளை புறக்கணித்து அவளை அவமதித்தான்.

தட்சனின் இச்செயலால் மனம் வருந்திய சதி யாகத்தில் தன் கணவருக்கு சேர வேண்டிய அவிர்பாகம் ஒதுக்கப்படாததைக் கண்டு மேலும் கொந்தளித்துப் போனாள்.

தட்சனிடம் சென்றவள்,"தந்தையே! நீங்கள் பெரும் தவறு செய்கிறீர்கள்.மும்மூர்த்திகளில் ஒருவரான என் கணவரை நீங்கள் யாகத்திற்கு அழைக்காதது மன்னிக்க முடியாதக் குற்றமாகும்.யாகத்தில் அவருக்கு சேர வேண்டிய அவிர்பாகத்தை தராதுவிட்டது முறையில்லை.இதனால் தீமைகள்தான் விளையும்.உங்கள் மனதை மாற்றிக் கொண்டு,எனக்கு மரியாதைக் கொடுத்து,அவருக்கான அவிர்பாகத்தை அளித்து நடந்த தவறுக்குப் பரிகாரத்தைத் தேடிக்கொள்ளுங்கள்"என்று அறிவுரை கூறினாள்.

"எனக்கு புத்தி சொல்ல உனக்கு என்ன தகுதியிருக்கிறது? நான் யார்..யாரை மதிக்கின்றேனோ அவர்களையெல்லாம் யாகத்துக்கு அழைத்துவிட்டேன்.புனிதமான இந்த யாகத்தில் கலந்து கொள்ள உன் கணவனுக்கு அருகதையில்லை.அவனது மனைவி நீ என்பதால் உனக்கும் அருகதையில்லை.பித்தனின் மனைவியான உன்னை யார் அழைத்தது? இங்கு ஏன் வந்தாய்?" என்றான் கோபத்துடன்.

தட்சன், சிவனை நிந்தித்து சதியை அவமதித்ததால் சில கணங்கள் கோப மடைந்தன.தட்சனைத் தாக்க முற்பட்டன.சதி அவர்களைத் தடுத்து..தட்சனைப் பார்த்து கூறலானாள்....

"அகம்பாவம் பிடித்த தட்சனே!சிவனை பகைப்பதன் மூலம் உன் அழிவினைத் தேடிக் கொள்கிறாய்.உனக்கு மகளாகப் பிறந்ததையே பாவமாகக் கருதுகிறேன் நான்.உனது ரத்த சம்பந்தத்தால் எற்பட்ட என் உடலையே நான் வெறுக்கிறேன்.இந்த உடல் இனி எனக்கு வேண்டாம் " என்றபடியே,வடக்கு நோக்கி அமர்ந்து யோகத்தில் மூழ்கினாள்.

மனதில் கணவரான ஈஸ்வரனைத் தியானித்தபடியே...தன்னைச் சுற்றி யோகத்தீயினை மூட்டிக் கொண்டாள்.அதில் தன் உடலை எரித்துக் கொண்டு சாம்பல் ஆனாள்.

சதியின் மரணத்தால் நிலைகுலைந்து போன பூதகணங்கள் எழுந்து தட்சனைத் தாக்கியும்,யாகத்தை அழிக்கவும் முயன்றனர்.

இதைக்கேட்ட பிருகு மகரிஷி பூதகணங்களிய வெல்ல,யாக குண்டத்தின் அக்னியில் இருந்து தேவ கணங்களை உண்டாக்கினார்.அந்தத் தேவகணங்கள். சிவ கணங்களுடன் சண்டையிட்டு அவர்களைத் தாக்கி விரட்டின.

யாகத்துக்கு வந்திருந்த அனைவரும் திகைத்து நிற்க, தன் கண்ணெதிரிலேயே மகள் சதி உயிர்விடத் தீர்மனைத்ததையும் தடுக்காத தட்சனை அனைவரும் நிந்தித்தனர்.கோப மூர்த்தியான ருத்ரன் என்ன செய்வாரோ என நடுங்கினர்.

ஆணவத்தின் உச்சியில் ஆட்டம் போடும் தட்சன்,நாசத்தை விரைவில் சந்திக்கப் போகிறான்"என எண்ணியவாறே நாரதர் கைலாயம் நோக்கி விரைந்தார்.

பனி மூடிக்கிடந்த கயிலையில் சிவபெருமான் கண்மூடி நிஷ்டையில் இருந்தார்.

