Thursday, January 13, 2022

 உத்தவ கீதை - 4

------------------------------

24 குருமார்கள் கதை (அவதூதன் யதுர்குலப் பெரியவருக்கு கூறியது)

----------------------------

எனது அறிவால் உணரப்பட்டு ஞானம் பெற்றேன்.

எனது குருமார்கள்..பூமி,காற்று,ஆகாயம், நீர்,நெருப்பு, சந்திரன்,சூரியன்,
புறா,மலைப்பாம்பு,கடல், கூட்டுப்புழு,தேனீ,யானை,தேனெடுப்பவன்,மான், மீன்,
பிங்கலை என்ற வேசி, பருந்து, குழந்தை,இளைய கன்னி,அம்புகள் தயாரிக்கும்
கருமான்,பாம்பு, சிலந்திப் பூச்சி,குளவி ஆகிய 24 பேர்களும் எனக்கு
அறிவுரை புகட்டிய குருமார்கள் ஆகும்.அவர்களின் செயல்களிலிருந்து நான்
ஞானம் பெற்றேன்.அவர்களிடம் இருந்து..என்ன, எப்படி கற்றுக் கொண்டேன்
என்பதை யயாதி வம்சத்தில் வந்தவரே கேளுங்கள்..


1) பூமி-

பூமியிலிருந்து பொறுமையைக் கற்றேன்.ஞானம் பெற்றவன் விதி வசத்தால் தனக்கு
எந்தக் கொடுமைகள் நடைபெற்றாலும்..தனது நடத்தையில் இருந்து விடுபடக்
கூடாது. இதைப் பூமியிடம் கற்றேன்.

நல்ல மனிதன்,மலையிடமிருந்து எப்படி நல்லது செய்வது என்றும்,தனது உயிர்
பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் கற்றுக்கொள்ள வேண்டும்.

எப்படி மலையிலுள்ள மரங்கள் பிறருக்கு உதவியாக உள்ளன என்பதை உணர
வேண்டும்.பலன் கருதாமல் மற்றவர்களுக்கு பழங்களை மரங்கள்
கொடுக்கின்றன.ஆனால் மனிதர்கள் அந்த மரங்களை கல்லெறிந்து அடிக்கிறார்கள்.

பூமி, மலை, மரங்கள் எனது முதலாவது குரு


2) காற்று

ஞானியானவன், அறிவைக் கொண்டு உயிர் வாழ்வதை மேற்கொள்ள வேண்டுமே தவிர
இந்திரிய சுகங்களுக்கு அடிமையாகக் கூடாது.மனத்திலும் சஞ்சலம் ஏற்படக்
கூடாது.பொருள்கள் மீது பற்று வைக்கக் கூடாது.எப்படி காற்று எதிலும்
ஒட்டிக் கொள்ளாமல் ஓடிக் கொண்டிருக்கிறதோ..அப்படி மனிதனும்..எந்த
புறப்பொருளிலும் பற்று வைக்காமல்,தன் ஆன்மாவில் பற்றுள்ளவனாக வாழ
வேண்டும்.  வாசனை பூமியின் குணம்.காற்று வாசனைகளால்
மாசுபடுவதில்லை.அதுபோல, மனிதனும் உலகில் பொருட்பற்று நீங்கி வாழ வேண்டும்

காற்று எனது இரண்டாவது குரு.


3) ஆகாயம்

யோகியானவன் எங்கும் நிறைந்திருந்து எல்லாவற்றிலும் கலந்து நிற்கும்
ஆகாயத்தைப் போல வாழ வேண்டும்.தனக்கென்று ஓர் உடம்பிருந்தும் தன்னை ஒரு
பிரம்மமாய் உணர வேண்டும்.(பிரம்மம்- எல்லாவற்றிற்கும் காரணமான முதற்
பொருள்.உயிருள்ளவை,உயிரில்லாதவை, அசைவன,அசையாதவை யாவற்றிற்கும்
மூலக்காரணம் பிரம்மம்)

பந்தம் , பாசம் என்கின்ற தடைகளைத் தாண்டி..யாவற்றிலும் கலந்து நின்று ,
காலத்தால் கட்டுப்படாத பிரம்மமாய் உணர வேண்டும்.காற்று,நெருப்பு,பூமி,
காற்றால் அடித்து செல்லப்படும் மேகம் ஆகியவற்றால் ஆகாயம் கட்டுப்படாது.

