அவன் மூன்று உலகங்களிலும் தேவர்கள், அசுரர்கள், மனிதர்களை சிருஷ்டி செய்ய தன்
மனத்தாலேயே உருவம் கொடுத்துப் பார்த்தான்.ஆனால் அவை முழுமை அடையாமையால், மன்ம
வருந்தி விந்திய பர்வதத்தை அடைந்து அங்கிருந்த "ஆகமர்ஷணம்" எனும்
நதிக்கரையில்,தவம் புரிய ஆரம்பித்தான்.
அவனுடைய தவத்தால் மனம் மகிழ்ந்த திருமால், நேரில் தரிசனம் தந்தார்."தட்சனே!
நீ த்வஷ்டா என்பவளின் மகனான அஸிக்னியை மணந்து கொள்.அவள் மூலம் உன் சந்ததி
பெருகும்" என சொல்லிச் சென்றார்.
அஸிக்னியை மணந்த தட்சன், அவள் மூலம் "ஹர்யச்வர்கள்" எனும் பதினாயிரம்
பிள்ளைகளைப் பெற்றான்.அவர்களிடமும் வம்சத்தை விருத்தி செய்யச் சொன்னான்.
தந்தையின் கட்டளைப்படி ஹர்யச்வர்கள் மேற்கு திசை நோக்கிச் சென்றனர்.இல்லறத்தில்
ஈடுபடும் முன்பாக தங்களுடைய தபோபலத்தைப் பெருக்கிக் கொள்ள நினைத்தனர்.சிந்துநதி
கடலில் சங்கமிக்கும் "நாராயணசரஸ்" எனும் இடத்தில் தவம் செய்யத் தொடங்கினார்கள்.
அங்கு வந்த நாரதர் ஹர்யச்வர்களின் மனதை மாற்றி..அவர்களை சிருஷ்டி செய்வதிலிருந்து
பக்தி மார்க்கத்துக்குத் திருப்பி விட்டார். நாரதரின் உபதேசத்தால் பகவத்
பக்தியில் ஈடுபாடு கொண்ட ஹர்யச்வர்கள் பகவானை நினைத்து ஆழ்ந்த தியானத்தில் மூழ்கி
இறுதியாக முக்தி பெற்றனர்.
இதை அறிந்த தட்சன், நாரதர் மீது வருத்தமடைந்தான்.ஆனாலும், மனம் தளராது மீண்டும்
மனைவி அஸிக்னியோடு சேர்ந்து "ஸயலாச்வர்கள் எனும் ஆயிரம் பிள்ளைகளை
சிரிஷ்டித்தான்.அவர்களையும் வம்சத்தைப் பெருக்கச் சொல்லி அனுப்பினான்.
அந்த சபலாச்வர்களையும் நாரதர் சிருஷ்டியில் ஈடுபடவிடாது தடுத்து பக்தியில்
மூழ்கச் செய்து முக்தியடைய செய்து விட்டார்.இம்முறை தட்சன் மிகுந்த
அதிருப்தியுடன் நாரதரிடம் வந்து.
"நாரதரே!உம் கலக புத்தி மாறவே மாறாதா? என் மகன்களின் மனதைக் கெடுத்து அவர்களை
பகவத் பக்தியில் ஆழ்த்தி என் நோக்கத்தை நிறைவேறவிடாது செய்து விட்டீர்கள்.அங்கும்
இங்கும் சாகசம் செய்யும் நீர் நிரந்தரமாகவே எங்கும் தங்க முடியாமல் நாடோடியாக
திரிவீர்களாக" என மன வருத்தத்துடன் சாபமிட்டான்.
நாரதராலும், பதிலுக்கு தட்சனை சபித்திருக்க முடியும்..ஆனாலும், "நடப்பது
நல்லதற்கே" என சாபத்தை ஏற்றுக் கொண்டார்.
பின் தட்சனும்,அவன் மனைவியும் அறுபது பெண்களைப் பெற்றனர்.பத்துபேரை "தர்மர்"
எனும் பிரஜாதிபதிக்கும், பதின்மூன்று பெண்களை கச்ய பிரஜாதிபதிக்கும்,இருபத்தேழு
பேரை சந்திரனுக்கும்,இருவரை ருத்ரனுக்கும்,இன்னும் இருவரை அங்கிரஸிற்கும், மேலும்
இருவரை கிருசாச்வர்களுக்கும், மற்றும் நால்வரை தார்க்ஷன்யனுக்கும் மணம்
முடித்தான்.
இந்த 60 பெண்கள் மூலம் சந்ததி
பெருகியது.தேவர்கள்,அசுரர்கள்,கந்தர்வர்கள்.அப்சரஸ்கள், வசுக்கள்,பூதங்கள்,ருத்ர
கணங்கள் மட்டுமின்றி பசுக்கள், நாகங்கள்,பறவைகள் போன்ற உயிரினங்களும் உற்பத்தி
செய்து..மூவுலகங்களையும் நிரப்பினர்.
