நாராயணீயம் தினம்: டிசம்பர் 13, 2024
.............................
*நாராயணீயம்!*
*திருப்பூர் கிருஷ்ணன்*
.............................
கடந்த காலத்தில் ஏராளமான அன்பர்கள் நாராயணீயத்தைப் பாராயணம் செய்து முழுமையான உடல் நலன் பெற்றிருக்கிறார்கள்.
சம்ஸ்க்ருதத்தில் எழுதப்பட்ட இந்நூல் பலரால் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உரையாசிரியர் அண்ணா அவர்களின் அற்புதமான விளக்கவுரையுடன் ராமகிருஷ்ணமடம் இந்நூலைப் பதிப்பித்துள்ளது.
இந்நூலுக்கு நாராயணீயம் எனப் பெயர் வந்ததற்கான காரணங்களாக இரண்டு விஷயங்களைச் சொல்கிறார்கள்.
ஒன்று, கடவுள் நாராயணனைப் பற்றியும் அவரது லீலைகளைப் பற்றியும் பேசுகிறது இந்நூல். அதனால் இப்பெயர்.
தவிர இந்த நூலை எழுதிய பக்திக் கவிஞரின் பெயர் நாராயண பட்டதிரி என்பது. நாராயண பட்டதிரியால் எழுதப்பட்டதாலும் இது நராயணீயம் என நூலாசிரியர் பெயரால் அழைக்கப்படுகிறது.
பாகவதத்தில் சொல்லப்பட்ட கண்ணன் கதையை 1036 அருமையான சுலோகங்களில் சுவாரஸ்யமாகச் சொல்கிறது நாராயணீயம்.
திருமாலான நாராயணன்தானே கண்ணனாக அவதரித்தார்? அவ்வகையில் நாராயணனைப் பற்றியும் அவரது தசாவதாரத்தைப் பற்றியும் கூட இந்நூல் பேசுகிறது.
ராமாவதாரத்தைப் பற்றிப் பேசும்போது முழு ராமாயணக் கதையையும் அழகிய சுலோகங்களில் சொல்லிச் செல்கிறார் நாராயண பட்டதிரி.
தவிர மத்ஸ்யாவதாரம், வராகவதாரம், நரசிம்மாவதாரம், பரசுராம அவதாரம், வாமனாவதாரம் என எல்லா அவதாரங்களின் கதையும் இந்நூலில் உண்டு.
இந்நூலில் இடம்பெற்றுள்ள அஜாமிளன் கதை, கஜேந்திர மோட்சக் கதை, பாற்கடலிலிருந்து அமிர்தம் கடையப்பட்ட கதை போன்றவை பக்தர்களின் இதயங்களைக் கொள்ளை கொள்ளக் கூடியவை.
பதிகம் என்று பத்துப் பாடல்கள் அடங்கிய தொகுப்பைத் தமிழில் சொல்கிறோம். இதைப்போல் தசகம் என்பது பத்து சம்ஸ்க்ருதச் செய்யுள்களின் தொகுப்பு. நாராயணீயம் சுமார் நூறு தசகங்களை உடையது.
இது பாடப்பட்ட திருத்தலம் கேரளத்தில் உள்ள குருவாயூர். அந்தக் கோயிலிலேயே குருவாயூரப்பன் சன்னிதி முன் அமர்ந்து இந்நூலை இயற்றினார் நாராயண பட்டதிரி என்பதுதான் இந்நூலின் விசேஷம்.
இந்நூல் புதுமையான ஓர் உத்தியில் புனையப்பட்டுள்ளது.
குருவாயூரப்பனை அழைத்து `ஏ குருவாயூரப்பா! நீ கோவர்த்தன கிரியைத் தூக்கினாயே? காளிங்கன் என்ற பாம்பின் மேல் கால்வைத்து நடனமாடினாயே? கம்சனை வதம் செய்தாயே?` என்றெல்லாம் கண்ணனின் லீலைகளைக் கண்ணனிடமே எடுத்துச் சொல்வது போன்ற முறையில் இது புனையப்பட்டுள்ளது.
கண்ணனை நேரில் கண்டு கண்ணனிடம் தன் எண்ணங்களைச் சொல்லித் துதித்திருக்கிறார் நூலாசிரியர் என்பதே உண்மை.
இக்காவியத்தை எழுதிய நாராயண பட்டதிரி மேல்புத்தூரைச் சேர்ந்தவர். பாரதப் புழை என்ற ஆற்றின் வடக்குக் கரையில் திருநாவா எனற ஷேத்திரத்திற்கு அருகில் மேல்புத்தூர் இல்லம் உள்ளது.
நாராயண பட்டதிரியின் தகப்பனார் பெயர் மாத்ருதத்தர். அவர் சம்ஸ்க்ருதத்தைக் கசடறக் கற்ற பண்டிதர்.