அதுபோல, யோகியானவன் காலத்தால் அழியக் கூடிய
எப்பொருள்களாலும்,உயிர்களாலும் கட்டுப்படக் கூடாது.

ஆகாயம் எனது மூன்றாவது குரு


4) நீர்-..

புண்ணியம் செய்தவர்கள், பாவம் செய்தவர்கள் மற்றும் சாதாரண மனிதர்களையும்,
நீராடல் செய்வதால்..எப்படிப் புனித நீர் புனிதம் அடையச் செய்கிறதோ அப்படி
யோகியானவன் தன்னுடன் சேர்பவர்களையும் புனிதப் படுத்த வேண்டும்.

நீர் எனது நான்காவது குரு.


5)  நெருப்பு - தீ

எப்படி "தீ"யானது அதனுடன் தொடர்புடைய நல்லது, கெட்டது எல்லாவற்றினையும்
எரித்துச் சாம்பலாக்கிப் புனிதப் படுத்துகிறதோ அப்படி யோகியானவன் இருக்க
வேண்டும்.

தீயானது எரிகின்ற பொருளின் உருவத்தை எடுத்துக் கொள்ளும்.அதுபோல..நெருப்பு
வெளிக்குத் தெரியாமல் எல்லாப் பொருள்களிலும் ஒளிந்திருக்கிறது.

யாகத்தில் ஆகுதியாகக் கொடுக்கப்பட்ட பொருள்களை ஏற்றுக் கொண்டு,கடந்த
காலத்தில் செய்யப்பட்ட தீமைகளை நீக்கி..புண்ணியத்தை அளிக்கிறது.

அதுபோல, யோகியும் உலகில் வாழ வேண்டும்.

தீ...ஐந்தாவது குரு.


6) சந்திரன்-

எங்கும் நிறைந்திருக்கும் இறைவனின் மாயையால் உயிர்கள் தோன்றி உடம்பு என்ற
உருவத்தை எடுத்து, பின்பு, உடல் அழிந்து மரணமடைகின்றன.

அழிவு பல மாறுதல்களுக்கு உண்டான உடலுக்கேயன்றி அதனுள் உறையும் ஆன்மாவுக்கில்லை.

எப்படி சந்திரன் தோன்றி,வளர்ந்து பௌர்ணமியன்று முழு நிலவாகி..மறுபடியும்
தேய்ந்து, பின்பு அமாவாசையன்று முற்றிலும் மறைந்து மறுபடியும்
வளர்பிறையாக வளர்கிறது.அதுபோல, நமது உடலும்..தோன்றி வளர்ந்து, பின்பு
தேய்ந்து மறைந்து விடும்.

ஆகையால் சந்திரன் ஆறாவது குரு.


7)சூரியன்-

சூரியன், தனது கிரணங்களால் உலகத்திலுள்ள நீரை உறிஞ்சி எடுத்து ஆவியாக்கி
மாற்றிப் பின்பு மேகமாக மழை பெய்விக்கிறான்.சூரியன் அந்த ஆவியால் எந்த
பாதிப்பும் அடைவதில்லை.அதுபோல யோகியும் இந்திரிய சுகங்களால் கட்டுப்படக்
கூடாது.

சூரியன், நீருள்ள எல்லா பாத்திரங்களிலும் பிரகாசம் செய்கிறான்.சூரியனின்
பிம்பம் தெரிகிறது.அதுபோல பிரம்மமும் எல்லா உயிர்களிலும் கலந்து நின்று
பிரகாசிக்கிறது.

சூரியன் ஏழாவது குரு.


8) புறா -

எவனொருவனும் யாரிடமும், எந்தப் பொருளீலும் அதிக ஆசைப் பற்று வைக்கக் கூடாது.

ஒரு ஆண் புறா..ஒரு மரத்தில் கூடுகட்டி, பலகாலம் தன் பெண் புறா உடன்
வாழ்ந்து வந்தது.

பெண் புறாவும் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்தது..இரண்டு புறாக்களும் தன்
குஞ்சுகளுடன் மனமகிழ்ந்து வாழ்ந்து வந்தன.இறைவனின் மாயையால் கட்டுப்பட்டு
வேறு ஒன்றும் அறியாமல் இன்பமாய் வாழ்ந்து வந்தன.

