Saturday, July 25, 2020

5 - துவார பாலகர்கள்



பிரம்மனின் புத்திரர்களான சனகாதி முனிவர்கள் நால்வரும் விண்வெளியில் சஞ்சரித்தபடியே வந்து கொண்டிருந்தனர். அவர்கள் வைகுண்டத்தைக் கடந்த போது, திருமாலை மகாலட்சுமியுடன் சந்திக்க எண்ணி வைகுண்டத்தில் இறங்கினார்கள்.

பூத்துக் காய்த்து குலுங்கும் செடி, கொடிகளுடன் வைகுண்டம் அழகாகக் காட்சி தந்தது.கந்தர்வர்கள் உச்சரிக்கும் பகவானின் நாமாவளிகள்,நாலு திசைகளிலும் காதுக்கு இனிமையாக ஒலித்துக் கொண்டிருந்தன.

சனகர்,சனந்தனர்,சனாதனர்,சனத் குமாரர் ஆகிய நான்கு முனிவர்களும் வைகுண்டத்தில் ஆறு தங்க வாசல்களையும் கடந்து ஏழாவது வாசலை நெருங்கினர்.

ஏழாவது வாசலில் ஜய,விஜயர்கள் எனும் இரு துவார பாலகர்கள் காவல் காத்தபடி நின்றிருந்தனர்.

முனிவர்கள், துவார பாலகர்களைக் கண்டுக் கொள்ளாமல் அவர்களைக் கடந்து உள்ளே செல்ல முயன்றனர்.

இதைக் கண்டு கோபம் கொண்ட ஜெய ,விஜயர்கள், முனிவர்களை உள்ளே செல்ல முடியாது தடுத்து நிறுத்தினர்.

இதனால் முனிவர்கள் கோபம் கொண்டு, "இறைவன் தன்னிடம் பக்தி செலுத்துபவர்களை எந்தத் தருணத்திலும் சந்திக்க மறுப்பதில்லை.ஒரு பக்தன் தன்னை நோக்கி ஒரு அடி வைத்தால்..கடவுள் அவனை நோக்கி பல அடிகள் நெருங்கி வருவார்.அப்படிப்பட்ட இறைவன் இருக்குமிடத்தில் வசிக்கத் தகுதியற்றவர்கள் நீங்கள்.அகங்காரம்,ஆணவம் போன்ற அற்பத்தனமான குணங்களைக் கொண்ட நீங்கள் ஆசாபாசங்கள் நிரம்பிய பூமியில் சென்று விழுவீர்களாக!" என்று சாபமிட்டனர்.

துவார பாலகார்கள் அதிர்த்து போய் முனிவர்கள்  பாதங்களில் விழுந்து வணங்கி, "அறியாமையாலும்,ஆணவத்தாலும் தவறிழைத்த எங்களை மன்னித்துவிடுங்கள்.உங்கள் சாபத்தை மனமார ஏற்றுக் கொள்கிறோம்.ஆனாலும் சிறிதளவாவது எங்களிடம் கருணை காட்டுங்கள்.உங்கள் சாபப்படி பூமியில் பிறந்து எத்தனைப் பிறவிகள் எடுத்தாலும் பகவானை மறக்காமலிருக்க அருள வேண்டும்" என வேண்டினர்.

அப்போது திருமால், மகாலட்சுமியுடன் அங்கு காட்சியளித்தார்.முனிவர்கள் ஆனந்த பரவசத்துடன் தரிசித்து மகிழ்ந்தனர்.பின் ஜெய..விஜயர்களுக்கு தாங்கள் அளித்த சாபம் பற்றியும் கூறி வருந்தினர்.

திருமால் புன்முறுவலுடன் சொன்னார்...