எல்லாமே மிகச் சரியாக நடந்து கொண்டிருந்த கால கட்டத்தில்தான், சுகவாசிகளான
தேவர்களுக்கு ஆணவம் தலைக்கேறி அவர்கள் வீழ்ச்சி தொடங்கியது.
=====================================
தேவலோகம் அன்று கோலாகலமாயிருந்தது.தேவலோகத்தின் அதிபதியான இந்திரன் தன் மனைவி இந்திராணியுடன் ராஜ்யசபையின் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தான்.சபையில் அவனைச் சுற்றி அஷடவசுக்களும்,அச்வினி தேவர்களும்,கந்தர்வர்களும்,கின்னரர்களும்,சித்தர்கள்,சாரணர்கள்,வித்யாதரர்கள் என எல்லோரும் கூடியிருந்தார்கள்.
கந்தர்வர்கள் கானம் பாட,அப்சரஸ்கள் நாட்டியம் ஆட, கின்னரர்கள் இசைக்கருவிகளை வாசிக்க அனைவரும் சோமபானம் அருந்தியபடியே உற்சாகமாக இருந்தனர்.
அப்போது, சபைக்குள் பிரவேசித்தார் தேவர்களின் குலகுருவான பிருகஸ்பதி.மூவுலகமும் போற்றும் பெருமை பெற்றவர் அவர்.
இந்திரன் பிருகஸ்பதி வந்ததைக் கவனித்தான்.ஆனாலும் அவரை வரவேற்று உபசரிக்காமல் கேளிக்கைகளில் மனம் லயித்துப் போய் அவரை அலட்சியப்படுத்தினான்.
இதனால் மனம் வருத்தமுற்றார் பிருகஸ்பதி.எப்போதும் சிம்மாசனத்தை விட்டு இறங்கி வந்து பணிவுடன் வரவேற்கும் இந்திரன்,வேண்டுமென்றே தன்னை அவமானப்படுத்தியதாக எண்ணினார்,இந்திரன் எனும் இறுமாப்பும்,சொர்க்கலோக சுகபோகங்களும் இப்படி ஒருஅவமானத்தை தனக்கு உண்டாக்கிவிட்டது என எண்ணியபடியே சபையை விட்டு வெளியேறினார்
கேளிக்கைகளும்,கொண்டாட்டமும் ஒரு முடிவிற்கு வந்த பின்னர் சுயநினைவிற்கு வந்த இந்திரன், குலகுருவான பிருகஸ்பதியை வரவேற்காமல் போனதற்காக மனம் வருந்தி, அவரை சந்தித்து மன்னிப்புக் கேட்கப் புறப்பட்டான்.
இதைத் தன் தவ வலிமையால் உணர்ந்த பிருகஸ்பதி,எவருடைய கண்களிலும் படக்கூடாதென மறைந்துவிட்டார்.
பிருகஸ்பதி தேவர்களைவிட்டு போய்விட்டார் எனத் தெரிந்ததும் அசுரர்கள் மகிழ்ந்தனர்.தேவர்களைத் தாக்க இதுதான் சரியான சமயம் என தீர்மானித்தார்கள்.தங்கள் குல குருவான சுக்ராச்சாரியாரின் உதவியோடு பலமடங்கு வலிமைமைப் பெருக்கிக் கொண்டு தேவலோகத்தின் மீது படையெடுத்தான்.
அசுரர்களுக்கும்,தேவர்களுக்கும் பெரும் சண்டை மூண்டது.குரு சுக்ராச்சாரியார் அசுரர்களை வழி நடத்த..தேவர்கள், பிருகஸ்பதி இல்லாததால் ஆலோசனை சொல்ல ஆளின்றி தோற்றனர்.அசுரர்களின் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாது தேவர்கள் ஓடி ஒளிந்தனர்.
இந்திரன் தேவர்களை அழைத்துக் கொண்டு பிரம்மலோகம் ..சென்றான்."பிரம்ம தேவரே! தாங்கள்தான் அசுரர்களிடமிருந்து எங்களைக் காக்க வேண்டும்"ஏன பிரம்மனை வேண்டினான்.
பிரம்மன் , சுக்ராச்சாரியாரை மதிக்காததற்காக இந்திரனைக் கண்டித்தான்.
பின், "இந்திரா1 ஒருவன் எவ்வளவு உயர்ந்த நிலைக்குப் போனாலும் கர்வம் கொள்ளக்கூடாது.நீ ஆணவத்துடன் குலகுருவை அவமதித்ததால்தான் தேவர்களுக்கு இந்த துன்பம் ஏற்பட்டது.அவர்கள் குரு சுக்ராச்சாரியாரை பூஜித்து மேலும் வலிமை பெற்று வருகிறார்கள்.அவர்கள் இனியும் தொடர்ந்து தேவலோகத்தைக் கைப்பற்றவே முயற்சிப்பார்கள்.குருவை இழந்து நிற்கும் நீங்கள் ஒரு குருவைத் தேடிக்கோள்ளுங்கள்" என்றார்.