ஒருநாள், குஞ்சுகள் இரையைத் தேடி வெளியே  சென்று தன் கூட்டுக்குத்
திரும்பி வந்தன.ஒரு வேடன் அவைகளைப் பார்த்து தன் வலையை விரித்து அவைகளைப்
பிடித்து விட்டான்.

வெளியே சென்று வந்த  பெண் புறா அதைக் கண்டு மனம் வருந்தி ..கண்ணீர்
விட்டு , வேடனின் வலையில் விழுந்தது.

அதனைக் கண்டு தான் தனிமைப்படுத்தப்பட்டதை உணர்ந்து, மனம் வருந்தி
அழுது..ஆண் புறாவும் வலையில் வேண்டுமென்றே மாட்டிக் கொண்டது.

வேடனும் அனைத்துப் புறாக்களையும் பிடித்துக் கொண்டு மனமகிழ்ச்சியுடன் தன்
வீடு சென்றான்.

குடும்பஸ்தனும் இன்பம்,துன்பம் என்பதை அனுபவித்து உலக மாயையில்
மயங்கி,அந்தப் புறாப்போல துன்பப்படுகிறான்.

அறிவாளியானவன், இந்த உலக வாழ்க்கையின் தன்மையை உணர்ந்து முக்தி அடைய வேண்டும்.

அந்த ஆண் புறா போல்  வாழ்ந்தால்..மீண்டும்..மீண்டும் துன்பத்தில் அகப்படுவான்.

புறா எனக்கு எட்டாவது குரு

 9 - மலைப் பாம்பு-


மனிதனுக்கு இந்திரிய சுகங்கள் இந்திரியங்களால்
ஏற்படுகின்றன.சுவர்க்கத்திலும் சரி, நரகத்திலும் சரி, இந்திரியங்களே சுக
துக்கங்களுக்குக் காரணமாகின்றன.

மலைப்பாம்பு, தன் இரையைத் தேடிச் செல்லாமல் தன்னிடம் வரும் பிராணிகளைப்
பிடித்துத் தின்னும்.அதுபோல யோகியானவன் தனக்கு விதி வசத்தால் கிடைக்கும்
உணவினை உண்டு வாழ வேண்டும்.தன் சக்திகளை வீணாக்காமல்
பொறுமையுடனும்,தைரியத்துடனும் விழித்திருந்து, இறைவனிடம் மனத்தைச்
செலுத்தி கிடைத்த உணவை உண்டு வாழ வேண்டும்.

மலைப்பாம்பு ஒன்பதாவது குரு


10) கடல்-

யோகியானவன் கடல்போல் ஆழ்ந்த அறிவுடையான் ஆகவும்,பரந்த ஞானமும் ஆழம்
காணமுடியாதவனாகவும்,மற்றவர்களால் அசட்டை செய்யப்படாதவனாகவும், எப்போதும்
பற்றற்றவனாகவும்,வெறுப்பற்றவனாகவும் இருக்க வேண்டும்.ஆற்று நீர் கடலில்
கலப்பதால், கடல் பெரிது படாமலும்,சுருங்காமலும் காணப்படுகிறது.அதுபோல
யோகியானவன் இன்ப துன்பங்களால் மாற்றங்களில்லாதவனாக இருக்க வேண்டும்.

கடல் பத்தாவது குரு.


11) விட்டில் பூச்சி -

விட்டில் பூச்சியானது, விளக்கின் வெளிச்சத்தில் ஆசைகொண்டு நெருப்பில்
விழுந்து மடிகிறது.

அதுபோல,மனிதனும் பெண் ஆசை,பொன் ஆசை,மண் ஆசையால் மயக்கம் கொண்டு
துன்பமடைந்து அழிகிறான்.

யோகியானவன் அவைகளைத் தவிர்க்க வேண்டும்.

விட்டில் பூச்சி பதினொன்றாவது குரு


12 - தேனீ-

யோகியானவன் வீடுகளில் உணவை  யாசித்துக் கிடைத்த உண்வை உண்டு வாழ
வேண்டும்.ஒரே வீட்டில் யாசித்து யாருக்கும் தொல்லை கொடுக்கக் கூடாது.

தன் உடலைக் காப்பாற்றிக் கொள்ளுமளவிற்கு உணவு உண்ண வேண்டும்.

