Tuesday, September 1, 2020

34 - கண்ணன் வைகுண்டம் சென்றான்




சிவன், பிரம்மன்,இந்திரன் மற்றும் தேவர்கள் கூடி கிருஷ்ணனைக் காண விரைந்தனர்.

'பெருமாளே! பூவுலகத்தில் நீங்கள் அவதாரம் செய்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து விட்டீர்கள்.'

குழந்தையாய்ப் பிறந்ததுமே பூதனை வதம் செய்வதில் தொடங்கி, கிருஷ்ணனும், பலராமனும் சேர்ந்து ஏராளமான அரக்கர்களைக் கொன்று தீர்த்தாகி விட்டது.குருக்ஷேத்திரப் போரில் பாண்டவர்களை முன் நிறுத்தி கிருஷ்ணன் யுத்தத்திற்கு வழிவகுத்ததில் லட்சக்கணக்கானோர் மாண்டு, பூவுலகின் பாரம் குறைந்து போனது.

பிரம்மா கூறினார்,"பகவானே! நீங்கள் பூவுலகிற்குச் சென்று நூற்று  இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன.அவதார காரியத்தை பூர்த்தி செய்தாகி விட்டது.மீண்டும் வைகுண்டம் வர வேண்டும்" என்றார்.

அதற்கு கிருஷ்ணன்,"இல்லை இன்னமும் என் வேலை முடியவில்லை.கொஞ்சம் மீதம் பாக்கியிருக்குது.யது குலம் ஆணவத்தில் ஆர்ப்பரிக்கிறது.தங்களை வெல்ல யாருமில்லை என மகாகர்வத்துடன் திரிகிறார்கள்.நான் இங்கிருந்து புறப்பட்டு விட்டால் இவர்கள் பூமியை நாசம் செய்து விடுவார்கள்..எனவே இவர்களுக்கு ஒரு முடிவு கட்டிவிட்டு வருகிறேன்"என்றான்.

அதற்கேற்றாற் போல சில காரியங்களைச் செய்தான்.

துவாரகாபுரியில் ஒரு யாகத்துக்கு ஏற்பாடு செய்து விஸ்வாமித்திரர்,அஸிதர்,துர்வாசர் போன்ற ரிஷிகளை வரவழைத்தார்.எல்லோரும் சிறு அவமரியாதையையும் பொறுக்காதவர்கள்.ரிஷிகள் நல்லமுறையில் யாகத்தை நடத்திக் கொடுத்தனர்.பின் கிருஷ்ணனின் மரியாதையை ஏற்றுக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு பிண்டாரதம் எனும் தலத்திற்குச் சென்றனர்..

அங்கு யதுகுலத்து இளைஞர்கள் சிலர் பேசிச் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.விதவிதமான ரிஷிகளைப் பார்த்ததும்,அவர்களுக்குள் குறும்பு கூத்தாடியது.தங்களுக்குள் ரகசியமாகப் பேசிக் கொண்டார்கள்.கிருஷ்ணனுக்கும், ஜாம்பவதிக்கும் பிறந்த மகனான சாம்பனுக்கு,பெண் வேடம் போட்டனர்.ஒரு கர்ப்பிணிப் பெண்போல அவர்களிடம் அழைத்துச் சென்றனர்.

போலியான மரியாதையுடன் ரிஷிகளை வணங்கி விட்டு, மிகவும்பவ்யமாக சாம்பனைக் காட்டி,"ரிஷிகளே..நீங்கள்தான் முக்காலமும் உணர்ந்தவர்கள் ஆயிற்றே..கர்ப்பமாகியுள்ள இவள்..தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஆணா இல்லை பெண்னா என அறிய விரும்புகிறாள்.தயவு செய்து  சொல்லுங்கள்"என்றனர்.

அங்குதான் யது குலத்துக்கான அழிவு ஆரம்பமானது.கண்ணன் எந்த எண்ணத்துடன் ரிஷிகளை வரவழைத்தானோ..அது நடந்தது.

ரிஷிகளுக்கு, இளைஞர்களின் கேலி புரிந்து போக..இளைஞர்கள், தங்களை சோதிக்கிறார்கள் என மனதில் கோபமேற்பட்டது.

"மடையர்களே..உங்கள் குலத்தையே அழிக்கப் போகும் உலக்கையைத்தான் இவன் பெற்றெடுக்கப் போகிறான்" என்று கூறிவிட்டுச் சென்றனர்.

இளைஞர்கள் மனம் வருந்தி, "விளையாட்டு வினையானதே!" என வருந்தினர்..