நாரதர் அங்கு வந்து, "பரமேஸ்வரா! நடக்கக் கூடாதது நடந்து விட்டது.சதிதேவியார் யோகத்தீயில் தன் உயிரைப் போக்கிக் கொண்டு விட்டார்" என்றார்.

இதனிடையே தேவகணங்களுடன் போராடித் தோற்றுப் போன பூத கணங்களும் அங்கு வந்து நடந்ததைச் சொல்லின.

ஈஸ்வரனின் முகம் கோபத்தில் சிவந்தது.நெற்றிக்கண் திறந்தது.ஆவேசம் கொண்டவர் தன் சடைமுடியிலிருந்து ஒரு முடியைப் பிடுங்கிக் கீழே போட்டார்.அதிலிருந்து வீர இளைஞன் வீரபத்ரன் வெளிப்பட்டார்.

சடைமுடியும், மூன்று கண்களும், ஆயிரம் கைகளுடன் ஆஜானுபாகுவாக கழுத்தில் கபாலமாலை அணிந்து பார்க்கவே பயங்கரமாகக் காட்சியளித்தான்.

"இறைவா...நான் என்ன செய்ய வேண்டும்?" என்றான்.

"வீரபத்ரா...நம் படைகளுடன் நீ தட்சனின் யாகசாலைக்குப் போ.தட்சனைக் கொன்று அவன் யாகத்தை அழித்துவிட்டு வா" என்றார்.

சில பூதகணங்களுடன் புறப்பட்ட வீரபத்ரன், பெரும் சூறாவளியாய் தட்சனின் யாகசாலைக்குள் புகுந்தான்.பூத கணங்கள் ஆவேசத்துடன் யாக மண்டபத்தை இடித்து நொறுக்கி.. யாக குண்டத்தை உடைத்து மற்ற பொருள்களையையும் சின்னாபின்னமாக்கின.

வீரபத்ரன் தன்னைத் தாக்க முற்பட்ட தேவ கணங்களை ஆக்ரோசமாகத் தாக்கினான்.எதிர்த்தவர்களை நொறுக்கினான்.ஓட ஓட விரட்டினான்.சிவ கணங்களில் ஒருவனான மணிமான், பிருகு முனிவரின் தாடி, மீசையை பிடுங்கி எறிந்து தீயில் பொசுக்கினான்.தட்சன் சிவனை இகழ்ந்தபோது சிரித்த பூஷா என்பவரின் பற்களை   உடைத்து நொறுக்கினார் சண்டிகேஸ்வரர்."நந்திதேவர்" பகன் என்பவனின் கண்களைப் பிடுங்கி வீசினார்.தேவர்களும், பூதகணங்களின் தாக்குதலால் தப்பி ஓடினர்.

வீரபத்ரன், தட்சனை உதைத்துத் தள்ளி, வாளால் அவன் கழுத்தை வெட்ட, வாளோ மழுங்கியது.உடனே தட்சனை இழுத்துப் போய் யாகப் பசுக்களை  கொல்லும் பலிபீடத்துக்கு இழுத்துச் சென்று அவன் தலையை பீடத்தில் வைத்து ஆட்டை அறுப்பது போல அறுத்து தீயில் வீசினான்.அது பொசுங்கி சாம்பலானது.

இதைக் கண்ட பூத கணங்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.வெற்றியுடன் கயிலைத் திரும்பினர்.

சிவ கணங்களிலிருந்துதப்பியோடிய தேவர்கள், அலறி அடித்துக் கொண்டு பிரம்மலோகம் சென்று பிரம்மனிடம் நடந்ததைக் கூறினர்.

பிரம்மனும் வேதனையுடன், "தட்சன் சிவனை நிந்தித்தான்.அவருக்கானஅவிர்பாகம் கொடுக்காமல் போனதும் மன்னிக்க முடியாத செயல்களாகும்.நீங்களும் அங்கு சென்றதோடு இல்லாமல், பூர்த்தியாகாத யாகத்தில் கலந்து கொண்ட குற்றத்தினையும் புரிந்துள்ளீர்கள்.தன்னை அவமதித்ததுடன், தன் மனையையும் இறக்கக் காரணமாய் இருந்த தட்சன் மீது கோபத்தில் இருந்த சிவனின் கோபம் மூவுலகினையும் அழிக்கக்கூடியது.கோபம் கொள்வதுபோல..உடனேயே கோபம் தணிந்து சந்தோஷநிலை அடைபவரும் சிவனே.நீங்கள் அவரிடம் சரணடைந்தால்..காப்பவர் அவர்" என்றார்.