தேனீ, எல்லாவித மலர்களிலிருந்தும் தேன் சேகரிப்பது போல, எல்லாப் புனித
நூல்களிலிருந்தும் யோகியானவன் நல்ல விஷயங்களை சேர்க்க வேண்டும்.

தேனீ, தேனைச் சேகரித்து வைப்பது போல யோகிகளும், சந்நியாசிகளும்
மறுநாளைக்கு என்று ஒரு பொருளையும் சேகரித்து வைக்கக் கூடாது.உணவை
வைத்துக் கொள்ள,தன் வயிற்றைத் தவிர வேறு பாத்திரம் யோகியானவன் வைத்துக்
கொள்ளக் கூடாது.

தேனீ பன்னிரெண்டாவது குரு.


13- ஆண் யானை-

சந்நியாசியானவன் மரத்தால் செய்யப்பட்ட பெண் உருவத்தைக் கூட
தொடக்கூடாது.எப்படி ஆண் யானை, பெண் யானையின் வாசனையால்,பழக்கத்தால்
பிடிபடுமோ,அப்படி சந்நியாசியும் பெண்ணுடன் பழகினால் பெண்
அடிமையாவான்.அறிவாளி யானவன் பெண்களின் சகவாசத்தைத் தவிர்க்க வேண்டும்.

ஆண் யானை எனது பதிமூன்றாவது குரு


14- தேன் எடுப்பவன் - வேடன்

பேராசை பிடித்தவர்கள் மிகக் கஷ்டப்பட்டு,பிறருக்கு கொடுக்காமலும், தானும்
அனுபவிக்காமலும் பொருள்களைத் தேடி வைப்பார்கள்.முடிவில் தேன் எடுப்பவன்
தேனீ கஷ்டப்பட்டு சேகரித்து வைத்த தேனை எடுத்துச் செல்வது போல வேறு
ஒருவர் அந்தச் செல்வத்தை  எடுத்துக் கொள்வார்கள்.

தேன் எடுப்பவன் என் பதினான்காவது குரு.


15- மான் -


சந்தியாசியானவன் ,காட்டில் இருந்தாலும், உணர்ச்சியைத் தூண்டும்,மனதை
மயக்கும் இன்பமான பாட்டுக்களைக் கேட்கக் கூடாது.

மானானது வேடனின் பாட்டைக் கேட்டு மயங்கி அவனிடம் பிடிபடும்.

மான் பதினைந்தாவது குரு.


16-  மீன் -

தூண்டிலில் பொருத்தப்பட்டுள்ள உணவின் மீது ஆசைப்பட்டு மீன் அதனை உண்டு
..மீன் பிடிப்பவனிடம் பிடிபடும்.

அதுபோல..அதிக ருசிகரமான சாப்பாட்டில் ஈடுபாடு கொள்ளக் கூடாது.இந்திரிய
சுகங்களில் இருந்து விடுபட விரும்புகிறவர்கள்..முதலில் நாவின்
மீதும்,ருசியின் மீதுமுள்ள ஆசையைக் கட்டுப்படுத்த வேண்டும்.

மீன் பதினாறாவது குரு.


17 - பிங்களை என்ற வேசி -



முன்காலத்தில் விதேக நகரத்தில் பிங்களை என்ற வேசி வசித்து வந்தாள்.

அவளிடமிருந்து நான் சிலவற்றை தெரிந்து கொண்டேன்.அதைச் சொல்கிறேன்
கேள்..என அவதூதன் தொற்றந்தான்..

ஒருநாள் மாலை, அந்த வேசி தன்னை அலங்கரித்துக் கொண்டு,தனது காதலனுக்காகக்
கதவருகில் காத்திருந்தாள்.

பணம் படைத்த மனிதர்கள் தனக்குப் பணமளித்து இன்பம் பெற வருவார்கள் என்று
காத்திருந்தாள்.உள்ளே செல்வதும்..வெளியே வருவதுமாக நள்ளிரவு வரை
காத்திருந்தாள். ஒருவரும் வராததால் பிறகு மிகவும் மனம் வருந்தி,தன்
மனத்தைத் தேற்றிக் கொண்டாள்.

அவளுக்கு ஞானமும் பிறந்தது.