"முனிவர்களே! நீங்கள் வருந்த வேண்டாம்.என் பக்தர்களுக்கு நேர்ந்த அவமதிப்பு..எனக்கு நேர்ந்ததாகவே எண்ணுகின்றேன்.ஆணவத்துடன் செயல்பட்ட துவாரபாலகர்களுக்கு நீங்கள் அளித்த சாபம் சரியானதே! எனினும் அவர்கள் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டதால், நீங்களும் மனம் இரங்கி, மீண்டும் அவர்கள் என்னிடம் வர கருணை காட்டலாம்"என்றார்.

"பகவானே! மூவுலகில் எது நடந்தாலும் அது தங்கள் திருவுள்ளத்தினாலேயே நடந்தது என்பதை அறிந்தவர்கள் நாங்கள்.அனைத்தும் உங்கள் திருவிளையாடல்களே என அறிவோம்.ஆனாலும்..நீங்கள் கூறியபடி ஜய விஜயர்கள் விரைவிலேயே சாப விமோசனம் பெற வேண்டும் என ஆசிர்வதிக்கின்றோம்" என்றனர்.

பகவான், ஜெய விஜயர்களிடம் கூறினார்..

"துவாரபாலகர்களே! எந்தப் பிறவியிலும் என்னை மறக்காத வரத்தை முனிவர்களிடம் கேட்டீர்கள் அல்லவா?அது  நிச்சயம் நடக்கும். மனித சுபாவமானது நேசிப்பவர்களை விட வெறுப்பவர்களைத்தான் அதிகம் நினைத்துக் கொண்டிருக்கும்.எனவே பூமியில் நீங்கள் அரக்கர்களாகப் பிறந்து,என்னை வெறுப்பவர்களாக...என்னை எப்போதும் நினைத்து நிந்திப்பவர்களாக இருந்து மூன்று பிறவிகளுக்குப் பின் என்னை சேர்வீர்களாக"

அப்போதே துவார பாலகர்கள் பூமியை நோக்கி இழுக்கப்பட்டனர்.

அதே சமயம் பூமியில் அவர்கள் பிறப்பதற்கான சூழலை காலம் வகுத்துக் கொடுத்தது..

*********************************************************

செக்கச் செவேலென சூரியன் மேற்கில் மறைந்து கொண்டிருந்த நேரம்,நதிக்கரையில் அமைந்திருந்த அந்த ஆசிரத்தில் சூரியஒளி ஜொலித்துக் கொண்டிருந்தது.

காஷ்யப முனிவரும் அவரது மனைவி திதியும் அந்த ஆசிரமத்தில் வசித்து வந்தனர்.

அந்த பிரதோஷக் காலத்தில் காஷ்யபர் தியானத்தில் இருந்தார்.கணவர் தியானத்தில் இருந்து  மீள்வதற்காக திதி தவிப்புடன் காத்துக் கொண்டிருந்தாள்.

ஆசிரமக் கூறையின் கீற்று வழியே நுழைந்த மஞ்சள் வெயிலில் அவளது மேனி தங்க நிறத்தில் ஜொலித்தது.

வாசலில் தோட்டத்தில் பூத்திருந்த மல்லிகையின் மணமும், சிலு..சிலு என வீசிய காற்றும்..மயக்கும் மாலைப்பொழுதும் எல்லாம் சேர்ந்து திதியின் உள்ளத்தை தாபத்தில் மிதக்க வைத்தது.உடலில் உணர்ச்சி புரண்டு..சல்லாபத் துடிப்பு பெருமூச்சாக வெளி வந்தது.

கணவர் தியானத்தில் இருந்து எழுவார் எனக் காத்திருந்த திதி பொறுமை இழந்தாள்.அவளின் உடலும், உள்ளமும் கணவரின் அணைப்புக்காகத் தவித்தன.

தாளமுடியாது காஷ்யபரை நெருங்கியவள்,"சுவாமி" என அவர் காதோரம் கிசுகிசுப்பாகக் கூப்பிட்டு தன் கரங்களை அவரது தோள்களின் மீது போட்டு வளைத்தாள்.