"நாங்கள் யாரை குருவாகக் கொல்வது என நீங்கள்தான் வழி காட்ட வேண்டும்" என இந்திரன் வேண்டினான்.
"த்வஷ்டாவின்" மகனான விச்வரூபன் என்பவன் தலை சிறந்த பிரம்மஞானி.வயதில் சிறியவன்.ஆனாலும் வேதங்களை அறிந்தவன்.பிருகஸ்பதிக்குப் பதிலாக உங்கள் குருவாக இருப்பதற்குத் தகுதியானவன்.நீங்கள் அவனிடம் சென்று குருவாக இருக்க வேண்டுங்கள்.அவன் சம்மதித்தால் நீங்கள் நன்மையடையலாம்" என்றார் பிரம்மன்.
த்வஷ்டா எனுன் அந்தணனுக்கும் ரசனா என்ற அசுரர் குலப் பெண்ணிற்கும் பிறந்தவன் விச்வரூபன்.மூன்று தலைகளைக் கொண்ட அவன் அரக்கர் குலம் மீதும் பாசம் கொண்டவன் ஆயிற்றே என இந்திரன் யோசித்தான்.ஆனாலும் வேறு வழியின்றி விச்வரூபனிடம் சென்று தங்ககளுக்குக் குருவாக இருக்குமாறு வேண்டினான்.
விச்வரூபனுக்கு ஆசாரியார் பதவியின் மீது ஆசை இல்லை.ஆனாலும் தேவர்கள் கேட்டுக் கொண்டதால்..துன்பத்தில் இருக்கும் அவர்களுக்கு உதவி செய்ய விரும்பியதாலும், இந்திரன் கேட்டுக் கொண்டதாலும் ஏற்றுக்கொண்டான்.
தேவர்களின் குருவானபின் அவன் இந்திரனுக்கு "நாராயண கவசம்" எனும் மகாமந்திரத்தை உபதேசித்தான்.அசுரர்களை வெற்றி கொள்ளும் விதமாக அந்த மாகாமந்திரத்தை எப்படி ஜெபிக்க வேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்தான்.
நாராயண கவசத்தின் மகிமையால் அடுத்தடுத்து நடந்த போர்களில் அசுரர்களை வெற்றி கொண்டான் இந்திரன்.விச்வரூபனுக்கு நன்றி தெரிவித்து கௌரவித்தான்.
விச்வரூபன் தொடர்ந்து தேவர்களுக்கு குருவாக அவர்களை வழி நடத்து வந்தான்.ஆனாலும் தாய்வழி உறவினர்களான அசுரரகள் மீது அன்பு கொண்டவனாகவே இருந்தான்.அதனால் யாகங்கள் செய்து தேவர்களுக்கு அவிர்பாகங்கள் அளிக்கப்படும் போது..யாருக்கும் தெரியாமல் அவிர்பாகத்தின் ஒரு பகுதியை அசுரர்களுக்கும் அளித்து வந்தான்.
இதைத் தெரிந்து கொண்ட இந்திரன், தேவர்களின் குருவானவன் தங்களுக்குத் துரோகம் செய்து விட்டானே என ஆத்திரத்துடன் விச்வரூபனின் மூன்று தலைகளையும் வெட்டி வீழ்ந்தினான்.
கோபத்தில் அந்தணன் ஒருவனைக் கொன்ற காரணத்தால் இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது.அந்தப் பாவத்தைப் போக்க..அதை நான்காகப் பிரித்து பூமி, நீர்,மரங்கள் மற்றும் பெண்களிடம் அதைப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டினான்.இதற்கு அவர்கள் ஒப்புக் கொண்டால் வரங்கள் தருவதாகக் கூறினான்.நால்வரும் சம்மதித்து பாவங்களைப் பெற்றுக் கொண்டனர்.
அவர்கள் ஏற்றுக் கொண்ட பாவத்தினாலேயே பூமி பாலைவனமாகியது.மரங்களில் பால் கசிந்தது.நீரில் நுரை ஏற்பட்டது.பெண்களுக்கு மாத விலக்கு உணடானது.பதிலுக்கு இந்திரன் தந்த வரங்களாக, பூமியில் ஏற்படும் பள்ளங்கள் தானாகவே சரியாயின.மரங்கள் வெட்ட வெட்ட துளிர்த்தன.நீர் அள்ள அள்ளக் குறையாமல் சுரந்தது,பெண்களுக்கு பிரசவத்தின் பின்னும் கணவனுக்கு இன்பம் தரும் தன்மை ஏற்பட்டது.