காசுக்காகவும்,செலவ்த்துக்காகவும் காதலர்களைத் தேடினேன்.என்னுள் உறையும்
இறைவனை உணர முடியவில்லை.குறைவில்லாத இன்பத்தைத் தரும் இறைவனை
விட்டுவிட்டு மனவருத்தம்,பயம்,கோபம்,காம புத்தி ஆகியவற்றிற்கு
அடிமையானேன்.தோலும், எலும்பும்,சதையும் கொண்ட நாற்றமுடைய காமத்துக்குக்
கட்டுப்பட்ட மனிதர்களால் என்ன இன்பம் கொடுக்க முடியும்? இனி எனது
வாழ்நாளை இறைவனை நாடுவதில் செலவழிப்பேன்.கடவுளையே என்னைக்
காப்பாற்றுபவனாக அடைக்கலம் புகுவேன் என்று வாழ்ந்தாள்.

எப்படிப் பாம்பு தன் இரையை விரும்புகிறதோ..அப்படி நம்
ஆயுட்காலத்தையும்,உடலையும் காலம் விழுங்குகிறது.ஆகையால், என்றும்
நிலைத்து நிற்கும் ஆன்மாவே நம்மைக் காப்பாற்றும் என்று வாழ்ந்தாள்.

பிங்களை என் பதினேழாவது குரு.



18- பருந்து (கழுகு)

மனிதனின் துன்பங்களுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று பொருள் மீதான அவன்
பற்று.இதனை உணர வேண்டும்.எந்த பொருளும் நிரந்தர இன்பத்தைத் தர முடியாது.

தனது அலகில் இரையை வைத்திருந்த பருந்தை மற்ற பருந்துகள் துரத்தின.அந்த
இரையை பருந்து கீழே போட்டதும் மற்ற பருந்துகளின் தொல்லை நீங்கியது.இன்பம்
அடைந்தது.

பருந்து பதினெட்டாவது குரு.



19- குழந்தை

மானம்,அவமானம் அறியாத குழந்தை உடலில் துணியில்லாமலும் மனதில் எந்த
எதிர்பார்ப்பும் இல்லாமலும் எங்கும் செல்லும்.அதுபோல ஆன்மாவின் மீது
நினைவை நிறுத்தி உலகை வலம் வர வேண்டும்.

குழந்தை பத்தொன்பதாம் குரு



20 -இளம் பெண்-

ஒரு வீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணுக்கு மணம் முடிப்பதற்காக மணமகனைப்
பார்ப்பதற்காக அவளது பெற்றோர் வெளியே சென்றிருந்தனர்.அப்போது சிலர்
வந்திருந்தனர்.அவள் அவர்களை வரவேற்று உபசரிக்க வேண்டிய நிலை வந்தது.அவள்
அவர்களுக்கு உணவு தயாரிக்க நெல்லை உரலில் குத்த வேண்டிய நிலை
ஏற்பட்டது.அவள் தன்னுடைய வளையல்களைச் சப்தம் ஏற்படும் என்று எண்ணி கழற்றி
வைத்துவிட்டு , ஒவ்வொரு கையில் ஒரு வளையலுடன் நெல் குத்தினாள்.

உலகில் அந்தப் பெண் போல,யாரிடமும் விரோதம் கொள்ளாமல் தனித்துச் சப்தம்
இல்லாமல் வாழ வேண்டும் என்று கற்றுக் கொண்டேன்.

இளம்பெண் எனது இருபதாவது குரு



21- ஆயுதங்கள் செய்யும் கருமான்



ஒருவன் தான் விடும் மூச்சின் மீது கவனம் செலுத்தினால்
மனமடங்கும்.விருப்பு,வெறுப்பு அடங்கி, ,மனமொருமித்து நிற்கும்
ரஜோகுணமும்,தமோ குணமும் நீங்கி சத்துவ குணம் மேலோங்கி யோகம்
சிந்திக்கும்.

போருக்கு அம்பு தயாரிக்கும் கருமான்..அரசன் அருகில் வருவதைக் கூட
கவனிக்காமல் மனம் ஒருமித்து அம்பு தயாரிப்பதில் கவனம்
செலுத்தியிருந்தான்.

அதுபோல செய்யும் கருமத்தில் கவனம் செலுத்திச் செயல்பட வேண்டும்.