பட்டதிரி தொடக்கத்தில் தந்தையிடமே கல்வி கற்றார். மாதவாச்சாரியார் என்ற குருவிடம் ரிக்வேதத்தையும் தாமோதராச்சாரியார் என்ற குருவிடம் தர்க்க சாஸ்திரத்தையும் கற்றார்.
பின்னர் அச்யுத பிட்சாரோடி என்பவரிடம் இலக்கணப் பாடம் பயின்றார். இவ்விதம் நாராயண பட்டதிரி தம் பதினாறாம் வயதிலேயே பிற அறிஞர்கள் பார்த்து வியக்குமளவு மாபெரும் பண்டிதராக உருவானார். சரஸ்வதி கடாட்சம் அவருக்கு இயற்கையிலேயே அமைந்திருந்தது.
இப்படியான காலகட்டத்தில் அவருடைய இலக்கண குருவான அச்யுதப் பிட்சாரோடி கடும் வாதநோயால் பீடிக்கப் பட்டார். நிற்கவும் நடக்கவும் முடியாத உடல் உபாதைகளுக்கு அவர் ஆட்பட்டார்.
தமக்கு வியாகரணத்தைக் கற்பித்த தம் குரு படும் உடல் அவஸ்தைகளைப் பார்த்து நாராயண பட்டதிரியின் உள்ளம் கசிந்து உருகியது.
தம் குருவுக்கு ஆரோக்கியத்தை மீட்டுத் தரவேண்டும் என்றும் அதுவே அவருக்குத் தாம் தரும் சரியான குரு தட்சிணையாக இருக்கும் என்றும் தீவிர குருபக்தி கொண்ட அவர் மனம் சிந்தித்தது.
எனவே தமது யோக பலத்தால் குருவின் வியாதியைத் தாம் வாங்கிக் கொண்டு குருவைப் பூரண உடல் நலம் பெறச் செய்ய முடிவு செய்தார். அதன்படியே ஒருநாள் குருவின் நோய் முழுவதையும் தாம் வாங்கிக் கொண்டார்.
இப்போது குரு முழு ஆரோக்கியம் அடைந்தார். ஆனால் குருவின் நோயைத் தாம் பெற்றுக் கொண்டதால் அங்கங்கள் முடங்கியவரானார் நாராயண பட்டதிரி.
இனித் தாம் எப்படி நோயிலிருந்து விடுபடுவது எனச் சிந்தித்தது அவர் உள்ளம். குருவாயூருக்குப் போய் குருவாயூரப்பன் சந்நிதியில் தவம் செய்ய நிச்சயித்தார்.
நடக்கவியலாத தம்மை குருவாயூருக்கு எடுத்துப் போகுமாறு அன்பர்களிடம் வேண்டினார். அன்பர்கள் அவர் வேண்டியபடியே குருவாயூரப்பன் சன்னிதியில் அவரைக் கொண்டுசென்று அமர வைத்தார்கள்.
(இன்றும் குருவாயூரப்பன் ஆலயத்தில் குருவாயூரப்பன் சன்னிதியின் உள்ளே செல்லும் வழியில் குருவாயூரப்பனுக்கு வலது புறத்தில் `மேல்புத்தூர் நாராயண பட்டதிரி அமர்ந்து ஸ்ரீமந் நாராயணீயம் எழுதிய இடம்` பித்தளை சாசனத்தில் குறிப்பிடப்பட்டு அடையாளப் படுத்தப் பட்டுள்ளது.)
குருவாயூரப்பன் சன்னிதிக்கு நேரே அமர்ந்து நாள்தோறும் பத்து சுலோகம் வீதம் இயற்றிப் பாடலானார் நாராயண பட்டதிரி. அவ்விதம் நூறு நாட்களில் நாராயணீயம் முழுவதையும் பாடி முடித்தார்.
27.11.1587 அன்று அவர் நாராயணீய காவியத்தை நிறைவு செய்ததாகச் சொல்லப்படுகிறது.
என்ன ஆச்சரியம்! கடவுளின் கருணையிருந்தால் எதுதான் நடக்காது? குருவாயூரப்பனின் திருவருளால் அவர் தம் வாத நோயிலிருந்து முழுமையாக விடுபட்டார்.
அவர் நாராயணீயத்தைப் பாடி முடித்தபோது அவர் வயது இருபத்தேழு தான். பிறகும் அவர் நீண்டநாள் ஆரோக்கியமாக வாழ்ந்து இறைத்தொண்டு புரிந்து வந்தார்.
அவர் பற்பல சாஸ்திரங்களில் பெரும் புலமை பெற்ற விற்பன்னராக 106 வயதுவரை வாழ்ந்தார் என்று சொல்கிறார்கள்.
பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டத் தாம் எழுதிய நாராயணீய சுலோகங்களில் இப்போதும் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
குருவாயூரப்பனாகிய திருமாலின் வரலாற்றைச் சொல்வதோடு கூடவே, திருமால் அடியவர்களாக வாழ்ந்த பலரது வரலாறுகளையும் இடையிடையே சொல்கிறார் பட்டதிரி.