இந்திரன் இந்த விதமாக பிரம்மஹத்தித் தோஷத்திலிருந்து தப்பித்தான்.அடுத்து அவனுக்கு ஒரு ஆபத்தும் காத்திருந்தது.
இந்திரனால் தன் மகன் கொல்லப்பட்டதை அறிந்த த்வஷ்டா அவன் மீது கோபம் கொண்டான்.இந்திரனை அழிக்க ஒரு யாகம் செய்தான்.அந்த யாகத்தின் போது யாக குண்டத்தின் அக்னியில் இருந்து ஒரு அசுரன் வெளிப்பட்டான்.அவன் விருத்ராசுரன்."ஓம் நமோ நாராயணய" என்று ஜெபித்தபடியே அக்னி குண்டத்திலிருந்து வந்தான் அசுரன்.
ஒரு அசுரன், நாரயணனை ஒலிப்பதா..விருத்ராசுரன் முன் பிறவிப் பற்றி அறிந்தால் ஆச்சரியம் ஏற்படாது. அதைப்பார்ப்போம்..
**********************************
சித்ரகேது சூரசேன நாட்டின் மன்னன்.அவனது மனைவி பட்டத்து ராணி கிருதத்யுசி.இவளைத் தவிரவும் அரசனுக்கு பல மனைவிகள் இருந்தனர்.ஆனாலும் குழந்தைகள் இல்லை.
தனக்குக் கடைசிவரை புத்திரப் பாக்கியம் கிட்டாதோ என மன்னன் கவலை கொண்டான்.அதனால் எதிலும் நாட்டமில்லாமல் இருந்தான்
இச்சமயத்தில்தான் ஆங்கிரஸ முனிவர், அவனது அரண்மனைக்கு வந்தார்.
மன்னன்..சித்ரகேது,அவரை சகல மரியாதைகளுடன் வரவேற்று..அரண்மனையில் எல்லா வசதிகளும் செய்துத் தந்து உபசரித்தான்.தானே முன்னின்று அனைத்து பணிவிடைகளையும் செய்தான்.
அவனது உபசரிப்பால் மன்ம மகிழ்ந்த முனிவர் அவனிடம், "மன்னா..உன் முகத்தில் துயரம் தெரிகிறது.மனதில் ஏதோ கூறயிருப்பதை உணர்கிறேன்.
அது என்ன என்று சொல்.முடிந்தால் தீர்த்து வைக்கின்றேன்" என்றார்.
சித்ரகேது சொன்னான்,"சுவாமி, ஒருவன் என்னதான் சீரும், சிறப்புமாய் புகழ் பெற்றிருந்தாலும்.புத்திர பாக்கியம் இல்லையென்றால் அவனுக்கு மோட்சம் கிடையாது என்கிறது சாஸ்திரம்.எனக்கு குழந்தை பாக்கியம் இல்லை.,.நீங்கள் தான் நான் நரகத்தை அடையாமல் காக்க வேண்டும்" என்றான்.
மன்னன் சித்ரகேதுவின் வேண்டுகோளை ஏற்று,ஆங்கிரஸ் முனிவர் புத்திரபாக்கியத்துக்காக விசேஷ யாகம் ஒன்றை நடத்தினார்.யாகத்தின் பிரசாதத்தை பட்டத்துராணியான கிருதத்யகிக்கு அளித்தார்.பின் மன்னரிடம் "உன் மனைவி ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுப்பாள்"எனக் கூறிச் சென்றார்.
ஆங்கிரஸ் முனிவர் சொன்னது போல, கிருதத்யகி ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தாள்.மன்னர் மிகவும் மகிழ்ச்சியுடன் குழந்தை பிறந்ததை கோலாகலமாகக் கொண்டாடினார்.வாரிசைத் தந்த கிருதத்யகிமேல் மன்னன் பெரு ம் அன்பு கொண்டு...அவள் பக்கத்திலேயே இருந்தார்.மற்ற மனைவிகளைப் பார்க்கக் கூட செல்லவில்லை.
அதனால் மற்ற மனைவிகள் கிருதத்யகி மீது பொறாமை கொண்டனர்.அந்தக் குழந்தையினால்தானே மன்னன் தங்களைப் புறக்கணிக்கின்றான் என யாருக்கும் தெரியாமல் பாலில் விஷம் கலந்து கொடுத்து அக்குழந்தையைக் கொன்றனர்.
குழந்தை இறந்த செய்தி கேட்டு கிருத்த்யகி அழுதுக் கதறி மயக்கமானாள்.
மன்னனும் பித்து பிடித்தவன் போல் ஆனான்.ராஜ்ய பரிபாலத்தின் மீது கவனமின்றி குழ்ந்தையின் நினைவாகவே அரண்மனையில் முடங்கிக் கிடந்தான்.