தியானம் கலைந்து காஷ்யபர்..பக்கத்தில் பார்த்தார்.

மனைவி திதி சல்லாபத்துக்கு அழைப்பு விடுவதை உணர்ந்தார்.

"திதி..உன் விருப்பம் புரிகிறது.சற்று பொறு.இது சிவனுக்கான பிரதோசக் காலம்.முக்கண்ணனான ருத்ரன் தனது கணங்களுடன் உலாவரும் புனிதவேளை.இந்த சமயத்தில் கணவனும், மனைவியும் கூடுவது மகாபாவம்.இரவாகட்டும் பொறு" என்றார்.

அவர் கூறுவது திதியின் காதுகளில் ஏறவில்லை.தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதிலேயே முனைப்பாக இருந்தாள்.

"தயவு செய்து மறுக்காதீர்கள்..இரவுவரைப் பொறுத்துக் கொள்ளும் நிலையில் நான் இல்லை.காமம் என்னைத் தின்றுக் கொண்டிருக்கிறது.வெட்கத்தை விட்டுக் கேட்கின்றேன்.இப்போதே என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்" என்றாள்.

மனைவியின் உடற்பசியைப் போக்குவது கணவனின் கடமை என வேறு வழியின்றி திதியின் கட்டாயத்துக்கு இணங்கினார்.அவளது விருப்பத்தை பூர்த்தி செய்தார்.

தகாத நேரத்தில் அவர்கள் உறவு கொண்டதன் பலனாக..அரக்கர்களாகப் பிறக்க வேண்டிய சாபத்தைப் பெற்ற ஜெய,விஜயர்கள் திதியின் கர்ப்பத்தைச் சேர்ந்தனர்.

மோக உணர்வு முடிந்ததும் திதி தகாத நேரத்தில்..தகாத முறையில் நடந்து கொண்டதற்காக வருந்தினாள்.இந்த தவறினால் ஏதாவது விபரீதம் ஏற்பட்டுவிடுமோ என அஞ்சினாள்.அதை காஷ்யபரிடம் சொன்னாள் "பிரதோஷ காலத்தில் உறவு கொண்டதால் ருத்ரனின் கோபத்துக்கு ஆளாகி கரு கலைந்துவிடுமோ என அஞ்சுகிறேன்.நீங்கள்தான் அப்படி நேராது காக்க வேண்டும்" என்றாள்.

மனைவியின் கோரிக்கையைக் கேட்ட காஷ்யபர் கோபமுற்றார்.

"மோகத்தால் மதி கெட்டவளே! எனது சொல்லைக் கேட்காது கர்ப்பம் தரிக்கக் கூடாத நேரத்தில் கர்ப்பம் கொண்டாய்.அத்துடன் ருத்ரனின் கோபத்துக்கு ஆளானாய்.எனவே, உனக்கு இரண்டு கொடிய அரக்கர்கள் பிள்ளைகளாகப் பிறப்பார்கள்.மூவுலகையும் துன்புறுத்தி கொடுமை புரிவார்கள்.கடைசியாக பகவான் விஷ்ணுவின் கைகளாலேயே மரணமடைவார்கள்" என்றார்.

இதைக் கேட்ட திதி அதிர்ந்து போனாள்.மனம் கலங்கி அழதாள்.தன் பிள்ளைகள் பெருமாளின் கைகளாலேயே மரணமடைவார்கள் என்பதால் சற்றே சமாதானம் அடைந்தாள்.

திதியின் நிலை கண்டு பரிதாபப்பட்ட காஷ்யபர், அவளைத் தேற்றி, "திதி..உன் பிள்ளைகளில் ஒருவனுக்கு பிறக்கப்போகும் மகன் மிகச் சிறந்த பக்திமானாக, பகவான் மீது பற்று கொண்டவனாகத் திகழ்வான்"என ஆறுதல் அளித்தார்.