அவ்வகையில் பிரகலாதனின் வரலாறு இதில் பேசப்படுகிறது.
பிரகலாதனுக்குக் காட்சி தந்த திருமால் தனக்குக் காட்சி தரவில்லையே என அதை எழுதும்போது ஏங்கியது பட்டதிரியின் உள்ளம்.
பிரகலாதன்மேல் அவ்வளவு பிரியம் வைத்த குருவாயூரப்பன் தன்மேல் ஏன் கனிவு காட்டவில்லை என வருந்திய அவர், தாபத்தோடு `பிரகலாத ப்ரியா` என குருவாயூரப்பனை உள்ளம் உருகி அழைத்தார்.
அப்போது சன்னிதியின் உள்ளிருந்து `நான் பிரகலாத ப்ரியன் மட்டுமல்ல, பக்த ப்ரியன்!` என அசரீரி எழுந்தது.
சிலிர்ப்படைந்த பட்டதிரி, கண்ணன் கையிலுள்ள புல்லாங்குழலை விட இனிமையான அந்த அசரீரிக் குரலைக் கேட்டுத் தன் விழிகளைத் துடைத்துக் கொண்டார். தொடர்ந்து அளவற்ற நம்பிக்கையோடு நாராயணீயத்தை எழுதலானார்.
பக்திச் சிறப்பு மட்டுமல்ல, இலக்கியச் சிறப்பும் உடையது இக்காவியம். பல அழகிய கற்பனைகள் இந்தக் காவியமெங்கும் காணப்படுகின்றன.
பொதுவாக பணம் யாரிடமும் அதிக நாள் தங்குவதில்லை.
அதைப் பற்றிக் கூறும்போது லட்சுமிதேவி எங்கும் அதிக நாள் தங்கமாட்டாள் என்றாலும், தன் கணவரான குருவாயூரப்பனின் பக்தர்களிடம் கணவனைப் பற்றிய பேச்சுக்களை அதிக நேரம் கேட்டு மகிழும் ஆசையில் கூடுதலாகத் தங்குவாள் என்கிறார் பட்டதிரி!
கேசாதிபாத வர்ணனையாக குருவாயூரப்பனைத் தலைமுதல் கால்வரை வர்ணிக்கும் பகுதியில் பக்தியின் முழுமையைக் காண முடியும்.
கண்ணனை நேரில் தரிசித்தாலன்றி அத்தகைய கவிதைகளை எழுத வாய்ப்பில்லை என்பது படிக்கும்போது நமக்குப் புரியும்.
1587இல் எழுதப்பட்ட இந்நூல், அச்சு வடிவில் 1851ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இரயிம்மன் தம்பி என்பவர் இந்நூலை அச்சுவடிவில் வெளியிட்டார்.
இப்போது இந்நூலின் ஏராளமான அச்சு வடிவங்கள் வெளிவந்துவிட்டன. இந்நூலுக்குப் பல இந்திய மொழிகளில் உரை எழுதப்பட்டுப் பல மொழிகளில் இது வெளிவந்துள்ளது.
இந்த அழகிய பக்திக் காவியத்தைத் தமிழ் மக்களிடம் பிரபலப்படுத்தியவர்களில் முக்கியமானவர் காலஞ்சென்ற பிரம்மஸ்ரீ அனந்தராம தீட்சிதர்.
அவர் பற்பல இடங்களில் நாராயணீய காவியத்தைப் பற்றிச் சொற்பொழிவு செய்து தமிழ் மக்கள் அதன் பெருமையை உணர்ந்து பலனடையுமாறு செய்தார்.
தற்போது தாமல் ராமகிருஷ்ணன் போன்ற சொற்பொழிவாளர்கள் இந்தக் காவியத்தின் பெருமை பற்றிப் பல இடங்களில் எடுத்துக் கூறி வருகிறார்கள்.
பலச்ருதி என்பது ஒரு பக்தி நூலைப் பாராயணம் செய்வதால் ஏற்படும் பலன்களைப் பற்றிச் சொல்லக் கூடியது. நாராயணீயத்தின் பலச்ருதி என்பது உடல் ஆரோக்கியம்தான். நம் உடல் நலனை வலுப்படுத்தக் கூடிய மந்திர சக்தி இந்தக் காவியத்தில் நிறைந்துள்ளது.
நாராயணீயத்தின் நூறு தசகங்களில் ஒவ்வொரு தசகத்தின் இறுதியாக அமையும் பாடலில் `என் நோயிலிருந்து என்னைக் காத்தருள்!` என்ற பொருளுடைய வாக்கியம் கட்டாயம் இடம்பெற்றிருக்கும்.
ஆன்மிக அன்பர்கள் நாராயணீயத்தைப் பாராயணம் செய்து தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.
(நன்றி: மாலைமலர்)
No comments:
Post a Comment