இந்நிலையில், ஆங்கிரஸ முனிவரும்,நாரத மகரிஷியும் அங்கு வந்து மன்னனுக்கு ஆறுதல் கூறினார்கள்.
"மன்னா!பிறக்கும் உயிர்கள் எல்லாமே ஒரு காலத்தில் மடியத்தான் வேண்டும்.இது காலத்தின் கட்டாயம்.உடல் என்பது வெறும் மாயை.உடல் அழிந்தாலும் ஆன்மா அழிவதில்லை.இறந்து போனது உன் குழந்தை என்னும் பாசத்தையும், பற்றையும் விட்டுவிட்டு அது போன ஜென்மத்தில் என்னவாகி இருந்திருக்குமோ?என யாருக்குத் தெரியும்?அதற்கு அப்போது உன்னுடன் என்ன உறவு இருந்தது? இந்த ஜென்மத்தில் உனக்கு மகனாகப் பிறந்து மரித்து விட்டது.அடுத்த பிறவியின் போது வேறொருவருக்குப் பிள்ளையாய் பிறக்கும்.
மனிதர்கள் எல்லோரும் தனியாகத்தான் பிறக்கிறோம்.இறுதியில் தனியாகத்தான் செல்லப் போகிறோம்.இடையில், பந்தம், பாசம் என நாமாகத்தான் சிக்கிக் கொள்கிறோம்.இனியேனும் ஆசாபாசங்களை உதறி பகவானின் காலடியில் உன் மனதை செலுத்து" என்றனர்
மன்னனின் மனமும் தேறி தெளிவு பெற்றது.
பின் நாரதர் மன்னனிடம் "சித்ரகேது..இப்போது நாராயணனை அடையும் மந்திரத்தை உபதேசிக்கிறேன்.அதை ஜெபித்து தியானத்தில் ஈடுபட்டு பெரும் ஸித்திகளைப் பெறுவாயாக" என்று சொல்லி மந்திரததைப் போதித்தார்.
சித்ரகேதுவும் தியானத்தில் ஆழ்ந்தார்.ஏழு நாட்கள் நீரை மட்டும் அருந்தி மந்திரத்தை இடைவிடாது ஜெபித்தார்.எட்டாவது நாள் அவரது தியானம் பலித்தது.அவன் வித்தியாதர்களின் மன்னனாகும் தகுதியினைப் பெற்றான்.இதன் காரணமாக அவன், ஆகாயத்திலே உலாவவும்,பாதாளத்தில் புகுந்து செல்லவும் கூடிய ஆற்றல்களைப் பெற்றான்.நினைத்த நாழிகையில் எங்கும் செல்லக்கூடிய வல்லமையினை அடைந்தான்.
ஒருமுறை அவன் தனது விமானத்தில் ஏறி ஆகாயமார்க்கமாக சென்று கொண்டிருந்த போது கயிலாயமலையைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது.
கயிலாயமலையில் சிவபெருமான் தனது பூத கணங்கள்,முனிவர்கள்,சித்தர்கள்,சாரணர்கள் சூழ பார்வதி தேவியை தன் மடியின் மீது வைத்து அணைத்தபடியிருந்தார்.
இதைப்பார்த்த சித்ரகேது கேலியாக,"சாதாரண மனிதர்கள்கூட தன் மனைவியை யாரும் அறியாமல்தான் கொஞ்சுவார்கள்.ஆனால் உலகத்தையே ரட்சிக்கும் சிவன் துளியும் வெட்கமில்லாமல் மற்றவர்கள் கண்ணெதிரில் மனைவியைக் கட்டியணைத்து குலாவுகிறாரே!..கேவலம்" என முகம் சுளித்தான்.
அவன் சொற்கள் காதில் விழ, சிவன் மௌனமாக இருந்தார்.ஆனால் பார்வதி கோபம் கொண்டாள்.
வித்யாதரர்களின் மன்னன் ஆகிவிட்டதால் மமதைக் கொண்டு விட்டான் இந்த மடையன்.மகரிஷிகளும் மற்ற தேவர்களும் போற்றி வழிபடும் மகாதேவனை நிந்தித்த இந்த சித்ரகேது அசுரனாகப் பிறக்கட்டும்"என சாபமிட்டாள்.
பார்வதி தேவியின் சாபத்தைக் கேட்ட சித்ரகேது விமானத்திலிருந்து இறங்கி வந்து பார்வதியை வணங்கினான்.
"தாயே! உங்கள் சாபத்தை ஏற்கிறேன்.சுகம்,துக்கம்,இன்பம்,துன்பம்,மரணம்,பிறப்பு எல்லாமே ஒன்றுதான்.இவை யாவும் உடலைத்தான் பாதிக்கும்.ஆன்மாவிற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.நடப்பவை விதியின் செயல்.என் கர்மாவை நான்தான் அனுபவித்துத் தீர வேண்டும்.நான் கூறியதில் ஏதேனும் தவறிருந்தால் மன்னிக்கவும்" என்றான்.