ரிஷிகள் சொன்னபடி..சில நாட்களிளேயே சாம்பன் வயிற்றில் இருந்து ஒரு இரும்பு உலக்கைப் பிறந்தது.இளைஞர்கள் பயந்து போனார்கள்.

மன்னர் உக்ரசேனரிடம்..அந்த இரும்பு உலக்கையை எடுத்துச் சென்று, நடந்த அனைத்தையும் கூறி வருந்தினர்.

உக்ரசேனனும், மந்திரிகளும், பெரியோர்களும்..அதைக் கேட்டு நடுங்கிப் போனார்கள்.இளைஞர்களின் குறும்புத்தனத்திற்காக குல நாசத்துக்கே வழி வகுத்து விட்டார்களே என வருந்தினார்கள்.

இளைஞர்களைத் திட்டித் தீர்த்த உக்ரசேனன்..அந்த இரும்பு உலக்கையை  தூள்தூளாக உடைத்து கடலில் கரைத்து விடுமாறுக் கூறினான்.அனைவரும் அப்படியே செய்தனர்.

இப்படிச் செய்ததிலொரு இரும்புத் துண்டு மட்டும் பொடியாகாமல் கடலில் விழுந்தது.அந்த விரும்புத் துண்டைஒரு மீன் விழுங்கியது.அந்த மீன் ஒரு மீனவனின் வலையில் சிக்கியது.

மீனை மீனவன் தன் மனைவியிடம் கொடுத்தான்.அவள் அதை சமையலுக்கு நறுக்கும் போது, அதன் வயிற்றிலிருந்து இரும்புத் துண்டு கீழே விழுந்தது.அந்த இரும்புத் துண்டை ஒரு வேடன் வாங்கிக் கூராக வைத்து ,தன் அம்பின் நுனியில் வைத்துக் கொண்டான்.

கடலில் வீசப்பட்ட இரும்புத் துகள்களோ...காலப்போக்கில்..அலைகளால் அடித்துவிடப்பட்டு கரையொரம் படிந்தன.அதிலிருந்து நாணல்கள் தோன்றி புதராக மண்டின.

இதன் பிறகு துவாரகையில் பல வித தீய சகுனங்கள் தோன்றின.புயல்,வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்கள் உண்டாகின.துவாரகை உண்டான  காலம் முதல் இது போன்ற அபாயங்கள் எதுவும் ஏற்படாததால்..மக்கள்  பயந்து,நடுங்கி கண்ணனிடம் முறையிட்டனர்.

கண்ணன் அவர்களிடம் ,"துவாரகைக்கு விரைவிலேயே பெரிய ஆபத்துவந்தாலும் வரலாம்.இவையெல்லாம் அதற்கான சகுனங்களே! ரிஷிகளின் சாபம் பலித்துவிடுமோ என அஞ்சுகின்றேன்.இனி நாம் இங்கே இருக்கக் கூடாது..எல்லோரும் துவாரகையை விட்டு பிரபாஸ தீர்த்தத்திற்கு சென்று விடுவோம்" என்றான்.

அதன்படியே அனைவரும் துவாரகையை விட்டு பிரபாஸ தீர்தத்திற்குச் சென்றனர்.

அப்போது ஒரு தனிமைத் தருணத்தில் உத்தவர் கிருஷ்ணரிடம் கேட்டார்..

"கண்ணா..பரம் பொருளே! நீ செய்யும் எல்லா காரியத்திற்கும் பொருள் தெரிந்தவன் அல்ல நான்.அதையெல்லாம் உணரும் அருகதையும் எனக்குக் கிடையாது.ஆனாலும் யதுகுலத்தவரை,இந்த தீர்த்தத்திற்கு கொண்டு வந்ததன் நோக்கமே,ரிஷிகளின் சாபம் நிறைவேறுவதற்காகத்தான் என்று தோன்றுகிறது.குலம் அழியுமானால்..நீயும் என்னை விட்டு நீங்கி விடுவாயோ..என அஞ்சுகிறேன்.

லோக நாயகனே!  என்னால் உன்னை விட்டு பிரிந்து இருக்க முடியாது.நீ எந்த உலக்குக்குச் சென்றாலும் என்னையும் உடன் அழைத்துச் செல்"என கண்கள் கலங்கக் கூறினார்.

கண்ணன் அவரிடம் கூறினான்...