திதியின் வயிற்றில் கரு வளர்ந்து வரும் போதே பல கெட்ட சகுனங்கள் தோன்றின.பிறக்கப் போகும் தன் பிள்ளைகளால் உலகுக்கு ஏற்படப்போகும் தீமைகளின் காரணமாகவே கெட்ட சகுனங்கள் தோன்றுவதாக நினைத்தாள்.

அதனாலேயே பிள்ளை பெறுவதை..தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தாள்.பின் ஒருநாள் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றாள்.அப்போது சூரியன்,சந்திரன் ஆகியவை ஒளி மங்கின.மூவுலகும் இருண்டது.

முதலில் பிறந்த குழந்தைக்கு இரண்யாட்சன் என்றும்,அடுத்து பிறந்ததற்கு இரண்யகசிபு என்றும் பெயர் சூட்டப்பட்டது.

பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனார்கள்.வலிமை மிக்கவர்களாக இருந்த அவர்கள் மூவுலகையும் தங்கள் காலடியில் கொண்டுவருவதில் ஈடுபட்டனர்.இதற்காகவே தங்கள் சக்தியை அதிகரிக்க, பிரம்மனை நோக்கி தவம் இருந்தனர்.

இவர்கள் தவத்தால், விண்ணுலகே தகித்தது.தேவர்கள் வெப்பம் தாளாது, பிரம்மனிடம் சென்று முறையிட்டனர்.

பிரம்மனும், காஷ்யபரின் பிள்ளைகளின் தவத்தால்  அவர்கள் முன்னே காட்சி  தந்து "என்னவரம் வேண்டும்..கேளுங்கள்" என்றான்.

இருவரும் பிரம்மனிடம் பலவிதமான வரங்களைக் கேட்டுப் பெற்றனர்.இதனால் அவர்களை யாரும் வெல்லமுடியாத நிலை ஏற்பட்டது.அவர்களின் ஆணவம் அதிகமானது.மூவுலகையும் தங்கள் காலடியில் கொண்டுவர போருக்குத் தயாரானார்கள்.



தேவர்கள் போரிட்டுத் தோற்றார்கள்.கொடியவர்களான அரக்கர்களுக்குப் பயந்து ஓடி ஒளிந்தார்கள்.தேவர்களின் தலைவனான இந்திரனும் தலைமறைவானான்.

தேவலோகத்தைக் கைப்பற்றிய இரண்யாட்சன் இந்திரனை சிறைப்பிடிக்கத் தேடினான்.அவனைக் காணாத கோபத்தில் ஆத்திரம் கொண்டு கடலுக்குள் இறங்கித் தன் கதாயுதத்தால் அலைகளை ஓங்கி அடித்து சமுத்திரத்தைக் கல்ககி துவம்சம் செய்தான்.அவன் அட்டூழியத்தால் கடல் உயிரினங்கள் மரணமடைந்தன.கடலரசன்..அவனை எதிர்கொள்ள இயலாது சரணடைந்தான்.

மூவுலகையும் வென்றவன் மேலும் ஆணவம் கொண்டு வருணனிடம் சென்று போருக்கு அழைத்தான்.இது வருணனுக்குக் கோபத்தை மூட்டினாலும், அதைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவனிடம் "காஷ்யபர் புதல்வரே!சம வலிமை உள்ளவரிடம் நீ போரிட்டால்தான் புகழ் பெறுவாய்.உன்னை எதிர்க்கும் சக்தி எனக்கில்லை.என்னை விட்டு விடு.பகவான் விஷ்ணு  ஒருவர்தான் உனக்கு நிகரானவர்.அவர் இப்போது வராஹ அவதாரம் எடுத்து பூமியை மீட்டுவர கடலினுள் சென்றுள்ளார்.உன்னால் முடிந்தால் அவரிடம் போரிட்டு வெல்"என்றான்.