பார்வதி தேவி ஆச்சரியம் அடைந்தாள்.
பரமசிவன் அவளிடம், "தேவி..இவன் மகாவிஷ்ணுவின் பரம பக்தன்.நாரதரிடம் மந்திர உபதேசம் பெற்றவன்.அதனால் பணிவான, பக்குவமான வார்த்தைகளைக் கூறினான்.உன் சாபத்தையும் மனமகிழ்ச்சியுடன் பெற்று க் கொண்டான் .ஸ்ரீஹரியின் பக்தர்கள் எத்தனைத் துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனவலிமை பெற்றவர்கள்.இவன் இப்போதும், எப்போதும் திருமால் இருப்பான்" என சித்ரகேதுவைப் பாராட்டினார்.
அந்தச் சித்ரகேதுதான் பார்வதியிடம் பெற்ற சாபத்தின்படி த்வஷ்டாவின் யாக குண்டத்திலிருந்து விருத்ராசுரனாக வெளிப்பட்டான்.ஹரி பக்தனாகவே இருந்தான்.
த்வ்ஷ்டாவின் விருப்பப்படி இந்திரனை அழிக்க விண்ணுக்கும், மண்ணுக்கும் விஷ்வரூபம் எடுத்து, பயமுறுத்தும் கோர உருவத்துடன் தேவர்களைத் தாக்கினான்.விருத்ராசுரனின் பயங்கரத் தாக்குதலை சமாளிக்க முடியாது தேவர்கள் சிதறி ஓடினர்.
இந்திரனை கடுமையாகத் தாக்கி காயப்படுத்தினான்.இந்திரன் தன் பல அஸ்திரங்களை உபயோகித்தும் பலனளிக்காததால், பின் வாங்கினான்.
விருத்ராசுரனிடமிருந்து தப்பியோடிய இந்திரன் வைகுண்டம் சென்று நாராயணனை சரணடைந்து, "நீங்கள்தான் விருத்ராசுரனிடமிருந்து எங்களைக் காக்க வேண்டும் "என வேண்டினான்.
விஷ்ணு அவன் மீது இரக்கம் கொண்டு...
"இந்திரா...விருத்ராசுரனை வெல்ல ஒரு வழி சொல்கிறேன்.ததீசி எனுன் மகரிஷி காட்டில் தவம் செய்து கொண்டு இருக்கிறார்.தீவிர விரதத்தாலும், யோக சக்தியாலும் தன் உடலை வஜ்ரம்போல வைத்துள்ளார்.அவரிடம் சென்று அவர் எலும்பைக் கேள்.மறுக்காமல் தருவார்.அதைப் பெற்று விச்வகர்மாவிடம் கொடுத்து ஒரு ஆயுதம் செய்யச்சொல்,பின் அந்த ஆயுதத்தால் விருத்ராசுரனை நீ வெல்லலாம்" என்றார்.
இந்திரனுக்கு எலும்பைத் தர வேண்டுமானால் ததீசி உயிரைக் கொடுக்க வேண்டியிருக்கும்.அப்போதுதான் அந்த உடலிலிருந்து எலும்பை எடுக்க முடியும்.ததீசி உயிர் துறக்கத் துணிவாரா என்பது தெரியவில்லை.யாருக்கோ தன் உயிரைக் கொடுக்க யார்தான் விரும்புவர்?
ஆனாலும் மகாவிஷ்ணு கூறியபடி ததீசி மகரிஷியினை சந்தித்து மிகவும் கூச்சத்துடன் அவரது முதுகெலும்பைக் கேட்டு யாசித்தான் இந்திரன்.
சிறிதும் யோசிக்காமல் கருணை மனதுடன் சம்மதித்தார் ததீசி மகரிஷி.
"என்றைக்கு இருந்தாலும் இந்த உடல் அழியத்தான் போகிறது.அழியப்போகும் இந்த உடல் மற்றவர்களுக்கு நன்மையினைத் தருமானால்,அதைவிட சந்தோஷம் வேறு என்ன இருக்கமுடியும்" என்ற மகரிஷி உடனே தியானத்தில் ஆழ்ந்தார்.உடலை உதறிவிட்டு தனது ஆத்மாவை பரமாத்மாவோடு ஐக்கியப் படுத்திக் கொண்டார்.
ததீசியில் எலும்பில் இருந்து வஜ்ராயுதத்தை உருவாக்கித் தந்தான் விஸ்வகர்மா.இந்திரன் அதை யேந்தி விருத்ராசுரனுடன் போரிட்டான்.
தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் கடும் போர் மீண்டது.
இம்முறை அசுரர்கள், தேவர்களிடம் அடிபட்டு தோற்று ஓடினார்கள்.ஆனாலும் கூட விருத்ரனை வெல்வது எளிதாக இல்லை.