"உத்தவரே! யாதவ குலம் விரைவில் அழியப் போவது நிச்சயம்.அதுமட்டுமின்றி இன்றையிலிருந்து ஏழாம் நாள் துவாரகை கடலில் மூழ்கப் போகிறது...எனவே நீங்கள் இங்கிருந்து தீர்த்தயாத்திரைக்குப் புறப்பட்டு சென்று விடுங்கள்.என்னை மனதில் இருத்தி தியானிப்பவனுக்கு, எல்லா இடத்திலும் நான் இருப்பது புலப்படும்.எனவே இந்த உலகையே நானாக பாவித்து சஞ்சாரம் செய்யுங்கள்"

"நீ சொல்வது என் புத்திக்குப் புரிகிறது.ஆனால் மனம் சஞ்சலப்படுகிறதே கண்ணா! பந்த பாச மாயைகளிலிருந்து விடுபட மறுக்கும் மனதைத் தெளிய வைக்க என்ன செய்வது? அதற்கான வழியை நீங்கள்தான் உபதேசிக்க வேண்டும்"

உத்தவரின் வேண்டுகோளின்படி..அவருடைய மனது நிலைப்படுவதற்கான உபதேசத்தை சொல்லி உதவினான் கண்ணன்.

(அர்ஜுனனுக்கு கண்ணன் உபதேசித்தது பகவத் கீதை..அதுபோல உத்தவருக்கு சொல்லப்பட்டது  உத்தவ கீதை.)

கண்ணனிடம் உபதேசம் பெற்ற உத்தவர்..கசியும் கண்களுடன் நாத்தழுதழுக்கக் கூறினார்..

"உன் அருளால் என் மனத்திருந்த இருள் அகன்றது" என்றபடியே உத்தவர் கண்ணனின் பாதம் பணிந்து வணங்கினார்.

"உத்தவரே! நீர் பதரிகாஸ்ரமம் சென்று, கங்கையில் புனிதநீராடி..என்னையே நினைத்து வருவீராகா! உரிய சமயம் வந்ததும்..என்னை வந்து சேருவீர்."எண்று சொல்லி அவருக்கு விடை கொடுத்தான் கிருஷ்ணன்.

பின், கண்ணன்,பிரபாய தீர்த்தத்திங்கரைக்கு வந்த போது யாதவர்களுக்குள் ஏதோ வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு..அவர்கள் அருந்தியிருந்த மதுவின் தாக்கத்தால் மூர்க்கத்தனமாக மாறி ஒருவருக்கொருவர் சண்டையானது.

"நீ அயோக்கியன்..நீ ஒழுங்கீனமனவன்."என அஒருத்தரை ஒருத்தர் குற்றம் சாட்டிக் கொண்டு,அடிதடியில் இறங்கினார்கள்..

துவாரகையிலிருந்து புறப்பட்ட போது உயிருக்கு பயந்து போட்டது போட்டபடி வந்து விட்டதால், அவர்கள் யார் கையிலும் ஆயுதங்கள் இல்லை.ஆகவே..கரையில் வளர்ந்திருந்த கோரப் புற்களைப் பிடுங்கி..ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

அந்தக் கோரை புற்கள்..கடலில் கரைக்கப்பட்டு கரையில் ஒதுங்கியிருந்த இரும்புத் துகள்களிலிருந்து தோன்றிய கோரைகள்..எனவே அவைகள் பிடுங்கியதுமே ஒவ்வொரு கோரையும் இரும்பு உலக்கைகள் ஆயின.ஆயுதம்  கிடைத்த சந்தோஷத்தில் மாறி மாறி அடித்துக் கொண்டனர்.

அலறலும், வெறிக் கூச்சலும் ஒலி மூலமாக அந்தப் பிரதேசமே ரத்தமயமானது. அண்ணனும்-தம்பியும் தாக்கிக் கொண்டனர்.உறவுகள் இடையே சண்டையிட்டுத் தாக்கிக் கொண்டனர்.கொஞ்ச நேரத்திலேயே..ஒருவர் மிச்சமில்லாமல் அத்தனை பேர்களும் அங்கே மாண்டு கிடந்தனர்.

அவர்களையெல்லாம் சலனமின்றிப் பார்த்த பலராமன்,கடலோரத்திலேயே அமர்ந்து பரமாத்மாவை மனதில் வைத்து தியானத்தில் ஆழ்ந்தான்,அவன் உடலிலிருந்து ஒரு நாகம் வெளியாகி..கடலுக்குள் சென்று மறைந்தது.உடல் தரையில் சாய்ந்தது.

யது குலம் அழிந்து பலராமனும் தேகத்தை விட்டு விண்ணுலகம் சென்று விட்டதைக் கண்ட கிருஷ்ணன்,ஒரு மரத்தின் கீழ் சென்று அமர்ந்து..வலது துடை மீது இடது பாதத்தை வைத்து தியானத்தில் ஆழ்ந்தார்.