ஆயுதம் செய்யும் கருமான் எனது இருபத்தோராவது குரு



( ரஜோ குணம் என்பது இராட்சத குண இயல்புகளான ஊக்கம், வீரம், ஞானம்,
தருமம், தானம், கல்வி, ஆசை, முயற்சி, இறுமாப்பு, வேட்கை, திமிர்,
தெய்வங்களிடம் செல்வங்கள் வேண்டுவது, வேற்றுமை எண்ணம், புலனின்பப் பற்று,
சண்டைகளில் உற்சாகம், தன் புகழில் ஆசை, மற்றவர்களை எள்ளி நகையாடுவது,
பராக்கிரமம், பிடிவாதத்துடன் ஒரு முயற்சியை மேற்கொள்ளுதல், பயனில்
விருப்பம் கருதி செய்யும் செயல்கள் ஆகியவற்றைக் கொண்டிருப்பதைக்
குறிக்கும்



தமோ குணம் என்பது ஒரு மனிதனிடம் அமைந்துள்ள குணங்களான காமம், வெகுளி,
மயக்கம், கலக்கம், கோபம், பேராசை, பொய் பேசுதல், இம்சை செய்தல், இரத்தல்,
சிரமம், கலகம், வருத்தம், மோகம், கவலை, தாழ்மை உணர்வு, உறக்கம், அச்சம்,
சோம்பல், காரணமில்லாமல் பிறரிடம் பொருட்களை எதிர்பார்த்தல் மற்றும்
பிறர்க்குக் கேடு விளைவிக்கும் செயல்கள் செய்தல், பகட்டுக்காகச்
செய்யப்படும் செயல்கள் ஆகியவற்றைக் குறிக்கும்.

சத்வ குணத்திலிருந்து தோன்றும் இயல்புகள்- நற்காரியங்களில் மனதைச்
செலுத்தும் குணம், மன அடக்கம் (சமம்), புலன் அடக்கம் (தமம்),
துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளும் இயல்பு (சகிப்புத் தன்மை), விவேகம்,
வைராக்கியம், தவம், வாய்மை, கருணை, மகிழ்ச்சி, நம்பிக்கை, பாவம்
செய்வதில் கூச்சப்படுதல் , தன்னிலேயே மகிழ்ந்திருத்தல் , தானம், பணிவு
மற்றும் எளிமை. )



22 -பாம்பு

பாம்பானது தனக்கு என்று ஒரு வீடு கட்டாமல் கரையான் அமைத்த புற்றில்
வாழும்.அதுபோல யோகியானவன் உலகமே வீடாக நினைத்து, கிடைத்த இடத்தில்
பற்றற்று வாழ்ந்து வரவேண்டும்

பாம்பு இருபத்திரெண்டாவது குரு



23- சிலந்தி

சிலந்தியானது தனது வாயால் வலையை உற்பத்தி செய்து, அதில் பூச்சிகளை
சிக்கச் செய்து,அவற்றைச் சாப்பிட்டுவிட்டு..பின்பு வலையில் தான்
சிக்காமல் வாழ்கிறது.

அதுபோல யோகியானவன் இறைவனின் மகிமையையும்,உலகின் தன்மையையும் உணர்ந்து உலக
மாயையில் சிக்காது வாழ வேண்டும்.

சிலந்தி இருபத்து மூன்றாவது குரு.



24- கூட்டுப் புழு

ஒருவன் எதைப்பற்றி நினைத்துச் சிந்தித்துச் சதாகாலமும் செயல்படுகிறானோ
அவன் அதனுருவை அடைகிறான்.

கூட்டுப்புழு தன்னைச் சுற்றிக் கூடுகட்டி,கூட்டுக்குள் வாழ்ந்து, பின்பு
பட்டாம்பூச்சியாய் மாறும்.அதுபோல..யோகியும் உலகில் வாழ்ந்தாலும் தனது
உடம்பை தன் முக்திக்காக உபயோகப்படுத்த வேண்டும்.

மனிதன் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்து, மாடு,மனைவி,மக்கள் செல்வம்
என்று சேர்க்கிறான்.பின்பு, மரம் எப்படி விதைகளை விட்டுவிட்டு பட்டுப்
போகிறதோ, அதுபோல உடலை விட்டு உயிர் பிரிகிறது .