"இந்திரா..தேவர்களுக்குக் குருவாய் இருந்த விச்வரூபனைக் கொன்ற பாவி நீ.இதற்கு உன்னை நான் பழி வாங்குவேன்" ..என்றபடியே சூலத்தை ஏந்தி..'இந்த சூலத்தால் உன் உடலைப் பிளப்பேன்..அப்படியில்லாது..உன் வஜ்ராயுதத்தால் நான் இறந்தாலும் கவலைப்பட மாட்டேன்.பகவானின் திருவடிகளைப் பற்றிக் கொள்வேன்.அரக்கனாக இருந்தாலும் நான் நரகத்துக்குப் போக மாட்டேன்.மோட்சத்தையே அடைவேன்.ஆனால்..போரில் வென்றாலும் உனக்கு மன நிம்மதி கிடைக்காது" என இந்திரன் மீது பாய்ந்தான் விருத்ராசுரன்.
இந்திரன்...தன் வஜ்ராயுதத்தால் சூலம் ஏந்திய அவன் கையை வெட்டி வீழ்ந்தினான்.மற்ற கையில் ஆயுதம் ஏந்தி விருத்ரன் போரிட்டான்.அந்தக் கையையும் வெட்டி வீழ்த்தினான் இந்திரன்.தன் வாயை அகலத் திறந்து இந்திரனை விழுங்கினான் விருத்ராசுரன்.அவன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்த இந்திரன், வஜ்ராயுதத்தால் விருத்ராசுரனின் மண்டையில் ஓங்கி அடித்துக் கொன்றான்.
விருத்ராசுரன் உயிர் பிரிந்தது.
ஆனால்..இந்திரனை தோஷம் பற்றிக் கோண்டது.ஏற்கனவே விச்வரூபனைக் கொன்றதன் மூலம் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொள்ளவே படாதபாடு பட வேண்டியிருந்தது.இப்போதோ விருத்ரனைக் கொன்றதன் மூலம் மறுபடியும் அதே பிரம்மஹத்தி தோஷம் பற்றியது.
அதிலிருந்து தப்பிக்க மானசரோவரத்தில் ஒரு தாமரைத் தண்டின் வழியாக நுழைந்து உள்ளே தங்கிக் கொண்டான்.
இந்திரன் இவ்வாறு தண்ணீருக்குள் தங்கி யிருந்ததால் யாகங்களில் அவனுக்கு அளிக்கப்பட்ட அவிர்பாகங்களை அக்னியால் அவரிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை.அதனால், உள்ளே உணவின்றித் தவித்தான் இந்திரன்.
இந்த சமயத்தில் சந்திர குலத்தில் பிறந்த நகுஷன் என்பவன் நூறு அசுவமேதயாகங்களைச் செய்து முடித்திருந்தான்.எவன் ஒருவன் நூறு அசுவமேதயாகங்களைச் சிறப்பாகச் செய்து முடிக்கின்றானோ..அவன் இந்திரப்பதவியை அடைவான் என்பதால் நகுஷன் தேவலோகத்தின் இந்திரபதவியை அடைந்து தேவர்களின் அரசன் ஆவான்.
சொர்க்கலோகத்தின் சுகபோகங்கள் நகுஷனை இன்பத்தில் ஆழ்த்தின.எல்லா தேவர்களும் அவனை வணங்கி நின்றனர்.அரசு,பதவி, செல்வம் என அனைத்தும் பெற்ற நகுஷனின் நற்குணங்கள் நாள்பட நாள்பட மறைந்து..ஆணவம் அதிகமானது.
இந்திர பதவியை அடைந்ததால் இந்திரன் மனைவி இந்திராணியும் தன்னுடையவள் என அவளை தன் விருப்பத்துக்கு இணைய வற்புறுத்தினான்.நகுஷனின் தொல்லை தாங்காமல் இந்திராணி,தேவர்கள் குருவான பிருகஸ்பதியிடம் சென்று முறையிட்டாள்.நகுஷனிடமிருந்து தன்னைக் காப்பாற்றுமாறு வேண்டினாள்.
அவளின் நிலை கண்ட பிருகஸ்பதி...ஒரு யோசனையைச் சொன்னார்.
"முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்.வஞ்சக எண்ணம் கொண்ட நகுஷனை அவன் ஆணவத்தாலேயே அழிக்க வேண்டும்.எனவே நீயும் நகுஷன் மீது அன்பு கொண்டவளைப் போலவே நடி.அதனல அவனை நீ ஏற்றுக்கொண்டதாகிவிடாது. ,அவன் அடுத்து உன்னிடம் வரும் போது, அவன் பல்லக்கை சப்தரிஷிகள் சுமந்து வர வேண்டும் என்று சொல்.பிறகு பார்..நகுஷன் என்னவாகிறான் என்று" என்றார்.