அப்போது தூரத்தில் வ்ந்து கொண்டிருந்த ஜரை என்னும் வேடனுக்கு..கண்ணனின் பாதம் ஒரு மான் போன்று தோன்ற..அவன் வில்லை நாணேற்றி அம்பை எய்தினான்.அந்த அம்பு,தூளாக்கி வீசப்பட்ட இரும்பு உலக்கையில் பொடியாகாமல் போன இரும்புத் துண்டு பொருத்தப்பட்ட அம்பு.

வேடனின் அம்பு குறி தவறாமல் பாய்ந்து வந்து கண்ணனின் பாதத்தில் தைத்தது.சந்தோஷமாக ஓடி வந்த வேடன் அருகில் வந்ததும் அதிர்ந்து போனான்.கிருஷ்ணனின்  உள்ளங்காலில் தன் அம்பு தைத்திருப்பதைப் பார்த்து பதறினான்.

"ஆண்டவா...தெரியாமல் தவறிழைத்து விட்ட இந்த பாவியை தண்டியுங்கள்" என கால்களில் விழுந்து கதறினான்.

"வேடனே! வருந்தாதே.நான் வேண்டுமென்றேதான் எனது பாதத்தை மான் போல தோற்றம் தெரியுமாறு செய்தேன்.அஞ்சாதே..போய் வா.நீ உன் கடமையைத்தான் செய்தாய்.புண்ணியம் செய்தவர்களுக்கான சொர்க்கம் உனக்காகக் காத்திருக்கிறது" என்றான்.

அப்போது விண்ணிலிருந்து தேவ விமானம் வந்து வேடனை சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றது.

கிருஷ்ணனின் தேரும்..அயுதங்களுக் கூட விண்ணில் சென்று மறைந்தது.

திருமால் பூவுலகிலிருந்து வைகுண்டம் வந்துவிட்டதைத் தரிசிக்க, தேவர்கள் விண்ணில் வந்து சூழ்ந்தனர்.துந்துபி வாத்தியங்கள் இசைத்தனர்.கண்ணன் தன் கமலக்கண்களை மூடி, யோகத்தில் ஆன்ழ்து வைகுண்டத்தில் எழுந்தருளினான்.

துவாரகையில் மீதம் இருந்தவர்கள் எல்லோரையும், அர்ஜுனன் வந்து அஸ்தினாபுரம் அழைத்துப் போனான்.கண்ணன் சொன்னாற்போல ஏழாம்நாள், துவாரகை கடலில் மூழ்கியது.கிருஷ்ணனின் மாளிகை மட்டுமே எஞ்சியது.

சுகர் மகரிஷி பகவானின் பெருமைகளையும், சிறப்புகளையும், லீலாவினோதங்களையும் கொண்டதுமான பாகவதத்தை பரீட்சித்துக்கு சொல்லி முடித்தார்.

பின், பரீட்சித்திடம், "பாவங்களைப் போக்குவதும்,முக்தியைத் தரக்கூடியதுமான இந்த பாகவத புராணத்தை , பிரம்மா...நாரதருக்கும்..அவர் வியாசருக்கும்..வியாசர் எனக்கும் உபதேசித்தார்கள்.அந்த திவ்ய புராணத்தையே இப்போது நான் உனக்குச் சொன்னேன்.இந்த புராணத்தை பின்னாளில் ஸூதர் முனிவர் என்பவர் நைமி சாரண்யத்தில் சனகாதி முனிவருக்கு சொல்லப் போகிறார்.

இந்த பாகவத புராணத்தைக் கேட்கும் பாக்கியம் பெற்றதனால் நீ பகவானை தியானத்தில் பெறுவாய்.அதனால் தட்சகன் உன்னைத் தீண்டும் வேதனையைக் கூட உணர மாட்டாய்' என ஆசிர்வதித்துவிட்டுப் புறப்பட்டார்.

பரீட்சித் தன்னை தட்சகன் நாகம் தீண்டப்போகும் வேதனையோ..மரண பயமோ இல்லாமல் மனச் சலனமற்றவனாக, நாராயணனை மனதில் நினைத்து தியானத்தில் ஆழ்ந்தான்.

ரிஷிகுமாரனின் சாபப்படி தட்சகன் பாம்பு அவனைக் கடிக்க எதையும் உணராமல் நாராயணனின் திருமுகத்தை மனக் கண்களால் தரிசித்தபடியே மோட்சம் பெற்றான்.

நாகத்தின் விஷ வீரியத்தால்,அவனது உடல் அந்த நொடியே கருகிச் சாம்பலானது.

பரீட்சித் முக்திப் பெற்று பகவானின் திருவடியை சென்று சேர்ந்தான்

  ஸ்ரீ பாகவதம் முற்றிற்று.


  

No comments:

Post a Comment