மரத்தின் விதைகள் புதிய செடி உருவாகக் காரணமாகின்றன.அதுபோல அவனுடைய
நல்வினைகள், தீவினைகள் அவனுடைய அடுத்த பிறவியை நிர்மாணிக்கின்றன.


உத்தவகீதை - 5 (உலக வாழ்க்கை நிலையற்றது)
----------------------------------------------------------------------
அவதூதன் யதுகுல பெரியவரிடம் மேலும் கூறினான்...

மனித உயிர் வாழும்போது, அவனுடைய மூக்கு,நாக்கு, வாய்,காது, கண்,உடம்பு
போன்றவை தன் ஆசைகளை உண்டு பண்ணி பல வழிகளில் இழுக்கின்றன.

கடவுள் எல்லா உயிர்களையும் விட மேலாக தன்னுருவில் மனிதனைப் படைத்தான்.பல
பிறவிகளுக்குப் பிறகு அவன் மனிதப் பிறவியை அடைகின்றான்.அவன் தன்
முக்தியைத் தேடிக் கொள்ள முடியும்.ஆகையால் நானும், பாசம், பற்று,பந்தம்
நீக்கி மேற்கூறிய குருமார்களிடம் ஞானம் பெற்று,உலகில் பற்றின்றி வலம்
வருகிறேன் என்று கூறி அந்த அவதூதன் தன் வழியில் சென்றான்.

யதுகுல மன்னனும், உலக ஆசைகளை நீக்கி மன அமைதியும். மனப்பக்குவமும் அடைந்தான்.

 இனி உலக வாழ்க்கைப் பற்றி உத்தவர் கேட்க கிருஷ்ணன் சொன்னது..

மனிதன் தன் ஆசைகளைத் துறந்து,பலனில் பற்று வைக்காமல்,தன் கடமைகளைச் செய்ய வேண்டும்.சக மனிதர்கள்,இந்திரிய சுகங்களில் ஈடுபட்டு இவ்வுலக வாழ்க்கையை நித்தியமானது என்று எண்ணி,எப்படி துன்பத்தில் உழலுகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும்.

முக்குணங்களின் உந்துதலால்,கர்மம் செய்கின்ற மனிதன், உலக வாழ்க்கைக்கு உயிர் வாழ்வதற்கு தேவையான கர்மங்களை, ஆசையின் காரணமாகயில்லாமல் இயற்கையின் கடமை என்று செயலாற்ற வேண்டும்.

தன் ஆன்மாவை அறிய முயற்சி செய்யும் மனிதன் சாஸ்திரங்களால் விதிக்கப்பட்ட கர்மாக்களை வேண்டுமானால் தவிர்க்கலாம்.என்னை வழிபடுகிறவன், பெருமை,பொறாமை,சாஸ்திரங்களில் கண்டிக்கப்பட்ட செயல்களைத் தவிர்த்தல்,பற்று,பாசம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.பிறரிடம் குறை காணுதல்,தேவையற்ற வார்த்தைகளைப் பேசுதல் ஆகியவற்றை நீக்க வேண்டும்.

தீயில் எரிகின்ற மரக்கட்டைக்கும்,தீயில் எரிந்து அவிந்து சாம்பலான மரக்கட்டைகளுக்குமுள்ள வித்தியாசம் போல..தன்னை உணர்ந்த சாதகன், உலகு,மனைவி,மக்கள்,உறவினர்,தன் உடம்பு ஆகியவற்றின் நிலையற்ற தன்மையை உணர வேண்டும்.

குரு என்பவர், நெருப்பை உண்டாக்கும் அரணிக்கட்டையில் அடிப்பாகம் போன்றும், சீடன் என்பவன் அதில் உண்டாக்கக் கடைதலுக்கான கட்டையென்றும், நெருப்பை உண்டாக்குதல் என்ற கடைதல் தன்னையறிய முயற்சி செய்யும் முயற்சி என்றும் உணர வேண்டும்.

அதில் உண்டாகும் நெருப்பு என்ற ஞானம் எல்லா உலகப் பற்றுகளையும் பாகங்களையும் அழித்து,மாயையிலிருந்து விடுபட உதவும்.அந்த மாயை, முக்குணங்களின் சேர்க்கையால் ஏற்பட்டது.அதில் மாயையை நீக்கினால், அந்த ஆன்மா விடுதலை பெறும்.

(தொடரும்)

No comments:

Post a Comment