பிரம்மனின் சொற்படியே எல்லோரும் சிவனை தரிசிக்க சென்றனர்.

கயிலையில் ஒரு பெரிய ஆலமரத்தடியில் அமர்ந்திருந்தார் சிவன்.யோகிகள் அவரைச் சூழ்ந்து நிஷ்டையில் இருக்க, நாரதருக்கு பிரம்ம தத்துவத்தை உபதேசித்துக் கொண்டிருந்தார் ஈசன்.பிரம்மன் வருவதைக் கண்ட அவர் அவரை அன்புடன் வரவேற்றார்.

பிரம்மன், சிவனை நோக்கி,"விதியின் மாயையில் சிக்கியதால் தட்சன் அவிர்பாகம் தராது தவறிழைத்துவிட்டான்.எனவே அவனது தவறினை மன்னித்து அவனை உயிர்ப்பித்துத் தர வேண்டும்.யாகத்தை பூர்த்தி செய்ய அருளவேண்டும்" என வேண்டினார்.

"பிரம்மதேவரே! தட்சனின் ஆணவத்தை அழித்து அவனுக்கு பாடம் புகட்டவே நான் அவனைத் தண்டித்தேன்.இனி தங்களின் விருப்பப்படி அவனை உயிர்ப்பிக்கிறேன்.ஆனால் அவன் தலை பொசுங்கிவிட்டதால்,ஆட்டின் தலையினை அவனுக்குப் பொருத்துங்கள்.அதுபோல பகனுக்குக் கண்கள்,பூஷாவிற்கு பற்களும்..இன்னமும் யார் யாருக்கு என்ன அவயங்கள் இழந்தனரோ அவை திரும்பக் கிடைக்கும்.பிகுரு முனிவர்க்கு,ஆட்டின் தாடியு, மீசையும் முளைக்கும்" என்றார் ஈசன்.

சிவன் சொன்னபடி தட்சன் ஆட்டுத்தலையுடன் உயிர் பெற்று எழுந்தான்.சிவனிடம் மன்னிப்புக் கேட்டவன்"ஈஸ்வரா..நின்றுப் போன யாகத்தை தாங்கள் முன்னின்று நடத்தித் தர வேண்டும்"என வேண்டினான்.

தட்சனின் வேண்டுகோளினை ஏற்று சிவன் யாகசாலைக்கு வந்தார்திருமால் விஷ்ணுவும் வந்திருந்து அனைவரையும் ஆசிர்வதித்தார்.பின், யாகம் நல்லபடியாக முடிந்து அவரவர் இருப்பிடத்திற்குத் திருமிச் சென்றனர்.

தட்சன் மகளாக உயிர் நீத்த சதிதேவி, பின் இமவானுக்கும்,மேனாவிற்கும் மகளாகப் பிறந்து பார்வதியாக பரமேஸ்வரனை தவமிருந்து திருமணம் செய்து கொண்டாள்.அனைத்தும் சுபமாக முடிந்தது...என்று சொல்லி முடித்தார் சுகர் மகரிஷி.

பரமேஸ்வரனையும், பார்வதியையும் மனதிற்குள் வேண்டிக் கொண்டார் பரீட்சித்.பின் கேட்டார்,"சுவாயம்புவ மனுவின் ஐந்து மக்களில் மூன்று மகள்களைப் பற்றிக் கூறினீர்கள்..அவரது மகன்களைப் பற்றி ஏதும் சொல்லவில்லையே"

சுகர் மகரிஷி சொன்னார்.."அந்த மகன்களில் ஒருவனுக்குப் பிறந்த வாரிசு, பகவானின் அருளால் விண்ணுலகில் மிக அற்புதப் பதவியை அடைந்தான்.தட்சனால் அவனது மகள் சதிதேவி எவ்வளவு தவித்தாலோ,அதுபோல தந்தையால் புறக்கணிக்கப்பட்ட மனிதனின் கதை இது. அந்த மகன் சிறுவனாய் இருந்தபோது அவன் விரும்பியது தன் தந்தையின் மடியில் சிறிது இடம்" என்றவர் தொடர்ந்து அந்தக் கதையைக் கூறலானார்.     

No comments:

Post a Comment