அந்த சமயத்தில்தான் வராஹ அவதாரம் எடுத்திருந்த பகவான், தன் கோரைப் பற்களால் பூமியை மீட்டெடுத்து மேலே கொண்டு வந்துக் கொண்டிருந்தார்.பன்றி உருவத்தில் இருந்த அவரே விஷ்ணு என அறிந்த இரண்யாட்சன் "வராஹமே! இந்த பூமி பாதாள லோகத்தில் இருப்பவர்களுக்காக..பிரம்மா அனுப்பியது.மரியாதையாக அதை வைத்துவிட்டுப் போ.இல்லையெனில் என்னுடன் போரிட்டு என்னை வென்று விட்டு பூமியை மீட்டுச் செல்"என்றான்.

திருமாலும் பூமியை பத்திரமாக வைத்து விட்டு..அவனை எதிர்க்கத் தயாரானார்.

இரண்யாட்சன் ..தனது கதாயுதத்தை ஓங்கிக் கொண்டு அவர் மீது பாய்ந்தான்.இருவருக்கும் கடும் போர் நடந்தது.

வராஹமூர்த்தி அவரின் கதாயுதத்தைப் பிடுங்கி ஒடித்து எறிந்தார்.

ஆத்திரம் அடைந்த அரக்கன், அடுத்து அவரை சூலத்தால் தாக்க முயன்றான்.பகவானின் சக்ராயுதம் சூலத்தை தூள் தூளாக்கியது..

இப்போது இரண்யாட்சன் மாயப் போரில் ஈடுபட்டான்.சுற்றிலும் இருளை ஏற்படுத்தி..பெரும் காற்றினை உண்டாக்கி, கல்,மழை பொழியச் செய்து வராகத்தை எதிர்த்தான்.திருமால், தனது சுதர்சன சக்கரத்தால் அவன் மாயைகள் அனைத்தையும் அறுத்தெரிந்தார்.பின் இரண்யாட்சகனின் செவியின் கீழ் ஓங்கி அறைந்தார்.அடியின் வேகம் தாங்காது, ரத்தம் கக்கியபடியே விழுந்து இறந்தான் இரண்யாட்சன்,

பிரளய நீரிலிருந்தும், இர்ண்யாட்சனிடம் இருந்தும் விஷ்ணு மீட்டுக் கொடுத்த பூமியில், மனுவும், சதரூபையும் தங்களது வம்ச விருத்தியைச் செய்தனர்.

பிரம்மனும் மீண்டும் சிருஷ்டியில் ஈடுபடத் தொடங்கினார்.இம்முறை அவருடைய அங்கங்களிலிருந்து பதின்மூன்று ரிஷிகள் தோன்றினர்.அப்படி உண்டானவர்களில் பிரம்மனின் நிழலிலிருந்து தோன்றியவர் கர்த்தமர் என்பவர்.

சுவாயம்புவ மனு தனது மூன்று பெண்களில் தேவஹூதி என்பவளை கர்த்தமருக்குத் திருமணம் செய்தி வித்தார்.மற்றொரு மகளான அஹூதியை ருசிப் பிரஜாபதிக்கும், ப்ரஹூதி என்பவளை தட்சனுக்கும் மணம் செய்வித்தார்.

ப்ரஹூதியை மணந்த தட்சனுக்கு , பதினோரு பெண்கள் பிறந்தனர்.அத்தனைப் பெண்களுக்கும் திருமணம் செய்த தட்சன் தன் கடைசிப் பெண்ணான சதி எனும் தாட்சாயணியை சிவபெருமானுக்கு மனைவியாக்கினான்.அதன் மூலம் அழிக்கும் கடவுளுக்கு மாமனாராக பெரும் பெருமை அடைந்தான்.

ஆனால் இதே தட்சன் தான் பின்னாளில் சிவபெருமானுக்கு எதிரியாகவும் மாறிப்போனான்.தனது மகளின் மரணத்துக்கும் காரணமானான்.

No comments:

Post a Comment