இந்திராணி பிருகஸ்பதி சொன்னபடியே நிபந்தனை விதிக்க நகுஷனும் ஒப்புக் கொண்டான்.
சப்தரிஷிகளை அழைத்து இந்திராணி இருக்குமிடத்திற்கு தன்னை பல்லக்கில் சுமந்து செல்லுமாறு ஆணையிட்டான்.
தேவர்களின் தலைவன் என்பதால் சப்தரிஷிகளும் அவன் ஆணைக்கு அடிபணிந்து அவனைத் தூக்கிச் சென்றனர்.
இந்திராணியை அடைய வேண்டும் என்ற மோகத்தில் இருந்ததால் சப்தரிஷிகள் பல்லக்கினைத் தூக்கும்வேகம் போதாது என எண்ணினான்.அவர்கள் ஆமை வேகத்தில் செல்வது போலத் தோன்றியது.அதனால் எரிச்சலுடன்"ஸர்ப்ப ஸர்ப்ப" என்று தன் கால் கட்டைவிரலால் ரிஷிகளைக் குத்தித் தீட்டினான்.(ஸர்ப்ப என்றால் வேகம், பாம்பு என வடமொழியில் அர்த்தங்கள் உண்டு)
சப்தரிஷிகள்நகுஷனின் அவமதிப்பைக் கண்டு கோபம் அடைந்தனர்.
"பெரியவர்களிடம் பணிவு இல்லாமல் மோகத்தால் அறிவிழந்த நகுஷனே உன் வார்த்தைப்படி நீ சர்ப்பமாக மாறிக் கிட"என சாபமிட்டுவிட்டார்கள்.
மீண்டும் அரசன் இல்லா நிலையில் தேவலோகம்.
பின் ரிஷிகள் எல்லோரும் கூடி இந்திரனுக்காக அசுவமேதயாகம் செய்துஅவனது பிரம்மஹத்தி தோஷத்தைப் போகச் செய்துஅவனை மீட்டனர்.
பின், இந்திரன் பதவியில் அமர்ந்து மூவுலகினையும் ஆளத்தொடங்கினான்.
கதையைக் கேட்டுக் கொண்டிருந்த பரீட்சித், சுகர் மகரிஷியிடம்,தன் சந்தேகத்தைக் கேட்டான்.
"இறைவனுக்கு படைப்பில் அனைவரும் சமம்தானே! அப்படியிருக்கையில், அவர் இந்திரர்களுக்கும், தேவர்களுக்கும் உதவி செய்து அசுரர்களை தானே அழித்ததும், அழிக்க உதவியதும் ஏன்?" என்றான்.
"பரீட்சித்...பகவான் அனைவருக்கும் அருள்பாலிக்கின்றான்.அது வெளிப்படத் தெரிவதில்லை.அவ்வளவுதான்.துஷ்டர்களுக்கு அவன் தண்டனைத் தருவது போல நமக்குத் தோன்றினாலும் அதுவும் அவர்களுக்கு நன்மை செய்யவே!பக்தி,சிநேகம்,காதல்(காமம்),பயம்,விரோதம் என ஐந்து வகைகளுமே பகவானை அடையும் வழிகள்தான்.என்னைப் போன்ற மகரிஷிகள் பக்தியாலும்,பாண்டவர் போன்றோர் ஸ்நேகத்தாலும்,கோபிகைகள் காதலாலும்,பயத்தால் கம்சன் போன்றோர்களாலும்,விரோதத்தால் இரண்யாட்சன்,இரண்யகசிபு போன்றோர்களாலும் பகவானை சென்று அடையமுடிகிறது"
துவாரபால்கர்களான ஜெய..விஜயர்கள் மூன்று பிறவிகள் அசுரர்களாகப் பிறந்து பகவானை அடைவார்கள் என்ற சாபம் ஏற்பட்டதல்லவா?
அதன்படி அவர்கள் இரண்யாட்சன்..இரண்யகசிபு ஆகவும்
அடுத்தப் பிறவியில் ராவணன்,கும்பகர்ணன் ஆகவும்
கடைசிப் பிறவியில் சிசுபாலன்,தந்தவக்த்ரர்களாகவும் பிறந்து பகவானால் வதம் செய்யப்பட்டு சாப விமோசனம் அடைந்து..இறைவனின் திருவடிகளை அடைந்தனர்"
மகரிஷி சுகர் சொல்லி முடித்தார்.
"இரண்யட்சன் வராக அவதாரத்தின் மூலம் கொல்லப்பட்டதாகக் கூறினீர்கள்.இரண்யகசிபு என்னவானான்? அவன் என்ன செய்தாண்" என்றான் பரீட்சித்.
இரண்யகசிபுவின் கதையைக் கூற ஆரம்பித்தார் சுகர் மகரிஷி.